கும்பாபிஷேக யாக சாலை விளக்கம்


கும்பாபிஷேக யாக சாலை விளக்கம்
சைவ சித்தாந்த பீடம், கனடா
www.knowingourroots.com
Edited by Eswaran Selvaratnam

ஆலய கும்பாபிஷேகங்களில் வண்ண அலங்காரங்களுடன் யாகசாலை என்னும் பந்தல் அமைக்கப்பட்டு அங்கு பிரதான கிரியைகள் நடைபெறுவதைப் பார்த்திருப்பீர்கள். இந்த யாகசாலையின் விளக்கம் என்ன?

அண்டவியல் பற்றிய விளக்கம்

நாம் வாழும் இந்தப் பூமி சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றது. நமது சூரிய குடும்பத்தில் இவ்வாறு எட்டு கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. இது எமது சூரிய குடும்பம் ஆகும்.

இது போல் ஆயிரக் கணக்கான சூரிய குடும்பங்களைக் கொண்டது ஆகாயகங்கை என்னு பால்வீதி கலக்ஸி அல்லது அண்டத்தொகுதி. இவற்றுள் 3200 கிரகத் தொகுதிகள் இன்றுவரை அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஆகாயகங்கை என்னும் பால்வீதி அண்டத்தையே பூலோகம் என்று எமது சமயம் கூறுகின்றது. இந்தச் சூரிய குடும்பங்கள் எல்லாம் 600 கிலோமீட்டர்/ செக்கன் எனும் வேகத்தில் இந்த பால்வீதியின் மையத்தைச் சுற்றி வருகின்றன. இந்த மைய அச்சை மேரு என்பர். எமது சூரிய குடும்பம் இவ்வாறு பால்வீதியில் ஒரு சுற்று சுற்றிவர எடுக்கும் காலம் 245 மில்லியன் வருடங்கள் ஆகும்.

பால்வீதி அல்லது ஆகாயகங்கை கலக்ஸி போல் பல கோடி அண்டத்தொகுதிகள் இதற்கு அப்பாலும் உள்ளன என்று வானியல் விஞ்ஞானம் கூறுகின்றது. இதுவரை இவ்வாறு இரண்டு ட்ரில்லியன் அண்டத்தொகுதிகள் அவதானிக்கக்கூடியதாக உள்ளதாக வானியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனையே

” அங்கண் மாஞாலத்துக்கோர் ஆயிரங் கோடி அண்டம்”

என்று கந்தபுராணம் கூறுகின்றது. இதனையே

“நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன”

என்று திருவாசகம் கூறுகின்றது. இந்த அண்டங்கள் யாவும் சுற்றிவருகின்ற மைய அச்சையே மஹாமேரு என்கின்றனர்.

இந்த அண்டங்களில் எமது பௌதிக விஞ்ஞான விதிகளுக்கு அப்பாற்பட்ட மூலகங்கள்/ தத்துவங்களினால் ஆன அண்டங்களும் உள்ளன. இவற்றின் இயற்கை விதிகளும் எமது இயற்கையின் விதிகளில் இருந்து வேறுபட்டவை. இந்த இயற்கையையும், அங்கு நடப்பவற்றையும் நமது இயற்கைப் பௌதிக விதிகளுக்கு உட்பட்ட நமது கருவிகளினாலும், கணிப்புகளினாலும், ஆராய்ச்சிகளினாலும் கண்டறியவோ, எதிர்வு கூறவோ முடியாது. இன்றைய விஞ்ஞானமும் இதை ஏற்றுக்கொண்டுள்ளது. 2018 இல் காலமான ஸ்டீபன் ஹோக்கிங்ஸ் என்னும் விஞ்ஞானி இதனையே “அங்கு நான்கு கைகளுடன் கூடிய மனிதர்களும் இருக்கலாம்; அவர்கள் நைதரசனைச் சுவாசித்துகொண்டும், பாதரசத்தைப் பருகிக்கொண்டும் இருக்கலாம்” என்று தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் கூறியிருந்தார்.

மூவகை உலகங்கள்

  • சுத்தமாயா உலகங்கள் (Pure Cosmic Worlds)
  • அசுத்த மாயா உலகங்கள் (Impure Cosmic Worlds)
  • பிரகிருதி மாயா உலகங்கள் (Prakrithi Cosmic Worlds)

இந்த வேறுபட்ட இயற்கைகளினாலான அண்டத்தொகுதிகளை மூன்று பெரும் பிரிவுகள் அல்லது மண்டலங்களாகச் சொல்லுகின்றது எமது சமயம். நாம் இருக்கும் எமது இயற்கையுடன் கூடிய அண்டத்தொகுதிகள் யாவும் பிரகிருதி மாயா உலகங்கள் ஆகும். எமது விஞ்ஞானம் ஆராய்வதும், வெளிப்படுத்துவதும், நாம் கற்பதும்  இந்த அண்டங்களையும் அவற்றின் இயற்கையுமே.

இதற்கு அடுத்த மண்டலம் அசுத்த மாயா உலகம். இதன் அண்டத்தொகுதிகள், அவற்றின் இருப்புகள், இயற்கை விதிகள் நமது பிரகிருதி அறிவு, ஆராய்ச்சி, கணிப்பு, எதிர்வு கூறல்களுக்கு அப்பாற்பட்டவை.

இதற்கும் அடுத்த மண்டலம் சுத்தமாயா உலகம். இதன் இயற்கையும் முன்னைய பிரகிருதி மாயை மற்றும் அசுத்த மாயை உலக இயற்கைகளுக்கும் விதிகளுக்கும், அறிவு, ஆராய்ச்சிகளுக்கும் அப்பாற்பட்டது.

உண்மையில் இந்த மூன்று வகை அண்ட மண்டலங்களும் ஒன்றுக்கு ஒன்று அப்பால் இருப்பதுபோல் தோன்றினாலும் இவை ஒன்றை ஒன்று ஊடறுத்தும், ஊடுருவியும் உள்ளன; பயணிக்கின்றன. ஆயினும் அவற்றின் வேறுபட்ட இயற்கையினால் நமது அறிவுக்கும், புலனுக்கும், ஆராய்ச்சிக்கும் அது எட்டுவதில்லை.

சுத்தமாயா உலகமானது அதனிலும் கீழ்ப்பட்ட அசுத்தமாயா உலகையும், பிரகிருதிமாயா உலகையும் ஊடுருவியும், வியாபித்தும், அவற்றுக்கு அப்பாலாயும் இருக்கும்; பயணிக்கும்.

இதேபோல் அசுத்தமாயா உலகம் அதனிலும் கீழ்ப்பட்ட பிரகிருதி மாயா உலகை ஊடுருவியும், வியாபித்தும், அவற்றுக்கு அப்பாலாயும் இருக்கும்; பயணிக்கும்.

ஆயினும் அவற்றின் வேறுபட்ட இயற்கையினால் நமது அறிவுக்கும், புலனுக்கும், ஆராய்ச்சிக்கும் அவை எட்டுவதில்லை.

ஆனாலும் அசுத்த மாயா மண்டல அண்டங்களுக்கு நமது பிரகிருதி மாயா உலகங்களின் இருப்பும் இயற்கையும் புலனாகும்; ஆனால் சுத்த மாயா மண்டல இருப்புகள் புலனாகா.

சுத்த மாயா மண்டல அண்டங்களுக்கு அசுத்த மாயா மற்றும் பிரகிருதி மாயா மண்டல அண்டங்கள், அவற்றின் இயற்கைகள், இருப்புகள் யாவும் புலனாகும்.  

பரலோகம் (இறையின் இருப்பு)

இந்த மூன்று மண்டல அண்டங்களுக்கும் அவற்றின் இயற்கை இருப்புகளுக்கும் அப்பாற்பட்டதே இறை. இறை இந்த மூவகை உலகங்களையும் வியாபித்தும் ஊடுருவியும் அதே சமயம் இவற்றுக்கு அப்பாலுக்கு அப்பாலாயும் இருப்பது. மூவுலகங்களுக்கும் அப்பாலான அதன் இருப்பை பரலோகம் என்பர். அது இயற்கை மூலகங்களினாலோ விதிகளினாலோ ஆனது அல்ல. அது இறையின் தூய சக்தியினால் ஆனது. இதுவே பரடைஸ் என்று ஈரானிய, கிரேக்க அங்கில மொழிகளில் வந்தது.

பரலோகம் என்பது எங்கோ தூரத்தில் இருக்கும் ஒரு இடம் அல்ல; அது இங்கும், அங்கும், அதற்கப்பாலும், எங்கும் உள்ள இறையின் இருப்பு வியாபகம் ஆகும். இது மேற்கூறப்பட்ட மூவுலகங்களையும் ஊடுருவியும், வியாபித்தும், அவற்றுக்கு அப்பாலுக்கு அப்பாலாயும் இருக்கின்றது. இந்த இறையையே நாம் பரசிவம் என்றும், பராசக்தி என்றும், பரப்பிரம்மம் என்றும், பரமாத்மா என்றும், பரம்பொருள் என்றும், பரலோகத்தில் இருக்கும் பிதா என்றும், பரஞ்சோதி என்றும், பரங்கருணை என்றும், பரமானந்தம் என்றும் பலவாறாகக் கூறுகின்றோம்.

இந்த இறையை அடைவதையே பரகதி என்றும், பர முத்தி என்றும், பரமபதம் என்றும் சொல்லுகின்றோம். பரலோகத்தை இறைவனின் வீடு என்று சொல்லலாம். இதனை அடைவதை வீடுபேறு என்பர்.

இறையின் சொரூப நிலை(Real Form)

நாம் எமது வீட்டில் இயல்பாக சுயமாக சுய உடையில் சாவதானமாக இருப்பதைப்போல் இறை தனது வீட்டில் தனது இயல்பு நிலையில் சுயமாக இயல்பாக இருப்பதை சைவம் இறையின் சொருப நிலை (Real Form)என்கின்றது. சொரூபம் என்றால் சுய ரூபம் என்று பொருள்.

எமது வீட்டில் இயல்பாக சாவதானமாக ஒரு லுங்கியுடனோ துண்டுடனோ இருக்கும் நாம் வேலைக்காக அலுவலகத்துக்கு அல்லது வேலைத்தலத்துக்குச் செல்லும்போது அதற்கான ஆடை அணிந்து அதற்குரிய கருவி கரணங்களுடன் கிளம்பி வேலைத்தலத்துக்குச் செல்கின்றோம்.

இறையின் தடத்த நிலை(official Form)

பரலோகத்தில் தனது இயல்பு நிலையில் சுயமாக சொரூப நிலையில் இருக்கும் இறையும் இவ்வாறே தனது வேலைக்காக தனது ஆடை, அணி, அலங்காரங்களுடன் அலுவலகத்துக்கு வருகின்றார். இது இறையின் தடத்த நிலை (Official Form) என்கின்றோம்.

அவருடைய வேலை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்கள். இவற்றை இவரை விட வேறு யாராலும் செய்யமுடியாது. ஆனாலும் இவர் அதிகாரம் கொடுத்து மற்றவரைகொண்டு செய்விக்கலாம். இறை ஐந்தொழில்கள் ஆற்றிச் செயற்படும் அலுவலகமே சுத்தமாயா உலகம். சுத்தமாயா உலகம் இறையின் தலைமைச் செயலகம் ஆகும்.

இறையின் தலமைச் செயலகமாகிய சுத்த மாயா உலகத்திலே அவர் தொழிலாற்றும் ஐந்து திணைக்களங்கள் (Departments) உள. ஐந்து திணைக்களங்களுக்கும் அவரே இயக்குனர். அங்கெல்லாம் அவரின் கீழ் பணி செய்யும் பலர் உளர்.

  1. நாதம் எனும் சுத்த மாயா தத்துவத்தைத் தளமாகக்கொண்டு இயங்கும் திணைக்களத்தின் இயக்குனராகச் செயற்படும் பரசிவத்தின் தொழில் வடிவம் நாதம் அல்லது அபரசிவன் ஆகும். இது இறையின் அருவ வடிவம்.
  2. பிந்து என்னும் சுத்த மாயா தத்துவத்தைத் தளமாகக்கொண்டு இயங்கும் திணைக்களத்தின் இயக்குனராகச் செயற்படும் பரசிவத்தின் தொழில் வடிவம் விந்து அல்லது அபரசக்தி ஆகும்.  இதுவும் இறையின் அருவ வடிவம் ஆகும்.
  3. சாதாக்கியம் என்னும் சுத்த மாயா தத்துவத்தைத் தளமாகக்கொண்டு இயங்கும் திணைக்களத்தின் இயக்குனராகச் செயற்படும் பரசிவத்தின் தொழில் வடிவம் சதாசிவன் ஆகும். இந்த திணைக்களத்தில் இவரின் கீழ் பல பக்குவான்மாக்களும் சதாசிவர்களாக உள்ளனர். அவர்கள் அணுசதாசிவர் எனப்படுவர். அணு என்றால் ஆன்மா என்று பொருள்.

சாதாக்கிய தத்துவத்தில் சிவத்துக்கு அருவுருவ வடிவம். இதுவே சிவலிங்கம் ஆகும். இதுவே எமது கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டாத இறை எமது அன்புக்கும் பூசனைக்கும் புலப்படக்கூடிய மாக வெளிப்படுத்தும் முதல் வெளிப்பாடு அல்லது வடிவம் ஆகும். இதன் பின்னரே ஏனைய வடிவங்களின் வெளிப்பாடுகள் எல்லாம்.

இதுவே சிவாலயங்களில் கர்ப்பக்கிருஹ மூலமூர்த்தியாக இருக்கும் மூர்த்தம். முன் தோன்றிய மூலமூர்த்தமாகிய சிவலிங்கத்தைப் பின் தோன்றிய மூர்த்திவடிவங்களுக்குப் பரிவாரமாக ஆலயங்களில் வைக்கமுடியாது. அப்படி வைத்தல் ஆகம விதிகளுக்கு விரோதமானது.  

  1. மாகேசுரம் அல்லது ஈசுரம் என்னும் சுத்த மாயா தத்துவத்தைத் தளமாகக்கொண்டு இயங்கும் திணைக்களத்தின் இயக்குனராகச் செயற்படும் பரசிவத்தின் தொழில் வடிவம் மகேசுவரன் ஆகும்.

இந்த திணைக்களத்தில் உயர் ஆன்மாக்களாகிய அனந்தேசுவரர், சூக்குமர், சிவோத்தமர், ஏகநேத்திரர், ஏகருத்திரர், திரிமூர்த்தி, ஸ்ரீகண்டர், சிகண்டி எனும் அட்ட வித்தியேசுவரர்கள் தமது வாமை, ஜேஷ்டை, ரௌத்ரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரதமனி, ஸர்வபூதமனி ஆகிய தத்தம் சக்திகளுடனும்,

ஸப்த கோடி ( ஏழு கோடி) மஹா மந்திரேசுவரர்களுடனும்,

இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வாயு, வர்ணன், குபேரன், ஈசானன் ஆகிய அட்டதிக்குப் பாலகர்களுடனும்,

நந்தி முதலான கணநாதர்களுடனும்  தொழிலாற்றுகின்றார்கள். இங்குள்ள வித்தியேஸ்வரர்களின் தலைவராக உள்ள அனந்தேச்வரர் அசுத்த மாயா உலகில் உள்ள ஸ்ரீகண்டருத்திரரைச் செயற்படுத்துபவர். ஸ்ரீகண்டருத்திரரின் உபதேச குருவும் இவரே.

( அசுத்த மாயா உலகில் வதியும் இந்த ஸ்ரீகண்டருத்திரரே எமது பிரகிருதி மாயா உலகில் உள்ள மும்மூர்த்திகளான பிரம்ம, விஷ்ணு, உருத்திரர்களை அதிகாரம் கொடுத்துச் செயற்படுத்துபவர். இந்த பிரம்ம, விஷ்ணு, உருத்திரர்களும் நம்மைப் போன்ற உயிர்களே. ஆயினும் தாம் தமது முந்திய பிறவிகளில் செய்த புண்ணியங்களின் பலனால் இப்பதவிகளை அடைந்தவர்கள். ஆதாலால் இவர்களை அணுபட்ச பிரம்ம, விஷ்ணு, உருத்திரர்கள் என்பர். அணு என்றால் ஆன்மா என்று பொருள். பிரகிருதி மாயையின் முக்குணங்களாகிய தமோ, இரஜோ, சத்துவ குணங்களின் முக்குண தோஷம் இவர்களுக்கும் உள்ளது.  ஆதலால் இவர்களை குணிப்பிரம்மா, குணிவிஷ்ணு, குணிருத்திரன் என்றும் அழைப்பர். )

  1. சுத்தவித்தை எனும் சுத்த மாயா தத்துவத்தைத் தளமாகக்கொண்டு இயங்கும் திணைக்களத்தில் மூன்று உப அலுவலகங்கள் உள்ளன. இவற்றின் இயக்குனராகச் செயற்படும் பரசிவம் இம்மூன்று அலுவலகங்களிலும் தொழிலாற்றும் செயல் வடிவங்கள் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் என்னும் மூன்றாம்.

சம்பு பட்சம்

சுத்தவித்தையில் பரசிவம் பிரமனாக நின்று படைத்தலையும், விஷ்ணுவாக நின்று காத்தலையும், உருத்திரனாக நின்று அழித்தலையும் செய்கின்றது.  சாதாக்கிய தத்துவத்தில் சதாசிவனாக நின்று அருளலையும், மாகேசுர தத்துவத்தில் மகேசுவரனாக நின்று மறைத்தலையும் செய்கின்றான்.

இவ்வாறு சம்புவாகிய பரசிவத்தின் வெவ்வேறு வடிவங்களே ஐந்தொழில்களையும் செய்கின்றன. ஆதலால் இவ்வடிவங்களை சம்புபட்சம் என்பர். இவர்கள் ஸ்ரீகண்டருத்திரரால் அதிகாரம் கொடுத்து அதிட்டிக்கப்பெறுப் பிரகிருதிமாயையில் செயற்படும் அணுபட்ச பிரம்ம, விஷ்ணு, உருத்திரர்களைப் போன்ற ஆன்மாக்கள் அல்லர். இவர்கள் முழுமுதற் கடவுளான பரசிவத்தின் வடிவங்கள்.  இவர்களது இவ்வுருவங்கள் மாயையினால் ஆனவை அல்ல; யாவும் இறையின் தூய சக்தியினால் ஆனவை.

பரசிவமானது பராசக்தியினால் எடுக்கும் இவ்வடிவங்களை நவந்தருபேதம் எனக் கூறுவர்.

சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், திகழும் ஈசன், 
உவந்தருள் உருத்திரன்தான், மால்,அயன் ஒன்றின் ஒன்றாய்ப் 
பவந்தரும் அருவ நாலு, இங்கு உருவ நாலு, உபயம் ஒன்றாய் 
நவந்தரு பேதம் ஏக நாதனே நடிப்பன் என்பர்

                                                      – சிவஞானசித்தியார் 164.

அணு பட்சம்

சுத்தமாயா உலகிலுள்ள அனந்தேசுவரர் உள்ளிட்ட அட்ட வித்தியேசுவரர்கள், சப்தகோடி மஹாமந்திரேசுவரர்கள், அட்ட திக்குப் பாலகர்கள், நந்தி முதலான கணநாதர்கள் முதலான உயர் ஆன்மாக்களின் சரீரமானது பிந்து முதலிய சுத்த மாயா தத்துவங்கள் அல்லது மூலகங்களினால் ஆன சுத்த மாயா சரீரங்கள் ஆகும். இதை வைந்தவ சரீரம் என்பர். 

இந்த சுத்த மாயா உலகில் பணியாற்ற அடிப்படைத்தகுதி தேவை. ஆணவம், கர்மா, மாயை ஆகிய மும்மல தோஷங்களிலே, தமது முன்னைய பிறவிகளிலே கர்மா, மாயை எனும் இரு மலங்களும் நீங்கிய ஒரு மலத்தாராகிய விஞ்ஞான கல ஆன்மாக்கள் மட்டுமே இங்கு வதியவும், தொழிலாற்றவும் தகுதி உடையவர்கள் ஆவர். இவர்கள் யாவரும் ஆன்மாக்களே ஆதலால் இவர்களையும் அணு பட்சம் என்பர்.

தொகுப்பு – கும்பாபிஷேக யாக சாலை வடிவமைப்பு.

இப்போது கும்பாபிஷேகத்தின் யாகசாலைக்கு வருவோம். பரலோகம் இறையின் வீடு என்று சொன்னோம். சுத்த மாயா மண்டல அண்டங்கள் இறை தொழிலாற்றும் அலுவலகம் என்று சொன்னோம். கும்பாபிஷேகத்தில் அமைக்கப்படும் யாகசாலை இறை செயற்படும் அலுவலகமான சுத்தமாயா உலகத்தின் வடிவமைப்பு ஆகும்.

இறையும் இறையுடன் தொழிலாற்றும் ஏனைய தெய்வங்களும் வந்து செயலாற்றும் ஒரு தற்காலிக நடமாடும் அலுவலகமே யாகசாலை ஆகும். இங்கு கடமையாற்ற அடிப்படைத் தகுதி பெற்ற ஒரு மலத்தாராகிய விஞ்ஞானகல ஆன்மாக்களுக்கு (தெய்வங்களுக்கு) மட்டுமே இங்கு இடம் உண்டு.

           

கீழான அசுத்த  மாயையில் இருந்து செயற்படும் ஸ்ரீகண்ட ருத்திரர் போன்றோருக்கும், பிரகிருதி மாயையில் நின்று தொழிற்படும் அணுப் பிரம்மா, அணு விஷ்ணு, அவரின் தசாவதாரங்கள், அணு உருத்திரன் ஆகியோருக்கும் இங்கு யாகசாலையில் இடம் இல்லை.

அச்சுவேலி குமாரசாமிக் குருக்களின் பின்வரும் கூற்றை இங்கு நினைவு கூர்வது பொருந்தும்.

“பிரம விட்டுணுக்கள், இந்திராதி தேவர்கள் யாவரும் அசுத்தமாயா புவனங்களில் இருப்பவர்களும், சுத்த வித்தியா தத்துவ வாசிகளும் என இருதிறப்படுவர். சுத்த வித்தியா தத்துவத்தில், நந்தி முதலிய கணநாதர்கள் எண்மர்களும், பிரம விட்டுணுக்களும், இந்திராதி லோகபாலகர்களும் இருப்பார்கள். சுத்த வித்தை முதலிய தத்துவங்களில் இருப்பவர்களுடைய சரீரம் வைந்தவம் ஆகையாலும், மலபரிபாக முற்றுப் பரசிவனருளால் பதம் பெற்றவர் ஆதலானும், பிறப்பு இறப்புகள் நீங்கி ஆண்டு நின்ற படியே சிவ தரிசனத்தால் ஆனந்த விளக்கத்தை அடைபவர் ஆகலானும், இவர்களே சிவபூசை யாகாதி கிரியைகளில் பூசிக்கப்படும் பெருமை பெற்றவர்கள் ஆவார்கள் என்பது சிவாகம நூல் துணிபாகும். அசுத்த மாயாதத்துவ வாசிகளாகிய பிரமவிட்டுணு இந்திரன் முதலிய தேவர்களது சரீரம் பிரகிருதி சம்பந்த மாகலானும், முன் பரமசிவன் அனுக்கிரகம் இல்லாமையாலும், அசுத்ததத்துவம் முப்பத்தொன்றையும் மனசால் கடந்து யாகசாலையை அடைந்து பூசித்து வணங்குவதினாலும், அசுத்த புவன வாசிகளான பிரம விட்டுணு முதலியோர் சுத்த வித்தியா தத்துவமயமான யாகசாலையில் பூசிக்கப்படத் தக்கவர்கள் அல்லர்.

யாகசாலை தெய்வங்களும் வழிபாடுகளும்

பரமுத்தி கிடைத்து பரலோகம் சார்ந்து இறையுடன் இரண்டறக் கலந்த சம்பந்தர், அப்பர், சுந்தரர் போன்ற நாயன்மார்களும் இங்கு தொழிலுக்காகவோ, விண்ணப்பிக்கவோ வரவேண்டிய தேவை இல்லை. தஞ்சைப் பெரியகோயிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் நாயன்மார்களின் திருவுருவமும், இராஜராஜசோழனின் திருவுருவமும் இடம் பெற வேண்டும் என்று சர்ச்சை செய்து வழக்கு தொடுத்து நிறைவேற்றியதை இங்கு நினைவு கூரலாம்.

இந்த யாகசாலையிலே ஓம குண்டங்களிலும், கும்பங்களிலும், மந்திரங்களிலும் அந்தந்த திக்குகளில் அந்தந்த இடங்களில் அந்தந்த தெய்வங்கள் அழைக்கப்பட்டு, வரவேற்கப்பட்டு, அமர்த்தப்பட்டு, விண்ணப்பம் செய்யப்படுகின்றது. பிரதான ஓம குண்டத்திலும், சிவாசனத்தின் மீது தாபிக்கப்பட்ட பிரதான கும்பத்திலும் பரம்பொருளாகிய இறை அழைக்கப்பட்டு, வரவேற்கப்பட்டு, அமர்த்தப்பட்டு இந்த தற்காலிக நடமாடும் அலுவலகத்தின் ஒரு கிளையாக ஆலயத்தில் தொடர்ந்து செயற்படும்படி பிரார்த்தித்து விண்ணப்பம் செய்யப்படுகின்றது. சிவாசனம் என்பது முப்பத்தாறு தத்துவங்களால் ஆன மூவுலகங்களையும், அவ்வவற்றின் இருப்புகளையும், அங்கங்கு வதியும் தெய்வங்களையும் கொண்டதாகும்.

இந்த சிவாசனத்தில் எழுந்தருளி அதன் மேல் வீற்றிருக்கும் சிவமானது சிவாசனத்தின் கூறுகளான முப்பத்தாறு தத்துவங்களுக்கும், அவற்றாலான மூவுலகங்களுக்கும், அவற்றிலுள்ள அனைத்து இருப்புகளுக்கும், அங்கு இருக்கின்ற, இருந்த, இனிமேல் வரப்போகின்ற தெய்வங்களுக்கும், சமயங்களுக்கும் எல்லாம் அதீதமான, மேலான, அப்பாற்பட்ட தத்துவ அதீனனான இறையாகும். தத்துவங்களுக்க்கு அப்பாற்பட்ட தத்துவ அதீனனான இந்த இறையை தத்துவாதீதாயை நமஹா, தத்துவாசனாயை நமஹா என்றெல்லாம் நாமாவளிகள் போற்றுகின்றன.

இந்த இறையினதும் அவரின் கீழ் பணியாற்றும் தெய்வங்களினதும்  சான்னித்தியத்தை இருப்பை உறுதிப்படுத்தி அவர்களின் தொடர்ந்தேர்ச்சியான இருப்புக்கும் அலுவலகச் செயற்பாட்டுக்கும் உறுதி செய்வதே கும்பாபிஷேகத்தின் பின்னான மண்டலாபிஷேகமும், தொடர்ந்து வரும் நமது ஆலயங்களின் நித்திய, நைமித்திய பூசைகளுமாம். அலுவலகங்களிலே இடையிடையே நாம் மேலதிகாரியிடமுள்ள அவருடைய எமது அன்பை வெளிப்படுத்த நாம் அவருக்குச் செய்யும் பிறந்தநாள் கொண்டாட்டம் போன்றதே ஆலயங்களில் நாம் செய்யும் திருக்கலியாணம் போன்ற விழாக்கள் ஆகும். இடையிடையே அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுச் செய்யும் களவிஜயமே திருவுலா ஆகும்.

இவையெல்லாம் நாம் அங்கு சென்று நமது விண்ணப்பங்களை அங்கு வைத்து வழிபட்டு  இந்த உலகுக்குரிய இக நன்மைகளையும், நாம் இறந்த பின்னர் அந்த உலகின் பர இன்பங்களையும் பெற்று உய்வதற்கே. இறையைத் திருப்திப்படுத்துவதற்கோ அல்லது பிரீதிப்படுத்துவதற்கோ அல்ல.

                                                        திருச்சிற்றம்பலம்