வேத ஆகமங்களின் தோற்றம் – கலாநிதி இ.லம்போதரன் MD

வேத ஆகமங்களின் தோற்றம்

குருவடி பணிந்து

வைத்திய கலாநிதி இ. லம்போதரன் MD

சைவ சித்தாந்த பீடம், கனடா

www.knowingourroots.com

அனைத்து உயிர்களையும் உய்யக் கொள்ளும் பொருட்டுப் பேரருள் நிறைந்த முதல்வனாகிய பரமசிவன் காமிகம் முதல் வாதுளம் ஈறாக அருள் நூல்களை நாத வடிவில் அருளிச் செய்தான். பின்னர், அம்முதல்வன் சதாசிவ வடிவினனாகியும் நின்று நாத முதலிய வடிவினவாகி வந்த அவ்வாகமங்களையே எண்ணிறந்த செய்யுள் வடிவாகப் பகுத்துப் பிரணவர் முதலிய சிவன்கள் பதின்மருக்கும் அவர்கள் ஒவ்வொருவருடன் கூடி இருக்கும் இவ்விருவருக்கும் (மொத்தம் 30 சிவன்கள்), அநாதிருத்திரர் முதலிய உருத்திரர் பதினெண்மருக்கும் அவர்கள் ஒவ்வொருவருடன் கூடியிருக்கும் ஒவ்வொருவருக்குமாக (மொத்தம் 36 உருத்திரர்கள்)  காமிகம் முதலிய தொகுதி முறையானே ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொன்றாக உபதேசித்து அருளினார்.

  • உமாபதி சிவம் எழுதிய பௌஷ்கர ஆகம விருத்தியுரை

பரசிவன் உலகம் உய்யும் பொருட்டு இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களையும், காமிகம் முதல் வாதுளம் ஈறாக இருபத்தெட்டு ஆகமங்களையும் மொழி கடந்த நாத வடிவில் அருளிச் செய்தான்.

ஐந்து முகங்களை உடைய சதாசிவ மூர்த்தி கிழக்கு நோக்கிய தற்புருஷ முகத்தினால் இருக்கு வேதத்தையும், தெற்கு நோக்கிய அகோர முகத்தினால் யசுர் வேதத்தையும், வடக்கு நோக்கிய வாமதேவ முகத்தினால் சாம வேதத்தையும், மேற்கு நோக்கிய சத்தியோஜாத முகத்தினால் அதர்வ வேதத்தையும் அருளிச்செய்தார் என்றும். பின்னர் உச்சியில் உள்ள ஐந்தாவது முகமான ஈசான முகத்தினால் இருபத்தெட்டு ஆகமங்களையும் அருளிச் செய்தார் என்றும் கூறப்படுகின்றது. இவ்வாறன்றி ஐந்து திருமுகங்களினாலேயும் ஆகமங்களை அருளிச்செய்தார் எனும் மரபும் உள்ளது. இவை பிந்து தத்துவத்தில் உதிக்கும் பரை என்னும் சூட்சுமை வாக்கினூடாக அருளிச்செய்யப்பட்டன.

அட்ட வித்தியேசுவரர்கள் எண்மரும், ஆகமங்கள் இருபத்தெட்டையும், உப ஆகமங்கள் இருநூற்று ஏழையும் வேதங்களுடன் முழுமையாக முதன்முதல் சதாசிவரிடம் உபதேசமாகப் பெற்ற பெருமைக்கு உரியவர்கள்.  இந்த எட்டு வித்தியேசுவரர்களில் அனந்தேசுவரர் தலைமையானவர். இவ்வாறு இவர்கள் உபதேசம் பெற்ற இருபத்தெட்டு ஆகமங்களின் சுலோகங்களின் தொகை மட்டும் ஒரு பரார்த்தம் ( ஒன்றுடன் 19 சுழிகள்) ஒரு பதுமம் ( ஒன்றுடன் 14 சுழிகள்) ஒரு சங்கம் ( ஒன்றுடன் ஒன்பது சுழிகள்/ நூறு கோடி) 99 கோடியே 33 இலட்சத்து 44 ஆயிரம் ஆகும்.

 

அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்

விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி

தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்

எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே

 

அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்

எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்

விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்

எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே .

 

அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்

எண்ணிலி கோடி தொகுத்திடு மாயினும்

அண்ணல் அறைந்த அறிவறி யாவிடில்

எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே 

 

சிவபெருமான் தனது திருவருள் காரணமாக அருளிச்செய்த ஆகமங்கள் அளவின்றி இருப்பினும், அவற்றில் சொல்லப்பட்ட பொருளை மக்கள் அறியமாட்டாராயின், அவை அனைத்தும் அவர்கட்குப் பயனில்லாதனவேயாய் விடும்.

பரசிவன் பர அபர முத்தித்தானமாகிய சுத்தமாயா உலகில் மேலான சதாசிவ மூர்த்தியாய் இருந்து உலகில் தன்னை அடையும் வழியாகிய சரியை, கிரியை, யோக, ஞானம் எனும் சிவதர்மத்தை விளக்கும் ஆகமங்களைப் பிரணவர் முதலிய அறுபத்தறுவர்க்கு யோர்க்கு மொழி கடந்து பஸ்யந்தி வாக்கினூடாக உணர்த்தியருளினார்.

 

அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்

அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்

அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்

அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே

 

என்று திருமந்திரமும் இவ்வாறு அறுபத்தறுவர்க்கு ஆகமங்கள் உபதேசிக்கப்பட்டதைக் கூறுகின்றது.

 இவ்வாறு உணர்த்தியருளும் பொழுது, தேவர்களால் வணங்கப்படுகின்ற நந்தி பெருமான் உடனிருந்து மெய்யுணர்வுடையராய் அவை இனிது விளங்கப்பெற்றார்.

 

பரனாய்ப் பராபரங் காட்டி உலகில்

தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்

தரனாய் அமரர்கள் அற்சிக்கும் நந்தி

உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே

 

 

பிரகிருதி மாயையில் உள்ள ஸ்ரீகண்ட ருத்திரருக்கு  இந்த வேத ஆகமங்கள் யாவும் அனந்தேசுவரரால் உபதேசிக்கப்படுகின்றன. ஸ்ரீகண்ட ருத்திரர் தட்சணாமூர்த்தியாக கல்லால நீழலில் அமர்ந்திருந்து சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமரர் ஆகிய நான்கு முனிவர்களுக்கும், இங்குள்ள திருநந்திதேவருக்கும் இவற்றை மொழி சார்ந்து மத்திமை வாக்கினூடாக உபதேசித்தார்.

 

சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம்

உவமா மகேசர் உருத்திர தேவர்

தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற

நவஆ கமம்எங்கள் நந்திபெற் றானே

 

சிவம் நாத தத்துவத்தில் நின்று, தன்னிடத்தினின்று வெளிப்பட்டு விந்து தத்துவத்தில் நிற்கும் சத்திக்கு உணர்த்த, அவர்கள் சதாசிவர்க்கு உணர்த்த, அவர் மகேசுரர்க்கு உணர்த்த, அவர் உருத்திரதேவர்க்கும், அவர் தவத் திருமாலுக்கும், அவர் பிரமேசருக்கும் உணர்த்த இவ்வாறு சுத்தமாயையில் உள்ள தலைவர்கள் ஒருவரிடமிருந்து ஒருவராகப் பெற்றுப் பயனடைந்த ஆகமங்களில் சிறப்பாக ஒன்பதை எங்கள் ஆசிரியராகிய நந்தி பெருமான் மேற்குறித்தவாறு சீகண்ட பரமசிவன்பால் பெற்றார்.

 

ஸ்ரீகண்ட ருத்திரர் இந்த ஆகமங்களை மத்திமை வாக்கில் ஆரிய மொழியிலும், தமிழ் மொழியிலும் தனது சக்தியாகிய உமைக்கு வெளிப்படுத்தினார்.

 

மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்

றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து

ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக்

காரிகை யார்க்குக் கருணைசெய் தானே

அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறுஞ்

சிமிழ்த்தலைப் பட்டுயிர் போகின்ற வாறும்

தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்

உணர்த்தும் அவனை உணரலு மாமே 

 

ஸ்ரீகண்ட ருத்திரர் இந்த ஆகம அறங்களை நிலவுலகில் வழங்கும் பதினெட்டு மொழிகளிலும் வைகரி வாக்கில் அந்தந்த மொழி பேசும் மக்களுக்கு வழங்கினார்.

 

பண்டித ராவார் பதினெட்டுப் பாடையும்

கண்டவர் கூறுங் கருத்தறி வார்என்க

பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடைருளி

அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே 

 

ஒன்பது ஆகமங்களின் உபதேசத்தை நந்திதேவர் மூலமாக ஒருங்கே பெற்ற பெருமைக்கு உரியவர் திருமூலர்.

 

பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்

உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்

மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம்

துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே

 

மேற்கூறியவாறு நந்திபெருமான் ஸ்ரீகண்டரிடம் சிறப்பாகப்பெற்ற ஒன்பது ஆகமங்களாவன, 1. காரணம், 2. காமிகம், 3. வீரம், 4. சிந்தியம், 5. வாதுளம், 6. யாமளம் ( இது சாக்த ஆகமம்), 7. தேவி காலோத்தரம் (இது உப ஆகமம்), 8. சுப்பிரபேதம், 9. மகுடம் என்பனவாம்.

திருமூலருடன் இருந்து நந்திதேவரிடம் பாடம் கேட்டவர்கள் நந்திகள் நால்வர், சிவயோக முனிவர், பதஞ்சலி, வியாகிரபாதர் ஆகியோராவர்.

 

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்

நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி

மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரமர்

என்றிவர் என்னோ டெண்மரு மாமே.

 

இவர்களில் பதஞ்சலி முனிவர் ஆகமங்களின் யோக பாதங்களின் சாரமான பதஞ்சலி யோகசூத்திரம் வடமொழியில் அருளிச் செய்தார். இவர் தனது சக மாணவனான புலிக்கால் முனியாகிய வியாகிரபாதருடன் தில்லையில் தங்கியிருந்து தவம் செய்து அங்கு மன்றிலே தை மாசமும், வியாழக்கிழமையும், பூச நட்சத்திரமும் கூடிய நன்னாள் ஒன்றின் மதிய வேளையில் சிவனுடைய நடனத்தை நேரே மன்றில் தரிசித்தார்கள். அதுவே இன்றுள்ள பொன்னம்பலம். சிதம்பரத்தில் பூசை முறைக்கான பத்ததியையும் பதஞ்சலி வடமொழியில் அருளிச் செய்தார். 

திருமூலர் தாம் பெற்ற ஒன்பது ஆகமங்களின் சாரத்தை தமிழில் திருமந்திரம் எனும் 3000 பாடல்களால் அருளிச் செய்தார். பிற்கால இடைசெருகல்கள், திரிபுகள் இல்லாது ஆகமங்கள் தொடக்கத்தில் எவ்வாறு இருந்தன என்பதை உள்ளது உள்ளபடி அறிய திருமூலரின் திருமந்திரம் ஒரு அருமையான வழிகாட்டியாகும்.