கந்தபுராணம் எமது சொந்த புராணம்

கந்தபுராணம் எமது சொந்த புராணம்

யாழ்ப்பாணத்தார் கந்தபுராணத்தைத் தமது சொந்தப் புராணம் என்று ஏன் கூறினார்கள்?  ”புராணங்கள் புழுகுமூட்டை” என்கின்றார்களே; அப்படியிருக்க “சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும் சென்றால் சைவத் திறத்தடைவர்” என்று சிவஞான சித்தியார் கூறுவது ஏன்? சந்த்ரு ராஜமூர்த்தி அவர்கள் எழுதிய பின் வரும் கட்டுரையைப் பார்த்தால் புரிந்துவிடும்.

சிவபெருமானைப் பற்றிய புராண வரலாறுகளில் எவை ஏற்கத்தக்கது? நாயன்மார்கள் மற்றும் பிற ஆச்சார்யர்கள் எந்த புராணத்தில் உள்ள சிவ வரலாறுகளைப் பாடினார்கள்?
– சந்த்ரு ராஜமூர்த்தி

பன்னெடுங்காலமாகவே, அதிலும் இணையத்தளம் தோன்றியதற்கு பின் நம்மவரில் பலர், குறிப்பாக சிவனடியார்கள் பல குழப்பங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.
சிவனைப் பற்றி முன்னுக்கு பின் முரணாக, அருவருக்கத்தக்க புராணக் கதைகளே இதற்குக் காரணம். “புராணத்தில் இப்படி உண்மையிலேயே உள்ளதா..?, அவ்வாறு ஒரு வேளை இருந்தால் புராண வாக்யங்களை எவ்வாறு புறந் தள்ளமுடியும்..?” என்ற பல்வேறான ஐயங்களிற்கும் அச்சங்களிற்கும் ஒரு தீர்வுகாண வேண்டியே இப்பதிவு.

புராணங்கள் என்பவை முடிவில்லா கடல். கடலில் குப்பையும் உண்டு ஆழத்தில் முத்தும் உண்டு. உலகிலேயே மிகவும் கலப்படமும் பிற்சேர்க்கையுமுடைய நூல்கள் என்றால் அது புராணங்களே என்பதை எல்லா ஆராய்ச்சியாளர்களும் ஆய்வாளர்களும் ஒரு மனதோடு ஒப்புக்கொண்டுள்ளனர். சரி, இது இவ்வாறு இருக்க எந்த எந்தப் புராணவரலாறுகள் உண்மையானவை என்று எவ்வாறு அடையாளங்காண்பது என்கின்ற ஐயம் அடுத்தகட்டமாக எழுகின்றது.

முதலில் அனைவரும் ஒரு விடயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். புராணங்கள் என்பவை வழிநூல்களேயன்றி மூலநூல் கிடையாது. வேதம் மற்றும் ஆகமங்களே மூலநூல்கள்.
“வேதமோடாகமம் மெய்யாம் இறைவன் நூல்” -திருமூலர்-
அவற்றில் உள்ள விஷயங்களை எளிமைப்படுத்தி விளக்க எழுந்தவையே புராணங்கள். “இதிஹாசபுராணாப்யாம் வேதம் சமூபப்ரும்ஹயேத்”
சார்புநூல்களாயினும் சரி மற்றும் வேதத்தோடு முரண்படும் எந்தப் புராண வாக்யமாக இருப்பினும் சரி புறந்தள்ளத்தக்கதே என்பது அனைத்து ஆச்சார்யர்களும் ஒப்புக்கொண்ட ஒரு விடயம்.

பதினெட்டு மஹாபுராணங்களிலும் பதினெட்டு உபபுராணங்களிலும் சிவபெருமானின் லீலைகள் விபரிக்கப்பட்டிருப்பினும், அவற்றில் சிவ மஹாபுராணம், லிங்க புராணம், ஸ்கந்த புராணம் மற்றும் கூர்ம புராணங்கள் மேலும் விரிவாக சிவலீலைகளை வர்ணிக்கின்றன. ஆயினும் அவற்றில் ஒரு புராணத்தில் உள்ள வரலாறு மற்றோரு புராணத்தில் உள்ள வரலாறோடு முரண்பட்டும் அத்தோடு சில சமயங்களில் ஒரே புராணத்திலேயே முரண்படும் வகையில் இரண்டு வரலாறுகளும் கூட உண்டு. உதாரணத்திற்கு, சிவ மஹாபுராணத்தின் முற்பகுதியான ருத்ர சம்ஹிதையில் தக்ஷனின் வேள்வியில் தேவி உயிர்த்தியாகம் செய்ததாகவும், அதே புராணத்தின் பிற்பகுதியான வாயவீய சம்ஹிதையில் தேவி உயிர்த்தியாகம் செய்யாமல் கயிலைக்குத் திரும்பியதாகவும்
உள்ளது. எதை ஏற்பது?

இதற்கான தீர்வு மூன்று நூல்களில் உள்ளது:

1 . திருமுறைகள்

2 . ஆகமங்கள்

3 . சித்தாந்த சாத்திரங்கள்

திருவருட்செல்வர்களான நாயன்மார்கள் அருளிச்சென்ற தேவாரம், திருவாசகம் மற்றும் திருமந்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிவசரிதங்களை நான் ஆராய்ந்ததில் ஒரு விடயம் மிகத் தெளிவாகத் தெரியவருகின்றது.
அவர்கள் பாடிய பெரும்பான்மையான வரலாறுகள் முழுக்க முழுக்க ஸ்கந்தபுராணத்தின் சங்கரசம்ஹிதையின் சிவரஹஸ்யகண்டத்தில் (இதைத்தான் கந்த புராணம் என்று தமிழில் கச்சியப்பர் பாடினார்) வரும் வரலாறுகளை அடிப்படையாகக் கொண்டவை.

1 . “பிடியதனுருவுமை கொளமிகு கரியது
வடி கொடுதனதடி வழிபடுமவரிடர்
கடி கணபதிவர அருளினன் மிகு கொடை

வடிவினர் பயில்வலி வலமுறையிறையே”

சிவனும் தேவியும் களிறாகவும் பிடியாகவும் உருமாறி விநாயகரைப் படைத்ததாக சம்பந்தர் குறிப்பிடும் இந்த வரலாறும் ஸ்கந்தபுராணத்தின் சிவரஹஸ்யகண்டத்தில் மட்டுமே உள்ளது.

  1. முப்புரங்கள் எரித்த வரலாறு திருவாசகத்தில் திருவுந்தியாரிலும், தேவாரங்களில் பல இடங்களிலும் விபரிக்கப்பட்டுள்ளது. அதில்
    முப்புரம் எரித்த பின்பு அந்த மூன்று அரக்கர்களுக்கு ஈசன் அருளிய வரலாறும் பேசப்பட்டுள்ளது.

உய்யவல் லாரொரு மூவரைக் காவல்கொண்டு
எய்யவல் லானுக்கே உந்தீபற
இளமுலை பங்கனென் றுந்தீபற.

– திருவாசகம்

மூவர் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கருள் செய்தார்

– தேவாரம்

இது ஸ்கந்தபுராணத்தின் சிவரஹஸ்யகண்டத்தில் மட்டுமே உள்ள வரலாறு. வேறு புராணங்களில் வரும் த்ரிபுர சம்ஹார வரலாறுகளில் இந்த தகவல் கிடையாது.

தேவார திருவாசகங்களில் மற்றும் சிவஞானசித்தியாரில் பல இடங்களில் குறிப்பிடப்படும் மத்ஸ்ய சம்ஹாரம், கூர்ம சம்ஹாரம், வராஹ சம்ஹாரம்(என்போடு கொம்பொடாமை இவை மார்பிலங்க – சம்பந்தர் தேவாரம்), குரண்டாசுரனைக் கொன்று கொக்கிறகை ஈசன் சூடியது முதலிய வரலாறுகள் ஸ்கந்த புராணத்தில் மட்டுமே உள்ளது. பிற புராணங்களில் கிடையாது.

ஈசன் தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அடக்கிய லீலையை வர்ணிக்கும்போது, நாயன்மார்கள் அந்த முனிவர் செய்த அபிசார யாகத்தீயிருந்து புலி, மான், பாம்பு, மண்டையோடு, முயலகன் போன்றவை தோன்றியதாக குறிப்பிடுகிறார்கள். இந்த தகவல்
ஸ்கந்த புராணத்தின் சிவரஹஸ்யகண்டத்தில் மட்டுமே உள்ளது. சிவ புராணம், லிங்க புராணம், கூர்ம புராணம், ப்ரஹ்மாண்ட புராணம், வாமன புராணம் முதலியவற்றில் தாருகாவன லீலை விவரிக்கப்பட்டிருப்பினும் இந்த தகவல் அவற்றில் இல்லை.

ஆலமர நிழலில் சிவபெருமான் சனகாதி முனிவர்களுக்கு வேதாகமங்களை அருளிய வரலாறும் ஸ்கந்த புராணத்தில் உள்ள வரலாறே. இதை எண்ணற்ற இடத்தில் திருமுறை அருளாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதிலிருந்து, ஸ்கந்த புராணத்தின் சிவரஹஸ்யகண்டத்தில் உள்ள சிவச்சரிதங்களையே நாயன்மார்களும் பிற திருமுறை ஆசிரியர்களும் சந்தான ஆச்சார்யர்களும் பரம பிரமாணமாக ஏற்றார்கள் என்பது தெளிவாகிறது.

அதுவன்றி, முருகன் சூரபத்மனை அழிப்பதற்காக சிவனால் தோற்றுவிக்கப்பட்டவர் என்ற தொன்மம் இதில் மட்டுமே உள்ளது. மஹாபாரதம் மற்றும் பிற புராணங்களில் தாரகனை மட்டும் கொள்வதற்காகவே முருகன் தோன்றினார் என்று மட்டுமே உள்ளது.

அனைத்திற்கும் மேலாக சிவனை கேவலப்படுத்தும் கொச்சையான அருவருக்கத்தக்க கதைகள் ஏதும் இதில் இல்லை.

இதை தவிர நாயன்மார்கள் ஸ்கந்த புராணத்தின் சிவரஹஸ்யகண்டத்தில் சொல்லப்படாத சில சிவ லீலைகளை ராமாயணம் மற்றும் மஹாபாரதத்திலிருந்து எடுத்தும் பாடியுள்ளனர்.
ஆகமங்களில் சிவபெருமானின் வடிவங்களான மஹேஸ்வர மூர்த்தங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
ஆகமத்தில் உள்ள அனைத்து மஹேஸ்வர மூர்த்தங்களின் வரலாறுகளும் இந்த சிவரஹஸ்யகண்டத்தில் மட்டுமே உள்ளது. ஏனைய புராணங்களில் இந்த மஹேஸ்வர மூர்த்தங்கள் பற்றிக் கூறப்படும் வரலாறுகள் ஆகமத்தில் உள்ள குறிப்புகளோடு முற்றிலும் முரண்படுகின்றது.

ஆதலால் ஸ்கந்த புராணத்தின் பகுதியான சிவரஹஸ்யகண்டத்தில் வரும் சிவ வரலாறுகளே சந்தேகத்திற்கு இடமின்றி ஏற்கத்தக்கது என்பது சான்றோர்களான நாயன்மார்கள், சித்தாந்த ஆச்சார்யர்கள் மற்றும் ஆகமங்களின் முடிந்த முடிப்பு.

இந்த சிவரஹஸ்யகண்டமே தமிழில் கச்சியப்ப சிவாச்சாரியாரால் கந்தபுராணம் என்று பாடப்பட்டுள்ளது. இந்த கந்தபுராணத்தில் வரும் தக்ஷ காண்டத்தில் அனைத்து சிவலீலைகளும் விபரிக்கப்பட்டுள்ளது.

ஆதியில் மற்ற புராணங்களிலும் சிவரஹஸ்யகண்டத்தில் உள்ள வரலாறுகள் இருந்திருக்கலாம். ஆனால் பெரும்பான்மையான புராணங்கள் பிற்காலத்தில் முற்றிலுமாக மாற்றி எழுதப்பட்டுள்ளது. பழமையான ஆச்சார்யர்கள் தங்களின் எழுத்துக்களில் மேற்கோள்காட்டிய புராண பகுதிகளும் ஸ்லோகங்களும் இன்று கிடைத்துள்ள புராணங்களில் காணப்படவில்லை.

கந்த புராணம் தவிர திருவிளையாடற் புராணம் மற்றும் பெரிய புராணத்தையும் நம் சான்றோர்கள் ஏற்றுள்ளனர்.

ஆதலால் இவற்றோடு முரண்படக்கூடிய அனைத்து கதைகளும் தள்ளத்தக்கதே.

Top of Form

Bottom of Form

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *