மஹா வாக்கியங்கள்


மஹா வாக்கியங்கள்
– வேதாந்தத் தெளிவும் சித்தாந்த விளக்கமும் –
மருத்துவ கலாநிதி இ. லம்போதரன்
சைவசித்தாந்த பீடம், கனடா
www.knowingourroots.com

அது இது என்றும்; அவன் நானே என்றும்
அது நீயே ஆகின்றாய் என்றும் – அது ஆனேன்
என்றும் தமை உணர்ந்தோர் எல்லாம் இரண்டாக
ஒன்றாகச் சொல்லுவரோ உற்று?
                                                                 – திருக்களிற்றுப்படியார்

எமது வேதங்கள் மிகப் பரந்தன. அவற்றினை முழுமையும் படித்து உணருதல் முடியாது. ஆயினும் அவற்றின் கருப்பொருளை சில வார்த்தைகளில் சுருக்கி நறுக்காகத் தந்துள்ளார்கள். இவற்றை மஹாவாக்கியங்கள் என்பர். மஹா என்றால் அதற்கு மேல் ஒன்றுமே இல்லை (Supreme) என்று பொருள். இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1. ஏகம் அத்விதீயம் பிரம்மம்:
ஏகம் – ஒன்று; துவிதீயம் – இரண்டு; அ-துவிதீயம் – இரண்டல்ல.
“உள்ளது ஒன்றே (பிரம்மம்); இரண்டாவது (ஆன்மா என்றோ உலகம் என்றோ) இரண்டாவது இல்லை” என்பது சங்கர வேதாந்த விளக்கம். இல்லை என்று கூறும் இந்த விளக்கத்தை இன்மைப் பொருள் விளக்கம் என்பர்.
“பிரம்மம் (கடவுள்) ஒன்றே; இரண்டு அல்ல” என்பது சைவ சித்தாந்த விளக்கம். அல்ல என்று கூறும் இந்த விளக்கத்தை அன்மைப் பொருள் விளக்கம் என்று கூறுவர்.

உ-ம்: ஆங்கிலத்தில் Vegetarian என்னும் சொல் சைவ உணவு உண்பவரைக் குறிக்கின்றது. இதே போல துவிதம் என்னும் சமஸ்கிருதச்சொல் இரண்டு என்பதைக் குறிக்கின்றது. துவிச்சக்கரவண்டி என்பது இரண்டு சில்லுச் சைக்கிளைக் குறிப்பது நாம் அறிந்ததே.
Non-vegetarian என்னும் ஆங்கிலச் சொல் Vegetarian என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு எதிர்க் கருத்துள்ள சொல்லாகும். இது அசைவ உணவு உண்பவர்களைக் குறிக்கின்றது. இதேபோல் போலவே தான் அத்துவிதம் என்னும் சமஸ்கிருதச் சொல்லும்.
Non-vegetarian எனும் சொல்லுக்கு அசைவ உணவு உண்பவர் என்று பொருள், ஆனால் அவர் சைவ உணவை முற்றாக மறுப்பவர், அசைவ உணவு மட்டுமே உண்பவர் என்று பொருள் கொண்டால் அது இச் சொல்லுக்குரிய இன்மைப் பொருள் விளக்கம். அவர் அசைவ உணவு உண்பவர். ஆனால் சைவ உணவை மறுப்பதில்லை, அதையும் உண்பவர் என்று பொருள் கொண்டால் அது அன்மைப் பொருள் விளக்கம்.

2. தத்துவமசி:
இது சாந்தோக்கிய உபநிடதத்தில் உள்ள மஹாவாக்கியம். இது முன்னிலை வாக்கியமாகக் (Second Person Expression) கூறப்பட்டுள்ளது. இது குரு தனக்கு முன்னால் உள்லா சீடனுக்குக் கூறுவது போல அமைந்துள்ளதால் இதை உபதேச மஹாவாக்கியம் என்று கூறுவர்.
தத் – அது; த்வம் – நீ; அஸி – ஆகின்றாய்.
“நீ(யே) அது” என்பது சங்கர வேதாந்த விளக்கம்.
“அது நீ ஆகிறாய்” என்பது சைவ சித்தாந்த விளக்கம்.

3. அஹம் பிரம்மாஸ்மி:
இது யசுர் வேதத்தின் பிருஹதாரண்ய உபநிடதத்தில் உள்ள மஹாவாக்கியம். இது தன்மையில் (First Peson Expression) கூறப்பட்ட வாக்கியமாகும். இது தான் அப்பியசிபதற்காகச் சொல்லும் வாக்கியம் ஆதலால் அப்பியாச மஹாவாக்கியம் எனப்படுகின்றது.
அஹம் – நான்; அஸ்மி – இருக்கின்றேன்.
“நானே பிரம்மம்” என்பது சங்கர வேதாந்த விளக்கம்.
“நான் பிரம்மம் ஆய் இருக்கின்றேன்” என்பது சைவ சித்தாந்த விளக்கம்.

4. அயம் ஆத்மா பிரம்மம்:
இது அதர்வண வேதத்தின் மாண்டூக்கிய உபநிடத மஹாவாக்கியம். படர்க்கையில் (Third Person Expression) கூறப்பட்டுள்ளது. இது தனது சுவ அல்லது சுய அனுபவத்தைச் சொல்வது போல் அமைந்திருப்பதால் இதை அனுபவ மஹாவாக்கியம் என்பர்.
“இந்த ஆத்மா பிரம்மம்” என்பது சங்கர வேதாந்த விளக்கம்.
“அயம் – அது; அது பிரம்மம்; (இது) ஆத்மா” என்பது சைவ சித்தாந்த விளக்கம்.

5. பிரக்ஞானம் பிரம்மம்:
இது இருக்கு வேதத்தின் ஐத்ரேய உபநிடத மஹாவாக்கியமாகும். இது பிரமத்தின் இயல்பை அல்லது இலட்சணத்தைச் சொல்வதாக அமைந்திருப்பதால் இதனை இலட்சண மஹாவாக்கியம் என்று கூறுவர்.
பிரக்(ஞை) – உணர்வு, இதை சத் என்று கூறுவர்; ஞானம் – அறிவு, இதை சித் என்று கூறுவர். இறைவனுக்கு அறிவு, உணர்வு ஆகிய இவை இரண்டும் பூரணமாக உண்டு. பூரண சத்-சித்-ஆனந்த சொரூபி இறைவன்.
“உணர்வும் அறிவும் உள்ள இது (ஆன்மா) அதுவே (பிரம்மம்)” என்பது சங்கர வேதாந்த விளக்கம்.
“உணர்வும் அறிவும் உள்ள அது பிரம்மம்; இது (ஆன்மா) அல்ல” என்பது சைவ சித்தாந்த விளக்கம்.
சடப்பொருள்களுக்கு அறிவு, உணர்வு ஆகிய இவை இரண்டும் சுத்தமாக இல்லை.
உயிர்களுக்கு இந்த இரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்டவை. இவற்றுக்கு உணர்வும் அறிவும் ஓரளவுக்கு உண்டு (சிற்றறிவு/ சிற்றுணர்வு). இறைக்கும் சடத்துக்கும் இடைப்பட்ட ஆன்மாவின் இந்த இரண்டும் கெட்ட நிலையை “இரண்டுமிலித் தனியனேற்கே” என்று திருவாசகமும், “இரண்டலா ஆன்மா” என்று சிவஞானபோதமும் கூறும்.
இந்த மஹாவக்கியங்கள் அனைத்தையும் ஒரே செய்யுளில் விளக்குகின்றது மெய்கண்ட சாத்திரங்களில் ஒன்றான திருக்களிற்றுப்படியார்.

அது இது என்றும்; அவன் நானே என்றும்
அது நீயே ஆகின்றாய் என்றும் – அது ஆனேன்
என்றும் தமை உணர்ந்தோர் எல்லாம் இரண்டாக
ஒன்றாகச் சொல்லுவரோ உற்று?

பொருள்: அது இது – பிரக்ஞானம் பிரம்மம்
அவன் நானே – அஹம் பிரம்மாஸ்மி
அது நீயே ஆகின்றாய் – தத்துவமஸி
அது ஆனேன் – அயம் ஆத்ம பிரம்மம்
என்று தமை உணர்ந்தோர் – இவற்றை உணர்ந்த ஞானிகள்
உற்று – தாமே இவற்றை அனுபவம் உற்று
இரண்டாக – மாத்துவர் சொன்ன பிரம்மமும் ஆன்மாவும் என்றும் வெவ்வேறே என்கின்ற துவைதம் ஆகவும்
ஒன்று ஆக – சங்கரர் சொன்ன பிரம்மமே ஆன்மா என்கின்ற ஏகான்மவாதமாகவும்
இரண்டாக ஒன்றாக – இராமானுஜர் சொன்ன விசிட்டாத்துவிதமாகவும்
சொல்வரோ? – சொல்லுவார்களோ?

இதையே சிவஞானசித்தியார் பின்வருமாறு கூறும்.

சிவன், சீவன் என்று இரண்டும் சித்து ஒன்றாம் என்னில்
சிவன் அருள் சித்து, இவன் அருளைச் சேரும் சித்து; அவன் தான்
பவம் கெடு புத்தி முத்தி பண்ணும் சித்து; அவற்றில்
படியும் சித்து, அறிவிக்கப் படும் சித்து இவன் தான்;
அவன் தானே அறியும் சித்து ஆதலினால் இரண்டும்
அணைந்தாலும் ஒன்றாகாது அனன்னியமாக இருக்கும்.

பொருள்:
சிவன், சீவன் என்று இரண்டும் சித்து ஒன்றாம் என்னில் – சிவன், சீவன் என்னும் சித்து (அறிவுள்ள) இரண்டும் ஒன்றே என்றால்,
சிவன் அருள் சித்து – சிவன் அருள் (எல்லையற்ற, நிபந்தனையற்ற பேரன்பு) உடைய சித்து. ( பேரருள் உடைமை – இறைவனுக்கேயுரிய எண்குணங்களில் ஒன்று).
இவன் அருளைச் சேரும் சித்து – சீவன் தனது முத்திநிலையில்
அந்த பேரருளகிய சிவனைச் சேர்ந்து நிற்கும் சித்து.
அவன் தான் பவம் கெடு புத்தி முத்தி பண்ணும் சித்து – சிவன் பிறப்பை நீக்கும் வகையில் சீவனுக்கு புத்தி என்னும் ஞானத்தையும், முத்தி என்னும் வீடுபேற்றையும் செய்விக்கும் சித்து;
அவற்றில் படியும் சித்து இவன் – சிவன் தந்தருளுகின்ற ஞானத்திலும், வீடுபேற்றின்பத்திலும் படிந்து தோய்ந்து அனுபவிக்கும் சித்து சீவனாகும்;
அறிவிக்கப்படும் சித்து இவன் தான் – தானாக ஒன்றையும் அறியமுடியாத ஆனால் கருவி கரணங்கள் கொண்டு அறிவித்தால் மட்டுமே (படிப்பறிவும் பட்டறிவும்) அறிகின்ற சிற்றறிவுடைய சித்து சீவன்;
அவன் தானே அறியும் சித்து – சிவன் தானாகவே எல்லாம் அறிபவன், முற்றறிவுடைமையும் இயலபாகவே எல்லாம் உணர்ந்திருப்பதும் இறையின் எண்குணங்களில் இரண்டாம்;
ஆதலினால் இரண்டும் அணைந்தாலும் ஒன்றாகாது – ஆனபடியினால் இவ்வகை இயல்புகளையுடைய இரண்டும் சேர்ந்தாலும் அவை ஒன்றாகா;
அனன்னியமாக இருக்கும் – சிவன் சீவன் ஆகிய இரண்டும் இரண்டு என்னும் அன்னியத் தன்மை அற்று ஒன்றாக இருக்கும்.

சங்கர வேதாந்தம், சைவ சித்தாந்தம் ஆகிய இரண்டுமே முத்தி நிலையில் ஆன்மா இறையுடன் அத்துவிதமாக நிற்கும் என்றே கூறுகின்றன. ஆனால் அத்துவித நிலைக்கு அவை கொடுக்கும் விளக்கம்தான் மாறுபடுகின்றது. சங்கர வேதாந்தம் கூறும் அத்துவிதத்தின் இன்மைப்பொருள் விளக்கத்தைக் கேவல அத்துவிதம் என்பர். கேவலம் என்றால் தனித்து இருத்தல் என்பது பொருள். பிரம்மம் ஒன்றே; ஆன்மா என்று வேறு எதுவும் முத்தி நிலையில் இல்லை என்று கூறுவதால் இதை இவ்வாறு அழைப்பர்.
சைவ சித்தாந்தம் கூறும் அத்துவிதத்தின் அன்மைப்பொருள் விளக்கத்தை சுத்த அத்துவிதம் என்பர். இதை pure advaita என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தல் தவறு. இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பு Advaita as it is என்பது ஆகும். இதையே தாயுமானாரும் “ புனிதம் எனும் அத்துவித” என்று பாடியுள்ளார்.
God and soul are metaphysically distinct; but experimentally one by union.