ராஜாங்கத்து அமர்ந்த சைவம்,
அதன் சிறு தெய்வங்கள், பெருந்தெய்வம்
சைவ சித்தாந்த பீடம், கனடா
www.knowingourroots.com
Edited by Eswaran Selvaratnam

எந்தத் தெய்வமும் அந்த தெய்வம் தான் எண்ணிப் பார்க்கையிலே
அது சிறியவராவதும் பெரியராவதும் நாம் பண்ணும் பூசையிலே!.

நாம் எல்லோரும் பூசை தான் செய்கின்றோம். அவரவர் அறிவுக்கு அவரவர் மெய்யென்று காணும் கடவுளை அவரவர் அறிந்த வழியில் பூசை செய்கின்றோம்.

சிலருக்கு காசேதான் கடவுள்; சிலருக்கு கல்வியே கடவுள்; சிலருக்கு கலைதான் கடவுள்; சிலருக்கு காமமே கடவுள்; சிலருக்கு தாம் சார்ந்த சமூகமே கடவுள்; சிலருக்குத் தமது தேசமே தெய்வம்; ,சிலருக்கு குடும்பமே கோவில்; சிலருக்கு கணவனே கண்கண்ட தெய்வம்; சிலருக்கு காதல் செய்யும் மனைவியே சக்தி; சிலருக்குச் செய்யும் தொழிலே தெய்வம்; சிலருக்கு அடியார் பணியே அரன் பணி; சிலருக்கு மக்கள் சேவையே மகேசன் சேவை; சிலருக்குத் தாம் பெற்ற குழந்தைகளே தெய்வம்; சிலருக்கு குருவே சிவம்; சிலருக்கு அன்பே கடவுள்; சிலருக்கு மண் தெய்வம் , சிலருக்கு மரம் தெய்வம்; சிலருக்கு மலை தெய்வம்; சிலருக்கு மனிதன் தெய்வம்; சிலருக்கு இயற்கையே கடவுள்; சிலருக்கு சூரியனே வணங்கும் கடவுள்; பசித்தவனுக்கு உணவே தெய்வம், பதவியில் இருப்பவனுக்கு அதிகாரமே கடவுள்.

மனிதர் மட்டுமல்ல ஈ ,எறும்பு ,காக்கை ,குருவி ,நாய் ,பூனைகளும் கூட இந்த பூசை தான் செய்கின்றன. இத்தனை பூசைகளுக்கும் கடவுள் ஒருவரே. அவரவர் நிலைக்கு ஏற்ப அவரவர் செய்யும் பூசைகளை அவரவர் மெய்மை நிலை அறிந்து ஏற்பதும் பலன் தருவதும் ஒரே கடவுளே.
நாம் அற்ப நோக்கங்களுக்காகச் செய்யும் பூசைகளுக்கு சிறு தெய்வமாக இருப்பதும் இந்த கடவுளே. எமது அறிவு வளர வளர, நோக்கங்கள் விசாலமாக ஆக எம் ஒவ்வொருவருடனும் என்றும் இணைபிரியாது எம் அறிவுக்கு அளவாக அமைந்து வளர்வதும் இந்த கடவுளே.
“என் அறிவுக்கு அளவான அதிசயமே”
                                                                               – அபிராமி அந்தாதி

 

படம் – பலபிறவிகளின் அனுபவத்தினூடாகவோ அல்லது படிப்பறிவினூடாகவோ அல்லது வாழ்க்கையில் ஒவ்வொன்றாக கடந்தோ ஒவ்வொருவரும் இயல்பாகவே ஒவ்வொரு படி நிலைக்கு வருகின்றோம்.

இறுதியில் நாம் ஆன்ம விடுதலை என்னும் மோட்சத்தை நாடும் போது அந்நிலையை தருகின்ற பூரணமான பெருந்தெய்வமாக, மாதேவனாக, மகாதேவனாக, சர்வேஸ்வரனாக, பரமேஸ்வரனாக வருவதும் அந்தக் கடவுளே. இந்த நிலைக்கு வந்த பின்னர் அற்ப நோக்கங்களுக்காகச் செய்யும் சிறுதெய்வ வழிபாடுகளில் நமக்கு நாட்டம் இல்லாது போகின்றது.
“ வீணே பலிகவர் தெய்வங்கள் பாற்சென்று மிக்கவன்பு பூணேன்”
                                                                                                  – அபிராமி அந்தாதி

சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம்
சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்
                                                                                      – திருநாவுக்கரசர் தேவாரம்

சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை
                                                                                        – திருமந்திரம்

நமது பூசை வழிபாடுகளும் அவற்றின் நோக்கங்களும் புரிதல்களும் சிறியனவாக இருக்கும் போது எந்த பெருந் தெய்வத்தை வழிபட்டாலும் அது சிறு தெய்வமே. எந்த சிறு தெய்வத்தையும், உணர்வற்ற மரத்தையோ, கல்லையோ, மண்ணையோ கூட உயர்ந்த நோக்குடனும் பரந்த புரிதலுடனும் பூசிக்கும்போது அதுவே பெருந்தெய்வமாகி விடுகிறது.

ராமகிருஷ்ணர் – பெரும்தெய்வமாக காளி

 

அற்ப தேவைகளுக்காக வழிபடும்போது சிறுதெய்வமாக காளி

இதுவே கல்லையும், மண்ணையும் கடவுளாக்கி வணங்கும் எமது விக்கிரக வழிபாட்டின் அடிப்படை. இதுவே சைவமானது உலகாயதம் என்னும் நாத்திகம் உட்பட அனைத்து உலகின் கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்காலச் சமயங்கள், தத்துவங்கள் அனைத்தையும் தனது காவலரண்களாகவும், தன்னை வந்தடையும் ஏணிப்படிகளாகவும் வைத்துப் பேணும் பொறிமுறை.

”முத்தியை முற்ற வைத்தார் முறைமுறை நெறிகள் வைத்தார்”
                                                                                                      – திருநாவுக்கரசர் தேவாரம்

“பேணித் தொழுபவர் பொன்னுலகு ஆள்ழப் பிறங்கருளால்
ஏணிப் படிநெறி இட்டுக் கொடுத்து”
                                                                                                            – திருநாவுக்கரசர் தேவாரம்

”குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்”

“இங்கு நாம் சிலருக்கு பூசனை இயற்றினால் இவர்களோ
வந்து அங்கு வான் தருவர்? அன்றேல் அத்தெய்வம் அத்தனைக் காண்;
எங்கும் வாழ் தெய்வமெல்லாம் இறைவன் ஆணையினால் நிற்பது “
                                                                                                          – சிவஞானசித்தியார்

ஏகம் சத் விப்ரதீம் பஹூதா வதந்தீம்
உள்ளது ஒன்றே; அதுவே பலவாறாகப் பேசப்படுகின்றது.
                                                                                                              – இருக்கு வேதம்

May Who is the Brahman of the Hindoos, Ahurat Mazda of the Zoroastians, Jehowa of the Jews, The Father in Heaven of the Christians give strength to you.
இந்துக்களின் பிரம்மான், சொரஸ்திருயர்களின் அஹூரத் மஸ்டா, யூதர்களின் யெஹோவா, கிறிஸ்தவர்களின் பரலோகத்தில் இருக்கின்ற பிதா என்று பலவாறாக அழைக்கப்படுகின்ற ஒரே இறை உங்களைப் பலப்படுத்தட்டும்.
– சுவாமி விவேகானந்தரின் அமெரிக்கப் பேருரை

விரிவிலா அறிவிலார்கள் வேறொரு சமயம் செய்து
எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும்.
– 4ம் திருமுறை, திருநாவுக்கரசர் தேவாரம்

ஆரொருவர் உள்குவார் உள்ளத்துள்ளே
அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்.
– 4ம் திருமுறை, திருநாவுக்கரசர் தேவாரம்

அருவமும் உருவும் ஆனாய் என்றும்,
உளனே என்றும், இலனே என்றும்,
தளரான் என்றும், தளர்வோன் என்றும்,
ஆதி என்றும், அசோகினன் என்றும்,
போதியிற் பொலிந்த புராணன் என்றும்,
இன்னவை முதலாத் தாமறி அளவையின்
மன்னிய நூலின் பன்மையில் மயங்கிப்,
பிணங்கி மாந்தர் பெற்றிமை நோக்கி,
அணங்கிய அவ்வவர்க்கு அவ்வையாகி,
அவை பற்றிய பளிங்கு போலும்
ஒற்றி மாநகர் உடையோய் உருவே.

(அசோகினன் – சமணரின் அருகதேவர்,
போதியிற் பொலிந்த புராணன் – கௌதம புத்தர்)
– 11ம் திருமுறை, பட்டினத்துப் பிள்ளையார் அருளிய – திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது 12-16

எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்
அவ்வுருவாய்த் தோன்றி அருள் கொடுப்பன் – எவ்வுருவும்
தானேயாய் நின்றளிப்பான்….
– 11ம் திருமுறை, சேரமான் பெருமாள் அருளிய
திருக்கைலாய ஞான உலா

இதுவே பொருள் என்று எவரெவர் கூறினும் ஏற்பது எதுவோ
அதுவே பொருள் என்று அறிந்து கொண்டேன்.
– குமரகுருபரர் திருவாரூர் நான்மணி மாலை – 23

இவரே முதல்தேவர் எல்லார்க்கும் மிக்கார்
இவர் அல்லர் என்றிருக்க வேண்டா கவராதே
காதலித்தின் றேத்துதிரேல் காளத்தி யாள்வார்நீர்
ஆதரித்த தெய்வமே யாம்.
– 11ம் திருமுறை, நக்கீரர் அருளிய
கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி

இதனாலேயே சைவ மரபில் நிற்கும் சிவாச்சாரியார்கள் வேதாந்தம், வைணவம் முதலான புறச்சமயிகளுக்கு மட்டுமல்ல பௌத்தம் போன்ற புறப்புறச்சமயிகளுக்கும் அவர்களின் தெய்வ மூர்த்தங்கள், ஆலயங்கள், அடியார் மூர்த்தங்களின் பிரதிஷ்டை முதலானவற்றைச் செய்து கொடுப்பதற்கும் உரித்துடையவர்கள் எனச் சிவாகமங்கள் விதித்திருக்கின்றன போலும்.