அக்கினிஹோத்திரம்

அக்கினிஹோத்திரம்

குருவடி பணிந்து

மருத்துவ கலாநிதி இ. லம்போதரன் MD

கனடா சைவசித்தாந்த பீடம்

www.knowingourroots.com

 

கற்றாங் கெரியோம்பி கலியை வாராமே

செற்றார் வாழ்தில்லைச் சிற்றம்பல மேய

முற்றா வெண்டிங்கள் முதல்வன் பாதமே

பற்றா நின்றாரைப் ப்ற்றா பாவமே.

  • சம்பந்தர் தேவாரம்

 

”அக்னி மீளே புரோஹிதம்” என்று இருக்கு வேதம் தொடங்குகின்றது. அக்கினி ஹோத்திரத்தில் பாவிக்கும் அக்கினி மூன்று வகை. அக்கினி காரியங்கள் ஆரியர் வழமை என்று பலர் கூறி வந்தாலும் “மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து” என்று ஆகவனீயம், காருக பத்தியம், தக்ஷிணாக்கினி ஆகிய மூன்று வகையான அக்கினியையும் பற்றித் திருமுருகாற்றுப்படை கூறுகின்றது. திருமுருகாற்றுப்படை சைவ இலக்கியங்களின் தொகுப்பான திருமுறைகளில் பதினோராம் திருமுறையிலும், சங்க இலக்கியங்களின் தொகுப்புகளில் ஒன்றான பத்துப்பாட்டிலும் ஒருங்கே இடம்பெற்றிருக்கின்றது. இவ்வாறு திருமுறைகள் சங்க இலக்கியங்கள் இரண்டிலும் இடம் பிடித்துள்ள ஒரே பாடல் கடைச்சங்க காலத்து மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரன் பாடிய திருமுருகாற்றுப்படை. 

 

  1. காருக பத்திய அக்கினி; இதுதான் மிகவும் முக்கியமான அக்கினி. சிக்கி முக்கிக் கல்லைக்கொண்டோ அல்லது அரணிக்கட்டைகளை கடைந்தோ நெருப்பை உருவாக்கி இந்த அக்கினியை புதிதாக உருவாக்க வேண்டும். கார்ஹபத்ய= க்ருஹ+பதி= கிருகத்துக்கு அதிபதியாக இருந்து காப்பது என்று பொருள்.
  2. ஆகவனீய அக்கினி
  3. தக்ஷிணாக்கினி

பின்னர் சொன்ன இரண்டு அக்கினிகளையும் முன் சொன்ன கார்ஹபத்ய அக்கினியில் இருந்துதான் பற்ற விட்டு பசு நெய்யினால் ஹோமம் செய்ய வேண்டும்.

ஆலயங்களில் சிவாகமப்படி ஏககுண்டம், பஞ்சகுண்டம், நவகுண்டம் என்று அமைத்து ஹோமம் செய்வார்கள். இங்கே சிவ சம்பந்தமான அக்னியானது மிகச்சிறப்பாகப் பிரதிஷ்டை செய்யப்படும். பிரதான குண்டத்தில் உருவாக்கப்பெறும் இந்த விருத்த சிவாக்னி என்ற அக்னியின் மூலமாக இன்னும் எட்டாக ஆஹவனீயாக்னி, தக்ஷணாக்னி, கேவலாக்னி, கார்ஹபத்யாக்னி, விருத்தாக்னி, சாமான்யாக்னி, யௌவனாக்னி, பாலாக்னி, என்று நவ(ஒன்பது) குண்டங்களிலும் அக்னி உற்பத்தி செய்யப்பட்டு ஹோமங்கள் நடக்கும்.

நாளும் தமது இல்லத்தில் அக்கினி வளர்த்து எரியோம்பி வழிபடுதலை அந்தணர் செய்து வந்தனர். தாம் பயணம் செய்யும் காலத்தும் தமது இல்லத்தில் இருந்து அக்கினியை உடன் எடுத்துச் செல்லும் வழமை உடையவர்களாக இவர்கள் இருந்தார்கள் என்று சம்பந்தர் திருமணத்துக்கு வந்திருந்த அந்தணர்களை “புகைவிடும் வேள்விச் செந்தீ இல்லுடன் கொண்டு போவார்” என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறிய  விபரத்தில் இருந்து அறியக் கிடைகின்றது.

 

தில்லை வாழ் அந்தணர்கள் எரியோம்பி வாழ்வதை

 

“கற்றாங் கெரியோம்பி கலியை வாராமே

செற்றார் வாழ்தில்லைச் சிற்றம்பல மேய

முற்றா வெண்டிங்கள் முதல்வன் பாதமே

பற்றா நின்றாரைப் ப்ற்றா பாவமே”

 

என்று சம்பந்தர் தனது தேவாரத்தில் குறிப்பிடுகின்றார். 

திருஞான சம்பந்தருடைய அடியார் குழு திருநீலநக்கர் என்னும் அந்தணர் இல்லத்தில் எழுந்தருளியபோது அவர் திருஞான சம்பந்தரோடு இருந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்னும் யாழிசை பாடும் பாணரை சம்பந்தரின் வேண்டுகோளின் பேரில் தனது இல்லத்திலேயே, அதுவும் தாம் அக்கினி வளர்த்துச் சிவ பூசை செய்யும் மேடையிலேயே இடம் கொடுத்தார். அடுத்த நாள் அவர் அக்கினி காரியம் செய்யும்போது சிவாக்கினி முன்னெப்போதும் இல்லாதவாறு பெரிதாக வலஞ் சுழித்து எழும்பி ஆசீர்வதித்தது என்று பெரிய புராணத்தில் பார்க்கின்றோம்.

நின்ற அன்பரை நீலகண் டப்பெரும் பாணர்க்கு

இன்று தங்கவோர் இடங்கொடுத்து அருள்வீர் என்ன

நன்று மின்புற்று நடுமனை வேதியின் பாங்கர்ச்

சென்று மற்றவர்க் கிடங்கொடுத் தனர்திரு மறையோர்

 

ஆங்கு வேதியி லறாதசெந் தீவலஞ் சுழிவுற்று

ஓங்கி முன்னையில் ஒருபடித் தன்றியே யொளிரத்

தாங்கு நூலவர் மகிழ்வுறச் சகோடயாழ்த் தலைவர்

பாங்கு பாணியா ருடன்அரு ளாற்பள்ளி கொண்டார்

 

வேதமுறையில் இவ்வாறு அக்கினிஹோத்திரம் செய்யும் வழமை இப்போது இல்லையென்னும் அளவுக்கு அருகிவிட்டாலும் இப்போதும் தமது இல்லங்களில் நாளாந்தம் அக்கினிஹோத்திரம் செய்யும் வழமை உடைய அந்தணப் பெருமக்கள் ஆங்காங்கு இலை மறை காயாக இருக்கத்தான் செய்கிறார்கள். ஆலயங்களில் காலையில் நாளும் அக்கினி காரியம் செய்யப்பட வேண்டும் என்பது சைவாகம விதி. நாம்தான் இவைகளைக் கண்டுகொள்வதில்லை. நாம் இப்போது சம்பந்தர் பாடிய “வேதவேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி யமணொடு தேரர் “ போலாகிவிட்ட சைவர்கள் அல்லவா?

அக்கினிஹோத்திரம் செய்யும் அந்தணன் இறக்கும்பொழுது அவனுடன் அவனுடைய அக்கினிஹோத்திர வழிபாட்டுப் பொருட்கள் எல்லாவற்றையும் தகனம் செய்யவேண்டும் என்பது விதி.