அத்துவா சோதனை, அத்துவா சுத்தி

அத்துவா சோதனை, அத்துவா சுத்தி

இ.லம்போதரன்

சைவசித்டாந்த பீடம்,கனடா

www.knowingourroots.com

தீட்சையும் அத்துவா சுத்தியும் வெறும் சடங்குககள் ஆக மாறியுள்ள இன்றைய நிலையில் அவற்றைச் செயற்பாடற்ற சடங்குநிலையில் இருந்து முன்னர் இருந்த உள்ளார்த்தமும் பிரயோகங்களும் கொண்ட இயங்குநிலைக்கு மாற்றவேண்டும். நாம் அறியாமலும் இறைசெயலால் இவை பெயரீடுகள் இன்றி நிகழ்வதும் உண்டு. ஆச்சாரியார்கள் இவற்றை அறிந்து பிரயோகிக்கும் போது பாதை இலகுவாக்கப்பட்டு கதி துரிதப்படுத்தப்படுகின்றது. கிறிஸ்தவ சகோதரர்கள் இவற்றின் பெயர்ப் பிரயோகங்களை அறியாமலே இவற்றைப் பிரயோகித்து வருகின்றார்கள் போல் தெரிகின்றது.

அத்துவா என்பது வழி அல்லது பாதை என்று பொருள்.
நாம் இறைவனை அடையும் பாதை சரியை. கிரியை, யோகம், ஞானம் என்னும் நாற்பாதங்களான சிவபுண்ணியங்கள் என்பதை நாம் அறிவோம். இவற்றையே தவம் என்று சைவம் கூறுகின்றது. இவ்வாறு இந்தப்பாதையில் செல்லும் சாதகனுக்கு இறைவன் குரு வடிவில் வருகின்றான்.
“ தம்முதல் குருவுமாய் தவத்தினில் உணர்த்த”
என்று இதைச் சிவஞானபோதச் சூத்திரம் கூறுகின்றது.
சிவபுண்ணிங்கள் நாம் இறைவனை நோக்கிச் செல்லும் பாதை. அத்துவா என்பது இறைவன் நம்மை நோக்கிவரும் பாதை.

அத்துவாக்கள் ஆறு. இவற்றில் வன்னம், பதம், மந்திரம் மூன்றும் மொழி வளம் ஆகும். சொற்பிரபஞ்சமென்று சைவம் இதனைக் கூறும். வன்னம் என்பது அட்சரங்கள் அல்லது எழுத்துகள், பதம் என்பது சொற்கள். மந்திரம் என்பது வார்த்தைகள்.
“நிறைமொழி மாந்தர் ஆணையின் கிளந்த
மறைமொழிதானே மந்திரம் என்ப”
என்பது தொல்காப்பியம்.

மொழி இல்லாமல் இறைவன் நம்மை அடைய முடியாது என்பது
”ஆரணம் ஆகமங்கள் அருளினால் உருவு கொண்டு
காரணன் அருளானாகில் கதிப்பவர் இல்லையாகும்”
என்னும் சிவஞானசித்தியார் வரிகள் உணர்த்துகின்றன.

இறைவன் மானுடர்க்கு எல்லா மொழிகளிலும் இவற்றை உரைக்கின்றான் என்பது
“ பண்டிதர் ஆவார் பதினெட்டுப் பாடையும்
அண்ட முதல்வன் அறம் சொன்ன வாறே”
என்னும் திருமந்திர வரிகள் உணர்த்துகின்றன. பாடை என்பது பாஷை அல்லது மொழி.

இது மானுடர்க்கு மட்டுமல்ல, தேவலோகம், பாதாளலோகம் போன்ற இதர உலகங்களில் உள்ளவர்களுக்கும் பொருந்தும் என்பது
” நாரணர் முதலாய் உள்ள நரர், சுரர், நாகர்க் கெல்லாம்
சீரணி குருசந்தானச் செய்தியும் சென்றிடாவே”
என்று தொடரும் சிவஞானசித்தியார் வரிகள் உணர்த்துகின்றன.
ஆச்சாரியான் அத்துவா சோதனையில் சாதகனின் மொழித் திறனையும், அறிவையும் அறிய வேண்டும். அத்துவா சுத்தியின் போது இவற்றின் திறனைக் கூட்டும்விதமாக அறிவுறுத்தி தயார்ப்படுத்தவேண்டும்.
”எழுத்தறியத் தீரும் இழிதகமை, தீர்ந்தால்
மொழித்திறத்தின் முட்டறுப்பானாரும் – மொழித்திறத்தின்
முட்டறுத்த நல்லோன் முதனூல் பொருளுணர்ந்து
கட்டறுத்து வீடு பெறும்”
என்னும் காக்கைபாடினியம் வரிகள் உணர்த்துகின்றன.
ஆகவே அத்துவா சோதனை, மற்றும் அத்துவா சுத்தி மூலமாக சாதகனுக்கு அவன் முதனூல்கள் கற்றுப் பொருள் உணர்ந்து கொள்ளும் விதத்தில் ஆச்சாரியான் அவனைத் தயார்ப்படுத்தல் வேண்டும். மிஷனரிமார் இதனால்தான் போலும் முதலில் கல்வியை வழங்கிப் பின்னர் சுவிஷேசத்தை வழங்கினார்கள்.
தத்துவம், கலை, புவனம் என்னும் மூன்று அத்துவாக்களும் பொருட்பிரபஞ்சம் என்னும் எமது இந்த உலகங்களும், கருவி கரணங்களுமாம். சாதகனை பழக்கப்படுத்தி அடையாளப்படுத்தி அவனைக் கட்டுப்படுத்தும் அவனுடைய பிறவிச் சூழல், மனம், உடல், கல்வி, உலகியல், சமூக, குடும்ப, தொழில் மற்றும் பொருளாதார சூழலை, பழக்கங்களை,கட்டுப்பாடுகளை அறிதல் அத்துவா சோதனை. இவற்றில் சிலவற்றை நெறிப்படுத்தி மாற்றுதலுக்கு உதவுதலும், சிலவற்றுக்கு விதிவிலக்கு அளித்தலும் ஆச்சாரியான் செய்யும் அத்துவ சுத்திக்குள் அடங்கும்.
”பாலரொடு வாலீசர், விருத்தர், பணிமொழியார்,
பல போகத்தவர், வியாதிப்பட்டவர்க்குப் பண்ணும்
சீலம் அது”
என்றும்,
”நித்தத்து ஏலும் அதிகாரத்தை இயற்றி”
என்றும் கூறுகின்ற சிவஞானசித்தியார் வரிகள் இவற்றை உணர்த்துகின்றன.
சாதகனை நன்கு அறிவதற்காக சில காலம் அவரை அணுக்கத்தில் வைத்து அவதானித்து வர வேண்டும். இதையே நிர்வாண தீட்சைக்கு முன்னர் சாதகன் குருவிடம் இவ்வளவு காலம் வசிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டது. சாதகனின் அடிமனதில் புதைந்துள்ள மறைமுகமான உளவியல் சிக்கல்களும், நிறைவுறா ஆசைகளும் அறியப்பட வேண்டும். இதற்காகவே நிர்வாண தீட்சைக்குத் தயாராகும் சாககன் தான் இரவில் கண்ட கனவுகளைக் காலையில் குருவிடம் ஒப்புவிக்க வேண்டும் என்று நிர்வாண தீட்சாவிதி கூறுகின்றது. இவற்றினையும் நெறிப்படுத்தி ஆச்சாரியார் அவரவருக்கு ஏற்ற வகையில் அத்துவா சுத்தி செய்து நிர்வாணதீட்சை கொடுக்க வேண்டும். உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை உள்ளும்புறமும் நன்கு சோதித்துச் சுத்தி பண்ணுதலையே சடஙகில் சிகையிலிருந்து கால்வரை தொங்கும் நூலை பஞ்ச கலைகளுக்குரிய ஐந்து பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியையும் கத்தரித்து ஓமத்தீயில் போடுவது உணர்த்துகின்றது,சாதகனும் தன்னில் சிலவற்றைத் துறந்து மாற்றங்களைச் செய்யவேண்டும் என்பதை இறுதியில் கத்தரிக்கும் நூலுடன் சிறிதளவு சிகையையும்கத்தரித்து ஓமத்தீயில் போடுவது உணர்த்துகின்றது
இவ்வாறு ஆச்சாரியார் செய்யும் அத்துவா சோதனை, அத்துவா சுத்தி, நிர்வாண தீட்சைகளினால் சாதகனிடம் இறைவன் வருகின்ற பாதை சுத்தி செய்யப்படுவதனால் அவருடைய வாழ்க்கையில் இறையின் வருகை அவருக்கு இலகுவாக்கப்படுகின்றது.இதுவே குருவின் பணி. இந்நிலையில் அத்துவா சுத்தி பெற்று நூல்களைப் படிப்பதற்கு அதிகாரமும் பெற்ற சாதகனுக்கு முதனூல் பொருள் இனிது விளங்கும்; விளங்க இறைவன் அருளினால் கட்டறுத்து வீடு பெறுவான்.