சிவாத்துவித பாடியம்: ஓர் அறிமுகம்

சிவாத்துவித பாடியம்: ஓர் அறிமுகம்

(தமிழ் ஹிந்து – October 01, 2013 மின் இதழில் பிரசுரிக்கப்பட்டது)

முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி

சிவக்குடில், கோவைப்புதூர்

சிவாத்துவித பாடியம் என்று அறியப்படுவது, பிரம்ம சூத்திரத்திற்கு நீலகண்டர் அல்லது ஸ்ரீகண்டர் எழுதிய பாஷ்யத்தைக் குறிக்கும். இந்திய தத்துவ ஞான தரிசனங்களில் விருப்பம் உடையவர்கள் பெரும்பாலும் ஆதி சங்கராச்சாரியர் பிரம்ம சூத்திரத்திற்குக் கண்ட கேவலாத்துவித பாடியத்தையும் ஸ்ரீ இராமானுஜர் எழுதிய விசிஷ்டாத்வைத பாடியத்தையும் ஸ்ரீமாத்துவர் எழுதிய துவித்தாத்துவித பாடியத்தையும் அறிவர். ஸ்ரீகண்ட பாடியத்தைப் பெயரளவிலேனும் அறிந்தவர் மிகச் சிலரே. அதனை அறிமுகம் செய்வது இக்கட்டுரையின் நோக்கம்.

வேதங்களும் ஆகமங்களும்:

இந்தியத் தத்துவ ஞானம் வேதங்கள், ஆகமங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வேதாந்தம், சித்தாந்தம் எனும் இருபெரும் பிரிவுகளாக வளர்ந்துள்ளன. வேதாந்தாந்தம் என்பன வேதத்தின் ஞான காண்டமாகிய உபநிடதங்கள். சித்தாந்தம் என்பன 28 சைவ ஆகமங்கள்.  வேதங்கள் காட்டிய நெறி வைதிகம் என்றும் ஆகமங்களின் நெறி சைவநெறி என்றும் அறியப்படுகின்றன. ‘வேதநூல் சைவநூல் என்றிரண்டே நூல்கள், வேறுரைக்கும் நூல்கள் இவற்றின் விரிந்த நூல்கள்’  என்றும், வேதம் உலகவருக்குச் செய்யப்பட்டதாதலின் ‘பொது’ என்றும், ஆகமம் பிறப்பறுத்து வீடு பேற்றினை விரும்பும் சத்திநிபாதகளுக்கு உரைக்கப்பட்டதாகலின் ‘சிறப்பு’ (சி.சி267) என்றும் கூறப்பட்டன.

வேதம், ஆகமம் இரண்டும் சிவனருளிய நூல்கள் என்று கூறப்பட்டாலும் இவற்றைப் பின்பற்றியவர்களிடையே பிற்காலத்தில் வேற்றுமைகள் தோன்றின. வேதாந்திகள் சித்தாந்திகளைப் பழித்தனர். சித்தாந்திகள் வேதாந்திகளை இகழ்ந்தனர். சித்தாந்திகள் வேதங்களைப் ‘பாசநூல்’ என்றனர். வேதியர் சிவாகமங்களை ‘மயக்க நூல்கள்’ எனத் தூற்றினர். அறிந்தோர் இவ்விரண்டும் தவறான பார்வை என்பர்.

நிலையற்ற சுவர்க்க போகங்களுக்கு உரிய வேள்வி முதலியவற்றை விளக்கும் கன்ம காண்டமே சித்தாந்தத்தில் விலக்கப்பட்டன. அவ்வாறே, சுரைக்குடம் (கள்பானை) தாபித்தல் போன்ற அவைதிகக் கருமங்களைக் கூறும் வாமம், பாசுபதம், இலாகுளம், காபாலம் முதலிய ஆகமங்களே விலக்கப்படுவன.

காமிகம் முதலிய சிவாகமங்கள் வேத சம்மதமாவன; வைதிகத்தில் அங்கீகரிக்கப்பட்டன. ஆகம முடிபும் வேதாந்த முடிபும் ஒன்றே என்பது தென்மொழி வடமொழி அறிந்த ஞானியர் முடிபு.

திருமூலர் இக்கருத்தினர்.

“வேதமோடாகமம் மெய்யாம் இறைவன் நூல்
ஓதும் சிறப்பும் பொதுவும் என்றுள்ளன
நாதனுரையிவை நாடிலிரண்டந்தம்
பேதமதென்பர் பெரியோர்க் கபேதமே”

வேதாந்த சூத்திரம் ஈச, கேன, பிரசின, முண்டக, மாண்டூக்கிய, ஐதரேய, தைத்திரிய, சாந்தோக்கிய, பிருகதாரணிய, கெளஷிதகிப்பிராம்மண, மகோபநிடத, பிருகச்சாபால, சரப, ஜாபால, கைவல்லிய, காலாக்கினிருத்திர, சுவேதாசுவதர, மைத்திராயண, அதர்வசிரசு, அதர்வசிகை முதலிய உபநிடதப் பொருள்களை ஆதாரமாகக் கொண்டு யாக்கப்பட்டது. பாடியக்காரர்கள் வேதாந்தசூத்திரத்திற்குப் பாடியம் எழுதும்போது இவ்வுபநிஷத்துக்களையே பெரும்பான்மையும் மேற்கோள் காட்டுகின்றனர்.

சுவேதாசுவதரம், அதர்வசிரசு, அதர்வசிகை, கைவல்லியோபநிடதம் முதலியன சிவபரத்துவத்திற்கு ஆதரவாக இருத்தலின், சிலர் இவை பிற்காலத்தன என்று விலக்குவர். நீலகண்டர் இவற்றையும் மேற்கோளாகக் காட்டுவார்.

வேதாந்த சூத்திரத்தின் உண்மைப் பொருள், முன்னையோர் கூறிய ஏகான்ம, மாயா வாத  உரையினால் மேகத்தால் கவிக்கப்பட்ட சூரியனைப்போல மறைந்திருந்தன என்றும், நீலகண்டரே மறைப்பை நீக்கி உண்மைப் பொருளை வெளிப்படுத்தினார் என்றும், ஏகான்ம வாதிகளால் வேதாந்த சூத்திரப் பொருள் திரிக்கப்பட்டு அதனால்  ஒளி மாழ்கிய சிவநெறி விளக்கம் பெறும்  பொருட்டுப் பரமசிவனார் சிவகணத்தினராகிய நீலலோஹித உருத்திரரை நீலகண்ட சிவாசாரியராக மண்ணுலகில் பிறக்கச் செய்தார் என்று கூறுவர்.

(When Lord Siva along with Parvathi were holding court in the Hiranya Mantap in Kailash, with Hari, Brahma and other celestial Gods, Narayana requested Siva to send a scholar to propagate Siva Bhakti and to clearly explain the truth in Vyasa Sutrams to the people on the Earth. Siva stated, that since the influence of Maharshi Vighanas and Badari who were sent earlier to propagate Siva Bhakthi is fading away, He is sending Nilalohita Rudra to take birth on Earth to drive away the insanity of the people under the preaching of the Mayavadis and to propagate Srouta Sivaradhya Sampradayam. (www.Srouta saiva siddhanta)

தென்னாட்டில் வேதாந்த சித்தாந்த சமரசம்:

தாயுமானவர்

இதுவே  தாயுமானார் ‘சித்தர்கணம் என்று அருளிய பதிகத்தின் மகுடமாகிய

வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற வித்தகச் சித்தர் கணமே” என்றதன் கருத்து. (வித்தகம்- ஞானம்) வேதாந்தம் சித்தாந்தம் மற்றும் உள்ள அந்தங்களின் குறிக்கோள் சிவத்தில் அத்துவிதமாகக் கலப்பதே.

வேதாகமங்களைப் பிரமாணமாகக் கொண்ட தென்னாட்டுச் சைவசித்தாந்தத்திற்குச் ‘சுத்தாத்துவித வைதிக சைவ சித்தாந்தம்’ என்பது தத்துவ உலகில்   வழங்கிவரும் பெயராகும். சுருக்கமாக ‘வைதிக சைவம்’ என்பர். சுத்தாத்வைதம்என்னும் இச்சொற் பிரயோகம்,-”தந்மநோவிலயம் யாதி தத்விஷ்னோ: பரமம்பதம் |தல்லயாச் சுத்தாத்வைத ஸித்தி பேதாபவாத் |ஏததேவ பரமதத்வம்||” என்னும் மண்டல ப்ராஹ்மணோபநிஷத் வசனங்களில் அறியவுள்ளது. இந்தச் சுத்தாத்துவிதத்தைத் தாயுமானார்  ’புனிதம் எனும்அத்துவிதம்’ என்று குறிப்பிடுவார். இச்சுத்தாத்துவிததை எடுத்தியம்பியவர் மெய்கண்டாரே எனும் கருத்தில்

பொய்கண்டார் காணாப் புனிதமெனும் அத்துவித
மெய்கண்ட நாதனருள் மேவுநாளெந்நாளோ”

என்று பாடினார்.

வைதிக சைவம் என்னும் சொல்லாட்சி சைவ இலக்கியங்களில் பரவலாகக் காணப்படுகின்றதுது.

“பண்ணின் பயனாம் நல்லிசையும் பாலின் பயனாம் இன்சுவையும்
கண்ணின் பயனாம் பெருகொளியும் கருத்தின் பயனாம் எழுத்தஞ்சும்
விண்ணின் பயனாம் பொழிமழையும் வேதப்பயனாம் சைவமும்போல்
மண்ணின் பயனாம் அப்பதியின் வளத்தின் பெருமை வரம்புடைத்தோ”

-பெரியபுராணம்

நலம்மன்னிய தண்டக நாடு செழித்துமல்கப்
பலரும்புகழ் காஞ்சி வளம்பதி மேன்மை சாலக்
குலவுஞ் சமயங்களொராறும் மகிழ்ச்சி கூர
உலகெங்கணும் வைதிக சைவம் உயர்ந்து மல்க.

-பெரியபுராணம்

வேதாந்தத் தீதில் பொருள் கொண்டுரைக்கும் நூல் சைவம்”  (சைவம் என்றது சிவாகமங்களை)

வேதாகம உடம்பாடா வைதிக சைவமார்க்கமே சன்மார்க்கம்”                                                                                                      – தாயுமானார்

வைதிக சைவம் அழகு’ 

  • தாயுமானார்

‘வீடு வைதிக சமய ம்பகரும்’

  • உமாபதிசிவம் – சிவப்பிரகாசம்

பிரம்மசூத்திரமும்சைவசித்தாந்தமும்

பிரம்ம சூத்திரம் தோன்றிய வரலாற்றை நீலகண்ட பாடியம் பின் வருமாறு  கூறுகின்றது.

“சிவபெருமான் பிரமா விஷ்ணு என்னும் இருவரையும் விளித்து , நீவிர் இருவரும் முறையே மநுவும் வியாசருமாகத் துவாபரயுகங்கடோறும் உதித்து, வரையறைப்படாத வேதங்களையும் சாஸ்திரங்களையும் (உபநிடதங்களையும்) சுருக்கி, கலியுகத்திலே அறிவு சுருங்கிய மானுடர் அறிவுக்கேற்ற வாறு (அந்தக்) கன்மத்தையும் பிரமத்தையும் விதிக்கும் சாஸ்திரங்களைச் சூத்திர ரூபமாக மற்றைய இருடிகளோ டியைந்து விரைந்து செய்யுங்கள்” என்று ஆஞ்ஞாபித்தார்.

இவ்வாறு, சிவபெருமான் ஆணையிட, விஷ்ணு தமக்குரிய பல கலைகளுள்ளே ஓர் கலைகொண்டு வியாசராகத் திருவவதாரஞ் செய்து  பிரமசூத்திரம் செய்தருளினர்.”

வேத உபநிடதங்கள் வரையறைப்படாதன; விரிந்து பரந்து கிடக்கும் அவை அறிவு சுருங்கிய மானுடர்களால் முழுதும் அறிந்து கைக் கொள்ள இயலாது. எனவே, சுருங்கிய அறிவினை யுடைய மானுடர்களின் அறிவுக்கு ஏற்ப பிரம்மஞானத்தைத் தரும் வேத உபநிடதக் கருத்துக்களைத் திரட்டிச் சுருக்கிச் சூத்திர வடிவில் வியாசர் அருளினார்.

நம் பாரத நாட்டுத் தத்துவ ஞானியர் உபநிடதங்கள் மேலும் பிரம்ம சூத்திரத்தின்பாலும் சிறப்பான பற்று வைத்துள்ளனர் . இதற்குக் காரணம் யாது.? அந்த நூற்றெட்டு உபநிடத நூல்களும் ஒருவகையில் தம்முள் மாறுபடப் பகர்வன போலக் காணப்படினும் அவையாவும் , ‘மனோலய வாய்ப்பின்கண்ணே நாட்டமுடையனவாய் அதனையே பலதிறத்தானும் விரித்துரைப்பன வாயுள்ளன. அவை ஞானியர்களின் சுவானுபவங்களை எடுத்துரைக்கும் நூல்கள். எனவே, பரதகண்ட பண்டிதர்களால் விரும்பிப் ஆராய்ந்து படிக்கப்பட்டன. ; ஆராயப்பட்டன’. – பாம்பனடிகள்

ஒன்றற்கொன்று மாறுபட்டதுபோல் தோன்றும் உபநிடதக் கருத்துக்களை ஒருவகையில் சமன்வயப்படுத்தும் நூல் பிரம்மசூத்திரம்.

சூத்திரம் என்ற பெயருக்கு ஏற்பச் சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளை செறித்துப் பாதராயணர் கூறியுள்ளார். இதே காரணத்தால் இந்நூலுக்கு தம்முள் மாறுபட்ட பல பேருரைகள் (பாஷ்யங்கள்) தோன்றியுள்ளன. இந்தியத் தத்துவ உலகில் சங்கராசாரியரின் ஏகான்மவாதமான அத்துவித பாடியமும் இராமானுசரின் விசிட்டாதுவித ஸ்ரீபாடியமும் ஆனந்ததீர்த்தரின் துவைத பரமான மத்துவ பாடியமும் பிரபலமானவை..இவற்றோடு ஒருங்கு வைத்து எண்ணத் தக்க சிறப்புடையது, சைவபாடியம் எனப் போற்றப்படும் நீலகண்டசிவாசாரியரால் வரையப்பட்ட சிவாத்துவித நீலகண்டபாடியம்.. இன்னும் இவைபோல் வேதந்த சூத்திரத்திற்குப் பல பாடியங்கள் உண்டெனக் கூறப்படு கின்றது.

நீலகண்டபாடியமும் சைவசித்தாந்தமும்

நீலகண்ட பாடியம், சைவபாடியம் என்று கூறப்பட்டாலும் சைவசித்தாந்திகள் இதனை ஏற்றுக் கொள்வதில்லை.  வேதாந்தங்களான உபநிடதங்களின் சாரமாகப் பாதராயணரால் செய்யப்பட்ட பிரம்ம சூத்திரம் ஏகான்ம வாத நூல், அதற்குக் கூறப்படும் எவ்வகை விளக்கமும் ஏகான்மவாதத்திலேயே முடியும் என்று சைவசித்தாந்திகளில் ஒரு சாரார் கருதுவர். அதனால், சித்தாந்த சாத்திரங்களைக் கற்பதுபோல் நீலகண்டபாடியத்தைச் சைவர்கள் கற்பதில்லை.

நீலகண்டபாடியம் சிவாத்துவிதம் எனும் சிவசமவாதத்தைக் கூறுகின்றதென்றும் சிவசக்திக்குப் பரிமாணம் கூறுகின்றதென்றும் தென்னாட்டுச் சைவசித்தாந்திகள் இப்பாடியத்தைப் புறக்கணிப்பர்.

சிவாத்துவிதம், சித்தும் அசித்துமாகிய பிரபஞ்சம் சிவபரம்பொருளின் அம்சமாய் (விசிட்டம், வியாப்பியம்) ) சிவத்துக்குக் குணமாய் இருப்பன என்ற கொள்கையை யுடையது. சிலந்திப்பூச்சியின் உடம்பே சிலந்திவலைக்கு உபாதான காரணமும், அதன்கண் உள்ள உயிரே நூலினைச் செய்யும் நிமித்தகாரணமுமாக ஒருசேர இருத்தல் போல நிமித்தகாரணமாகிய சிவபரம்பொருளின் விசிட்டமாகிய சிவசத்தியே பிரபஞ்சமாகப் பரிணமிக்கும் என்பது நீலகண்டருடைய கொள்கை. எனவே இவருடைய கொள்கையை நிமித்தமும் உபாதானமும் சேர்ந்த நிமித்தோபாதான காரணம் என்பர்.

சைவ சித்தாந்தம் பிரமத்துக்கு நிமித்தம் ஒன்றையே கூறும். அதனால் சைவர்களை நிமித்த காரணவாதிகள் என்பர்.

நீலகண்ட பாடியம் ஒருவகையில் இராமாநுஜர் விளக்கிய விசிட்டாத்வைதம் போன்றதே. இராமாநுஜர் பிரம்மத்தை  நாரயணர் என்றார். நீலகண்டர் பிரம்மம் சிவம் என்றார். இதனால் இவருடைய கொள்கை சிவவிசிஷ்டாத்வைதம் எனப்பட்டது.

சிவசமவாதத்தையும் சிவசக்திக்குப் பரிமாணம் கூறுவதையும் கொற்றவங்குடி உமாபதி சிவாச்சாரியார் தம்முடைய சங்கற்ப நிராகரணம் என்னும் நூலில் கண்டிப்பார். சிவஞானபோதம் மாபாடியத்தில் சிவசமவாதத்தைக் கடுமையாக நிராகரித்தாலும் நீலகண்டபாடியம் சைவர்கள் கைக்கொண்டு ஒழுகுதற்குரிய பலசெய்திகளைக் கொண்டுள்ளது என்று கருத்துத் தெரிவித்ததோடு தம்முடைய திராவிடமாபாடியத்தில் பலஇடங்களில் இப்பாடியத்தைச்  சிவஞான முனிவர் எடுத்தாண்டுள்ளார்.

நீலகண்டருடைய சிவாத்துவிதக் கொள்கையைத் தெளிவாக நன்கு மறுத்த சிவஞானமுனிவர், இறுதியில், ‘சித்தாந்தத்தொடு பொருளால் முரணுத லின்றாயினும், வாய்பாடு மாத்திரையான் முரணுதலின் சிவாத்துவித சைவம் வேறு எனப்பட்டது’ என்று உணர்க’ என எழுதினார்.

பிரமம் நிமித்த காரணம் மட்டுமே என்பது சைவசித்தாந்தம். பிரமம் நிமித்த காரணம் மட்டுமே என்ற கொள்கையை நீலகண்டர் வன்மையாக மறுக்கின்றார். பிரமம் உபாதானகாரணமும் ஆகும் என்பது நீலகண்டர் கொள்கை. அவ்வாறே பிரமம் நிமித்த காரணமும் உபாதான காரணமுமாகும் என்ற கொள்கையைச் சிவஞான முனிவர் வன்மையாக மறுக்கின்றார்

நீலகண்டருடைய குரு மெய்கண்டாரா?

நீலகண்ட பாடியத்தில் சிவாகமங்களுடன் ஒத்துப் போகும் கருத்துக்கள் காணப்படுவதற்குக் காரணம் சிலரால் கூறப்படுகின்றது.

நீலகண்டர் பாடியத்தின் தொடக்கத்தில் தம்முடைய குருவுக்கு வணக்கம் கூறியுள்ளார். அத்துதியாவது:  “ஒன்றுக்கொன்று மாறுதல்போலப் பொருள் போதிக்கும் ஆகம வேதங்களை விரோதமுறாவண்ணம் உபதேசிப்பவரும், முத்தியாகிய கைவல்லியத்தை விரும்பினவர்களுக்குப் பிரசாதிக்கும் கற்பகதருவும், இவ்வுலக இன்பத்தை விரும்பினவர்களுக்குப் பிரசாதிப்பவருடைய குருவுமாகிய சுவேதாசாரியருக்கு  நமஸ்காரம்”

இத்துதியில் நீலகண்டருடைய ஆசாரியர் சுவேதாசாரியர் என்று அவர் பெயர் கூறப்பட்டுள்ளது. சிலர் சுவேதாசாரியர் என்றது, மெய்கண்டாரை எனச் சிலர் கருதுகின்றனர். மெய்கண்டாரின் பிள்ளைத் திருநாமம்சுவேதவனப்பெருமாள்என்பது. சுவேதவனம் என்பது திருவெண்காட்டின் வடமொழிப்பெயர். சுவேதம்- வெண்மை. இந்தப் பெயர் ஒற்றுமை கருதி மெய்கண்டாரே நீலகண்ட சிவாச்சாரியரின் குரு என்றும் அதனால்தான் சித்தாந்தக் கோட்பாடுகள் இப்பாடியத்தில் விரவியுள்ளன என்பர். இதன் பொருத்தம் ஐயத்திற்குரியது.

நீலகண்டருடைய வரலாறு பற்றி ஒன்றும் தெரியவில்லை. இப்பாடியத்தைப் பதிப்பித்த காசிவாசி செந்திநாதய்யர் அவர்கள், நீலகண்டர் சங்கரர், இராமானுஜர், மத்வர் ஆகிய பாடியக்காரர் அனைவருக்கும் முன் தோன்றியவர் என்கிறார். அப்படியானால், 13ஆம் நூற்றாண்டினரான மெய்கண்டார் அவருக்கு ஆசிரியர் ஆதல் இயலாததொன்று. இராமானுஜ பாடியத்துடன் இச்சைவ பாடியம் பல இடங்களில் ஒத்துப் போதலை நோக்கி இவர் இராமாஜரின் சமகாலத்தவர் எனச் சிலர் கருதுவர்.

நீலகண்டசிவாச்சாரியார் தமிழ் நாட்டில் தொண்டைநாட்டு ஆதிசைவப்பிராமணர் என்றும் இவருடைய திருவுருவப் படிமம் தொண்டைமண்டலத்து வடதிருமுல்லைவாயில் சிவாலயத்தில் உள்ளது என்றும் இவருக்கு இங்குஆவணிமாதம் பூச நாளில் குருபூசை நடைபெறுகின்றது என்றும் காசிவாசி ஸ்ரீசெந்திநாதய்யர் அவர்களின் பதிப்பில் ஒரு குறிப்புக் காணப்படுகின்றது. இவர் தமிழகத்தைச் சேர்ந்த ஆதிசைவ பிராமணராதலால் இவருடைய பாடியத்தில் சித்தாந்த சைவக் கருத்துக்கள் விரவியுள்ளன எனச் சிலர் கருதுவர்.

நாகலிங்க சாஸ்திரியார் என்பார் வடமொழியில் எழுதியுள்ள நீலகண்ட விஜய மஹா காவ்யம் என்னும் நூலில் நீலகண்டர் ஆந்திர நாட்டில் உள்ள வாரங்கல்லில் விச்வேஸ்வர மகேஸ்வர ஆராத்யா , கெளரி தம்பதியருக்குப் பாரத்வாஜ கோத்திரத்தில் கலியுகம் 2044க்குச் சமமான கி.மு 3001ல் நீலலோஹித ருத்ராம்சத்துடன்   மஹாகாளேஸ்வர ஸ்வாமி ஆசியுடன் அவதரித்தார் என்று பெளராணிகத்தனமான நம்ப முடியாத செய்தி கூறப்பட்டுள்ளது.  இது ஏனைய பாடியக்கரர்களைக் காட்டிலும் நீலகண்டரை மிக உயர்த்தி வைக்க விரும்பும் பேராசையின் விளைவே.

 

 

முனைவர் கோ.ந.முத்துக்குமார சுவாமி அவர்கள் ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியர்.

சைவசமயத்திலும், மரபிலக்கியங்களிலும் ஆழ்ந்த புலமை வாய்ந்தவர்.

திருமுறைகள், சைவசித்தாந்தம், தல புராணங்கள் ஆகியவை குறித்த விரிவான, ஆழமான கட்டுரைகளைத் தொடர்ந்து தமிழ்ஹிந்து தளத்தில் எழுதி வருகிறார்.