நவந்தருபேதம் எனும் ஒன்பது இறை வடிவங்கள்

நவந்தருபேதம் எனும் ஒன்பது இறை வடிவங்கள்

குருவடி பணிந்து
வைத்திய கலாநிதி இ. லம்போதரன் MD
சைவ சித்தாந்த பீடம், கனடா
www.knowingourroots.com

இறையின் ஒன்பது உருவங்களை நவந்தருபேதம் எனச் சைவம் கூறுகின்றது.

  • சிவம்,சத்தி, நாதம், விந்து ,சதாசிவன், திகழும் ஈசன்,
    உவந்தருள் உருத்தி ரன்தான், மால், அயன் ஒன்றின் ஒன்றாய்ப்
    பவந்தரும் அருவம் நாலு; இங்கு உருவம் நாலு, உபயம் ஒன்றாய்
    நவம் தரு பேதம் ஏக நாதனே நடிப்பன் என்பர்.
                                       – மெய்கண்ட சாத்திரம், சிவஞானசித்தியார் – 164

1) தன்னிலையில் (சொரூபம்/ சுயரூபம்) இறையின் வடிவம் பரசிவம்;

2) சொரூப நிலையில் உள்ள பரசிவத்தின் கருணை வடிவம் பராசக்தி; பராசக்தியே சுத்தமாயையில் இருந்து நாதம், விந்து, சாதாக்கியம், மாகேசுரம், சுத்தவித்தை எனும் ஐந்து தொழிற்படு தளங்களைச் சிவ தத்துவங்களாகத் தோற்றுவித்துச் செயற்படுத்துகின்றது. இத் தத்துவங்களில் நின்று சிவன் எடுக்கின்ற ஏழு வடிவங்களுக்கும் ஆதாரமும் உருவமும் இப் பராசக்தியே. ஆயினும் பரசிவம், பராசத்தி இரண்டு வடிவங்களும் சுயாதீனமானவை; 36 தத்துவங்களுக்கும் அப்பாலாகவும் உள்ளவை; தத்து சம்பந்தம் இல்லாதவை.

3) நாதம் எனும் சுத்த மாயா தத்துவத்தைத் தளமாகக்கொண்டு நிற்கும் பரசிவத்தின் அருவத் திருமேனி நாதம் அல்லது அபரசிவன் ஆகும்.  ஆதிசிவன் என்பதும் இதையே.

4) பிந்து என்னும் சுத்த மாயா தத்துவத்தைத் தளமாகக்கொண்டு நிற்கும் பரசிவத்தின் அருவத் திருமேனி விந்து அல்லது அபரசக்தி ஆகும்.  ஆதிசக்தி என்பது இதுவே.

5) சாதாக்கியம் என்னும் சுத்த மாயா தத்துவத்தைத் தளமாகக்கொண்டு நிற்கும் பரசிவத்தின் அருவுருவத் திருமேனி சதாசிவன் ஆகும். இதே தத்துவ உலகங்களில் இவரின் கீழ் பல பக்குவான்மாக்களும் சதாசிவர்களாக உள்ளனர். அவர்கள் அணுசதாசிவர் எனப்படுவர். அணு என்றால் ஆன்மா என்று பொருள்.

6) மாகேசுரம் அல்லது ஈசுரம் என்னும் சுத்த மாயா தத்துவத்தைத் தளமாகக்கொண்டு நிற்கும் பரசிவத்தின் உருவத் திருமேனி மகேசுவரன் ஆகும். இந்த தளத்தில் உயர் ஆன்மாக்களாகிய அனந்தேசுவரர், சூக்குமர், சிவோத்தமர், ஏகநேத்திரர், ஏகருத்திரர், திரிமூர்த்தி, ஸ்ரீகண்டர், சிகண்டி எனும் அட்ட வித்தியேசுவரர்கள் தமது வாமை, ஜேஷ்டை, ரௌத்ரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரதமனி, ஸர்வபூதமனி ஆகிய தத்தம் சக்திகளுடனும், ஸப்த கோடி ( ஏழு கோடி) மஹா மந்திரேசுவரர்களுடனும், இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வாயு, வர்ணன், குபேரன், ஈசானன் ஆகிய அட்டதிக்குப் பாலகர்களுடனும், நந்தி முதலான கணநாதர்களுடனும் வீற்றிருந்து தொழிற்படுகின்றார்கள்.

இங்குள்ள வித்தியேசுவரர்களுள் ஒருவரான ஸ்ரீகண்டர் வேறு; அனந்தேசுவரரால் அதிட்டிக்கப்பட்டு அசுத்தமாயையில் இருந்துகொண்டு பிரகிருதி மாயா உலகங்களை இயக்கும் ஸ்ரீகண்ட ருத்திரர் வேறு ( பார்க்க சைவ வினாவிடை – 19).

இங்குள்ள அனந்தேசுவரர் முதாலான வித்தியேசுவரர்கள் வேறு; சதாசிவ தத்துவ உலகங்களில் சதாசிவரோடு சூழ்ந்து உள்ள வித்தியேசுவரர்கள் வேறு. இவர்கள் ஈசுவர தத்துவ வித்தியேசுவரர்களாய் இருந்து தமது அதிகார மல வாசனையில் இருந்து நீங்கி, அதனால் ஐந்தொழில்கள் செய்வதினின்றும் விடுபட்டு சதாசிவ புவனத்தை அடைந்து அங்கு இருப்பவர்கள் ஆவர். இவர்கள் மஹாப்பிரளய காலத்தில் இவை யாவும் பரசிவனால் சங்கரிக்கப்படும்போது பரமுத்தி பெறுவார்கள்.

இங்குள்ள இந்திரன், இயமன், வர்ணன் முதலானோர் பிரகிருதி மாயா உலகங்களின் சுவர்க்கலோக அதிபதியான இந்திரன், நரகலோக அதிபதியான இயமன் முதலானோரில் இருந்து வேறானவர்கள். மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்து தண்டனை பெற்ற இயமன் பிரகிருதி மாயையில் உள்ள இயமன். இவரைத் தண்டித்தது அசுத்தமாய உலகில் அனந்தேசுவரரால் அதிட்டிக்கப்படுத் தொழிற்படும் ஸ்ரீகண்டருத்திரர் ( பார்க்க – சைவ வினாவிடை -19). இராமர் சேது சமுத்திரத்தைக் கடக்க முயற்சித்தபோது தண்டிக்கப்பட்ட வர்ணன் பிரகிருதி மாயை உலகுக்கு உரிய வர்ண தேவன். சுந்தர மூர்த்தி நாயனார் மஹாகைலாயம் சென்ற போது அவர் பாடிய கடைசிப்பதிகமான திருநொடித்தான் மலைப் பதிகத்தை அவர் ஆணைப்படி இங்கு கொண்டு வந்து திருவஞ்சைக்களத்தில் சேர்த்தது சுத்த மாயா தத்துவ உலகின் ஈசுர தத்துவத்தில் வதியும் வர்ணதேவன் ஆவான்.

இங்குள்ள மந்திரேசுவரர்கள் பர மந்திரேசுவரர்கள் எனப்படுகின்றார்கள். இவர்கள் அசுத்த மாயா தத்துவ உலகில் அனந்தேசுவரரால் அதிட்டிக்கப்பட்டுத் தொழிற்படும் அபர மந்திரேசுவரர்களிடம் இருந்து வேறானவர்கள்.

இந்த வித்தியேசுவரர்களை இராஜராஜேஸ்வரர் எனவும் அவர்களின் சக்திகளை இராஜராஜேஸ்வரி எனவும் கூறுவர். முதலாவது ராஜ என்பது இந்திரன் முதலான இங்குள்ள அட்டதிக்குப் பாலகர்களையும், அடுத்துவரும் ராஜ என்பது இங்குள்ள நூறு ருத்திரர்களையும் ஈஸ்வர என்பது உச்சியில் விளங்கும் சூரிய, சந்திர, அக்கினி, மற்றும் சக்தி மண்டலங்களையும் ஆதிபத்தியமாக உடையவர்கள் என்பதைக் குறிக்கின்றது.

ஆகம முறைப்படியான ஆன்மார்த்த சிவபூசையில் இவர்கள் யாவரும் பஞ்ச ஆவரணங்களில் இரண்டாவது ஆவரணத்தில் பூசிக்கப்பட்டே சிவ பூசை செய்யப்படுகின்றது.

அட்ட வித்தியேசுவரர்கள் எண்மரும் முதன்முதல் ஆகமங்கள் இருபத்தெட்டையும், உப ஆகமங்கள் இருநூற்று ஏழையும் வேதங்களுடன் முழுமையாக சதாசிவரிடம் உபதேசமாகப் பெற்ற பெருமைக்கு உரியவர்கள் ஆவர்.  எட்டு வித்தியேசுவரர்களில் அனந்தேசுவரர் தலைமையானவர். இவ்வாறு இவர்கள் உபதேசம் பெற்ற இருபத்தெட்டு ஆகமங்களின் சுலோகங்களின் தொகை மட்டும் ஒரு பரார்த்தம் ( ஒன்றுடன் 19 சுழிகள்) ஒரு பதுமம் ( ஒன்றுடன் 14 சுழிகள்) ஒரு சங்கம் ( ஒன்றுடன் ஒன்பது சுழிகள்/ நூறு கோடி) 99 கோடியே 33 இலட்சத்து 44 ஆயிரம் ஆகும்.

பிரகிருதி மாயையில் உள்ள ஸ்ரீகண்ட ருத்திரருக்கு  இந்த வேத ஆகமங்கள் யாவும் அனந்தேசுவரரால் உபதேசிக்கப்படுகின்றன. இவர் தட்சணாமூர்த்தியாக கல்லால நீழலில் இருந்து சனகாதி முனிவர்களுக்கும், திருநந்திதேவருக்கும் இவற்றின் சாரத்தை உபதேசித்தார். இவற்றுள் ஒன்பது ஆகமங்களின் உபதேசத்தை  ஒருங்கே பெற்ற பெருமைக்கு உரியவர் திருமூலர்.

7) சுத்தவித்தை எனும் சுத்த மாயா தத்துவத்தைத் தளமாகக்கொண்டு நிற்கும் பரசிவத்தின் உருவத் திருமேனிகள் பிரம்மா,

8) விஷ்ணு,

9) உருத்திரன் என்பனவாம்.

இப்பிரம்மாவை பரப்பிரம்மம் என்றும் விஷ்ணுவை மஹாவிஷ்ணு என்றும் உருத்திரனை மஹாருத்திரன் என்றும் கூறுவர். இவர்கள் சம்புவாகிய பரசிவத்தின் சம்புபட்ச வடிவங்கள் ஆகையால், தமது புண்ணிய பலத்தினால் இந்நிலையடைந்த உயிர்களாகிய ஏனைய பிரம்ம, விஷ்ணு, உருத்திரர்களிடமிருந்து வேறுபட்டவர்கள்.

சுத்தவித்தையில் பரசிவன் பிரமனாக நின்று படைத்தலையும், விஷ்ணுவாக நின்று காத்தலையும், உருத்திரனாக நின்று அழித்தலையும் செய்கின்றான். சாதாக்கிய தத்துவத்தில் சதாசிவனாக நின்று அருளலையும், மாகேசுர தத்துவத்தில் மகேசுவரனாக நின்று மறைத்தலையும் செய்கின்றான். இவ்வாறு சம்புவாகிய பரசிவத்தின் வெவ்வேறு வடிவங்களே. ஐந்தொழில்களையும் செய்கின்றன. ஆதலால் இவ்வடிவங்களை சம்புபட்சம் என்பர். இவர்களது இவ்வுருவங்கள் மாயையினால் ஆனவை அல்ல; யாவும் இறையின் சக்தியினால் ஆனவை. சிவம் நின்று தொழிற்படுவதால் இந்த ஐந்து சுத்தமாயா தத்துவங்களும் சிவதத்துவங்கள் என அழைக்கப்படுகின்றன.

  • அரியாகிக் காப்பான், அயனாய்ப் படைப்பான்,
    அரனாய் அழிப்பவனுந் தானே…..
    – 11ம் திருமுறை, சேரமான் பெருமாள் அருளிய – திருக்கைலாய ஞான உலா
  • நாரணன்காண் நான்முகன்காண் நால்வே தன்காண்
    ஞானப்பெருங் கடற்கோர் நாவாய் அன்ன
    பூரணன்காண் புண்ணியன்காண் புராணன் தான்காண்
    – 6ம் திருமுறை – திருநாவுக்கரசர் தேவாரம்
  • ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
    ஆதிக் கமலத் தலர்மிசை யானும்
    சோதிக்கில் மூன்றுந் தொடர்ச்சியில் ஒன்றெனார்
    பேதித்து உலகம் பிணங்கு கின்றார்களே
    – 10 ம் திருமுறை – திருமந்திரம் -104
  • பரத்திலே ஒன்றாய்உள் ளாய்ப்புறமாகி
    வரத்தினுள் மாயவ னாய்அயன் ஆகித்
    தரத்தினுள் தான்பல தன்மையன் ஆகிக்
    கரத்தினுள் நின்று கழிவு செய்தானே
    – 10 ம் திருமுறை – திருமந்திரம் – 111
  • சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த
    அவைமுதல் ஆறிரண்டு ஒன்றோடு ஒன்றாகும்
    அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
    சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே
    – 10ம் திருமுறை – திருமந்திரம் – 106

பரசிவனின் இந்த ஏழு மூர்த்தங்களைவிட வேறு பல பக்குவ ஆன்மாக்களும், புண்ணியான்மாக்களும் சுத்தமாயா புவனங்களிலும், அதன் கீழுள்ள அசுத்த மாயா புவனங்களிலும் பிரம்ம, விட்டுணு, உருத்திரர்களாக வேறாக உள்ளார்கள். இந்திரன், இயமன், அக்கினி முதலான அட்டதிக்குப்பாலகர்களும் இவ்வாறே சுத்தமாயா உலகங்களிலும் அசுத்தமாயா உலகங்களிலும் வேறுவேறாக உள்ளார்கள்.

நந்தி முதலான கணநாதர்களும், அனந்தேசுவரர் முதலான வித்தியேசுவரர்களும் சுத்தமாயா உலகங்களிலேயே உள்ளார்கள். நந்தி பரசிவத்தோடு இரண்டறக்கலக்கும் பரலோக சிவசாயுச்சியத்துக்கு உரிய முத்தான்மாவாக இருந்தும் சிவனுடைய ஆக்ஞைப்படி தாம்  வேறாக நின்று சுத்தமாயா உலகத்திலும் தொழிற்படுவார். சைவத்தின் குரு பாரம்பரியத்தின் ஆதி கர்த்தா இவரே,

சுத்தமாயா உலகம் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களில் ஆணவ மலம் மாத்திரம் உடைய விஞ்ஞானகல ஆன்மாக்களின் இருப்பிடமாகும். இங்கு கன்மம் இல்லாதபடியினால் இவர்களுக்கு மறுபிறவி இல்லை. இவர்களது உடல், கருவி, கரணங்கள் யாவும் விந்து தத்துவத்தில் இருந்தே தோன்றுபவை. ஆதலால் இவர்களது சரீரத்தை வைந்தவ சரீரம் என்பர். இவர்கள் இப்பதங்களில் இருந்து மலபரிபாகம் பெற்றவுடன் அல்லது மகாசங்கார காலத்தில் இவ்வுலகம் பரசிவனால் ஒடுக்கப்படும்போது சிவதரிசனம் பெற்று முத்தி அடைவர். சிவபூசை, கும்பாபிசேகங்களில் செய்யப்படும் யாக மண்டபப்பூசை, மகோற்சவ காலத்தில் செய்யப்படும் யாகசாலைப் பூசை, கொடித்தம்ப பூசை ஆகிய ஆகமப்பூசைகள் யாகங்களில் பூசிக்கப்படுபவர்கள் இந்த சுத்தமாயா உலக பிரம்ம, விட்டுணு, இந்திரர்களே.

பிரகிருதி மாயை உலகங்களில் உள்ள பிரம்ம, விட்டுணு, உருத்திரர்களுக்கு ஆணவம், கன்மம், மாயை அகிய மும்மலங்களும் உள. இவர்களின் உடலும் கருவி கரணங்களும் பிரகிருதி மாயையினால் ஆனவை. இதனால் இவர்களுக்க்கு பிரகிருதி மாயைக்குரிய இரஜோ, தமோ, சத்துவ குணங்களின் பாதிப்பு உண்டு. இதனால் இவர்களை குணிப்பிரம்மா, குணி விஷ்ணு, குணி உருத்திரன் எனவும் அழைப்பர். இவர்கள் சம்புவாகிய பரசிவம் எடுக்கும் வடிவங்களான சம்புபட்ச பிரம்ம, விஷ்ணு, உருத்திரர்களை விட வேறான இவர்கள் ஆன்மாக்கள் ஆகையால் இவர்களை அணுபட்ச வடிவங்கள் என்பர். அணு என்றால் ஆன்மா என்று பொருள். பிரகிருதி மாயா சம்பந்தமான இந்த பிரம்ம, விஷ்ணு, இந்திரர்களுக்கு மானசீகமாக அசுத்த தத்துவங்கள் முப்பத்தொன்றையும் கடந்து செய்கின்ற சிவபூசை, யாகசாலைப்பூசை போன்றவற்றில் வழிபாடு இல்லை

இவர்களை அதிகாரம் கொடுத்துச் செயற்படுத்துவது பிரகிருதி மாயைக்கு மேலான அசுத்தமாயா உலகத்தில் உறையும் ஸ்ரீகண்டருத்திரர் ஆவார்.  இவர் இரு மலங்கள் மட்டும் உள்ள பிரளயாகலர் வர்க்கத்து ஆன்மாக்களில் உத்தம பக்குவம் அடைந்தவர் ஆவார், இங்கு குண தோஷங்கள் இல்லாதபடியினால் இவர் பிரகிருதி மாயையில் உள்ள முக்குண தோஷங்களுக்கு உட்பட்டு பிணக்குறும் குணிப்பிரம்மா, குணி விஷ்ணு, குணி உருத்திரன் ஆகியோருக்கும் மேலானவர். அவர்களைச் செயற்படுத்தி அவர்கள மூலமாக அவர்களை அதிட்டித்து நின்று அந்த உலகங்களில் படைத்தல். காத்தல், அழித்தல் ஆகியவற்றைச் செய்விப்பவரும் இவரே. இந்த பிரம்ம, விஷ்ணு, உருத்திரர்களினால் படைத்துக் காத்து அழிக்கப்படும் உலகத்தொகுதி பிரம்மாண்டம் எனப்படும். நாம் வாழும் பூமி இந்த பிரம்மாண்டத்தில் பூலோகம் என்னும் ஆகாயகங்கை அண்டத்தொகுதியில் உள்ள நானூறு மில்லியன் சூரிய குடும்பங்களில் ஒன்றாகும்.

ஸ்ரீகண்டருத்திரரை அதிட்டித்து நின்று செயற்படுத்துவது சுத்தமாயா உலகில் உறையும் அனந்தேசுவரர் ஆவார். இவர் அங்குள்ள அட்ட வித்தியேசுவரர்களில் தலைமையானவர்.

பரசிவம் மாயைக்கு அப்பாற்பட்டு நின்று செயற்படுவது. பரமசிவன், பராசக்தி, பரப்பிரம்மம், பரமாத்மா, பரஞ்சோதி, பரம்பொருள், பரமானந்தம், ஆகிய எல்லா பதங்களும் குறிப்பது இந்த பரசிவமே.

மாயா உலக இருப்புகளுக்கு அதீதமான, அப்பாற்பட்ட இந்தப் பரசிவத்தின் இருப்பை பரலோகம் என்றும், இந்த இருப்பை அடைவதை பரகதி என்றும் பரமுத்தி என்றும் கூறுவர். இதுவே கிரேக்க மொழியில் பர-தீஸ் என்றும், ஆங்கிலத்தில் பரடைஸ்paradise – என்றும் கூறப்படுகின்றது. இங்குள்ள கைலாசம் மஹாகைலாசம் எனப்படும்.

  • மஹா கைலாஸ நிலயாயை நமஹா –

மகா கைலாசத்தில் நிலை கொண்டிருப்பவளுக்கு நமஸ்காரம்.

  • ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் – 578
  • உரைத்த இத் தொழில்கள் மூன்றும்

மூவருக்கு உலகம் ஓத

வரைத்து ஒருவனுக்கே ஆக்கி

வைத்தது இங்கு என்னை?” என்னின்

விரைக் கமலத்தோன் மாலும்

ஏவலால் மேவி னோர்கள்,

புரைத்துஅதிகார சத்தி

புண்ணியம் நண்ண லாலே.

 விரைக்கமலத்தோன் – இதழ்களையுடைய தாமரையிலே வீற்றிருக்கும் பிரம்மா, ஏடுடைய மலரான்;

எவலால் – பணியால்

– மெய்கண்ட சாத்திரம், சிவஞானசித்தியார் – 54

  • முற்றுணை யாயி னானை மூவர்க்கும் முதல்வன் றன்னைச்

சொற்றுணை யாயி னானைச் சோதியை யாத ரித்து

உற்றுணர்ந் துருகி யூறி யுள்கசி வுடைய வர்க்கு

நற்றுணை யாவர் போலு நனிபள்ளி யடிக ளாரே.

  • 4ம் திருமுறை, அப்பர் தேவாரம்
  • மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்

– 8ம் திருமுறை – திருவாசகம்

  • மூவர்க்கு அருள் செய்ய வல்லானே

– 7ம் திருமுறை – சுந்தரர் தேவாரம்

  • மூவரின் முதல்வனாய் நின்றவன்

– 3ம் திருமுறை – சம்பந்தர் தேவரம்

  • உருவு பல கொண்டு உணர்வரிதாய் நிற்கும் ஒருவன்

-11ம் திருமுறை, கயிலை பாதி காளத்தி பாதி திருவந்தாதி

  • பொன்றிகழ் சடிலத்து அண்ணல்தன் பெயரும்,

பொருவிலா உருவமும் தொன்னாள்

நன்றுபெற்று உடைய உருத்திர கணத்தோர்…..

– கந்தபுராணம் – 1302

  • அயனை முன்படைத் திடும்ஒரு கற்பத்து,

அரியை முன்படைத் திடும்ஒரு கற்பத்து,

உயர்உ ருத்திரன் தனைமுனம் படைப்பன்

ஒருகற் பத்து,மற் றொருகற்பந் தன்னில்

முயலும் மூவரை ஒருங்குடன் படைப்பன்,

முற்பி றந்தவர் மற்றிரு வரையும்

செயலி னாற்படைக் கவும் அருள் புரிவன்

சிவபி ரான்எனில் ஏற்றமிங் கெவனோ?

– சிவதத்துவ விவேகம் – 48