உ
ஆன்மீக வழியில் தீட்சை
குருவடி பணிந்து
இ. லம்போதரன் MD
கனடா சைவ சித்தாந்த பீடம்
www.knowingourroots.com
தீ என்றால் அளித்தல் அல்லது கொடுத்தல் என்று பொருள். க்ஷ என்றால் அழித்தல்என்று பொருள். அதாவது ஞானத்தை அளித்து அஞ்ஞானத்தை அழித்தல் தீட்சை. தீட்சையில் ஆறு வகைகள் உள்ளன. இவை பற்றிய விபரங்கள் காமிகம், காரணம் முதலான இருபத்தெட்டு ஆகமங்களில் விரிவாக உள்ளன. இந்த ஆகமங்களைப் பிரமாணமாகக் கொண்டு எழுதப்பட்ட பதினெட்டு பத்ததிகளிலும் தீக்ஷா விதி என்று ஒரு பகுதி உள்ளது. இவற்றுள் அகோர சிவாச்சாரியார் பத்ததி, சோமசம்பு சிவாச்சாரியார் பத்ததி என்பன முழுமையாகக் கிடைத்துள்ள நடைமுறையில் உள்ள நூல்களாகும். இவற்றுள் அகோர சிவாச்சாரியாரின் தீக்ஷா விதியிலே மேற்கோள் காட்டப்பட்ட கிரியாக்கிரம த்யோதி என்ற நூலுக்கு திருவாரூர் நிர்மலமணி தேசிகர் ‘ப்ரபா’ என்னும் பேருரை ஒன்றை ஆகமங்கள், உப ஆகமங்கள், பத்ததிகளில் இருந்து பல மேற்கோள்களைக் காட்டி எழுதியிருக்கின்றார்.
இந்நூல்களில் பல வகையான தீட்சை முறைகள் பற்றிக் கூறப்படுகின்றது. இவை பற்றி சற்று விரிவாக்ப் பார்ப்போம்.
1.நயன தீட்சை: இதைவிட குருவானவர் தனது பார்வையால் சீடனுடைய மலங்களைப்பொசுக்கி அளிக்கும் தீட்சை நயன தீட்சையாகும். இது முட்டைகளை இட்ட மீன் அதைச்சுற்றி வந்து பார்த்து அதைப் பரிகரித்து குஞ்சாக்குவதற்கு ஒப்பிடுவர். மீனாக்ஷி என்றாள் மீன் போன்று நீண்ட அழகான கண்களை உடையவள் என்று பொருள். மீன் கண்களை மூடுவதில்லை. அதே போல உலக இரட்சகியாகிய அம்பாளும் தனது கண்களை மூடுவதில்லை. இதனாலும் மீனின் கண்களைப் போன்ற கண்களை உடையவள் என்றும் பொருள் கொள்ளலாம். மீன் எவ்வாறு தனது கண்களின் பார்வையால் தனது முட்டைகளை அடைகாத்து பக்குவமடையப் பண்ணி குஞ்சாக்குகின்றதோ அதே போல அம்பாளும் தனது குஞ்சுகளாகிய நம்மை ஓயாது தனது நயனத்தால் பரிகிரித்துப் பக்குவமடைய வைக்கிறாள் என்று உணர்ந்து தெளிவது உத்தமமான பொருள். இது மாணிக்கவாசகர் சொல்லும் ” பொருள் உணர்ந்து சொல்லுவார்’ பொருள்.
2. பரிச தீட்சை: குருவானவர் தனது கரங்களால் அல்லது திருவடிகளால் தொட்டு வழங்கும் தீட்சையாகும். யோகர் சுவாமிகள் ஹவாய் இன்னாளில் சைவசித்தாந்த குருமடம் தாபித்த சுப்பிரமுனிய சுவாமிகளுக்கு முதுகில் ஓங்கி அறைந்து இந்த ஓசை அமெரிக்காவரை கேட்கும் என்று கூறியது பரிச தீட்சையாம்.
3. வாசக தீட்சை: குருவானவர் மந்திரத்தை அல்லது மகாவாக்கியத்தை சீடனுக்கு உபதேசித்தலாம். “யாரடா நீ? தேரடா உன்னை; தீரடா பற்று” என்று செல்லப்பா சுவாமிகள் தன்னை முன்முதலில் சந்தித்த சதாசிவம் என்னும் யோகர் சுவாமிகளுக்குச் சொன்னது வாசக தீட்சையாம்.
“மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர்
வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பாராபரமே”
என்று தாயுமானார் பாடலும்
“சாத்திரத்தை ஓதினர்க்குச் சற்குருவின் தன்வசன
மாத்திரைக்கே வாய்க்கு நலம் வந்துறுமோ”
என்று திருக்களிற்றுப்படியாரும் கூறுவதும் இந்த வாசக தீட்சையையே. குருவானவர் சொல்லும் ஒன்றிரண்டு வார்த்தைகளுடன் பக்குவ ஆன்மாக்களுக்கு ஞானம் கைகூடி விடும். 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த தில்லைத் தீட்சிதர்களில் ஒருவரான உமாபதி சிவம் பல்லக்கிலே தீவர்த்தி போன்ற ஆரவாரங்களுடன் திரும்பும் பொழுது தெருவிலே திரிந்துகொண்டிருந்த மறைஞானசம்பந்தர் கூறிய “பட்ட கட்டையிலே பகற்குருடு போகிறது” என்ற வசனம் அவருக்கு அக்கணத்திலேயே ஞானத்தைக் கொடுத்தது. இதையே “குறியறி விப்பான் குரபர னாமே” என்று திருமந்திரம் கூறுகின்றது.
4. மானச தீட்சை: குருவானவர் தமது மனதில் சீடனை நினைந்த மாத்திரத்தில் அவன் பாசம் கெட உதவுதலாம். இது ஆமை தான் கரையில் இட்ட முட்டையை தன் கருத்தினால் நினைந்து பரிகரித்து குஞ்சு வரச்செய்வது போல என்பர்.
5. சாத்திர தீட்சை: வேதாந்த, சித்தாந்த சாத்திரங்களை, அவற்றின் தெளிவை சீடனுக்கு உபதேசித்து, விளக்கமளித்து தெளிவித்தலாம்.
6. யோக தீட்சை: யோகசக்தியால் குருவானவர் சீடரின் ஆன்மாவில் புகுந்து செய்யும் தீட்சையாம்.
இந்த ஆறு தீட்சைகளும் அக்கினி காரியம் இல்லாமல் வெளிப்படையாகவோ அல்லது சீடர் உட்பட மற்றவர் அறியாமலோகூடச் செய்யலாம். குருவே தான் அறியாமல் தீட்சை செய்வதும் உண்டு. இறைவனே எல்லோரையும் இயக்குபவனாக இருப்பதால். உண்மையில் இறைவனே தீட்சை செய்யும் குருவின் ஆன்மாவைத் தனது சரீரமாகக்கொண்டு தீட்சையை வழங்குகின்றான். இது இறைவனின் சைதன்ய சொரூபம் எனப்படுகின்றது, சைதன்யம் என்றால் ஆன்மா.
7. ஔத்திரி தீட்சை: ஹோமம் என்னும் அக்கினி காரியத்துடன் கூடிய தீட்சை ஔத்திரி தீட்சை ஆகும். ஹோத்திரம் என்றால் ஹோமம் அல்லது அக்கினி என்று பொருள். ஆகவே ஔத்திரி தீட்சை என்பது ஹோமம் என்னும் அக்கினி காரியம் செய்து கொடுக்கும் தீட்சை என்று பொருள் தரும். ‘ஹௌத்ர்யா அஸ்ய பாசான் சஞ்சித்ய’ என்ற சித்தாந்த சாராவளி என்ற நூலின் வரிகள் இல்லறத்தார்க்கு ஔத்திரி தீட்சையே சிறந்தது என்று உணர்த்துகின்றன.
இது ஞானாவதி, கிரியாவதி என இரண்டு வகைப்படும். ஞானாவதி சத்தி தீட்சை என்றும் சொல்லப்படும். இது அக்கினி காரியத்தை அகத்தே மனதில் கற்பித்துச் செய்யும் தீட்சையாம். கிரியாவதி என்பது ஓமம் முதலிய அக்கினி காரியங்களை வெளிப்படையாகப் புறத்தே செய்து கொடுக்கும் தீட்சையாம்.இவை இரண்டிலுமே சமய தீட்சை என்னும் முதலாவது தீட்சை, விசேட தீட்சை என்னும் இரண்டாவது தீட்சை, நிர்வாண தீட்சை என்னும் மூன்றாவது தீட்சை என மூவகைத் தீட்சைகள் உள்ளன. சமய தீட்சையைப் அல்லது பிரவேச தீட்சை என்பர். விசேட தீட்சையாகிய இரண்டாவது தீட்சை ஆன்மார்த்த சிவலிங்க பூசைக்கு உரித்தாக்கும். மூன்றாவதான நிர்வாண தீட்சை இது யோக நெறிக்கும் ஞான நூல்களைக் கற்றலுக்கும் வழி வகுக்கும். இதிலும் மூன்று வகைகள் உள்ளன.
நிர்ப்பீஜ தீட்சை: ஔத்திரி தீட்சையிலும் முறைப்படி தினமும் சைவ ஆசார அனுட்டானங்களைக் கடைப்பிடிக்கும் சூழலோ, வலிமையோ இல்லாதவர்களுக்கு ஆச்சாரியார் ஹாம், ஹ்லீம், ஐம் போன்ற பீஜாட்சரங்கள் கொடுக்காமல் செய்யும் தீட்சை நிர்ப்பீஜ தீட்சையாகும். நிர்ப்பீஜம் என்றால் பீஜம் இல்லாமல் என்று பொருள். பீஜம் என்றால் வித்து என்று பொருள், இங்கு இது பீஜ மந்திரத்தைக் குறிக்கும். ஓம் என்னும் ஓங்காரம் பீஜ மந்திரங்களில் ஒன்று. சிலர் இதை மட்டும் நிர்ப்பீஜ தீட்சையில் விதிவிலக்காகக் கொடுப்பதும் உண்டு.
சபீஜ தீட்சை: மந்திரத்துடன் பீஜ அட்சரங்களும் கொடுத்து செய்யப்படும் தீட்சை.
பலவிதம் ஆ சான் பாச மோசனந்தான் பண்ணும்
படி, நயனத்து அருள், பரிசம், வாசகம், மானதமும்,
அலகில் சாத்திரம், யோகம், ஔத்திராதி
அநேகமுள ;அவற்றின் ஔத்திரி இரண்டு திறனாம்,
இலகு ஞானம், கிரியை என; ஞானம் மனத்தால்
இயற்றுவது கிரியை; எழிற் குண்ட மண்ட லாதி
நிலவுவித்துச் செய்தல் கிரியாவதி, தான் இன்னும்
நிர்ப்பீசம் சபீசம் என இரண்டாகி நிகழும்.
– சிவஞானசித்தியார் சுபக்கம், பாடல் 255
–
பாலரொடு, வாலீசர், விருத்தர், பனி மொழியார்
பலபோகத் தவர்,வியாதிப் பட்டவர்க்குப் பண்ணும்
சீலமது நிர்ப்பீசம்; சமயா சாரம்
திகழ் சுத்தி சமயி, புத் திரர்க்கு நித்தத்(து)
ஏலும் அதி காரத்தை இயற்றித் , தானும்
எழில்நிரதி காரை என நின்று இரண்டாய் விளங்கும்
சாலநிகழ் தேகபா தத்தி னோடு,
சத்தியநிர் வாணம் எனச் சாற்றுங் காலே.
– சிவஞானசித்தியார் சுபக்கம், பாடல் 256
இந்த எல்லா வகையான தீட்சைகளிலும் சிவதர்மினி, உலகதர்மினி என்று இரண்டு வகைகள் உள்ளன.
சிவதர்மினி: சிவதர்மினி என்பது சந்நியாசநெறியில் உள்ளவர்களுக்கு செய்யப்படும் தீட்சைகளாகும்.
உலகதர்மினி: உலகதர்மினி என்பது சன்னியாசிகள் அல்லாத மற்றையோருக்குச் செய்யப்படும் தீட்சைகளாகும்.
இல்லற வாழ்வில் இருக்கும் குடும்பஸ்தர்களுக்கு அவ்வாறு இல்லற வாழ்வில் தனது மனைவியுடன் வாழும் இல்லற ஆச்சாரியாரே தீட்சை செய்வது சிறப்பு என்று சிந்திய ஆகமத்தில் ”பௌதிகோபி விசேஷேண தர்ம்பத்னீ ஸமன்வித” என்று கூறப்பட்டுள்ளது.
சத்தியோ நிரவாண தீட்சை: சத்யோ என்றால் விரைவாக என்று பொருள். இது தீட்சை செய்தவுடன் உடனடியாக முத்தி கொடுக்கும் தீட்சையாம். பதினாலாம் நூற்றாண்டில் உமாபதி சிவாச்சாரியார் பெற்றான் சாம்பானுக்கும், அதன் பின்னர் முள்ளிச்செடிக்கும் உடனடியாக உயிரை உடலை விட்டு நீக்கி பரமுத்தி கொடுத்தது இந்த தீட்சையாலேயாம். இது நிர்வாண தீட்சையில் அதி தீவிரத்தில் அதி தீவிரமான நிலையிலுள்ள சத்திநிபாதருக்கு வழங்கக்கூடிய தீட்சையாகும்.
அசத்தியோ நிர்வாண தீட்சை: இது தீட்சையின் பின்னரும் உயிர் வாழ்ந்து, பிராரப்த வினையைக் கழித்து, உடலை விட்டு உயிர் நீங்கியதும் முத்தி அடையும்படியாகச் செய்யப்படும் நிரவாண தீட்சையாகும். இது அதி தீவிரத்தில் மந்ததரம், மந்தம், தீவிரம் முதலிய நிலைகளிலுள்ள சத்திநிபாதர்க்குச் செய்யப்படும் தீட்சையாகும்
இவையெல்லாம் தீட்சையின் வகைகள். இவை பற்றிய மேலதிக விளக்கங்களை சிவஞானசுவாமிகளின் சிவஞான போதத்து சிறப்புப்பாயிரத்துக்கான மாபாடிய உரையிலும், சிவஞானசித்தியார் பாடல் 255-262, சிவப்பிரகாசம் பாடல் 9 போன்ற தமிழ் நூல்களிலும், சோமசம்பு பத்ததி, பௌஷ்கர ஆகமம், மதங்க ஆகமம் போன்ற வடமொழி நூல்களிலும் காண்க.
இதை விட பின்வருவனவும் தீட்சைகளாக ஆகமங்களில் கூறப்பட்டுள்ளன.
பாதோத்தக தீட்சை: இதைவிட ஆச்சாரியாரின் பாதம் கழுவிய தீர்த்தத்தை அளித்தல் பாதோத்தக தீட்சையாம். சீடன் அதனைத் தனது சிரசில் புரோட்சித்து ஆசமனம் செய்ய (அருந்த) வேண்டும். வீரசைவ மரபில் இது தவறாது கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
சாம்பவீ தீட்சை: திருக்கோயில் மகோற்சவங்களின் வழியாக இறைவன் பத்தர்களுக்கு சாம்பவீ தீட்சை செய்து வைக்கிறான். தீட்சைக்குத் அத்தியாவசியமான மண்டபமும் கும்பமும் கோயில் மகோற்சவ காலத்தில் யாகசாலையில் பிரதிட்டையாகி உள்ளன. அக்கினி காரியம் செய்பவர் ஆச்சாரியர். உற்சவ காலத்தில் யாகசாலையில் இருந்து புறப்படும் சோமாஸ்கந்த மூர்த்தியிலேயே அக்கினி உள்ளது. இந்த மூர்த்தத்தில் உள்ள சிவனே வாகீசுவரர்; போக சத்தியான அம்பாளே வாகீசுவரி; கந்தனே சிவாக்கினி என்னும் ஞானாக்கினி. சோமாஸ்கந்த மூர்த்தமே உற்சவங்களுக்குச் சிறந்தது. (சோமாஸ்கந்தர் இல்லாத ஆலயங்களில் நடேசர், சந்திரசேகரர், கல்யாணசுந்தரர், உமாமகேசுவரர் போன்ற மூர்த்தங்களில் ஒன்றை மத்திம பட்சமாகப் பாவிக்கலாம்.) தீட்சை ஆனவர்கள், தீட்சை ஆகாதவர்கள், பாசத்தில் உழல்வோர், பக்குவமடைந்தோர், ஆசாரம் இல்லாதவர்கள் எனப் பலவகைப்பட்ட திருவிழாவில் கூடியிருக்கும் சகலவிதமான மக்களுமே சிஷ்யர்கள். இவ்வாறாக தீட்சைக்கு அத்தியாவசாயமான மண்டபம், கும்பம், ஆச்சாரியன், சீடன், அக்கினி ஆகிய ஐந்து பஞ்சாதி கரணங்களும் உள்ள கோயில் மகோற்சவங்களினூடாக இறைவன் மக்களுக்கு வெளிப்பட்டு வந்து பாரபட்சமில்லாமல் பக்குவம் பாராது தீட்சித்து அருள் செய்வதே சாம்பவீ தீட்சை.
– உத்தர காரண ஆகமம்
ஆச்சாரியாபிஷேகம்: ஞானாவதியாலோ அல்லது கிரியாவதியாலோ இந்த மூன்று தீட்சைகளும் பெற்று அனுபவத்தாலும், அறிவாலும், ஆன்மீக பயிற்சிகளினாலும் முதிர்ந்தவர்களை மற்றவ்ர்களுக்கும் தீட்சை செய்யும் அதிகாரமும் சுயாதீனமும் கொடுத்து தன்னைப்போல ஆச்சாரியாராக நியமிப்பது ஆச்சாரியாபிஷேகம் ஆகும். ஆச்சாரியத்தகுதி அந்தணர்கள் மட்டுமல்லாது தகுதியுடைய எல்லோரும் அடையத்தக்கது என்று சிவாகமங்கள் கூறுகின்றன. இவ்வாறு ஆச்சாரியாபிக்ஷேகம் செய்யப்பெற்ற, அந்தணர், அரசர், வைசியர், சூத்திரர் ஆகிய நான்கு வர்ணத்தாரும் பிறர் பொருட்டு நித்திய நைமித்திக காமிய பிரதிட்டாக் கிரியைகளைச் செய்ய உரித்துடையர் என்று சிவஞான சுவாமிகள் சிவஞான மாபாடியத்தில் நிறுவுகின்றார். இதை ஆறுமுக நாவலரும் தனது இரண்டாம் சைவவினாவிடை 130 ம் கேள்வி பதிலில் தெளிவாகக் கூறியுள்ளார்.
ஓதி உணர்ந்து ஒழுக்கநெறி இழுக்கா நல்ல
உத்தமர்க்குச் செய்வது உயர் பீசம்; இவர் தம்மை
நீதியினால் நித்திய நைமித்திக கா மியத்தின்
நிறுத்தி நிரம் பு அதிகாரம் நிகழ்த்துவதும் செய்து,
சாதக ஆசாரியரும் ஆக்கி, வீடு
தருவிக்கும்; உலோக, சிவ தருமிணி என்று இரண்டாம்;
ஆதலினால் அதிகாரை யாம்; சமய, விசேட,
நிருவாண, அபிடேகம் இவற்று அடங்கும் அன்றே.
– சிவஞானசித்தியார் சுபக்கம், பாடல் 257
ஆயினும் சமய தீட்சை, விசேட தீட்சை, நிரவாண தீட்சை ஆகிய மூன்று தீட்சைகளும் பெற்று ஆச்சாரியாபிக்ஷேகமும் பெற்று இல்லற மார்க்கமாகிய குடும்ப வாழ்க்கையில் உள்ள, ஆதி சைவ மரபில் வரும் அந்தணர்களே திருக்கோவில்களில் சிவலிங்கத் திருமேனியைத் தொட்டு உலக நன்மைக்காகவும், மக்களின் நன்மைக்காகவும் செய்யும் பரார்த்த பூசையைச் செய்யும் தகுதி உடையவர்கள் ஆவர் என்று ஆகமங்கள் கூறும். ஆலயங்களின் அமைப்பு, கிரியைகள், உற்சவங்கள், வழிபாடு என்பவற்றின் தத்துவ மற்றும் நடைமுறை விளக்கங்கள் ஆகமங்களிலேயே உள்ளன. இவை வேதங்களிலோ, வேதாந்தமான உபநிடதங்களிலோ அல்லது ஸ்மிருதிகளிலோ இல்லை ஆகவேதான் ஆகம வழியைச் சாராத சமார்த்த வைதிக அந்தணர்களுக்கு இந்த தகுதி இல்லை என்று கூறப்படுகின்றது.
“அர்ச்சனைகள் சிவ வேதியர்க்கே உரியன”
– பெரியபுராணம் பாடல் 4166.
மெய்கண்டாருக்கு முந்தைய சைவசித்தாந்த பாரம்பரியத்தில் தீட்சையில்லாமல் முத்தி அடைய முடியாது என்ற தீவிரப்போக்கு இருந்தது. அகோர சிவாச்சாரியாரின நூல்களில் இந்தப்போக்கை நாம் காணலாம். இதிலே தீட்சை மட்டுமே முத்திக்கு வழியாகும் என்ற அதிதீவிரப்போக்கும் இருந்தது. சிவஞானசுவாமிகள் தனது சிவஞான மாபாடியத்திலே தீட்சையால் மட்டும் முத்தி என்ற கருத்தை மறுத்துரைத்து தீட்சையுடன் ஆத்மீக சாதனையும் வேண்டும் என்று நிறுவுகின்றார். சைவக் கிரியைகளுக்கு ஈழத்துச் சைவ மரபிலே சிறப்பாகப் பின்பற்றப்பட்டு வருவது அகோரசிவ பத்ததியே.
மகா பாரதத்தின் அநுசாசன பர்வத்தின் பதினான்காம் அத்தியாயத்தில் 374ம் சுலோகத்தில் கிருஷ்ணர் உபமன்னியு முனிவரிடம் பாசுபத தீட்சை என்னும் சிவதீட்சை பெற்று சிவபூசை செய்துவந்த வரலாறு கூறப்பட்டிருக்கின்றது. இது இதே போன்று இராமர் அகத்திய முனிவரிடம் பாசுபத சிவ தீட்சை பெற்றதை பத்ம புராணத்தில் உள்ள சிவ கீதை மூன்றாம் அத்தியாயம் கூறுகின்றது. இதை விட மூல நூல்களான வால்மீகி இராமாயணமும், வியாசரின் மகாபாரதமும் இராம இலட்சுமணர்களினதும் கிருஷ்ண பலராமர்களினதும் ஆடை அலங்காரங்கள் பற்றிக்கூறும்போது அவர்களை விபூதி உருத்திராட்ச தாரிகளாகவே வர்ணிக்கின்றன. தமிழில் உள்ள வில்லிபுத்தூராழ்வார் பாடிய மகாபாரதமும் கிருஷ்ணரை இவ்வாறே வர்ணிக்கின்றது.
