லிங்கம் என்பது ஆண்குறியா?

லிங்கம் என்பது ஆண்குறியா?

சந்த்ரு ராஜமூர்த்தி

 

பொது யுகத்துக்கு முன்னர் 3300 தொடக்கம் 1300 வரை நிலவிய சிந்துவெளி நாகரிகத்தின் அகழ்வாராய்ச்சிகளில்  சனன அங்கத்தை ஒத்த இலிங்க வடிவங்கள் பல வழிபாட்டுச் சின்னங்களாக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாலியலையும் அதனுடன் தொடர்பான சனன உறுப்புகளான இலிங்கம் யோனி ஆகியவற்றையும் இழிவாகக் கருதும் கூறும் வழமை தோன்றியது மிகவும் பிற்காலத்திலேயே. இது முகலாய ஆங்கில விக்டோரிய கலாச்சாரங்களின் தாக்கம். இதனால் சிவலிங்கம் என்பது ஆண்குறி வடிவமாகும் எனும் இழிவு படுத்தும் வாதமும் அவ்வாறு அல்ல என்னும் எதிர்வாதமும் எழுந்தன. இவ்வாறான வாதப் பிரதிவாதங்களில் ஒன்றை நாம் அன்பர் சந்த்ரு ராஜமூர்த்தி அவர்கள் இக் கட்டுரையில் அழகாகத் தந்துள்ளார், அதை இப்போது பார்ப்போம்.

– இ. லம்போதரன், கனடா சைவ சித்தாந்த பீடம்.

 

லிங்கம் என்பது ஆண்குறி என்ற தவறான கதை யாரால், எதனால் உருவாக்கப்பட்டது? விளக்கம் என்ன?

இதுவரை நான் எட்டு பதிவுகளில் சிவ, லிங்க, ஸ்கந்த, கூர்ம, ப்ரஹ்மாண்ட, ப்ரஹ்ம, மத்ஸ்ய, நாரத புராணங்களில் உள்ள லிங்கோத்பவ சரிதங்களைக் கூறியுள்ளேன். அடுத்த பதிவில் வாயுமஹாபுராணத்தில் உள்ள லிங்கோத்பவ சரிதத்தையும் கூறவிருக்கிறேன். இவ்வாறு ஏறத்தாழ அனைத்து புராணங்களும் லிங்கம் என்பது அடிமுடி காணமுடியாத அக்னிஸ்தம்பம் தான் என்று உறுதியாகக் கூறுகின்றன. ஆனால் சில புராணங்களில் லிங்கம் என்பது சிவபெருமானின் ஆண்குறி, ஆவுடையார் பார்வதீதேவியின் பெண்குறி என்ற கதை உள்ளதே என்று சிலர் கேட்கலாம். அதிலும் லிங்கோத்பவ சரிதம் கூறும் சில புராணங்களிலேயே இந்தத் தவறான கதை உள்ளதே என்ற சந்தேகம் பலருக்கு எழலாம். அதற்கான விளக்கமாக இப்பதிவை எழுதுகிறேன்.

முதலில் லிங்கம் என்பதற்கு தவறான விளக்கம் தரும் கதை எவ்வாறு தோன்றியது, அது எவ்வாறு வளர்ச்சியடைந்தது என்று பார்க்கலாம். தாருகாவன முனிவர்கள் மற்றும் அவர்களின் மனைவியரின் அகந்தையை அழிக்கவும், அவர்களுக்கு நிவ்ருத்தி மார்க்கத்தை உபதேசிக்கவும் வேண்டி சிவபெருமான் திகம்பரக் கோலத்தில் அவ்வனத்திற்கு சென்றதே இக்கதைக்கு அடித்தளமாக அமைகிறது.

  1. லிங்கமஹாபுராணத்தில் 31ல் சிவபெருமான் திகம்பரக் கோலத்தில் தாருகாவனத்திற்குச் சென்றபோது அவரின் மாயையால் மயங்கிய ரிஷிபத்னிகள் அவரிடம் வந்து அவரைப் பற்றி விசாரித்ததும், அவர்மீது மோஹம் கொண்டதும்,அவர்களின் எந்தவித செய்கைகளையும் கவனிக்காமல் சிவபெருமான் அவர்போக்கில் சென்றதும், ரிஷிபத்னிகள் அவரைப் பின்தொடர்ந்ததும், அதைக் கவனித்த ரிஷிகள் சிவபெருமானிடம் அவர் யாரென்று விசாரித்ததும், சிவபெருமான் பதிலளிக்காததால் சினந்து அவரை சபித்ததும், அச்சாபங்கள் அவரை ஒன்றுமே செய்யமுடியாதது கண்டு அவர்கள் திகைத்ததும், சிவபெருமான் அங்கிருந்து மறைந்ததும் கூறப்படுகிறது. இங்கு சிவபெருமானின் ஆண்குறி அறுந்து விழுந்ததாக ஏதும் கூறப்படவில்லை. ஏனெனில் லிங்கமஹாபுராணம் தெளிவாக லிங்கம் என்பது அக்னிஸ்தம்பமே என்று கூறுகிறது.

 

  1. இந்தக் கதை கூர்மபுராணம் 38 மற்றும் ப்ரஹ்மாண்ட புராணம் 1.2.27 ஆகியவற்றில் அடுத்தகட்டதை அடைகிறது. ரிஷிகள் சிவபெருமானைக் கற்களாலும்,தடிகளாலும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. ப்ரஹ்மாண்ட புராணம் ரிஷிகளின் சாபங்களால் சிவபெருமானை ஒன்றும் செய்யமுடியவில்லை என்றும் சிவபெருமான் தானே தனது ஆண்குறியை பெயர்த்து கீழே போட்டதாகக் கூறுகிறது. கூர்மபுராணம் சாபத்தால் ஆண்குறி கீழே விழுந்ததாகக் கூறுகிறது.

 

  1. இப்போது இக்கதை ஸ்கந்தபுராணம் 1.7 மற்றும் 6.1, வாமனபுராணம் 1.6 ஆகியவற்றில் அடுத்தகட்டதை அடைகிறது. கீழே விழுந்த ஆண்குறி அடிமுடி காணவியலாத படி வளர்ந்ததாகவும்,அதன் அடிமுடியைத் தேடி ப்ரஹ்மவிஷ்ணுக்கள் சென்றதாகவும் கூறப்படுகிறது. லிங்கோத்பவ சரிதத்தை மாற்றும் முயற்சியாக இது தெரிகிறது.

 

  1. இக்கதை கடைசிகட்டத்தை சிவமஹாபுராணத்தின் கோடிருத்ரஸம்ஹிதையில் அத்யாயம் 12ல் அடைகிறது. சிவபெருமான் தாருகாவனத்தில் தனது ஆண்குறியைப் பிடித்துக்கொண்டு விநோதமான சேஷ்டைகளைச் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் கீழே விழுந்த ஆண்குறியானது மூவுலகங்களையும் துன்புறுத்தியதாகவும்,தேவர்கள் ப்ரஹ்மாவின் யோசனைப்படி பார்வதீதேவியை அந்த லிங்கத்தைத் தாங்கும் யோனியாக மாறும்படி கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.விஷ்ணு யோனியாக மாறியதாகவும் ஒரு கதை ஸ்கந்தபுராணத்தில் கூறப்படுகிறது.

 

சரி இப்போது இப்படிப்பட்ட கேவலமான கதைகளை யார் எழுதியிருப்பார்கள்?ஏன் எழுதினார்கள்?எவ்வாறு இக்கதைகள் புராணங்களில் சேர்க்கப்பட்டிருக்கும் என்று பார்க்கலாம்.

இந்தக் கதைகளில் ஒரு ஒற்றுமை உள்ளது. இக்கதையின் முடிவில் ரிஷிகள் லிங்கத்தை(அதாவது சிவபெருமானின் ஆண்குறியை) வணங்க சிவபெருமான் அங்கு தோன்றி அவர்களுக்கு பாசுபத யோகத்தை/சமயத்தை போதித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் சிவபெருமான் தாருகாவனத்தில் நடந்துகொண்ட விதம் பற்றிக் கூறப்படுவது பாசுபத சந்யாஸிகளின் செய்கைகளை ப்ரதிபலிக்கிறது. பாசுபத யோகிகள் மக்கள் தூற்றப்படும் விதத்தில் நடந்துகொள்ள வேண்டும் என்று பாசுபத ஸூத்ரங்களில் (3.1-19) கூறப்படுகிறது (கௌண்டின்யரின் பாஷ்யத்தையும் காண்க). இதற்கு “அவமத:” என்று பெயர். இது சிவபெருமான் இவ்வாறே நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. எனவே தாந்த்ரீக மார்க்கமான பாசுபத மார்க்கத்தினரால் இக்கதை புனையப்பட்டிருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.மேலும் லிங்கம் என்பது அக்னிஸ்தம்பமே என்று கூறும் புராண சரிதங்கள் அனைத்தும் ஒன்றே போல உள்ளன.எவ்வித வேறுபாடும் இல்லை.ஆனால் லிங்கம் என்பது ஆண்குறி என்று கூறும் கதைகள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன.எனவே இக்கதைகள் பல்வேறு காலகட்டங்களில் பலரால் இயற்றப்பட்டு புராணங்களில் இடைச்செருகல்களாகச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.

 

இக்கதை பிற்காலத்தில் வாமாச்சார தாந்த்ரீகர்களால் அவர்களுக்கு ஏற்றபடி மாற்றப்பட்டதையே சிவமஹாபுராணத்திலுள்ள கதை காட்டுகிறது.ஏனெனில் அவர்கள் தான் பஞ்சமகாரங்களை முக்கியமாகக் கொள்பவர்கள். அதிலும் உடலுறவு அவர்களுக்கு முக்கியமானது.சிவபெருமான் தனது ஆண்குறியைப் பிடித்துக்கொண்டு விநோதமான சேஷ்டைகளைச் செய்தார் என்று கூறப்படுவதே இதற்கு சிறந்த சான்றாகும்.மேலும் தாந்த்ரீகர்கள் லிங்கோத்பவ சரிதத்தைத் தங்களுக்கு ஏற்றபடி மாற்ற முயற்சித்ததையே ஸ்கந்தபுராணம் மற்றும் வாமனபுராணம் ஆகியவற்றில் உள்ள கதைகள் காட்டுகின்றன.

 

பாசுபதர்கள் வைதீக மார்கத்தை ஏற்றதற்குப் பிறகே,அதாவது வேதங்களை அவர்கள் ஏற்றுக்கொண்ட பிறகே தங்கள் கருத்துக்களுக்கு வைதீக தோற்றம் கொடுப்பதற்காக இக்கதையை அவர்கள் இயற்றி புராணங்களில் இடைச்செருகலாகச் சேர்த்திருக்க வேண்டும். பிற்காலத்தில் அக்கதை வாமாச்சார தாந்த்ரீகர்களால் மேலும் சிறிது மாற்றப்பட்டிருக்க வேண்டும்.அதோடு புராணங்களில் தாந்த்ரீகர்களின் கைவரிசை அதிகம் உள்ளது. அதற்கு சிறந்த உதாரணங்கள் லிங்கமஹாபுராணம், நாரதமஹாபுராணம், கூர்மமஹாபுராணம், ப்ரஹ்மாண்ட மஹாபுராணம், பத்மமஹாபுராணம், சிவமஹாபுராணம், வாமனமஹாபுராணம் ஆகியவை ஆகும். லிங்கமஹாபுராணத்தின் உத்தரபாகத்தையே முற்றிலுமாக மாற்றியுள்ளனர். செய்வினை வைப்பது,வசியம் செய்வது பற்றியெல்லாம் கூறப்படுவது உற்றுநோக்கத்தக்கது. மேலும் கூர்மமஹாபுராணத்தை பாசுபத நூலாகவே பெருமளவு மாற்றியுள்ளனர். முக்கியமாக உத்தரபாகம். அதேசமயம் கூர்மமஹாபுராணம் பாசுபதர்களை வைதீக பாசுபதர்கள்,அவைதீக பாசுபதர்கள் என்று பிரிப்பதும்,அவைதீக பாசுபதர்களைக் கடுமையாகச் சாடுவதும் நாம் கவனிக்கத்தக்கது. ஸூதஸம்ஹிதையும்,ப்ரஹ்மாண்ட மஹாபுராணமும் அவைதீக பாசுபதர்களைச் சாடுகின்றன.

மேலும் லிங்கத்துக்குத் தவறான விளக்கம் கூறும் கதை ப்ரஹ்மாண்ட மஹாபுராணத்தில் லிங்கோத்பவ சரிதம் கூறும் அத்யாயத்திற்கு (1.2.26) அடுத்த அத்யாயத்திலேயே (1.2.27) இருப்பதும்,கூர்மமஹாபுராணத்தின் பூர்வபாகத்தில்(1.26) லிங்கோத்பவ சரிதம் கூறப்பட்டிருக்க, உத்தரபாகத்தில் தவறான விளக்கம் தரும் கதை (2.38) இடம்பெறுவதும் கவனிக்கத்தக்கது. ஸ்கந்தமஹாபுராணத்தில் பெரும்பாலான பகுதிகள் லிங்கம் என்றால் அக்னிஸ்தம்பமே என்று கூற சில பகுதிகள் (மாஹேஶ்வர காண்டத்தின் கேதாரகாண்டம்,அவந்திகாண்டம்) முதலானவை தவறான விளக்கம் தரும் கதைகளைக் கொண்டுள்ளது இடைச்செருகல் செய்யப்பட்டதைக் காட்டுகின்றன.

வேதங்கள்,இதிஹாஸங்கள்,பெரும்பான்மை புராணங்கள் லிங்கம் என்றால் அக்னிஸ்தம்பமே என்று உறுதியாகக் கூறுகின்றன. ஆவுடையாராக இருக்கும் பகுதி ஹோமகுண்டத்தைக் குறிப்பது. லிங்கம் அதனுள் இருக்கும் அக்னியைக் குறிப்பது. மேலும் முற்காலத்தில் அபிஷேகத் தண்ணீர் முதலானவற்றிக்கு வடிகாலாகவும் ஆவுடையார் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அக்னிபுராணம் 1.53, மத்ஸ்யபுராணம் 263 முதலானவற்றில் சிவலிங்கம் அமைக்கும் முறை பற்றி விளக்கப்படுகிறது. அதில் எண்கோன வடிவ/சதுரவடிவ ஆவுடையார் அமைக்கும் முறை பற்றியும் விளக்கப்படுகிறது. எனவே ஆவுடையார் என்பது யோனி அல்ல என்பது உறுதியாகிறது.

 

இதுகாறும் கூறியவற்றால்,

1.லிங்கம் என்பது அக்னிஸ்தம்பம் தான்.

2.லிங்கம் என்றால் ஆண்குறி என்று கூறும் கதைகள் பாசுபதர்களால் இயற்றப்பட்டு பிற்பாடு வாமாச்சாரத் தாந்த்ரீகர்களால் வளர்க்கப்பட்டவை.

3.ஆவுடையார் என்பது யோனி அல்ல.

4.லிங்கம் என்பது அக்னிஸ்தம்பமே என்று கூறும் சரிதங்கள் ஒன்றேபோல உள்ளன, ஆண்குறி என்று கூறும் கதைகள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன.

5.புராணங்களில் உள்ள லிங்கோத்பவ சரிதமே சரியானது.

எனும் கருத்துக்களை என்னால் முடிந்த அளவுக்கு விளக்கி,நிரூபித்திருக்கிறேன்.

பின்குறிப்பு:- சில வைஷ்ணவ புராணங்களில் (உதாரணமாக பத்மபுராணத்தின் உத்தரகாண்டம்,பாகவதபுராணம்) ப்ருகுமஹரிஷி சிவபெருமானை “நீ ஆண்குறி வடிவில்தான் வழிபடப்படுவாய்” என்று சபித்ததாகக் கூறப்படுகிறது. இக்கதை பிற்கால வைஷ்ணவர்களின் கைவரிசை ஆகும்.மேலும் போலி பகுத்தறிவுவாதம் பேசுபவர்களும்,ஹிந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களும் சிவபெருமான் ரிஷிபத்னிகளைக் கற்பழித்ததாகப் புராணங்களில் கூறப்பட்டிருப்பதாகப் புளுகி வருகின்றனர். அப்படி ஒரு கதை எந்தப் புராணத்திலும் இல்லை.பத்மபுராணத்தின் ஸரஸ்வதீகாண்டத்தின் 17 ஆவது அத்யாயத்தில் அப்படி ஒரு கதை இருப்பதாகவும் புளுகிவருகின்றனர். பத்மபுராணத்தில் ஸ்ருஷ்டி, ப்ரஹ்ம, ஸ்வர்க, பூமி, பாதாள, உத்தர, க்ரியாயோகஸார எனும் ஏழு காண்டங்கள் தான் உள்ளன. ஸரஸ்வதீ காண்டம் என்ற ஒன்று இல்லவே இல்லை. கடலிலேயே இல்லையாம்.

 

ஸர்வம் சிவார்ப்பணம்.