செபமாவது யாது? – மந்திர செபம் – பஞ்சாக்ஷர செபம் – 04

மந்திர செபம் – பஞ்சாக்ஷர செபம் – 04
#மந்திரம் , #செபம் என்பவற்றின் விளக்கம்.

186. #செபமாவது யாது?
தியானிக்கப்படும் பொருளை எதிர்முகமாக்கும் பொருட்டு அதனை உணர்த்தும் மந்திரத்தை உச்சரித்தலாம்.
(எதிர்முகமாக்கும் பொருட்டு = முன் நிறுத்துவதற்கு)

விளக்கக் குறிப்பு: 1.
ஏது மொன்றும் அறிவிலர் ஆயினும்
ஓதி அஞ்செழுத் தும்உணர் வார்கட்குப்
பேதம் இன்றி அவரவர் உள்ளத்தே
மாதுந் தாமும் மகிழ்வர்மாற் பேறரே
– 5ம் திருமுறை, திருநாவுக்கரசர் தேவாரம்

விளக்கக் குறிப்பு: 2.
“உன்னிச் செபிக்க உளத்துள் அமலன்அடி
அன்னிய மும்தாழ்ந்தபல மாம்.”
அமலனாகிய இறைவனுடைய திருவடிகளை மனதிலே உன்னித் தியானித்து செபிக்க. அவ்வாறு தியானிக்காமல் செய்யும் செபம் தாழ்ந்த பலனையே தரும்.
– மறைஞானசம்பந்த தேசிகரின் சைவ சமய நெறி, குறள் 156

விளக்கக் குறிப்பு: 3.
நமவென்னும் நாமத்தை நாவில் ஒடுக்கி
சிவவென்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றப்
பவம்அது தீரும் பரிசும் அதற்றால்
அவமதி தீரும் அறும்பிறப்பு அன்றோ.

சொற்பொருள்:
பவம்- பிறப்பு; அவ மதி – கீழான சிந்தை.
– 10ம் திருமுறை – திருமந்திரம் – 2717-

187. #மந்திரம் என்பதற்குப் பொருள் யாது?
[மந்=நினைப்பவன்; திர=காப்பது]
#நினைப்பவனைக்_காப்பது என்பது பொருள். ஆகவே, மந்திரம் என்னும் பெயர், நினைப்பவனைக் காக்கும் இயல்புடைய வாச்சியமாகிய சிவத்துக்கும் சிவசத்திக்குமே செல்லும்;
ஆயினும், வாச்சியத்துக்கும் வாசகத்துக்கும் பேதம் இல்லாமை பற்றி, உபசாரத்தால் வாசகத்துக்கும் செல்லும்; எனவே, மந்திரம் வாச்சிய மந்திரம், வாசகமந்திரம் என இரு திறப்படும் என்ற படியாயிற்று.

விளக்கக் குறிப்பு:
* வாசகம் – சொற்களுக்கான நேரடிப்பொருள். (word to word meaning )
* வாச்சியம் – குறிக்கப்படும் உண்மைப்பொருள்; (ultimate meaning / truth)
“நிறைமொழி மாந்தர் ஆணையின் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப.”
பூரணமடைந்த மனிதர்களின் சக்தி வாய்ந்த புனித வார்த்தைகளே வேதங்களில் உள்ள மந்திரங்கள் ஆகும்.
– தொல்காப்பியம் 1434ம் சூத்திரம்

படைக்கலமாக வுன்னாமத் தெழுத்தஞ் சென்நாவிற் கொண்டேன்; இடைக்கலமல்லே னெழுபிறப்பும் முனக் காட்செய்கின்றேன்; துடைக்கினும் போகேன்; றொழுது வணங்கித் தூநீறணிந்துன் அடைக்கலங் கண்டா யணி தில்லைச்சிற்றம் பலத்தரனே.
– 4ம் திருமுறை, திருநாவுக்கரசர் தேவாரம்

188. மந்திரசெபம் #எத்தனை_வகைப்படும்?
மானசம், உபாஞ்சு, வாசகம் என மூவகைப்படும்.

189. #மானசமாவது யாது?
நா நுனி உதட்டைத் தீண்டாமல், ஒருமை பொருத்தி மனசினாலே செபித்தலாம்.

விளக்கக் குறிப்பு:
“மானத, மந்தம், உரை என்னஒரு மூன்றாகும்
மானதநெஞ் சில்செபிக்கு மாறு.”
செபமானது மானதம், மந்தம், உரை என மூவகை ஆகும். இவற்றுள் மானதமாவது நாநுனி உதட்டைத் தீண்டாதவாறு மனத்துள் செபித்தலாம்.
சொற்பொருள்: மந்தம் – உபாஞ்சு.
– சிதம்பரம், கண்கட்டி மடம் மறைஞானசம்பந்த தேசிகர் அருளிய சைவசமயநெறி, குறள் 151

190. #உபாஞ்சுவாவது யாது?
தன் செவிக்கு மாத்திரம் கேட்கும்படி, நா நுனி உதட்டைத் தீண்ட மெல்லச் செபித்தலாம். இதற்கு மந்தம் என்றும் பெயர்.

191. #வாசகமாவது யாது?
அருகிலிருக்கும் பிறர் செவிக்கும் கேட்கும்படி செபித்தலாம். இதற்குப் பாஷ்யம் என்றும் பெயர்.

விளக்கக் குறிப்பு:
“மந்தம் தனதுசெவி கேட்கச் சொலும்ஆற்ற
மந்தம் பிறர்செவிக்கும் ஆம்.”
மந்தமாவது தனது செவிக்கு மாத்திரம் கேட்கும்படி நா நுனி உதட்டைத் தீண்ட செபித்தலாம். சொல் என்னும் வாசகமாவது அருகிலிருக்கும் பிறர் செவிக்கும் கேட்கும்படியாக செபித்தலாம்.
-சிதம்பரம், கண்கட்டி மடம் மறைஞானசம்பந்த தேசிகர் அருளிய சைவசமயநெறி, பொது அதிகாரம், குறள் 152

Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).