ஆசமனம்

ஆசமனம்- சைவ சித்தாந்தமே!

குருவடி பணிந்து

மருத்துவ கலாநிதி இ. லம்போதரன் MD

கனடா சைவசித்தாந்த பீடம்

www.knowingourroots.com

 

ஆசமனம் என்பது இந்து சமயக்கிரியைகளில் ஆசமனப் பாத்திரத்தில் இருந்து உத்தரிணி என்னும் கரண்டியால் சிறிதளவு நீரை எடுத்து வலது கையில் விட்டு பெருவிரலடியில் சார்ந்து உதட்டை வைத்துச் சத்தம் எழுப்பாது உறிஞ்சுவதாகும். இவ்வாறு எடுத்து விட்டு உறிஞ்சும் நீரின் அளவு ஒரு உழுந்து அழிந்து நிற்கும் அளவாம்.  இதை உழுந்தமிழ்ந்தளவு சலம் என்று கூறுவர். இதை உறிஞ்சும்போது இந்த நீர் இருதயத்தானம் வரை செல்லக்கூடிய அளவுக்கு இருக்க வேண்டும். உதரம் அல்லது வயிறு வரை செல்லக்கூடாது. இதற்கும் பிராணாயாமம் போல எமது பரிவு, பரபரிவு நரம்புகளை அமைதிப்படுத்தி எம்மை சாந்தப்படுத்தும் தன்மை உள்ளது.

இவ்வாறு

ஓம் ஆத்ம தத்வாய ஸ்வதா என்று ஒரு முறையும்

ஓம் வித்யா தத்வாய ஸ்வதா என்று ஒரு முறையும்

ஓம் சிவ தத்வாய ஸ்வதா

என்று ஒரு முறையுமாக

மூன்று முறை ஆசமனம் செய்ய வேண்டும்.

ஓம் சர்வ தத்வாய ஸ்வதா என்று கூறி நான்கு முறை ஆசமனம் செய்யும் வழமையும் உள்ளது.

இதன் பின்னர்

ஓம் அஸ்த்ராய பட் என்று உதடுகள் இரண்டையும் பெருவிரலடி கொண்டு இடப்பக்கம் நோக்கி இரண்டு தடவையும், உள்ளங்கை கொண்டு கீழாக இரண்டு தடவையும் துடைத்து,  பின்னர் கை கழுவ வேண்டும். இதுதான் ஆசமனம்.

இதன் உட்பொருள் விளக்கமாவது:

ஓம்; எனது ஆத்ம தத்துவங்கள் (இருபத்து நான்கும்) எனக்கு வாய்ப்பாகச் சீர்முறைப் படுக.

ஓம்; எனது வித்தியா தத்துவங்கள் (ஏழும்) எனக்கு வாய்ப்பாகச் சீர்முறைப் படுக.

ஓம்; எனது சிவ தத்துவங்கள் ( ஐந்தும்) எனக்கு வாய்ப்பாகச் சீர்முறைப் படுக.

என்பதாகும்.

 

ஆத்ம தத்துவங்கள்; இவை இருபத்து நான்காம். அவையாவன நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்கள் ஐந்து; கண், காது, மூக்கு, நா, தோல் ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்து; கை, கால், நா, சனன அங்கம், கழிவங்கம் ஆகிய கர்மேந்திரியங்கள் ஐந்து; சுவை, ஊறு, ஓசை, ஒளி, நாற்றம் என்ற தன்மாத்திரைகள் ஐந்து; மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற அந்தக்கரணங்கள் நான்கு ஆக மொத்தம் இருபத்து நான்காம்

 

வித்தியா தத்துவங்கள்; இவை காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை என ஏழாம்.

 

சிவ தத்துவங்கள்; சுத்த வித்தை, ஈசுரம், சாதாக்கியம், பிந்து, நாதம் என ஐந்தும் சிவ தத்துவங்களாம்.

சர்வ தத்துவங்கள்; இந்த முப்பத்தாறு தத்துவங்களுடன் தச வாயுக்கள், தச நாடிகள் போன்ற அறுபது தாத்துவீகங்களையும் சேர்த்து தத்துவங்கள் தொண்ணூற்றாறு என்று சொல்லும் வழமையும் உள்ளது. இதனால்தான் பூசைகளில் சர்வ தத்வாய ஸ்வஸ்தா என்று சொல்லும் வழமையும் உள்ளது.

 

ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொதுவென்பர்

ஆகின்ற வாறாறு அருஞ்சைவர் தத்துவம்

ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்கு

ஆகின்ற நாலாறை யைந்துமாயா வாதிக்கே

 

Tatwās six and ninety are the over-all;

Six and thirty are the Tatwās for Saivās

Eight and twenty for Vēdantins

Four and twenty for VaishNnavās

Five and twenty for Māyavādins

 திருமந்திரம் / Thiru Manthiram 2179

 

 

 

இதிலே முழு சைவ சித்தாந்தமுமே அடங்கியிருக்கின்றது. புலனாகக்கூடிய மற்றும் புலனாக முடியாத இந்த உலகின் இருப்புகளை முப்பத்தாறு தத்துவங்களாகக் காண்பது சைவம்.

இந்து மதத்தின் சமார்த்த, வைதிக, வைணவ சம்பிரதாயங்கள் ஆத்ம தத்துவங்களாகிய இருபத்து நான்கையும் ஏற்றுக்கொண்டாலும் அதற்கு மேலான வித்தியா தத்துவங்களைப்பற்றியோ அல்லது சிவ தத்துவங்களைப்பற்றியோ கூறுவதில்லை. ஆதலால் அவர்கள் தமது சந்தியாவந்தனம், பூசை, கிரியைகளில்

ஓம் அச்சுதாய நமஹா

ஒம் மாதவாய நமஹா

ஓம் கோவிந்தாய நமஹா

 

என்று கூறி மும்முறை ஆசமனம் செய்து கொள்வார்கள்.

சிலர் கையில் தர்ப்பையினாலான பவித்திரம் அணிந்துகொண்டு ஆசமனம் செய்யக்கூடாது என்று கூறி ஆசமனம் செய்யும் முன்னர் பவித்திரத்தைக் கழற்றிவிட்டு, ஆசமனம் செய்தபின்னர் மீண்டும் போட்டுக்கொள்ளும் வழமையைப் பார்க்கின்றோம். ஆனால் பவித்திரத்துடன் கூடிய கையினால் ஆசமனம் செய்வதில் எந்தவிதமான தோஷமும் இல்லை. இதற்கு பிரமாணம்

ஆசமனஞ் செய்க பவித்திரம்பூண்டு அங்கையினால்

ஆசமனம் உச்சிட்டம் அன்று

மறைஞான சம்பந்தரின் சைவ சமய நெறி

உச்சிட்டம்- எச்சில்.