மூவுலகங்கள்

மூவுலகங்கள்

குருவடி பணிந்து

வைத்திய கலாநிதி இ. லம்போதரன் MD

சைவ சித்தாந்த பீடம், கனடா

www.knowingourroots.com

சைவம் அண்டத்தொகுதிகளை மூன்று பகுதிகளாக விளக்குகின்றது.

 1. பிரகிருதி மாயா உலகம்: மண் முதல் மூலப்பிரகிருதிவரை உள்ள 24 தத்துவங்கள் பிரகிருதி மாயா தத்துவங்கள் ஆகும். சைவம் இவற்றை ஆத்ம அல்லது ஆன்ம தத்துவங்கள் என்றும் கூறும். இத் தத்துவங்களில் உள்ள நிவிர்த்தி கலை என்னும் சக்தியினூடாகச் சிவம் தொழிற்படுத்தும் அண்டங்கள் 108 ம் பிரதிஷ்டா கலையினூடாகச் செயற்படுத்தும் அண்டங்கள் 56 ம் ஆக மொத்தம் 164 புவனங்கள் உள்ளன. இவற்றின் குறிப்புகள் வருமாறு:
 2. பூவுலகம் – நாம் வாழும் என்னும் பால்வீதி அண்டத்தொகுதி,
 3. புவர்லோகம் – நாம் வாழும் என்னும் பால்வீதி, அண்டத்தொகுதிக்கு அடுத்துள்ள அண்டத்தொகுதி,
 4. சுவர்லோகம் – புவர்லோகத்துக்கு அடுத்துள்ள சுவர்க்கலோகம்,
 5. மஹர்லோகம் – சுவர்க்கலோகத்துக்கு அடுத்துள்ள அண்டத்தொகுதி
 6. ஜனலோகம் – பித்ருக்கள் வாழுகின்ற உலகம்; மஹர்லோகத்துக்கு அடுத்து உள்ளது.
 7. தபலோகம் – ஜனலோகத்துக்கு அடுத்த அண்டத்தொகுதி,
 8. சத்திய லோகம் – பிரம்மா வதியும் உலகம்; தலோகத்துக்கு அப்பால் உள்ள அண்டம்;

என்னும் இந்த ஏழுலகங்களும் மேலுலகங்களாம்.

 • உலகேழும் பெற்ற சீர் அபிராமி

– அபிராமி அந்தாதி, காப்புச் செய்யுள் 

 1. அதலம்,
 2. விதலம்,
 3. சுதலம்,
 4. தலாதலம்,
 5. ரஸாதலம்,
 6. மஹாதலம்,
 7. பாதாளம்

என்னும் எழுலகங்களும் ஒன்றையொன்று அடுத்துள்ள கீழுலகங்களாம். அதல பாதாளம் என்ற பேச்சு வழக்கை அவதானித்தால் இது புரியும்.

மேலுலகங்கள் ஏழு, கீழுலகங்கள் ஏழு என மொத்தமாக ஈரேழு பதினான்கு உலகங்கள் நமது பூலோகத்தின் அயற் புவனங்கள்.

 • பூத்தவளே! புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம்

காத்தவளே! பின் கரந்தவளே!

அபிராமி அந்தாதி – 13

 • கிண்கிணி யோசை பதினாலு உலகமுங் கேட்டதுவே

– கந்தர் அலங்காரம் – 93 

விஷ்ணு வதியும் விஷ்ணுலோகம் இதற்கு மேல் உள்ளது. நாராயணரின் வைகுந்தம் மற்றும் கிருஷ்ணர் வதியும் கோலோகம் என்பன இங்கு உள்ளன.

வைகுந்தத்துக்கு மேல் உள்ள உலகம் காலருத்திரன் வதியும் சிவலோகம்.

இந்த உலகங்கள் யாவும் ஆடகேசுர புவனம், கூஷ்மாண்ட புவனம், காலாக்னிருத்திர புவனம், பிரம்ம லோகம், விஷ்ணுலோகம், சிவலோகம் என்னும் ஆறு அண்டத்தொகுதிகளுக்குள் அடங்குவன. கூஷ்மாண்ட புவனத்துக்கும் காலாக்னிருத்திர புவனத்துக்கும் இடையில் 28 கோடி நரகலோகங்கள் உள்ளன. இந்த ஆறு அண்டத்தொகுதிகளும், அவற்றின் புவனங்களும், அவற்றிலுள்ள உலகங்களும் பிரம்மாவினால் நேரடியாகப் படைக்கப்படுவதனால் பிரம்மாண்டம் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த ஆறு அண்டங்கள் உள்ளிட்ட 108 அண்டங்கள் நிவிருத்தி கலை புவனங்கள் ஆகும். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு உருத்திரரின் ஆதிக்கத்தில் உள்ளன, இவற்றுக்கு அப்பால் பிரதிட்டா கலை புவனங்கள் 56 உள்ளன. இந்த நிவிருத்தி கலை புவனங்கள் 108ம் பிரதிட்டா கலை புவனங்கள் 56ம் சேர்ந்து மொத்தமாக 164 புவனங்கள் யாவும் பிரகிருதி மாயையினால் ஆன உலகங்கள் ஆகும்.

இந்த பிரகிருதி மாயா உலகங்களே ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களும் உடைய உயிர்களுக்கு உலகம் ஆகும்.  இவ்வுலகங்களில் பிரகிருதி மாயையின் இயல்புகளான இரஜோ, தமோ, சத்துவ குணங்கள் என்னும் முக்குண தோஷம் சகலத்துக்கும் உண்டு. உணவு, மனிதர், மிருகங்கள், தாவரங்கள், மும்மூர்த்திகள், தேவர்கள் யாவரும், யாவையும் பிரகிருதி மாயா உலகின் முக்குண தோஷங்களுக்கு உட்பட்டவையே. இங்குள்ள பிரம்ம, விஷ்ணு, உருத்திரர்களை குணிப் பிரம்மா, குணி விஷ்ணு, குணி உருத்திரன் என்று சைவம் கூறுகின்றது. இவர்கள் யாவரையும் செலுத்துவது இவற்றுக்கு அப்பாற்பட்ட அசுத்த மாயா உலகில் உள்ள ஸ்ரீகண்ட ருத்திரர் ஆவார். இவர் ஆணவம், கன்மம் ஆகிய இரு மலங்கள் மாத்திரம் உடைய பிரளயாகல ஆன்மாக்களில் உயர்ந்தவர். இவருக்கு மாயா மலம் இல்லாததால் அதன் இயல்பாகிய முக்குணங்களின் தோஷங்கள் இல்லாதவர்.

 • புவர்லோ கத்தின் நலத்தகைய தொகைபதினைந் திலக்க மாகும்

– கந்த புராணம் -785

இலக்கம் – இலட்சம்.

 • தொகலோடு சேர்தருபமிப் பதத்தின் மீதிற்

சுவர்லோகம் எண்பத்தஞ் சிலக்க மாங்கே

புகலோடு வானவரும் பிறரும் போற்றப்

புரந்தரன்வீற் றிருந்தரசு புரிவன் அப்பால்

மகலோகம் இருகோடி மார்க்கண்டாதி மாமுனிவர்

பலர்செறிவர் மற்ற தன்மேல்

இகலோகம் பரவுசனலோகம் எல்லை எண்கோடி

பிதிர்தேவர் இருப்பர் அங்கண்.

– கந்த புராணம் – 786

புரந்தரன் – இந்திரன்

 • தவலோகம் உன்னதமீ ராறு கோடி

சனகர்முத லாவுடைய வனகர் சேர்வர்

அவண்மேற் சத் தியவுலகம் ஈரெண் கோடி

அயன்இன்பத் தலம்உலக மளிக்குந் தானம்

நவைதீரும் பிரம்பதம் மூன்று கோடி

நாரணர் வாழ் பேருலகம் ஓர்முக் கோடி

சிவலோகம் நாற்கோடி அதற்குமீதே

திகழண்ட கோளகையுங் கோடியாமே

– கந்த புராணம் – 787

அயன் – பிரம்மா

 • இவ் வண்டத்தில் புவன நூற்றெட்டு

இறையருள்சேர் உருத்திரர் தம் இருக்கையாமே

– கந்த புராணம் -789

 • துன்னுறு நாலேழ் கோடி தொகைப்படு நிரயத்து எல்லை

– கந்த புராணம் – 734

நாலேழ் – இருபத்தெட்டு; நிரயம் – நரகம்.

 1. அசுத்த மாயா உலகம்: காலம் முதல் மாயை வரை உள்ள 7 தத்துவங்கள் அசுத்த மாயா தத்துவங்கள் ஆகும். சைவம் இவற்றை வித்யா தத்துவங்கள் என்றும் கூறும். இத் தத்துவங்களில் உள்ள உலகங்களைச் சிவம் வித்யா கலை என்னும் சக்தியினூடாகச் செயற்படுத்தும். இங்கு மொத்தம் 27 புவனங்கள் உள்ளன. இவை வித்தியா கலை புவனங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இங்கே உள்ள அராக தத்துவ புவனங்கள் ஒன்றிலே ஸ்ரீகண்டருத்திரர் உறைகின்றார்.

இந்த உலகங்களிலே ஆணவம், கன்மம் என்னும் இரு மலங்கள் மாத்திரம் உடைய உயிர்கள் வாழ்கின்றன. இவர்களை பிரளயாகலர் என்பர்.  சைவர்கள் தியானிக்கும் சிவன் ஸ்ரீகண்டருத்திரரே. தியானத்தில் அமர்ந்திருக்கும் சிவ மூர்த்தமும் ஸ்ரீகண்டருத்திரரே. இவர் அங்குள்ள கைலாசத்தில் தமது சக்தியாகிய உமையுடன் உறைகின்றார். இவரே சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நான்கு ரிஷிகளுக்கும், நந்தி தேவருக்கும் உபதேசித்த சிவன். நமது புராணங்களில் உள்ள பராக்கிரமங்களின் கதாநாயகன் இவரே. நாயன்மார்களுக்கு அருள் செய்த சிவன் இவரே. இவர் எல்லா உருத்திரர்களையும் போல சிவ வடிவம் பெற்ற மேலான ஆன்மாவே. இவரைச் செலுத்துவது சுத்த மாயா உலகில் உள்ள அனந்தேசுவரர்.

 • பொன் திகழ் சடிலத்து அண்ணல் தன் பெயரும்,

பொருவிலா உருவமும், தொன்னாள்

நன்று பெற்றுடைய உருத்திர கணத்தோர்

– கந்த புராணம் – 1302

 1. சுத்த மாயா உலகம்: சுத்தவித்தை, மாகேசுரம், சாதாக்கியம், பிந்து, நாதம் எனும் ஐந்து தத்துவங்கள் சுத்தமாயா தத்துவங்கள் ஆகும். சிவம் தொழிற்படும் தத்துவங்கள் ஆதலால் இவ்வைந்தையும் சிவ தத்துவங்கள் என்றும் கூறுவர். இவற்றில் சுத்தவித்தை, மாகேசுரம், சாதாக்கியம் ஆகிய மூன்று தத்துவங்களையும் தொழிற்படுத்துவது சாந்தி கலை. பிந்து, நாதம் ஆகிய இரண்டு தத்துவங்களையும் தொழிற்படுத்துவது சாந்தியதீத கலை. சுத்த மாயா உலகில் சாந்தி கலை புவனங்கள் 18ம், சாந்தியதீத கலை புவனங்கள் 15ம் ஆக மொத்தம் 33 புவனங்கள் உள்ளன.

3.1. நாதம் எனும் சுத்த மாயா தத்துவத்தைத் தளமாகக்கொண்டு நிற்கும் பரசிவத்தின் திருமேனி நாதம் அல்லது அபரசிவன் ஆகும்.  

3.2.  பிந்து என்னும் சுத்த மாயா தத்துவத்தைத் தளமாகக்கொண்டு நிற்கும் பரசிவத்தின் திருமேனி விந்து அல்லது அபரசக்தி ஆகும்.  

3.3.  சாதாக்கியம் என்னும் சுத்த மாயா தத்துவத்தைத் தளமாகக்கொண்டு நிற்கும் பரசிவத்தின் திருமேனி சதாசிவன் ஆகும். இதே தத்துவ உலகங்களில் இவரின் கீழ் பல பக்குவான்மாக்களும் சதாசிவர்களாக உள்ளனர். அவர்கள் அணுசதாசிவர் எனப்படுவர். அணு என்றால் ஆன்மா என்று பொருள். 

3.4. மாகேசுரம் அல்லது ஈசுரம் என்னும் சுத்த மாயா தத்துவத்தைத் தளமாகக்கொண்டு நிற்கும் பரசிவத்தின் திருமேனி மகேசுவரன் ஆகும். இந்த தளத்தில் உயர் ஆன்மாக்களாகிய அனந்தேசுவரர், சூக்குமர், சிவோத்தமர், ஏகநேத்திரர், ஏகருத்திரர், திரிமூர்த்தி, ஸ்ரீகண்டர், சிகண்டி எனும் அட்ட வித்தியேசுவரர்கள் தமது வாமை, ஜேஷ்டை, ரௌத்ரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரதமனி, ஸர்வபூதமனி ஆகிய தத்தம் சக்திகளுடனும், ஸப்த கோடி ( ஏழு கோடி) மஹா மந்திரேசுவரர்களுடனும், இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வாயு, வர்ணன், குபேரன், ஈசானன் ஆகிய அட்டதிக்குப் பாலகர்களுடனும், நந்தி முதலான கணநாதர்களுடனும் வீற்றிருந்து தொழிற்படுகின்றார்கள்.

3.5. சுத்தவித்தை எனும் சுத்த மாயா தத்துவத்தைத் தளமாகக்கொண்டு நிற்கும் பரசிவத்தின் திருமேனிகள் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் என்பனவாம்.

சுத்தவித்தையில் பரசிவன் பிரமனாக நின்று படைத்தலையும், விஷ்ணுவாக நின்று காத்தலையும், உருத்திரனாக நின்று அழித்தலையும் செய்கின்றான். சாதாக்கிய தத்துவத்தில் சதாசிவனாக நின்று அருளலையும், மாகேசுர தத்துவத்தில் மகேசுவரனாக நின்று மறைத்தலையும் செய்கின்றான்.

இவ்வாறு சம்புவாகிய பரசிவத்தின் வெவ்வேறு வடிவங்களே. ஐந்தொழில்களையும் செய்கின்றன. ஆதலால் இவ்வடிவங்களை சம்புபட்சம் என்பர். இவர்களது இவ்வுருவங்கள் மாயையினால் ஆனவை அல்ல; யாவும் இறையின் சக்தியினால் ஆனவை.

இங்குள்ள அனந்தேசுவரர் உள்ளிட்ட அட்ட வித்தியேசுவரர்கள், சப்தகோடி மஹாமந்திரேசுவரர்கள், அட்ட திக்குப் பாலகர்கள், நந்தி முதலான கணநாதர்கள் முதலான ஆன்மாக்களின் சரீரம் பிந்து முதலானவற்றாலான சுத்த மாயா சரீரங்கள் ஆகும். இதை வைந்தவ சரீரம் என்பர்.  

இது தான் ஆணவம் என்னும் ஒரு மலம் மட்டுமேயுள்ள உயிர்களுக்கு இருப்பிடம். இவர்களை என்று கூறுவர். இங்கே உள்ள புவனங்களில் ஒன்றிலேதான் அனந்தேசுவரர் உறைகின்றார். இவரே ஸ்ரீகண்டருத்திரரைச் செயற்படுத்துபவர். ஸ்ரீகண்டருத்திரரின் உபதேச குருவும் இவரே.

இப்படி எமது புவி சார்ந்த அண்டத்தொகுதியில் மாத்திரம் 224 புவனங்கள் உள்ளன. இது போல் ஆயிரங் கோடிக் கணக்கில் பல அண்டத்தொகுதிகள் உள்ளன என்று இன்று விஞ்ஞானம் சொல்வதைச் சைவம் அன்றே சொல்லியுள்ளது. பெருநாத வெடிப்பாக -BIG BANG – வெடித்துச் சிதறித் தோன்றும் எண்ணற்ற இந்த அண்டத் தொகுதிகள் யாவும் விரிவடைந்து கொண்டே இருக்கின்றன – EXPANDING UNIVERSE – என்று இன்றைய விஞ்ஞானி ஸ்டீபன் ஹோக்கிங்STEPHEN HAWKING – சொன்னதை அன்றே “நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன” என்று கூறியது சைவம்.

மேரு, மஹாமேரு, கைலாசம்: சந்திரன் பூமியை அச்சாகக் கொண்டு சுழல்கின்றது. பூமியும் எமது சூரிய குடும்பத்தில் உள்ள ஏனைய கிரகங்களுடன் சேர்ந்து சூரிய்னைச் சுற்றி வருகின்றது. எமது சூரியனும் பால்வீதி எனும் எமது பூலோக அண்டத்தொகுதியில் உள்ள ஏனைய கோடிக்கணக்கான சூரிய குடும்பங்களுடன் பால்வீதியின் மைய அச்சைச் சுற்றி வருகின்றது. இதற்கு எடுக்கும் காலம் 230 மில்லியன் வருடங்கள் என்று இன்றைய அண்டவியல் விஞ்ஞானம் கூறுகின்றது. இவ்வாறு பூலோகத்தில் உள்ள சகல புவனங்களும் சுற்றி வலம் வருகின்ற மத்திய அச்சையே மேரு என்பர்.  இவ்வாறு எமது பால்வீதி உள்ளிட்ட எண்ணிறந்த அண்டத்தொகுதிகள் யாவற்றுக்கும் அச்சாக விளங்குவது மஹாமேரு. இது இந்த மூவுலகங்களையும் கடந்து பரலோகம் வரை வியாபித்திருப்பது. இந்த மஹாமேருவின் உச்சியே மஹாகைலாசம். இந்த மஹாகைலாசத்தையே பரசிவன், பராசக்தியின் இருப்பாகச் சைவம் கூறுகின்றது. இதே போல வேறு சில கைலாசங்களும் உள்ளன.

ஜம்பூத்துவீபம் என்று சொல்லப்படுகின்ற பாரதத்தின் உத்தர(வட) திசையிலே இமயமலைச் சாரலில் (இன்றைய தீபெத்- சீனா) ஒரு கைலாசமும், ஆன்ம தத்துவ உலகங்களாகிய இந்தப் பிரகிருதி மாயா உலகங்களுக்கு மேலே அசுத்தமாயா உலகில் அராக தத்துவ புவங்களில் ஒன்றில் ஸ்ரீகண்ட ருத்திரர் எழுந்தருளியிருக்கும் ஓர் கைலாசமும், சுத்தமாய உலகில் மாகேசுர தத்துவ புவனங்கள் ஒன்றில் மகேஸ்வரர் எழுந்தருளியிருக்கும் ஓர் கைலாசமும், சாதாக்கிய தத்துவ புவனங்கள் ஒன்றில் சதாசிவப் பெருமான் எழுந்தருளியிருக்கும் ஓர் கைலாசமும், நாத, பிந்து தத்துவங்களில்  ஆதி சக்தி எனும் உமையம்மையாரோடு ஆதிசிவன் எனும் அபர சிவன் எழுந்தருளியிருக்கும் ஓர் கைலாசமுமாக பஞ்ச கைலாசங்கள் உள்ளதாக காளகத்திப் புராணம் கூறுகின்றது.   

பரலோகம்: இந்த மூவுலகங்களையும் நீக்கமற எங்கும் நிறைந்து வியாபித்து நிற்கும் இறையானது இவற்றையும் கடந்த அப்பாலான இருப்பைச் சிறப்பாக உடையது. இந்த உலகத்தையே பரலோகம் அல்லது பரவெளி என்பர். இதையே கிரேக்க, லத்தீன் மொழி வழியாக ஆங்கிலத்தில் PARADISE (பரடைஸ்/ பரதீசு)  என்று கூறுவர். இந்த இறையே பரசிவன் என்றும், பரப்பிரம்மம் என்றும், பரமாத்மா என்றும், பரஞ்சோதி என்றும், பரமானந்தம் என்றும் என்றும் கூறுவர். இந்த இறையையே லத்தீன் மொழி வழியாக ஆங்கிலத்தில் OMNISCIENT (ஒம்னிசென்ட்சர்வஞ்ஞர் – எல்லாம் அறிபவர்) என்றும், OMNIPRESENT (ஒம்னிபிரெசென்ட் – சர்வவியாபகர் -எங்கும் உள்ளவர்)என்றும், OMNIPOTENT (ஒம்னிபோடென்ட் சர்வ வல்லமை உள்ளவர்- எல்லாம் வல்லவர்) என்றும் வழங்குவர். இவை யாவும் ஓம்OM – என்று தொடங்குவதை அவதானித்தீர்களா? ஓம் என்னும் பிரணவ வடிவில் விளங்கும் இறையே இது.