சிவலிங்க விளக்கம்

சிவலிங்க விளக்கம்

• நாதம்லிங்க மிதிஞேயம் பிந்துபீட முதாகிருதம்
சிவலிங்கத்தில் உள்ள நிலைகுத்தான இலிங்கம் நாதம் ஆகும். பீடமாகிய ஆவுடையார் பிந்து ஆகும்.
– சிவாகம வசனம்

• “சத்தியும் சிவமும் ஆயதன்மை இவ்வுலகம் எல்லாம்
ஒத்து ஒவ்வா ஆணும் பெண்ணும் ஆக உணர் குண
குணியும் ஆகி வைத்தனன் அவளால் வந்த ஆக்கம்
அவ் வாழ்க்கை எல்லாம் இத்தையும் அறியார்
பீடலிங்கத்தின் இயல்பும் ஓரார். ”

சிவலிங்கத்தில் இரு பாகங்கள் உள்ளன. நிலைகுத்தான உருளை வடிவான கல் இலிங்கம் ஆகும். லிங்கம் ஊடறுத்து நிற்கும் அதைச் சுற்றியுள்ள வட்ட வடிவான பீடம் ஆவுடையார் ஆகும். இலிங்கம் சிவத்தையும், ஆவுடையார் சக்தியையும் குறிக்கின்றது. இந்த உலகிலே உள்ள அனைத்து அசைவுகளும் பூட்டும் திறப்பும் போல நேர்கோட்டில் அல்லது வட்டமாகவோ அதன் பகுதியாகவோ தான் இயங்குகின்றன. இதற்கு வேறான எந்த இயக்கமும் இல்லை. உலகின் இயக்கம், அசைவு யாவும் சிவ -சக்தி இயக்கமே.

இந்த உலகெங்கும் உள்ள உயிரினங்கள் எல்லாம் ஆண் என்றும், பெண் என்றும், அணுக்கள் எல்லாம் நேர் -எதிர் ஏற்றங்களுள்ள புரோத்தன்கள் – இலத்திரன்களின் கூட்டாகவும், சட சக்தி வடிவங்கள் கூட கதோட்டு – அனோட்டு, வடபுலம் – தென்புலம், போன்ற நேர் – எதிர் விசைகளாகவும் இருப்பதும். இயங்குவதும் உலகம் யாவும் சிவ -சக்தி மயமாக இருப்பதையும், இயங்குவதையும் எடுத்துக் காட்டி நிற்கின்றது. இவை எல்லாம் அவன் வைத்தது; இவை எல்லாம் அவள் இயக்குவது. இதை அறியாதவர்களால் லிங்கம் – பீடம் இணைந்த சிவலிங்கத் திருவுருவின் உண்மையையும் உணர முடியாது.
-மெய்கண்ட சாத்திரம், சிவஞானசித்தியார் 89

• லிங்- என்பது ஒடுங்குதல். ஆங்கிலத்திலும் லிங்க் – Link – என்பது ஒடுக்கம் என்று பொருள் தருவதை அவதானிக்க. கம் – என்பது விரிதல், வருதல் என்று பொருள் தரும். ஆங்கிலத்திலும் கம் – Come – என்பது வருதல் என்று பொருள் தருவதை அவதானிக்க. எல்லாவற்றுக்கும் தோற்றமாகவும், எல்லாவற்றுக்கும் ஒடுக்கம் அல்லது முடிபாகவும் உள்ளதே லிங்கம்.

“லயம் கச்சந்தி பூதானி சம்ஹாரே நிகிலாநீச
சிருஷ்டிகாலே யதா சிருஷ்டிஸ் தஸ்மால் லிங்கமுகாகிருதம்”

சங்கார காலத்தில் சேதனப் பிரபஞ்சமாகிய சகல உயிரினங்களும் அசேதனப் பிரபஞ்சமாகிய சகல அண்டங்களும் ஒடுங்கி லயமடைந்து, பின் படைப்பு (சிருஷ்டி)க் காலத்திலே அங்கிருந்து மீண்டும் தோன்றுவதால் லிங்கம் எனப்படும்.
– சுப்பிரபேத ஆகமம்

• இந்த அண்டத்தொகுதி இறுதியில் ஒடுங்குவது கருஞ்சுழியில் – BLACK HOLE – என்று அண்டவியல் விஞ்ஞானம் கூறுகின்றது. மீண்டும் அங்கிருந்தே பெருநாதம் – Big Bang – என்னும் வெடிப்பினால் தோன்றி விரிகின்றது.
• அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
– திருவாசகம் – 8ம் திருமுறை, திருவண்டப் பகுதி

• உலகங்களின் முடிவை பிரளயம் என்று சைவ நூல்கள் கூறுகின்றன. பிர – இவ்வாறு; லய – ஒடுங்குதல். பிரளயம் – உலக ஒடுக்கம். ஆன்மா லயிக்கும், ஒடுங்கும் இடம் ஆலயம் என்பதையும் அவதானியுங்கள்.
• நாசா விஞ்ஞான ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள இந்தப் பிரபஞ்ச முடிவான கருஞ்சுழியின் விவரணப் படங்கள் சிவலிங்க வடிவாகவே உள்ளதை இங்கு காணலாம்.

• உலகங்களையும், உலகங்களின் தோற்றத்தையும் பிரபஞ்சம் என்னும் சொல்லால் சைவம் கூறும். பிர – இவ்வாறு; பஞ்ச – விரிதல். பிரபஞ்சம் என்றால் இவ்வாறு விரிந்தது என்று பொருள். வாய் விரிந்த பூசைப் பாத்திரத்தை பஞ்ச பாத்திரம் என்று சொல்வதையும் அவதானியுங்கள். நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன என்று திருவாசகம் கூறுவதையும் அவதானியுங்கள்.
• 1923 இல் தான் அண்டவியல் விஞ்ஞானம் பிரபஞ்சம் பெருநாத வெடிப்பிலிருந்து தோன்றி விரிந்து கொண்டிருக்கின்றது என்ற உண்மையை உணரத் தொடங்கியது. நாசா விஞ்ஞான ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள பெருநாத விரிவினால் பிரபஞ்ச உற்பத்தியின் சித்திரப்படம் சிவலிங்க வடிவாகவே உள்ளதை இங்கு காணலாம்.

யஸ்மாத் லீனம் ஜகத் ஸர்வம்
தஸ்மின் லிங்கே மஹாத்மன:|
லயனாத் லிங்க மித்யேவ
ப்ரவத ந்தி மனீஷிண:||

எல்லா உயிர்களும் ஒடுங்கி, பஞ்சபூதங்களும் ஒடுங்கி படைப்பே முடிந்து போனபின்பு லிங்க வடிவாகவே இருக்கும். ஆகவே லயமடைவதால் லிங்கம் என்று பெயர்.
– ஸ்காந்த புராணம்

Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).