சிவ சூரிய வழிபாடு – நவாலியூர் சோமசுந்தரப் புலவர்

சிவ சூரிய வழிபாடு

 நவாலியூர் சோமசுந்தரப் புலவர்

தொகுப்பும் உரையும் – நடேசன் முத்துக்குமாரசுவாமி, சிவக்குடில், கோவைப்புதூர்.

 

‘தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருபவ’னாகிய சூரியனைச் சைவசித்தாந்த சாத்திரங்கள் சிவத்துக்கும் சூரியனுடைய கதிர்களைச் சிவசத்திக்கும் உவமைகளாகக் கூறுகின்றன. கோள்களின் தலைவனாகிய சூரியன் புறத்தே பௌதீக இருளை நீக்குகின்றான். சிவசூரியன் அகத்தே மனத்திருளை அகற்றிச் சிவப்பிரகாசத்தை விளக்குகின்றான். ‘ அருக்கனாவான் அருரனுரு அல்லனோ’ என்பது அப்பர் வாக்கு. சூரியன் சிவத்தின் அட்ட (எட்டு) மூர்த்தங்களில் ஒன்று.

இன்றெனக் கருளி யிருள்கடிந் துள்ளத்
தெழுகின்ற ஞாயிறே போன்று
நின்றநின் தன்மை நினப்பற நினைந்தேன்

என்றார், மனிவாசகர். ‘திருப்பெருந்துறையில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானே! பௌதிக இருளை மடக்கி மண்ணுலகில் எழுகின்ற செங்கதிரவனை ஒத்து இன்று என் ஆணவமகத்தின் வலிமையை மடக்குவதாகிய அருளைப் புரிந்து என் நெஞ்சினுள் நின்றது நின்னியல்பு’ என்பது இப்பகுதியின் பொருள்.

பூவுலகில் உதிக்கின்ற செங்கதிரவன் என்றது உவமை. இவன் எழுவது மண்ணுலகில். இவன் உதித்தபின் மாலைக்கடலில் மறைகின்றான். சிவசூரியன் உதிப்பது பக்குவமுள்ள ஆன்மாக்களின் உள்ளத்தில் இவன் உதித்த பின்னர் மறைவதில்லை. பக்குவ ஆன்மாக்களின் நெஞ்சில் நிலைத்து நின்று ஆணவ இருளைக் கடிகின்றான்.

சிவமும் சத்தியுடன் தாதான்மியமாய் (பிரிப்பரிதாய்) நிற்கும் என்பதற்குச்சிவஞானபோதம், “ஈசன் பொன்னொளிபோல்” என உவமை கூறிற்று. பொன் -சூரியன் பொன்னொளி – சூரியனின்கதிர்கள், சிவசத்தி.எங்கும் உளனாகிய முதல்வன் ஞாயிறும் ஒளியும் போல ஒன்றாதற்கும் இரண்டாதற்கும் பொதுவாய்த் தாதான்மியத்தால் சிவமும் சத்தியும் என்று இயைந்து நிற்கும் என்பது பொருள். இருபொருள்கள் பிரிவற நிற்பது தாதான்மியம்.

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்எனத் தொடங்கிய சிலப்பதிகாரம், சூரியனுக்குத் தனிக்கோயில் இருந்தது, அதற்குப் பெயர் ‘உச்சிக்கிழான் கோட்டம்’ என்று கூறியது.
வைகறை விடியலில், காலைக்கடன் முடித்துக் கிழக்கு நோக்கிச் சூரியகாயத்ரி கூறி வழிபாடு செய்யும் வைதிக வழக்கினைத் திருப்புகழ்,
காலை கேமுழு கிக்குண திக்கினில்
ஆதித் யாயயெ னப்பகர் தர்ப்பண 
காயத் ரீசெபம் அர்ச்சனை யைச்செயு முனிவோர்கள்
கானத் தாசிரமத்தினி லுத்தம 
வேள்விச் சாலைய ளித்தல்பொ ருட்டெதிர்
காதத் தாடகை யைக்கொல் கிருபைக்கடல் மருகோனே’ 
எனப் பதிவு செய்கின்றது
சூரியோதயம் மன்னுயிர்கட்கெல்லாம் இன்பமளிப்பதாதலால், திருமுருருகாற்றுப்படை,
உலக முவப்பப் பலர்புகழ் ஞாயிறு
கடற்கண் டாங்குஎன்றது.

உலகினைப் படைத்த சிவம், பிரபஞ்சம் இயங்கத் தன்சத்தியினால் அதில் கலந்தும் இருக்கின்றது. ‘அருக்கனிற் சோதி அமைத்தோன்’ என்பது, திருவாசகம். சிவனின் எட்டு மூர்த்தங்களில் ஒன்று சூரியன். எனவே, சிவத்துக்குச் சூரியன் பீடமாகவும் உள்ளது. அதனால் சைவர்கள் சூரியனைச் சிவசூரியன் எனப் போற்றுகின்றனர். சைவர்கள் தம் ஆன்மார்த்த பூசனையில் மூத்தபிள்லையார் வழிபாட்டுக்குப் பின்னர்ச் சூரிய மண்டலத்தின் மத்தியில் சிவம் இருப்பதாகப் பாவித்துச் சிவசூரியபூசை செய்கின்றனர். சைவர்கள் சூரியனைச் சிவசூரியனாகப் போற்றுதலைப் போல வைணவர்கள் சூரியநாராயணனாக வழிபடுகின்றனர். திருமாலின்கரங்களில் சங்கு சக்கரங்கள் இருப்பதுபோல சூரியமூர்த்தியின்கரங்களிலும் சங்கு சக்கரங்கள் உண்டு

சிவத்துக்குச் சொரூபம் , தடத்தம் என்று இரு நிலைகள் உண்டு. சொரூபம் சிவத்தின் உண்மை நிலை. அந்த நிலையை ஆன்மாக்கள் அறிய முடியாது. எனவே, தன்னை அறிந்து ஆன்மாக்கள் உய்ய வேண்டிச் சிவம் பலவாறு தடத்த வடிவம் கொள்கிறது. அதில் ஒன்று சூரியன். சூரியன் மூர்த்தி. அதில் மூர்த்திமான் சிவம். அந்த மூர்த்திமானின்மந்திரம் சிவசூரியாய நம என்பது. சூரியன் சிவன் வீற்றிருக்கும் பீடம்.

அங்கிங் கெனாதபடி யெங்குமாய் முடியாகி
அடியாகி நடுவுமாகி
அம்மையோ டப்பனா யுயிர்களுக் குயிராகி
அறிவாகி யின்ப மாகிப்
பொங்குமல விருள்கெடுத் தருளொளி விரிக்கின்ற 
புண்ணி யற்கொரு பீடமே
பூமிக்கோர் கண்ணாகி யிருவிழிக் கொளிதரும் 
போதமே வேத வடிவே
துங்கமறை யறைதரும் காயத் திரிக்கரிய
துரியமெய்ஞ் ஞான முதலே!
தூயகா சிபனுக்கும் அதிதிக்கும் மகனெனச்
சொல்கின்ற சுடர்வா ரிதியே!
திங்கள்முத லானகோள் நாள்வலம் வரமேவு
தெய்வமே அடிபோற்றி ஓம்
சிவசூரியாய நம சிவசூரியாய நம
சிவசூரியாய நமவே. (01)

நிட்கள சொரூபசிவம் அண்ட பகிரண்டங்களாகிய தூரத்தில் (அங்கு) உள்ளது, பூமி பாதாளம்மாகியசமீபத்தில் (இங்கு) என்று கூறாதவாறு எங்கும் உள்ளது.; அதிசூக்குமப் பொருளாதலால் சிவத்துக்கு முதல் நடு முடிவு கூறவொண்ணாததாக நிறைந்துள்ளது. அத்தகைய நிட்கள சொரூப சிவம் உயிர்களுக்கெல்லாம் அறிவினைப் பிறப்பிக்க வேண்டித் தடத்தத்தில் அம்மையப்பராகத் தோன்றி உய்ருக்கு உயிராகி உடன் நின்று அறிவானந்த இன்பமாகி, உயிரின் சகஜக் குற்றமாகிய ஆணவ இருளைக் கெடுத்து அருளொளி விரிக்கின்றது. அவ்வாறு உயிர்களுக்கு அருளொளி விரித்து ஆனந்தத்தில் ஆழ்த்துகின்ற புண்ணியராகிய சிவத்துக்கு பீடமாகச் சூரியன் விளங்குகின்றான். சிவத்துக்குச் சூரியன் சிறந்த ஒப்பற்ற பீடமாதலின் ‘புண்ணியற்கொரு பீடமே பீடமே’ என்றார்.
இருள் துன்பத்தில் துயரத்தில் ஆழ்த்தும்; ஒளி இன்பத்தில் ஆனந்தத்தில் ஆழ்த்தும். பௌதிக சூரியன் பூமாதேவிக்கொரு கண்ணாக விளங்கி நம் கண்களுக்கு ஒளிதரும்; சிவசூரியன், ஞானக்கண்ணுக்கு ஒளி அருளி அகவிருளை மாய்க்கும். ஆதலால், ‘பூமிக்கோர் கண்ணாகி யிருவிழிக் கொளிதரும் போதமே வேத வடிவேஎன்றார். கண் காணக்கூடிய ஒளியுடைய தென்றாலும் சூரியனின் ஒளியில்லையேல் கண்ணொளியினால் பயனில்லை. சூரிய ஒளி பொருள்களின் மீதும் படர்ந்து, கண்ணொளீயுடன் கலந்து கண்களுக்குப் பொருளைக் காட்டும். திருவருளும் உலகுயிர்களுடன் கலந்து நின்று உயிர்களுக்குப் பொருளைக் காட்டி, அவ்வுயிர்களுக்காகத் தானும் காணும். இதனைச் சிவத்தின் காட்டும் உபகாரமும் காணும் உபகாரமும் என்பர். 
மேலான வேதங்கள் காயத்திரி மந்திரங்களை கூறும். அகவிருளை ஓட்டும் காயத்திரி மந்திரங்களுக்குத் தேவதை சூரியன் என்ப. அதனால் ‘துங்கமறை யறைதரும் காயத் திரிக்கரிய துரியமெய்ஞ் ஞான முதலேஎன்றார். 
சூரியன் காசிப முனிவருக்கும் அவருடைய பத்தினி அதிதிக்கும் மகவெனப் புராணங்கள் கூறும். ஆதலால், தூயகா சிபனுக்கும் அதிதிக்கு மகனெனச் சொல்கின்ற சுடர் வாரியேஎன்றார். பூமி முதலாய கோள்கள் எல்லாம் சூரியனைச் சுற்றியே வலம் வருகின்றன. நவகோள்களை பிரதிஷ்டை செய்வோர் சூரியனை நடுவில் இருத்திப் பிறகோள்களைச் சுற்ரிலும் அமைப்பர். அதனால் திங்கள்முத லானகோள் நாள்வலம் வரமேவு தெய்வமே என்றழைத்தார். இச்சிறப்புக்களையுடைய சிவ சூரியனுக்கு வணக்கம்.

ஓதுபல சமயநெறி யாளரும் புகழ்கின்ற 
ஓராழியந்தேரினாய்
உதய கலத்திலே உலகுதரு பிரமனாய்
உச்சியிற் சிவபிரானாய்
மோதுகடல் மறைகின்ற போதுமா தவனாகி
முனிவர்தொழ நின்றமுதல்வா!
மூதண்ட கூடமுழு வதுமண்டும் இருள்விண்டு 
முடியவொளிர் மணிவிளக்கே!
வேதநெறி தழையவும் பல்லுயிர்கள் வாழவும்
வேலைநீ ரினிய வமுதாய்
விண்ணகக் கருவிமழை சொரியவொரு வித்தாகி
விளைவாகி உணவாகினாய்
தீதகல வும்சகல சீர்பெருக வும்சுடர்செய்
தெய்வமே யடிபோற்றி ஓம்
சிவசூரியாய நம சிவசூரியாய நம
சிவசூரியாய நமவே. (02)

 பல சமயத்தவர்களும் ஒளி தரும் சூரியனைப் புகழ்ந்து கொண்டாடுகின்றனர். அதனால்,’ உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு’ என்றது திருமுருகாற்றுப்படை. சூரியன் ஊர்ந்து வரும் தேரினுக்கு ஒரு சக்கரமே உண்டு. கண்களை மறைக்கும் இருளை விலக்கி உதய காலத்தில் உலகினைக் காட்டுவதால் , உலகினைப் படைக்கும் பிரமனாகின்றான், சூரியன்; உச்சிக் காலத்தில் நிறைந்த ஒளியாகச் சிவபிரானாக இருக்கின்றான்.; கடலில் மறைகின்றபோது கருநிற மாதவனாகிய திருமாலாக இருக்கின்றான். இவ்வாறு சூரியன் முத்தேவர்களாக முனிவர்கள் தொழும் முதல்வனாக உள்ளான்.

மூதண்டகூடம்- அண்டகோளகை. Globe of the Universe.அண்டகோளகை முற்றும் மண்டியிருந்த இருள் நீங்கி ஒழியுமாறு பிரகாசிக்கின்ற மணி விளக்கே! (Lustrous Gem). வைதீகநெறிசெழிக்கவும் உயிர்கள் எல்லாம் வாழவும் கடலின் உவர் நீரை இனிய அமுதமாய் , விண்ணிலிருந்து இடி மின்னல் ஆகியவற்றோடு கூடி மழையாகச் சொரியும் மூல காரணமாகி, வித்தாய் விளைவாகி உணவாகினாய்!

வானின் றுலகம் வழங்கி வருதலாற்,

றானமிழ்த மென்றுணர்தற் பாற்று.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பயதூஉ மழை;

நெடுங்கடலுந் தன்னீர்மை குறுந் தடிந்தெழிலி

தானல்கா தாகி விடின்.
தீயனவெல்லாம் அகன்று நீங்கவும் நல்லன பெருகவும் ஒளிசெய்கின்ற தெய்வமே உம் அடிபோற்றுகின்றோம். சிவசூரியாய நம.

எண்பெற்ற நாடிபகல் இரவுநாள் கிழமைமதி
இருதயனம் ஆண்டு முதலாய்
எழுகின்ற காலவகை புரிகின்ற எந்தைநீ
இயமனுக் கொருதந்தைநீ
மண்பெற்ற உயிர்கட்கு மழையாகி அமுதமுமாய்
வாள்விகளான வனும்நீ
வாதமுத லானபல மோதுபிணி தீதகல
மாமருந் தானவனும்நீ
விண்பெற்ற மாமணி விளக்கம்நீகோள்கடரு
வினைகளை அறுப்பவனும்நீ
வேததந் திரமோதி யாதியந் தணர்நாளும்
மேவுமந் திரரூபன்நீ
திண்பெற்ற வுலகிலோ ராயிரம் பெயர்பெற்ற
செல்வன்நீ அடிபோற்றி ஓம்
சிவசூரியாயநம சிவசூரியாயநம
சிவசூரியாய நமவே. (03)

காலம் என்பது மாத்திரை அல்லது நாடி முதலாக நாழிகை, யாமம், பொழுது, நாள், பக்கம்(சுக்கிலபட்சம், கிருஷ்ணபட்சம்), திங்கள்,இருது, அயநம் (உத்திராயணம், தட்சிணாயனம்) ஆண்டு, யுகம் எனப் பலவகையாக எண்ணப்படுகின்றது.
காலம் ஒன்றாய் வியாபகமாய் நித்தமாயுள் தென நையாயிகர் கூறுவர். ஒன்றாகவும் வியாபகமுமாகவும் உள்ள காலத்தைப் பகுத்தறிய உதவுவது, சூரியனின் உதயமும். 
“நாழிகை கழிந்தது, நாள் கழிந்தது, திங்கள் கழிந்தது என்றுணர்தலும் வழங்காலும் ஞாயிற்றின் செலவு முதலியவற்றைக் குறித்தன்றி உளவாகாமையும்,அங்ஙனம் உணர்தற்கும் வழங்குதற்கும் ஞாயிற்றின் செலவு முதலியனவே ஏதுவாதலும் காண்டுமாகலானும் , நாழிகை, நாள், பக்கம், திங்கள், பருவம், அயனம், ஆண்டு என்றற்றொடக்கத்துக் காலப்பாகுபாடு ஞாயிற்றின் செலவு முதலியவற்றின் செயற்கையாவது” எனச் சிவஞானபோதம் மாபாடியம் இக்காலப் பாகுபாடு செயற்கை என்றும் இச்செயற்கைக் காலப்பாகுபாட்டுக்குச் சூரியன் ஏதுஎனவும் கூறுதல் காண்க.

சூரியன் எமனுக்குத் தந்தை என்பது புராணக்கதை. எமனுக்கு நடுவன் என்றொரு பெயர் உண்டு; சூரியனுக்கும் நடுவன் என்ற பெயருண்டு. அவன் நடுவன் ஆகையால்தான் கோவலன் கள்ளன் எனக் குற்றம் சாட்டப்பட்டுக் கொலையுண்டபோது, காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என்கணவன் எனக் கண்ணகி சூரியனை வினவினாள்.
மண்ணில் தோன்றிய உயிர்கள் உடல்வளர்ச்சி பெற மழையாகி உணவாகிய அமுதமாகியவனும் அறிவு வளர்ச்சிபெற ஒளிதரும் கண்ணாக விளங்குபவனும் சூரியன். 
பக்கவாதம் உதலிய பிணிகளுக்குச் சூரிய வெப்பமும் ஒளியுமே மருந்தென வைத்தியர் கூறுவர். ஆதலின் மாமருந்தானவனும் சூரியன்.
வேதமோதும் அந்தணர் நாளும் செபிக்கும் மந்திர ரூபன் சூரியன். சிவசூரியனாகையால் அவன் ஆயிரம் நாமங்களால் துதிக்கப்பெறுகின்றான்.

ஓரேழு வகையான உயிர்கட்கும் உடல்வளர
ஒளியுணவு தரும்அன்னையே!
ஓங்கார மூலமந் திரவடிவ மாகியே
உள்ளறிவு தருதந்தையே!
காரேழு புவியேழு கடலேழு மலையேழு
கண்டுகண் களிதுளும்பக்
கந்துமோ ரேழுடைய சுந்தாத் தேரின்மிசை
கணமேழு முடனேறவே
சாரெழு முனிவர்தொழ அசுரர்பின் நின்றிடச்
சதியரம் பையராடிடச்
சந்தமை கந்தருவ ரிசைபுரியாந்தரத்
தணியரவ நெடுவீதியில் 
சீரேறு திருவுலா நாடோறும் வருகின்ற
தெய்வமே அடிபோற்றி ஓம்
சிவசூரியாய நம சிவசூரியாயநம
சிவசூரியாய நமவே. (04)

 உயிர்கள் எழுவகை: அவையாவன: தாவரம், நீர்வாழ்வன, பறப்பன, ஊர்வன, விலங்கு, மனிதர், தேவர் என்பன. 
ஓரேழுவகை என்பதில் ஓர் என்பதற்குத் தனிப் பொருள் இல்லை. ஓர் ஏழ் ஏழு என்ற வாய்பாட்டில் ஏழு என்பதுதான் பொருள். ஒரு என்பதற்குச் சிறப்பு எனப் பொருள் கொண்டால், இறை உயிர், தளை எனும் முப்பொருளில் உயிரே முத்தி இன்பத்திற்கு உரியது, அது ஏழ்வகை எனக் கொள்க. 
அந்த ஏழுவகை உயிர்களுக்கும் உடல் வளர்ச்சி அடையச் சூரியன் ஒளியாகிய உணவைத் தருதலான் அன்னையெனப்படுவான்.
சூரியனே ஓங்காரப் பேரொளிக்கும் உள்ளொளியாகி நீங்காத பேருருவமாகி நின்று ஆன்மாக்களுக்கு ஆன்ம அறிவு தருதலினால் தந்தையும் ஆவன். ‘ஈன்று புரந்தருதல் தாய்க்குக் கடனே, சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’ ஆன்மாவின் பொருட்டுச் சூரியன் இவ்விரண்டு கடமைகளையும் செய்தலினால் இருமுது குரவருமாவன். 
ஓங்காரம் சமஷ்டிப் பிரணவம் என்று சொல்லப்படும். அது மூலமந்திரமாகிய வியஷ்டிப் பஞ்சாக்கரத்தின் சுருக்கம். இதில் ஓங்கார மூலமந்திரம், அதனுல் திகழும் உள்ளறிவு , அந்த அறிவினைத் தருகின்ற தந்தை மூன்றும் கூறப்படுகின்றது.
ஓங்காரம் நாதம். அந்த ஓங்கார நாதத்தினைக் கடந்த உள்ளொளி என்றது ஆன்ம போதம். ஆன்ம அறிவுக்கு அறிவூட்டி அதன் உள்ளொளியாகிய சிவஞானமாக நிற்றல் இறைவனது பேருவநிலை. 
ஆன்மபோதம் குறை சுடர்; சிவபோதம் நிறைசுடர். நிறைசுடராகிய சிவப்பிரகாசத்திற்குக் குறியீடு பௌதிகப் பேரொளி தரும் சூரியன். புற இருளை நீக்கும் சூரியனைப்போல் அகத்திருளாகிய ஆணவமல இருட்டினை ஒழிக்க, உயிரறிவுக்கு மெய்யறிவு உதவுவது சிவனருள் ஆதலால் , ‘ஓங்கார மூலமந்திரமாகியே உள்ளறிவு தரு தந்தையே” என்றார். ஈண்டு தந்தை என்றது சிவத்தை.
அடுத்து ககனவீதியிற் சூரியன் பவனி வரும் மாட்சியைக் கூறுகின்றார்.

ஆகமங்களில் அண்டங்களின் விரிவு பேசப்படுகின்றது. அங்கெல்லாம் உயிர்கள் வாழ்கின்றன. காரேழு (ஏழுவகை மேகங்கள்) நிலங்கள் ஏழு, கடல்கள் ஏழு, மலைகள் ஏழு ( இவற்றின் விரிவை கந்தபுராணம் அண்டகோசப்படலம், சிவஞான மாபாடியம் இரண்டாம் சூத்திரப் பாடியம் ஆகியவற்றிற் காண்க புவியேழு – அதலம், விதலம், சுதலம், நிதலம், தராதலம், இரசாதலம், மகாதலம் என்பன. கார் ஏழு- புட்கலாவர்த்தம், சமவர்த்தம், துரோணம், காளமுகிவரை ஏழு- நிஷதம், ஏமகூடம், இமயம், நீலம் சுவேதம் , சிருங்கம், கந்தமாதனம்)

ஆகிய இவ்விடங்களில் வாழ்கின்ற உயிர்கள் கண்களில் நீர் துளும்பத் தன்னைக் கண்டு களிகூருமாறு , ஏழுகுதிரைகள் பூட்டிய தேரில் முனி கணங்கள் ஆகாயத்தில் மேல் உடன் தொடர, அருகில் நின்று முனிவர்கள் துதிக்க, அசுரர் பின் னிட, அரம்பையர் ஜதியுடன் நடனமாடிட , கந்தருவர்கள் இசை புரிய, ஆகாய வீதியில் அழகிய நெடு வீதியில் பெருமையுடன் நாள்தோறும் திருவுலா வருகின்ற தெய்வமே ! உம்முடைய அடிபோற்றுகின்றோம். சிவசூரியாயநம.

இப்பாடலில் சூரியனைத் தொடர்ந்து ஆகாயத்தில் பறந்து வரும் முனி கணங்களாவார் யாரெனின், “விண்செலல் மரபின் ஐயர்” எனத் திருமுருகாற்றுப்படையிலும், “சுடரொடு திரிதரு முனிவரும்” எனச் சிலப்பதிகாரத்திலும் கூறப்படுவோராவர். அவர்களுடைய செயலைப் புறநானூறு (43) பின்வருமாறு கூறுகின்றது.
நிலமிசை வாழ்நர் அலமரல் தீர
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்
காலுண வாகச் சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவர்
‘நிலத்தின்மேல் உயிர்வாழ்வார்க்கு வெம்மையான் உளதாகிய அயர்ச்சி நீங்கச் சுடுகின்ற கதிரையுடைய ஞாயிற்றினது வெப்பத்தைத் தாம் பொறுத்து காற்றை உணவாகக் கொண்டு அச்சுடருனே சூழவரும் விளங்கிய சடையை உடைய அருந்தவர்” என்பது பழைய உரை. சுடர் திரிந்தவழித் திரிந்து தவம் செய்யும் முனிவர்கூட்டம் என்க.

காலையும் நண்பகலும் மாலையுந் தேருருட்
கனகுட வட்டமாகக்
கார்கூதிர் முதலாய பருவங்க ளாறுமே
கருதுமா ரங்களாக
ஏலுமோ ராண்டுவட் டம்வலய மாகவமை
எந்திர மணித்தேரிலே
ஏழுசந் தங்களும் வாம்பரிக ளாகமே
லேறா திறங்காநிலை
சாலுமன மேவாத கோலமலை தனிலுலகு
தழையநட மாடுமுதல்வா
சங்கரன் பேரொளி கவர்ந்துயிர்க் கீகின்ற
தாணுவே யெமையாளுவாய்
சேலயிற் றிருவிழிச் சாயைதோள் புணர்கின்ற
தெய்வமே அடிபோற்றி ஓம்
சிவசூரியாயநம சிவசூரியாயநம
சிவசூரியாய நமவே. (05)

 இப்பாடலில் சூரியன் ஊர்ந்து வரும் ஓராழித் தேரின் வருணனை கூறப்படுகின்றது. வருணனை உருவகமாக அமைந்துளது.
தேரின் சக்கரம் கழண்டு விடாதபடிச் செருகி வைக்கப்பட்டிருக்கும் கடையாணியை மூடி அலங்காரமாகக் குமிழ் போன்ற ஒரு உறுப்புச் செருகப்பட்டிருக்கும். அதற்குக் குடம் என்பது பெயர். சூரியன் ஊற்ந்துவரும் ஓராழித்தேரின் குடம் பொன்னால் ஆனது. அது வட்டமாக அடுக்கடுக்காக உள்ளது. அதனால், அது ‘தேர் உருள் கனக குட வட்டம்’ எனப்பட்டது. உருள் – சக்கரம். கனகம் – பொன். குடவட்டம் – வட்டக்குடம்; வட்டமாக அமைக்கப்பட்ட குடம். சூரியன் தேரின் கனக குடவட்டமாக அமைந்தவை, காலையும், நண்பகலும் மாலையும்.
தேரின் சக்கரத்துக்கு ஆரங்களாக அமைந்தவை கார், கூதிர், இளவேனில், முதிர்வேனில், முன்பனி, பின் பனி ஆகிய ஆறு பருவங்கள். 
சக்கரத்துக்குப் ‘பட்டா’வட்ட வலயம் (Rim) பொருந்திய ஒரு ஆண்டு. 
இவ்வாறுஅமைந்த இயந்திரமாகிய அழகிய தேரிலே ஏழுநிறங்கள் வாவியோடும் குதிரைகளாகப் பூட்டப்பட்டுள்ளன.
அந்தத் தேரின்மீது ஏறாதும் தேரினின்றும் இறங்காதும் நிலையாக இருந்து, மனத்தாலும் கருத இயலாத உருவத்தோடு உலகு தழைய போக்கு வர்வு புரியும் தலைவன் சூரியன். 
சங்கரனாகிய சிவனிடமிருந்து பேரொளியைப் பெற்று உயிர்களுக்கு ஈகின்ற பற்றுக் கோடு சூரியன்.
அத்தகைய தாணுவே! எங்களை ஆளுவா1
சேலும் அம்பும் போன்ற சாயலைக் கொண்ட சாயாதேவியின் தோளினை அணைக்ற தெய்வமே! உம்முடைய திருவடிகளுக்கு வணக்கம். எம்மைக் காத்தருள்க. சிவசூரியாயநம்.
சந்தம் – நிறம். சங்கரன் – உயிர்களுக்கு இன்பளிப்பவன். தாணு – தூண்; பற்றுக்கோடு. 
சாயை – சூரியன் விஸ்வகர்மாவின் மகளானசஞ்சிகை என்பவளை மணந்தார் . அவள் சூரியனின் வெப்பத்தைத் தாங்க இயலாமல் தன்னைப்போல் நிழல் உருவைத் தோற்றுவித்துச் சூரியனுடன் வாழும்படிக் கேட்டுக் கொண்டாள். அவள்தான் சாயாதேவி.
சிவபூசையில் மகாதீபாராதனையின்போது சொல்லப்படும் மந்திரம்,
தத்ர ஸூர்யோ பதிந சந்த் ரதாரகம்
நேமா வித் யுதோ பா ந்தி குதோ யமக்னி:
தமேவ பா ந்த்மனுபாதி சர்வம்
தஸ்ய பா ஸா சர்வமிதம் விபாதி 
இந்த மந்திரம் கடோபநிஷத்தில் உள்ளது.

இதனையே இவ்வாசிரியர், ‘சங்கரனாகிய சிவனிடமிருந்து பேரொளியைப் பெற்று உயிர்களுக்கு ஈகின்ற பற்றுக் கோடு’ என்றார்

மூவாத முருகனருள் ஓராறு தாமரை
முகங்கடமில் ஒன்றாகினாய்
முதுமறைக் குயிரான சாவித் திரிக்கரிய
மூலமுத லாகி நின்றாய்
ஓவாத எட்டுவகை வடிவத்தில் ஒன்றாகி
உருவாகி யருவாகினாய்
ஒடியாத மூவரின் வடிவாகி னாயன்றி
உலகுக்கொர் கரியாகினாய்
சாவாத நன்மருந் தருளியே வெம்பிணிகள்
தணிமருத் துவனாயினாய்
சங்கத் தமிழ்ப்புலவர் நாவிலும் பாவிலும் 
தழையுமுன் புகழறிவதார்
தேவாதி தேவனுறை பீடமாய் விழியான
தெய்வமே அடிபோற்றி ஓம்
சிவசூரியாயநம சிவசூரியாயநம
சிவசூரியாய நமவே. (06)

முருகன் குமரன். நக்கீரர் முருகனை ‘என்றும் இளையாய் என்றழைத்தார். அதனால் இவ்வாசிரியர் ‘மூவாத முருகன்’ என்றார். மூவாமை – வயது ஏறாமை; மூப்பு அடையாமை.

முருகன் ஆறுமுகன். அந்த ஆறுமுகங்களில் ஒன்று புறக்கண்ணுக்கு ஒளி தந்து புறவிருளை ஓட்டுகின்றது. அதுவே, அகக்கண்ணுக்கு ஒளி நல்கி அகவிருளை அகற்றுகின்றது. இதனை, முறையே,
மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப் பல்கதிர் விர்ந்தன்று ஒருமுகம்எனத் திருமுருகாற்றுப் படையும்,
விடுத்தகலாப் பாச இருள் துரந்து பல்கதிரின் சோதிவிடும் வாச மலர்வதன மண்டலமும் என கந்தர்கலிவெண்பாவும் கூறின.

புறவிருளை நீக்குவதைக் காட்டிலும் ,எப்பொழுதும் உயிரை விட்டு நீங்கா ஆணவமல இருளை ஓட்டி ஞானஒளியைத் தரும் கருணையே பெரிதாம்.

காயத்ரி மந்திரமாவது, 
ஓம்! பூர்புவஸ்ஸவஹ!
தத் ஸவிதுர் வரேண்யம்!
பர்க்கோ தேவஸ்ய தீமஹி!
தியோயோந ப்ரசோதயாத்!!

என்பதாகும். பர்கன் – சூரியன்.

காயத்திரி மந்திரத்தை வெளிப்படுத்தியவர் விசுவாமித்திரர்.
இவரே ‘ஆதித்ய கிருதயம்’ மந்திரத்தின் மூலம் சூரிய வழிபாட்டு மறைப் பொருளை இராமனுக்குப் போதித்து வழிப்படுத்தியவர் ஆவார்.

காயத்திரி மந்திரம் சூரியனுடைய ஆற்றலை நோக்கி கூறப்படுவதாகும். இந்த மந்திரம் எல்லையற்ற ஆற்றலுடையது. இந்த மந்திரம் சூரியனைத் தலைமைத் தெய்வமாகக் கொண்டது. அதனால் உண்மையிலேயே வியக்கத்தக்க அளவற்ற ஆற்றல்களைக் கொண்டது. மனித இனத்தின் மிகப்பழைய நூலாகிய வேதத்தில் காணப்படுகிறது. (ரிக் வேதம் 111.62.10) காயத்திரி வேதங்களின் தாய் ந்த மந்திரம் எங்கெல்லாம் ஓதப்படுகின்றதோ அங்கெல்லாம் காயத்திரி இருப்பாள். காயத்திரிக்கு காயத்திரி, சாவித்திரி, சரஸ்வதி என மூன்று பெயர்கள் உண்டு. இம்மூன்றும் நம் ஒவ்வொருவருள்ளும் உள்ளன. காயத்திரி புலன்களின் தலைவி, சாவித்திரி உயிரின் தலைவி, சரஸ்வதி பேச்சின் தலைமைத் தெய்வமகளாகவும் விளங்குகின்றாள். இம்மூவரும் எண்ணம், சொல், செயல்களின் தூய்மையைக் குறிப்பவர்கள் (திரிகரணசுத்தி) எண்ணம், சொல், செயல்களின் தூய்மையையும் இசைவையும் கடைப்பிடிப்போரிடம் மூவரும் நிலைபெற்றுவாழ்வர்.
இக்காரணங்களால்”முதுமறைக் குயிரான சாவித் திரிக்கரிய மூலமுத லாகிநின்றாய்” என்றார்.

இறைவன் ஐம்பூதங்கள், சூரியன் சந்திரன் ஆகிய இருசுடர்கள், ஆன்மா ஆகிய எட்டிலும் அதாவது சடம் சித்து ஆகிய எல்லாப் பொருள்களிலும் , அவற்றைத் தன் திருமேனிகளாக (மூர்த்தங்களாக)க் கொண்டு அவற்றின் உயிர்களாக அவற்றொடு கலந்து நின்றான். அப்படிக் கலத்தலால் ஐம்பூதங்களை இயக்குபவனாகவும் இருசுடர்களுக்கு ஒளியைத் தருபவனாகவும் ஆன்மாவுக்குச் சிற்சத்திப் பிரேரகனாவும் அவற்றை இயக்குவோனாகவும் உள்ளான்.
சூரியன் சிவத்தின் அட்டமூர்த்தங்களில் ஒன்றாதலினால், “ஓவாத எட்டுவகை வடிவத்தில் ஒன்றாகி என்றார். ஓவாத- விட்டு நீங்காத என்று பொருள்.

புறவிருளை நீக்குகின்ற சூரியன் கண்ணுக்குப் புலனாகின்றான்; அகவிருளை நீக்குகின்ற ஞானசூரியன் கண்ணுக்குப் புலனாகாமல், அருவாகி அறிவால் அறியப்படுவோனாக உள்ளான். அதனால் “உருவாகி அருவாகினாய்” என்றார். 
ஒடியாத- அழியாத. “ஒடியாத மூவர்”- அயன், அரி, அரன். சூரியன் இறைவன் அருளால் முத்தேவர்களின் பணியாகிய படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்தலினல் “ஒடியாத மூவரின் வடிவாகினாய்” என்றார். சூரியன் தன் ஒளியினால் பருவங்களைத் தோற்றுவித்துப் பயிர்களைப் படைக்கின்றான்; காக்கின்றான்; அழிக்கின்றான். ஆதலின் மூவர் வடிவானான். 
சூரியன் பிரபஞ்சம் அனைத்துக்கும் மேலாக நின்று உலக நிகழ்ச்சிகளுக்குச் சாட்சியாகின்றான். ஆதலால் உலகுக்கோர் கரியாகினாய் என்றார். கரி – சாட்சி.

சூரியனின் ஒளியே வாதம் முதலிய நோய்களுக்கு மருந்து. அதனால்,”வெம்பிணிகள் தணி மருத்துவனாயினாய்” என்றார்.

சூரியனை நக்கீரர், திருமுருகாற்றுப்படையில், உலகம் உவப்பப் பலர்புகழ் ஞாயிறு என்று போற்றினார்.”புலவர் புகழ்ந்த பொய்யா நல்லிசை, விரிகதிர் ஞாயிறு” என்றார், புறநானூற்றுப் புலவர் ஐயூர் முடவனார். இதுபோலச் சங்கப்புலவர்களின் நாவிலும் பாவிலும் தழைகின்ற சூரியனின் புகழை யாரே அறிவர்?

தேவாதிதேவனாகிய மகாதேவன் சிவன் வீற்றிருக்கின்ற பீடமாகவும் அவனுடைய ஒருவிழியாகவும் இருக்கின்ற சூரியனான தெய்வமே உம் அடி போற்றுகின்றோம் சிவசூரியாய நம..

ஒளியேறும் அம்புலியும் எரியேறு சேயுமதி
உயர்வே றிடும்புந்தியும்
ஓதுமா கண்டலன் முப்பத்து முக்கோடி
உம்பர்கள் வணங்கு குருவும்
வெளியேறு முகில்சொரிய அருள்கின்ற வெள்ளியும்
வினையேறு சனியுமன்றி
வேறான ராகுவும் கேதுவும் செய்கின்ற 
வேதனைப் பிணிதணித்துக்
களியேறும் மந்தேகர் எனுமசுரர் குழுவினைக்
கட்டறுத் துயிர்புரக்கும்
கடவுளே ஏழையடி யேங்களைக் காத்திடக்
கட்கடை திறந்தருளுவாய்
தெளியேறு சிந்தையோர் வழிபாடு கொண்டருள்செய்
தேவனே அடிபோற்றி ஓம்
சிவசூரியாயநம் சிவசூரியாயநம 
சிவசூரியாயநமவே. (07)

 ஒளி ஏறு அம்புலி- மிக்க ஒளி வீசும் சந்திரன். ஏறு –ஏற்றம்- மிகுதியைக் குறிக்கும்
எரி ஏறு சேய். நெருப்புப் போன்ற செந்நிறம் கொண்ட செவ்வாய். ஏறு – உவம உருபு.
மதி உயர்வு ஏறிடும் புந்தி – புதன். புதன், கல்விக்கு அதிபதி. இவரை வழிபடுவதன் மூலம் கல்வி அறிவு கிடைக்கும், பீடை போகும், கவி பாடும் ஆற்றல் அதிகரிக்கும். மதி – அறிவு. உயர்ந்த அறிவு மிகுந்த புதன். 
ஆகண்டலன்- இந்திரன். ஓது ஆகண்டலன் –

கம்பியா திந்த்ரலோ கங்கள்கா வென்றவா கண்டலே சன்சொல்வீரா  திருப்புகழ் – சங்கைதா

நாங்கள் நடுக்கங் கொள்ளாதவாறு எங்களது இந்திரலோகத்தைக் காத்தருள்க என்று முருகனிடம் ஓதிய ஆகண்டலேசன். 
முப்பத்து முக்கோடி உம்பர்கள் வணங்கும் குரு – முப்பத்து முக்கோடி தேவர்கள் வணங்குகின்ற குருவாகிய பிரஹஸ்பதி எனும் வியாழன்.
வெளி ஏறு முகில்சொரிய அருள்கின்ற வெள்ளி – வானில் பரந்துள்ள கார்முகில்கள் மழை சொரிய அருள்கின்ற வெள்ளி எனும் சுக்கிரன்.
வினை ஏறு சனி- உயிர்கள் செய்த்த வினைப்பயனை ஊட்டுகின்ற சனி;
“ஏறு’ எனும் சொல் பலபொருள்களிலும் எதுகையில் ஆளப்பெற்றிருத்தல் காண்க.
அன்றி – இவைமட்டுமே அன்றி;
வேறான ராகுவும் கேதுவும் – ராகு கேது இரண்டையும் சாயா கிரகங்கள் அல்லது நிழல் கிரகங்கள் என்பர் . ஏனைய கிரகங்களைப் போல இவ்ற்றிற்கு உருவம் இல்லை. அதனால் பிறவற்றினின்றும் வேறான தன்மையுடையன எனச் சுட்ட வேறான ராகுவும் கேதுவும் என்றார். 
இக் கோள்கள், அவரவர் குண இயல்புகளுக்கு ஏற்ப உலகுக்கும் அதில் வாழும் மக்களுக்கும் நன்மையையோ தீமையையோ செய்கின்றன எனச் சோதிட நூல் கூறுகிறது.
இந்துக்களின் வழிபாட்டுக் குரியதா யமைந்த ஒன்பது கிரகங்கள் நவக்கிரங்கள் எனப்படும்.கிரகம் எனும் சமசுகிருத சொல் ஆளுகைப்படுத்தல் – seizing, laying hold of, holding  எனும் பொருளுடையது. நவக்கிரகம் ஒன்பது ஆளுகைக்காரர்கள் எனப் பொருள்படும். புவியிலுள்ள உயிர்களைதம் ஆளுகைக்குட்படுத்துகின்ற அண்டவெளிக் கூறுகளாக இவை கருதப்படுகின்றன.
சூரிய வழிபாடு நவக்கிரகங்கள் செய்யும் இடர்களைத் தவிர்க்கும் என்பர். ஆதலால் ‘வேதனைப் பிணி தவிர்த்து என்றார்.
மந்தேகாருணம் என்னும் தீவில் வாழும் மந்தேகர் என்னும் அரக்கர்கள் உக்கிரமான தவத்தைச் செய்து பிரமனிடத்து வரம் பெற்று அதனாற் செருக்கி எப்பொழுதுஞ் சூரியனை வளைந்து எதிர்த்துத் தடுத்துப் போர் செய்கின்றன ரென்றும், அந்தணர்கள் சந்தியாகாலங்களில் மந்திர பூர்வமாகக் கையில் எடுத்துவிடும் அருக்கிய தீர்த்தங்கள் வச்சிராயுதம் போலாகிஅவர்கள்மேல் விழுந்துஅவர்களை அப்பால் தள்ளிச் சூரியனது சஞ்சாரத்துக்குத் தடையில்லாதபடி செய்கின்றனவென்றும், அப்படி அந்தணர்கள் செலுத்தும். அருக்கியத்தின் ஆற்றலால் சூரியமண்டலத்தி னிடையே ஒரு செந்தீ எழுந்துசொலிக்க அத்தீயில் அவ்வரக்கர்கள் விளக்கில் விட்டில் போல விழுந்து ஒழிகின்றனரென்றும் நூல்கள்கூறும்.

சேமர விக்கம் படையாக வீசுப தேசமுன்னூற்
சேமர விக்கம் பலந்தரு வாய்”  = கந்தரந்தாதி 40
சிவந்த ரவிக்கு (சூரியனுக்கு)ச் சலத்தை (அம்) அசுரரது தடையை விலக்கும் ஆயுதமாக இறைக்கின்ற , உபதேசத்தையும், முப்புரி நூலையும் காப்போராகிய வேதியர் செலுத்தும் அவிர்ப் பாகத்திற்கு அழகிய நற்பயனையும் தருவாய்” என்பது இத்தொடரின் பொருள்

கருதி அந்தணர் யாவரும் தங்கடன் கழிப்பச்
சுருதி யென்னும்வெஞ் சாபமே லம்புகை தொடுத்துப்
பருதி தன்பெரும் பகைவர்மேல் விடுத்தலின் பரந்த 
குருதியாமென நிவந்தெழச் சிவந்தது குடபால்

வில்லிபாரதம் கிருஷ்ணன் தூது 86

மாலை அந்திநேரம். சூரியன் மேற்குத்திசை நோக்கிப் பயணிக்கின்றான். அந்தி வானம் செவ்வானமாகப் பரந்து இருக்கின்றது. எதுபோலவெனின், அந்தியில் தம் நித்திய அனுஷ்டானத்தைச் செய்யக் கருதிய அந்தணர்கள் அனைவரும் தத்தம் கடன் கழிப்பதற்கு வேத மந்திரங்களாகிய கொடிய வில்லின்மேல் நீராகிய அம்பினைக் கை தொடுத்து சூரியனின் பகைவர்கள் மேல் விடுத்தலினால், பகைவர்களின் உடலிலிருந்து பரந்த இரத்தம் போல மேல்வானம் சிவந்தது
இவ்வாறு சூரியமூர்த்தி நவக்கிரகங்களால் வரும் பிணி தணித்து , மந்தகர் எனும் அசுரக் கூட்டத்தினைக் கட்டறுத்து உயிர்களக் காப்பாற்றும் கடவுளே! அடியேங்களைக் காத்திடக் கடைகண் திறந்தருள்வாய்.
தெளிந்த சிந்தனை உடையவர்களாகிய ஞானியர் ஆற்றும் வழிபாடு கொண்டு அருள் செய் தெய்வமே! உம்முடைய அடியினைப் போற்றுகின்றோம்.
சிவசூரியாய நம.

மாறாத விழிநோய்கள் தலைவலி கபாலங்கள்
மண்டைநோய் கிறுகிறுப்பு
வலிகொண்ட பல்லுநோய் செவிநோய்கள் முகமேவும்
வாதநோய் சுரநோய்களும்
ஆறாத கண்டநோய் நாவில்வரு பிளவைநோய்
ஆனந்த வாய்வுகளெலாம்
ஆவணித் திங்கள்வரும் ஆதிவா ரத்திலே
அன்புடன் நோன்பியற்றிக்
கூறான பொங்கலும் பூசையும் செய்துபின் 
கோளறும் பதிகமோதிக்
கும்பிடும் பேர்களைக் கும்பிட்டு விலகுமிது
குவலயங் கண்டவுண்மை
தேறாத வர்க்கும்அருள் பேறான கண்கண்ட
தெய்வமே அடிபோற்றி ஓம்
சிவசூரியாயநம சிவசூரியாயநம
சிவசூரியாய நமவே (08)

இந்தப் பாடலில் சூரியனின் ஒளியாலும் வெப்பத்தினாலும் குணமாகும் நோய்களை ஆசிரியர் கூறுகின்றார். எனவே, சூரியன் பலநோய்களுக்கு வைத்தியனும் ஆவன். 
பவரோக வைத்தியநாதன் சிவபெருமான். உடல்நோய்க்கு வைத்தியநாதன் சிவசூரியன்.
இப்பாடலில் சூரியனைக் குறித்த வழிபாடும் விரதமும் கூறப்படுகின்றது. அது ஆவணிமாதம் ஞாயிற்றுக் கிழமை நிகழ்த்தப் பெறுகின்றது. அன்று ஆவணி அவிட்டம், காயத்திரிவிரதம் கொண்டாடப் படுகின்றது.
கடவுள் ஒருவ்ர் உண்டு எனத் தெளியாதவர்களுக்கும் அவர் சூரியனாக ஒளியும் வெப்பமும் தந்து அருள்புரிகின்றார். ஆதலால், ‘தேறாதவர்க்கும் அருள் பேறான கண்கண்ட தெய்வம்’ சூரியன்.

எங்கணுந் திருவிழிகள் எங்கணும் சோதிமுகம்
எங்கணும் செங்கரங்கள்
எங்கணும் திருவடிகள் எங்கணும் திருவுருவம் 
எங்கணும் சாட்சியாகிக்
கங்கைவார் சடையண்ணல் கண்ணுமா யுருவமாய்க்
கனகபீ டிகையுமாகிக்
காட்சியாய்க் காட்சிபுரி விழியுமாய் விழியுளே
கதிருமா யொளியுமாகி
அங்ககன வெளியிலே நின்றுமுத் தொழில்புரியும்
அண்ணலே எண்ணிலாத
அசுரர்குழு வெனுமிருளை முடிவுபெற அழிவுசெயும்
ஆதியே அபயமபயம்
திங்கள்முத லாயகோள் நாள்களைஇயக்கிடும்
தெய்வமே அடிபோற்றி ஓம்
சிவசூரியாயநம சிவசூரியாயநம
சிவசூரியாயநமவே. (09)

பல்கோடி அண்டங்களையும் ஞானாகாசமாகிய தன்பரந்த வெளிக்குள்ளே அடக்கிக் கொண்டிருக்கும் சிவபரம்பொருளின் பரந்த வியாபகத்தை தோத்திரநூல்கள் வியந்து துதிக்கின்றன. அத்தகைய புகழ்மொழியான திருவிசைப்பா பாடல்,
எண்ணில் பல்கோடி சேவடி; முடிகள் 
எண்ணில்பல் கோடி; திருவுரு நாமம்
ஏர்கொள்முக் கண்முகம் இயல்பும்
எண்ணில்பல் கோடி ; எல்லைக்கப் பாலாய்
நின்றைஞ் ஞூற்று அந்தணர் ஏத்தும்
எண்ணில்பல் கோடி குணத்தரேர் வீழி
இவர்நம்மை ஆளுடை யாரே.”

சிவபரம்பொருளின் வியாபகத்தை இவ்வாசிரியர் சிவசூரியனுக்கு ஏற்றி வைத்தார்.
சைவசித்தாந்த சாத்திரங்களில் சூரியன் சிவனுக்கும் சூரியனொளி சிவசத்தியாகிய அருளுக்கும் சூரிய ஒளியால் பயன் பெறும் கண் உயிருக்கும்
கண்ணொளி உயிரறிவாகிய ஆன்மபோதத்துக்கும் உவமையாகக் கூறப்படும்.

தமிழ் உவமை இலக்கணத்தில் உவமையின் பண்பினை உவமிக்கப்பட்ட பொருளுக்கும் பொருளின் பண்பினை உவமைக்கும் எற்றிக் கூறப்படும். எடுத்துக் காட்டாக,
இனிய வுளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” (100)
எனும் திருக்குறளில், ‘கனி’ உவமை; ‘இனிய கூறல்’ உவமிக்கப்பட்ட பொருள். ‘காய்’ –உவமை, இன்னாதகூறல் – உவமிக்கப்பட்ட பொருள். இந்தக்குறளில் உவமைகளான கனி, காய் இவற்றிற்கு அடைமொழி இல்லை; கூறலாகிய பொருளுக்கு இனிய, இன்னாத என்ற அடை மொழிகள் உள. உரையாசிரியர்கள் பொருளுக்கு அமைந்த ‘இனிய’, ‘இன்னாத’ எனும் அடைமொழிகளை உவமைக்கு ஏற்றி இனியகனி இருப்ப, இன்னாத காய் கவர்ந்தற்று என உவமைக்கும் ஏற்றி உரைப்பர்.
அதனைப் போன்றே இவ்வாசிரியரும் சிவத்தின் பரந்த வியாபகத்தைச் சிவத்துக்கு உவமையாகக் கூறப்படும் சூரியனுக்கு ஏற்றி, 
எங்கணுந் திருவிழிகள் எங்கணும் சோதிமுகம்
எங்கணும் செங்கரங்கள்
எங்கணும் திருவடிகள் எங்கணும் திருவுருவம் 
எங்கணும் சாட்சியாகிக்
எனக் கூறினார்.
இங்குக் கூறப்பட்ட ‘எங்கணுந் திருவிழிகள்’ எனும் அடைகள் சிவத்துக்கே உரியன.
எங்கும் கண்ணையும் எங்கும் முகத்தையும் எங்கும் கையையும் எங்கும் அடியையும் உடையராய்த், தமது கரங்களினாலும் சிறகுகளினாலும் மண்ணையும் விண்ணையும் இயைத்துப் படைப்பவர் அந்தக் கடவுள் ஒருவரே”  –இருக்குவேதம் 10. 81.3

சிவபெருமானாகிய புருஷர் ஆயிரம் தலைகளையும் ஆயிரம் கண்களையும் ஆயிரம் கரங்களையும் உடையவர்

ஸஹஸ்ர சீஷா புருஷஸ் ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரபாத்” – சுவேதாசுவர்ம், புருஷசூக்தம்

சிவத்துக்கு வடமொழி வேதமும் திரவிட வேதங்களும் கூறிய அடைமொழிகள், சிவனுக்கு உவமையாகிய சூரியனுக்கு ஏற்றப்பட்டன

சூரியன், ‘கங்கைவார்சடை அண்ணலுக்குக் கண்ணாக இருக்கின்றான்.
ஸோமசூர்யாக்நி நேத்ர😐
சுடர்மூன் றுங்கண் மூன்றாக் கொண்டான்காண்” (நாவு திருவாரூர்)
சூரியன் சிவத்தின் அட்ட மூர்த்தங்களில் ஒன்று ஆதலினால் ‘உருவமாய்’
என்றார்.
சூரியனின் மத்தியில் சிவன் வீற்றருளியிருக்கிறார். சூரியன் மூர்த்தி (வடிவம்) அந்தமூர்த்தியில் மூர்த்திமானாக சிவம் உள்ளது. எனவே ‘கனக பீடிகையுமாய’’ என்றார். பீடிகை – இருக்கை.

கண் காட்சி எனும் புலனை உடையது. கண் ஒளியுடைய தெனினும் சூரியனுடைய ஒளி கண்ணுடன் நின்று உதவவில்லையென்றால் கண்ணுக்குக் காட்சியில்லை. அதேபோல் சூரியஒளி காட்சிப்படும் பொருள்களுடன் நின்று காட்சிப்பட வில்லையேல் அந்தப் பொருள் கண்ணுக்குப் புலப்பட்டது. எனவே சூரியன் தன் ஒளியினால் காணும் கண்ணுடன் கூடி நின்று காணுகின்றான்; வெளியில் நின்று காட்டுகின்றான்; பொருள்களுடன் கலந்து நின்று காட்சிப்படுகின்றான்.
இத்னையே ஆசிரியர், “ காட்சியாய்க் காட்சிபுரி விழியுமாய் விழியுளே கதிருமாய் ஒளியுமாகி” என்றார். 
கண்ணிற் சிறந்த உறுப்பில்லை, அதனால் காட்சிபுரி விழியுமாய் என்றார். கண்ணுக்கு ஒளி இருந்தால்தான் காணமுடியும், அதனால் விழியுளே கதிருமாய் என்றார். கதிர் ஒளியைக் காண அதில் பாவை வேண்டும். அப்பரும், “கண்ணே கண்ணிற் கருமணியே மணியாடு பாவாய்” (திருவாவடுதுறை தாண்டகம்) என்றார். இக்கருத்தையே இவ்வாசிரியர் காட்சியாய்க் காட்சிபுரி விழியுமாய் விழியுளே கதிருமாய் ஒளியுமாகிஎன்றார்.
சூரியனாகிய உவமையும் உவமிக்கப்பட்ட பொருளாகிய சிவமும் உணருந்தொறும் உணருந்தோறும் மேலும் மேலும் சிறத்தல் பற்றி இவ்வாறு கூறப்பட்டது. 
சூரியன் ஆகாய வெளியிலே நிற்கின்றான். அவனுடைய கதிரே உலகில் பரவுகின்றது. அவனொளியில் தாமரை அரும்புகிறது; மொட்டாகிறது; மலராகிறது; காய்ந்து சருகாகின்றது. இவ்வாறு சூரியன் முத்தொழில் புரிகின்றான். ஞாயிற்றின் சந்நிதியில் இம்முத்தொழிலும் நிகழ்வதனைச் ,”சாற்றிய கதிரோன் நிற்க தாமரை அலரும்; காந்தம் 
காற்றிடும் அனலை; நீரும் கரந்திடும் என்றது. இந்த முத்தொழில் செய்தும் சூரியன் விகாரப்படுதல் இல்லை. இறைவன் முத்தொழில் செய்தும் விகாரப்படுதல் இன்மை ஞாயிற்றின்மேல் வைத்து உணர்த்தப்பட்டது.

அசுரர் கூட்டம் எனத் தக்க இருளை முற்றும் அழித்தொழிக்கும் ஆதியே யாங்கள் உனக்கு அடைக்கலம். கொடிய இருள் ஆணவமலம். அதனை ஒழிக்கும் ஆற்றல் சிவத்துக்கே உண்டு.

சூரியனின் இயக்கமும் ஒளியுமே திங்கள் முதலியவற்றை இயக்குகின்றது அதனால் ‘திங்கள் முதலாய கோள் நாள்களை இயக்கிடும் தெய்வமே உம் அடிபோற்றி ஓம்” என்றார். சிவசூரியாய நம.

ஓதமலி திரையிரை உவர்க்கடலை ஐயநின்
ஓரா யிரங்கரத்தால்
உண்டுருவம் மாற்றியே வானமுகில் ஆக்கியெவ்
வுயிர்கட்கும் அமுதருளல்போல்
நாதமலி ஐந்துதொழில் நாடகத் தெம்பிரான் 
நல்லவரு ளொளிவாரியில்
நன்மைதர மொண்டெடுத் துலகினுக் கொளிவெயில்
நயந்தவமு தீயும் அரசே
வேதமலி பொருளாகி வேறாகி நிற்குமுன்
மேன்மைதனை யாரறிகுவார்
வெய்யநாள் கோளினொடு மிடிபிணி யழித்தின்பம்
மேவவருள் புரிய வேண்டும்
சீதமலி திங்களுக் கமுதநில வருள்கின்ற
தெய்வமே அடிபோற்றிஓம்
சிவசூரியாயநம சிவசூரியாயநம
சிவசூரியாயநமவே. (10)

ஓதம் -மிக்க நீர். மலி – மிகுந்த , நிறைந்த,

மலி-. 1. To increase; அதிகமாதல். மணிநிரை மல்கிய மன்று (பு. வெ. 1, 13).

 1. To be filled with; to abound; நிறைதல். (திவா.) திசையாவு மல்கின்றே (சீவக. 1607).
 2. To grow, திரை – அலை. இரை – ஓசை. உவர்- உப்பு
  ‘மலி’ என்பதை ஓதமலி, திரைமலி, இரைமலி உவர்மலி எனக் கூட்டிக் கொள்க. நீரும் அலைகளும் ஒலியும் உவரும் மிகுந்த நிறைந்த கடல்.
  சூரியன் தன்னுடைய எண்ணற்ற கதிர்களாகிய கரங்களால் உவர்க்கடலை வாரிஉண்டு, நீர் என்ற உருவத்தைக் கருமுகிலாக ஆக்கி, எல்லா உயிர்களுக்கும் உணவாக ஆக்கி அருளுகின்றான். ஓராயிரம் கரம் என்றது எண்ணிக்கை குறித்ததன்று; எண்ணிக்கையற்றது என்றது குறித்தது. கதிர்கள் கரங்களாக உருவகிக்கப்பட்டது.
  நாதமலி ஐந்துதொழில் : இறைவனின் ஐந்தொழில்களாவன: படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என்பன படைத்தலில் முதலில் நாதமே முதலில் தோன்றும் தத்துவம். மண் அல்லது பிரகிருதி என்பது 36ஆவது தத்துவம். 
  படைப்பு முதலாகக் கூறினால் நாதம் முதல் தத்துவம். ஒடுங்குமுறையில் கூறினால் நாதம் இறுதி தத்துவம். ஒடுங்கு முறையில் வைத்து, உண்மை விளக்க ஆசிரியர் ‘நாதாந்த நாடகம்’ என்றார். தத்வாதீதமாக இருக்கும் திருக்கூத்து என்பது பொருள்
  இப்பாடலில் ‘நாதமலி ஐந்தொழில்’ என்பதற்கு ‘நாத முதலாகப் படைப்பு முதலிய ஐந்தொழில் ’ எனப்பொருள் கொள்ள வேண்டும்.
  இறைவன் செய்யும் ஐந்தொழிலை ஐந்தொழிற் கூத்து, ஐந்தொழில் நாடகம் என்றார். நாடகம் – நடிப்பு. ஒருநாடகத்தில் அரசனைப் போலவோ பிச்சைக்காரனைப் போலவோ ஒருவன் நடித்தால் அந்தப் பாத்திரத்தால் அவன் விகாரப்படுவதில்லை. அதுபோல இறைவனும் இவ்வைந்து தொழில்களைச் செய்வதால் விகாரப்படுவதில்லை என்பது கருத்து.
  இறைவன் நிகழ்த்தும் இந்த நாடகம் ஊன நாடகம் என்றும் ஞான நாடகம் என்றும் இருவகைப்படும். 
  ஊன நடனம் ஒருபால் ஒருபாலா
  ஞானநடம் தானடுவே நாடு” – திருவருட்பயன் 83
  இறைவன் ஆன்மாக்களைக் கூத்தாட்டுவிக்கின்றான். அவனுடைய ஆட்டுவிப்பதற்கேற்ப உயிர்கள் கூத்தாடுகின்றன். எவ்வாறெனில். 
  ‘சிவ ய நம’ எனும் திருவைந்தெழுத்தில் ஆன்மாவாகிய ‘ய’ நிற்கிறது. அதற்கு இடப்பக்கம் பிறப்பிறப்புக்களிலே செலுத்தும் ஊனநடனம், ‘நம’ நடைபெறுகின்றது; மற்றொருபக்கமாகிய வலப்பக்கத்திலே திருவ்டியிற் செலுத்தும் ஞானநடனம் ‘சிவ’ நடைபெறுகின்றது. ஊன் –உடம்பு.
  இவ்விரண்டு கூத்துக்களும் அவனது அருளால் நடைபெறுவனவே.
  கேவல அவத்தையில் அறிவற்றுக் கிடந்த உயிர் அறிவு விளக்கம் பெறும் பொருட்டு கன்மத்துக் கீடான தனு கரண புவன போகங்களை அருளி உலகியலில் ஈடுபட்டுக் கன்மானுபவத்தால் அறிவு விளக்கமும் ஆணவமலப் பிணிப்பின் தளர்வும் ஏற்படச் செய்கின்றான். எனவே, பிறப்பிறப்பில் உயிரை ஆழ்த்துவதும் சிவனது அருளே.

சிவனது அருளொளி எல்லையற்ற கடல் போன்றது. சூரியன் உலகு நன்மை பெறும் பொருட்டு அந்த அருட்கடலிலிருந்து மொண்டெடுத்துக் கொண்டுவந்து சிவனருளை ஒளியாகவும் வெயிலாகவும் அளித்து உணவாகிய அமுது ஈகின்றான்.

வான முகிலாகி மழையாக வந்த நீரமுது உவர்க்கடலில் தோன்றியது. ஒளியாகவும் வெயிலாகவும் வந்து அமுது சிவனின் அருட்கடலில் தோன்றியது எனும் உவமை நயம் காண்க

சிவபரம்பொருள் ‘மறையுமாய் மறையின் பொருளாய்’ அம்மறைக்கு அப்பாலாய் நின்ற தன்மையாய்ச் சிவசூரியனும், ‘வேதமலி பொருளாகி வேறாகி’ நிற்கின்றான்.இச்சிவசூரியனின் பெருமையினை யாரே அறிகுவர்?

நவகிரகங்களுக்குத் தலைவனான நீ, கொடிய நாள், கொடியகோள், வறுமை, பிணி ஆகியவற்றால் நாங்கள் வருத்தப்படாது இன்பம் மேவ அருள் புரிய வேண்டும். 
குளிர்ச்சி பொருந்திய சந்திரனுக்கு அமுதநிலவு அருள்கின்ற தெய்வமே! உம்முடைய அடிபோற்றுகின்றோம். எம்மைக் காத்தருள்க. சந்திரன் சூரியனினிடமிருந்து பெற்ற ஒளியையே பிரதிபலிக்கின்றான்.

இங்கு,
எண்ணில்பல புவனப் பெருந்தட்டி யூடுருவி
இவள்பெரும் புகழ்நெடுநிலா
எங்கணு நிறைந்திடுவ தங்கதனின் மெள்ளநீ
எள்ளளவு மொண்டு கொண்டு
வெண்ணிலவு பொழிவது கிடைத்தனை மடுத்திவள்
விழிக்கடை கொழித்தகருணை
வெள்ளந் திளைத்தாடு பெற்றியாற் றண்ணளி
விளைப்பதும் பெற்றனைகொலாம்
மண்ணிலொண் பைங்கூழ் வளர்ப்பது னிடத்தம்மை
வைத்திடுஞ் சத்தியே காண்
மற்றொரு சுதந்திரம் நினக்கென விளைக்கலை” –  மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், அம்புலி 5
எனும் பாடலும் ஒப்பு நோக்கற்குரியதாம்.
சிவசூரியாய நமவே.

வருமேட மதிதன்னில் வைகர்த்தனே போற்றி 
வைகாசி யென்னவோதும்
மதியிலே விவசுத மூர்த்தியா னாய்போற்றி
மிதுனமார்த் தாண்ட போற்றி
ஒருகடக மதியினிற் பாஸ்கரா போற்றியரி
ஓதிரவி மூர்த்தி போற்றி
உறுகன்னி தனிலுலக பிரகாசனே போற்றி
ஓங்குதுலை மதியதனிலே
தருமுலக சாட்சியே போற்றிதேள் தன்னிலே
சாற்றுவிக் கிரமபோற்றி
தனுவிலா தித்தனே போற்றிமக ரத்திலே
தக்கசூ ரியபோற்றிமேல்
திருவம்சுமாலினி போற்றி பங்குனியிற் போற்றி
திவாகரா அடிபோற்றிஓம்
சிவசூரியாயநம சிவசூரியாயநம
சிவசூரியாய நமவே. (11)

 சூரியர்கள்பன்னிருவர். துவாதச ஆதித்தர் எனப்படுவர். பன்னிருவருக்கும் தனித்தனி நாமங்கள் உண்டு. பன்னிரண்டு மாதங்களில் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொருவர் ஆட்சி நடைபெறும்.

மாதம் திங்கள் சூரியன்
சித்திரை மேடம் வைகர்த்தன்
வைகாசி இடபம் விவசுவத மூர்த்தி
ஆனி மிதுனம் மார்த்தாண்டன்
ஆடி கடகம் பாஸ்கரன்
ஆவணி சிம்மம் இரவிமூர்த்தி
புரட்டாசி கன்னி உலகப் பிரகாசன்
ஐப்பசி துலா உலகசாட்சி
கார்த்திகை தேள் விக்கிரமன்
மார்கழி தனுர் ஆதித்தன்
தை மகரம் சூரியன்
மாசி கும்பம் திருவம்சுமாலினி
பங்குனி மீனம் திவாகரன்