பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்
வைத்திய கலாநிதி இ.லம்போதரன் (MD)
சைவ சித்தாந்த பீடம், கனடா
www.knowingourroots.com

பஞ்சம் என்றால் ஐந்து; அங்கம் என்றால் உறுப்பு அல்லது பகுதி. பஞ்சாங்கம் என்பது ஒவ்வொரு நாளுக்கும் உரிய ஐந்து விடயங்களைப் பற்றிய விபரங்களைத் தருவது. இந்த ஐந்து விடயங்களாவன வாரம், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் என்பவையாம். இவை ஒவ்வொன்றையும் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

1. வாரம்:

நவக்கிரகங்களில் இராகு, கேது இரண்டும் நிழற் கிரகங்களாம். அவை தவிர்ந்த ஏழு கிரகங்களுக்கும் நாள் தோறும் ஆட்சி முகூர்த்தங்கள் ஒவ்வொரு இரண்டரை நாழிகைக்கு (ஒரு மணி நேரத்துக்கு ) ஒருமுறை மாறி மாறி வரும். இது ஹோரா என்று வடமொழியிலும் ஓரா அல்லது ஓரை என்று தமிழிலும் கூற்ப்படுகின்றது. இதிலிருந்தே ஆங்கிலச் சொல்லான HOUR – என்னும் மணித்தியாலத்தைக் குறிக்கும் சொல் வந்தது. ஒவ்வொரு நாளிலும் சூரியோதயம் எந்த கிரகத்தினுடைய ஓரை அல்லது ஆதிக்கத்தில் தொடங்குகின்றதோ அந்தக் கிரகத்தின் பெயரால் அந்த நாள் வழங்கப்படுகின்றது.

  • உதய காலத்தில் சூரியன் ஓரை நடக்கும் நாள் ஞாயிற்றுக்கிழமை
  • உதய காலத்தில் சந்திரன் ஓரை நடக்கும் நாள் திங்கட் கிழமை
  • உதய காலத்தில் செவ்வாய் ஓரை நடக்கும் நாள் செவ்வாய்க் கிழமை
  • உதய காலத்தில் புதன் ஓரை நடக்கும் நாள் புதன் கிழமை
  • உதய காலத்தில் வியாழன் ஓரை நடக்கும் நாள் வியாழக் கிழமை
  • உதய காலத்தில் வெள்ளி ஓரை நடக்கும் நாள் வெள்ளிக் கிழமை
  • உதய காலத்தில் சனி ஓரை நடக்கும் நாள் சனிக் கிழமை

 

இவ்வாறுதான் வாரத்தின் ஏழு நாட்களும் எமது சம்பிரதாயத்தில் பெயரிடப்பட்டிருக்கின்றன.பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சி பயின்றவர்கள் வெள்ளி, திங்கள், புதன் கிழமைகளிலும், வளர்பிறை வியாழக்கிழமைகளிலும் இடது நாசியாலும், சனி, ஞாயிறு, செவ்வாய்க் கிழமைகளிலும், தேய்பிறை வியாழக்கிழமைகளிலும்  வலது நாசியாலும் வழிப்படுத்தி வரும்படி திருமந்திரம் அறிவுறுத்துகின்றது.

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்இடம்

ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்

வள்ளிய பொன்னே வளரும் பிறையிடம்

தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே.

– திருமந்திரம், 10ம் திருமுறை