அறுவகைச் சித்தர் மரபு

அறுவகைச் சித்தர் மரபு

குருவடி பணிந்து

மருத்துவ கலாநிதி இ. லம்போதரன் MD

கனடா சைவசித்தாந்த பீடம்

www.knowingourroots.com

 

தமிழர்களின் சித்தர் மரபு சைவ சமய மரபுடனுடனும், மரபு கடந்தும் காலங்காலமாக மருவி வந்துள்ளது. ஆனாலும் பொதுவாக சித்தர்கள் என்றால் சித்துக்கள் செய்பவர்கள் என்ற கருத்தே மக்கள் மத்தியில் நிலவி வருகின்றது. சித் என்ற வடமொழிச்சொல் அறிவு, உணர்வு, மனது, ஆன்மா என்றெல்லாம் பொருள் தரும். சித்தர்கள் என்றால் அறிவாளர், உணர்வுடையோர், மனதை அடக்கியோர், ஆன்ம சித்தி பெற்றோர், ஆன்ம விடுதலை பெற்றோர் எனப் பலவாறு பொருள் கொள்ளலாம்.

 

சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர்

சத்தமும் சத்த முடிவும்தம் முள்கொண்டோர்

நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர

முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே

 

என்று திருமந்திரம் சித்தர்களை இவ்வுலகில் உயிரோடு நடமாடும்பொழுதே ஆன்ம விடுதலை பெற்ற சீவன்முத்தர்களாக வரையறுக்கின்றது.

“வேதாந்த சித்தாந்த சமரசநன்னிலை பெற்ற வித்தகச்சித்தர் கணமே” என்று சமய தத்துவங்கள் கடந்த சமரச ஞானம் வாய்க்கப்பெற்றவர்கள் சித்தர்கள் எனத் தாயுமானார் சித்தர்களை வியந்து போற்றுகின்றார்.

 

பலர் இவ்வாறான சித்தர்களைத் தமது குருவாகவும் கொண்டுள்ளார்கள். சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறையாக உள்ள திருமந்திரத்தை அருளிய திருமூலர் இவ்வாறான ஒரு சித்தரே. திருமந்திரத்திலே சமயக் கருத்துக்களுடன், சமூக வழிகாட்டல்களும், உடல் பேணும் முறைமையும், மருத்துவ விஞ்ஞானக் கருத்துகளும் விரவியுள்ளன. தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டுவித்த இராஜராஜ சோழனை வழிப்படுத்தியது கருவூர்ச்சித்தர். இவரின் சமாதி தஞ்சைப் பெரியகோயிலில் உள்ளது. பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப்பிள்ளையைப்போல் ஆரும்துறத்தல் அரிதரிது என்று தாயுமானார் புகழ்ந்த பட்டினத்துப் பிள்ளையாரும் ஒரு சித்தரே. சமீப காலத்தில் எம்மிடையே வாழ்ந்து மறைந்த சித்தர் யாழ்ப்பாணம் சிவ யோகர் சுவாமிகள். இவரது சீடரான சுப்பிரமுனிய சுவாமிகள் தாபித்ததே இன்றைய ஹவாய் சைவ சித்தாந்த ஆதீனம்.

 

தமிழ் மரபில் பலவகையான சித்தர்களை நாம் இனங்காணக் கூடியதாகவுள்ளது.  

 

  1. ஞானச் சித்தர்கள்: எல்லாச் சித்தர்களும் ஞானிகள் அல்லர். இதனாலேயே சைவ மரபில் எல்லாச் சித்தர்களுக்கும் குருபூசை இல்லை. பத்தாம் திருமுறையாகிய திருமந்திரம் பாடிய திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக வைக்கப்பட்டு அவருக்கு குருபூசையும் கொண்டாடப்படுகின்றது. ஒன்பதாம் திருமுறையில் உள்ள சில பாடல்களை அருளிச்செய்த திருமளிகைத்தேவர், கருவூர்த்தேவர் ஆகியோரும் பதினோராம் திருமுறைப் பாடல்கள் பலவற்றை அருளிச்செய்த பட்டினத்துப் பிள்ளையாரும் ஞானச் சித்தர்கள்களாகக் கொள்ளப்படலாம். இவர்களுக்கும் ஆங்காங்கே அவர்கள் மூர்த்தங்கள் உள்ள கோவில்களில் குருபூசைகளும் உள்ளன. ஞானச் சித்தர்கள் இறையினுடைய பெருமைக்கு அல்லது மகிமைக்கு எடுத்துக்காட்டாக மட்டுமே சித்துக்கள் செய்வார்களேயன்றி தம்மை முதனிலைப்படுத்தியோ அல்லது இன்னொருவரின் இன்ப துன்பங்களுக்காவோ சித்துக்கள் செய்யமாட்டார்கள்.

 

  1. அட்டமாசித்தர்கள்: இவர்கள் சித்திகள் எனப்படும் அதிமானுடச் செயல்கள் ஆற்றும் வல்லமை பெற்றவர்கள். இந்த சித்திகளில் தலையானவை அட்டமாசித்திகள். அட்டமாசித்திகளாவன அணிமா – சிறியதிற் சிறியதாதல், மகிமா – பெரியதிற் பெரியதாதல், கரிமா – கனத்ததிலும் கனத்ததாதல், லகிமா – இலேசிலும் இலேசாதல், பிராத்தி – விரும்பியதைப் பெறுதல், பிரகாமியம் – வேண்டிய இன்பம் அநுபவித்தல், ஈசத்துவம் – தலைமைத்துவம் பெறுதல், வசித்துவம் – சகலரையும் வசியப்படுத்தல் என்னும் எட்டுமாம். இவர்கள் தமது முற்பிறப்பு அல்லது இப்பிறப்புகளில் செய்த ஆத்மீக சாதனைகளினாலேயே இப்பிறப்பில் இந்த சித்திகள் கைவரப் பெறுகின்றார்கள் என்று சமய நூல்கள் கூறுகின்றன.

 

பரிசறி வானவர் பண்பன் அடிஎனத்

துரிசற நாடியே தூவெளி கண்டேன்

அரியது எனக்கில்லை அட்டமா சித்தி

பெரிதருள் செய்து பிறப்பறுத் தானே

 

என்று திருமூலரும் தனக்கு அட்டமாசித்திகளும் கை கூடியதைக் கூறுகின்றார்.

“கந்துக மதக்கரியை வசமாய் நடத்தலாம்;

கரடி வெம் புலி வாயையும் கட்டலாம்;

ஒரு சிங்கம் முதுகின்மேற் கொள்ளலாம்;

கட்செவி எடுத்தாட்டலாம்; வெந்தணலில் இரசம் வைத்து

ஐந்துலோ கத்தையும் வேதித்து விற்றுண்ணலாம்;

வேறொருவர் காணாமல் உலகத் துலாவலாம்;

விண்ணவரை ஏவல்கொளலாம்;

சந்ததமும் இளமையோ டிருக்கலாம்; மற்றொரு

சரீரத்தி னும்புகுதலாம்; சல மேல் நடக்கலாம்

கனல் மேல் இருக்கலாம்; தன்னிகரில் சித்தி பெறலாம்;

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கிற திறம் பெறல் அரிது.”

 

என்று தாயுமானார் இவர்களை விவரிக்கின்றார்.

 

ஆயினும் இவர்கள் எல்லோரும் ஞானிகளாகக் கருதப்படுவதில்லை. இவர்களுடைய சித்துக்கள் தம்மை நாடியவரின் துன்பம் துடைப்பதற்காகவோ, அல்லது தம்மை வேண்டாதவர்களை துன்புறுத்தி,  பயப்படுத்தி வழிப்படுத்துவதற்கோ, அல்லது தமது பெருமைகளை வெளிப்படுத்தவோ, தமது தேவைகளை நிறைவேற்றவோ கூட செய்யப்படலாம்.

 

இவர்கள் தமது சித்துக்களைத் தவறாகப் பாவிக்கும்பொழுது தமது நிலையிலிருந்து கீழே விழலாம். நமது காலத்திலும் இவ்வாறு சித்தர்கள்  சிலர் பொருளீட்டலிலும் பின்னர் ஊடகங்களிலும், வழக்குகளிலும் அல்லாடுவதும் இதனாலேயே.

 

“யோகசாடை காட்டுவார் உயரவும் எழும்புவார்

வேகமாக அட்டசித்து வித்தை கற்று நெட்டுவார்

மோகம்கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின்

பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே”

 

என்று இவர்களைப்பற்றி சிவவாக்கியர் என்னும் சித்தர் எச்சரிக்கின்றார்.

 

சிவனே முருகக்கடவுளுக்குப் பால்கொடுத்து வளர்த்த இயக்கிகள் அறுவரான கார்த்திகைப் பெண்களுக்கு அட்டமாசித்திகளை உபதேசித்த படலம் திருவிளையாடல் புராணத்தில் உள்ளது. அதிலே

“எம்மை யுணர்ந்த யோகியர்கள் இந்த சித்திகளை விரும்பா ரெனினும் இச்சித்திகள் அவர்களை நிழல்போலத் தொடர்ந்து உலகத்தார்க்கு அவர்கள் பெருமை தனை உணர்த்தும்”

என்று கூறப்படுகின்றது.   

 

  1. காயச்சித்தர்கள்: காயம் என்றால் உடல். இவர்கள்தான் தமிழர்களின் தனித்துவமான சித்த மருத்துவ நூல்களையும், உடல் ஓம்பும் வழிகளையும் தந்தவர்கள். மூலிகைகளை மருந்துகளாகப் பாவிக்கும் ஆயுர்வேத மருத்துவத்திலிருந்து மாறுபட்டு கந்தகம், பாதரசம், தங்கம், இரும்பு போன்றவற்றின் இரசாயனப் பதார்த்தங்களை சித்தமருத்துவத்தினூடாக முதன்முதலில் மருந்துகளாக அறிமுகப்படுத்தியவர்கள் சித்தர்களே. இன்றைய அலோபதி என்னும் மேலைத்தேயஆங்கில மருத்துவத்தில் பாவிக்கும் பல மருந்துகள் இவ்வாறான இரசாயனப் பதார்த்தங்களே. நுண்ணுயிர்கொல்லிகளான அன்ரிபயோட்டிக் மருந்துகள் கண்டறியப்படுவதற்கு முன்னர் வெட்டை எனப்படும் சிபிலிஸ் போன்ற பால்வினை நோய்களுக்கு மருந்தாக பாதரசம் பாவிக்கப்பட்டு வந்தது. இன்றும் சில மூட்டுவாத நோய்களுக்கு தங்க வேதிகளை மருந்தாகப் பாவிக்கின்றார்கள். அயச் செந்தூரம் என்பது அன்றைய சித்த மருத்துவத்தின் இரும்புச்சத்து மாத்திரைகள். ஆகவே காயச்சித்தர்களை நாம் இன்றைய இரசாயன மருந்துகளின் முன்னோடிகள் எனலாம். சித்தர் பாடல்களையும், சித்த மருத்துவ நூல்களையும் பார்க்கும்பொழுது இவற்றை ஆக்கிய போகர், தேரையர், அகத்தியர்( தமிழ் இலக்கணம் செய்த தொல்காப்பியருக்கு முந்தைய அகத்தியர் வேறு) போன்றவர்கள் இவ்வாறான காயச்சித்தர்களே என்று தெரிகின்றது. இவர்களில் சிலர் சாகா மருந்து, மூவா மருந்து பற்றியும் கூறிச் சென்றுள்ளார்கள்.

 

உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்

உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்

உடம்புள்ளே உத்தமன் கோயில் கொண்டானென்று

உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே

 

என்ற பாடலால் உடலை ஓம்பும் நோக்கத்தை விளக்கும் திருமூலர்

 

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்

மடக் கொடியாரொடு மந்தணம் கொண்டார்

இடப்பக்கமே இறை நொந்தது என்றார்

கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே

 

என்ற பாடலால் இருதய நோயான மாரடைப்பால் மாண்டுபோவதை வர்ணிக்கின்றார்.

 

மாதா உதரம் மலம் மிகில் மந்தனாம்

மாதா உதரம் சலம் மிகில் மூங்கையாம்

மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை

மாதா உதரத்தில் வந்த குழவிக்கே

 

என்ற பாடலால் கர்ப்ப காலத்தில் கருப்பையில் நீர் கோர்த்த நிலை (polyhydamniosis) வளரும் சிசுவின் மூளை விருத்தியைப் பாதிக்கும் மருத்துவ உண்மையையும், நீட்டித்த பிரசவ காலத்தினால் (prolonged labour) ஏற்படும் சிசுத்தவிப்பின் ( foetal distress) அறிகுறியாக கருப்பையிலேயெ சிசுவின் மலம் கழியும் நிலையினால் (meconeum aspiration) பிற்கால நரம்புத்தொகுதி விருத்தி பாதிக்கப்பட்டு பேச்சு விருத்தி முடக்கப்படும் அபாயத்தையும், இவ்விரண்டும் கூடினால் பார்வை கூடப் பாதிக்கப்படலாம் என்பதையும் எச்சரிக்கின்றார்.

 

பாய்கின்ற வாயு குறையிற் குறளாகும்

பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்

பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்

பாய்கின்ற வாயு மாதர்க்கில்லை பார்க்கிலே

 

என்ற பாடலால் திருமூலர் நீட்டித்த பிரசவகாலத்தில் உள்ளிருக்கும் சிசுவுக்கு பிராண வாயு குறைவு படுவதினாலும், இடையறுக்கப் படுவதினாலும், துண்டிக்கப்படுவதினாலும் (foetal hypoxia) ஏற்படுகின்ற மூளைப் பாதிப்பையும் (hypoxic encephalopathy) உடற்குறைபாடுகளையும் (cerebral palsy) விளக்குவதோடு இது ஆண்குழந்தைகளையே அதிகம் பாதிக்கின்றது என்றும் கூறுகின்றார்.

 

கண்டனும் கண்டியும் காதல் செய்யோகத்து

மண்டலம் கொண்டு இருபாலும் வெளிநிற்கும்

வண்டியை மேற்கொண்டு வான்நீர் உருட்டிடத்

தண்டு ஒருகாலும் தளராது அங்கமே

 

என்ற திருமந்திரப் பாடல் ஆண் பெண் புணர்ச்சி நீட்டிப்புக்கான வழிவகைகளைக் கூறுகின்றது.

சித்தர்கள் சிலர் இரும்பை அல்லது உலோகங்களைத் தங்கமாக்கும் இரசவாத இரசாயன ஆராய்ச்சியிலும் தமது காலத்தைக் கழித்திருக்கின்றார்கள். சிவனே இவ்வாறு சித்தராக வந்து இரசவாதம் செய்த படலமும் திருவிளையாடற் புராணத்திலே உள்ளது.

 

  1. சாமுசித்தர்கள்: சமய சாதனைகளாகிய சரியை, கிரியை, யோகங்கள் ஞானத்தைக் காட்டியல்லாமல் நேரடியாக முத்தியைத் தரமாட்டா எனபது எமது சைவ மரபு. இதையே சிவஞான மாபாடியம் செய்த சிவஞான சுவாமிகள்

“மே சரியை கிரியை யோகங்கள் மேலாம் நன்னெறியாகிய ஞானத்தைக்காட்டியல்லது வீடுபேற்றைக் கொடாவாகலான் “

என்று சிவஞான மாபாடியத்தில் கூறிப்போந்தார்.

இவ்வாறு தமது முந்தைய பிறப்புகளிலே சரியை, கிரியை, யோகமாம் சாதனைகளைச் செய்து முற்றியவர்கள் இப்பிறப்பில் ஞானிகளாகப் பிறப்பார்கள். இது இறைவன் உலக மற்றும் மக்களின் நன்மைக்காக செய்விப்பது. இவர்களையே அவதாரங்கள் என்பர். சம்பந்தர், அப்பர், சுந்தரர் முதலானோர் இவ்வாறானவர்கள் என்பது அவர்களுடைய தேவார மற்றும் பெரிய புராண வரலாற்றுக் குறிப்புகளிலிருந்து தெரிகின்றது. இவர்கள் சாமு சித்தர்கள் எனப்படுவர்.

 

  1. புரட்சிச் சித்தர்கள்: இந்த புரட்சிச் சித்தர்களின் ஆன்மீகப் பாடல்களில் வைதிக சமயமரபு முறைகளைப் பழித்தும், இழித்தும், சாடியும் கூறுகின்ற சமூகப்புரட்சிக் கருத்துக்கள் விரவியிருக்கும். பட்டினத்தார் (திருமுறை பாடிய பட்டினத்தார் வேறு ), சிவ வாக்கியர் போன்றோரின் பாடல்களில் இவற்றைக் காணலாம்.

 

நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே

சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா

நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்

சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ

 

என்ற சிவ வாக்கியர் பாடல் சிவாஜி கணேசன் முதன்முதல் நடித்து வெளிவந்த பராசக்தி திரைப்படத்திலும் கையாளப்பட்டிருந்தது.

 

“ஐயிரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமைதான்

கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே

மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும்

துய்ய காயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே

 

என்ற சிவாக்கியர் பாடலும் கமலஹாசனின் “ஆளவந்தான்” திரைப்படத்தில் எடுத்தாளப்பட்டுள்ளது. தூமை என்றால் தீட்டு. காயம் என்றால் உடம்பு.

 

தாய்மொழி பேணார்; நாட்டினை நினையார்;

தம்கிளை நண்பருக் கிரங்கார்

தூயநல் அன்பால் உயிர்க்கெலாம் நெகிழார்;

துடிப்புறும் ஏழையர்க்க கருளார்

போய்மலை ஏறி வெறுங்கருங் கற்கே

பொன்முடி முத்தணி புனைவார்

ஏய்ந்தபுன் மடமை இதுகொலோ சமயம்

ஏழையர்க் கிரங்குமென் நெஞ்சே

 

என்ற தடங்கண் சித்தர் பாடலும் இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான, சிந்தனையைத் தூண்டுகின்ற சித்தர் பாடல்களில் ஒன்று.  

ஞானச்சித்தராகிய திருமூலரின் திருமந்திரத்திலும் கூட இவ்வாறான புரட்சிக் கருத்துக்கள் விரவியுள்ளன.

 

பத்தியும் இன்றித் தனிஞானம் தான்இன்றி

ஒத்த விடையம் விட்டுஓரும் உணர்வின்றி

பத்தியும் இன்றிப் பரன்உண்மை இன்றிஊண்

பித்தேறும் மூடர் பிராமணர் தாம்அன்றே

 

என்றதிருமந்திரப் பாடல் வெற்றுப் பிராமணர்களைச் சாடுகின்றது.

 

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்

குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்

குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்

குருடும் குருடும் குழி விழுமாறே

என்ற திருமந்திரப் பாடல் போலிக் குருமார்களைச் சாடுகின்றது.

 

புரட்ட்சிக்கவி பாரதியாரையும் ஒரு புரட்சிச்சித்தராகக் கொள்ளலாம்.

 

  1. அநாதி சித்தர்: இது எல்லாம் வல்ல சித்தனான இறைவனைக் குறிக்கும். இறைவனும் ஒரு சித்தனே. எல்லாம் வல்ல சித்தன். இயல்பாகவே கட்டுகள் இல்லாத சித்தன். ஆதிச்சித்தருக்கும் ஆதியான அநாதி சித்தன். சிவனே மதுரையில் எல்லாம் வல்ல சித்தராக வந்த படலமும், கல்லானைக்குக் கரும்பு கொடுத்த படலமும் திருவிளையாடற் புராணத்தில் உள்ளது. இவ்வாறு கரும்பை வாங்கித் தின்ற கல்லானையின் சிலை சொக்கநாதர் சந்நிதி வாசலில் இன்றும் உள்ளது.

 

ஆகவே சித்தர்களுடைய அனைவரையுமோ அல்லது அல்லது அவர்கள்து பாடல்கள் அனைத்தையுமோ அதிலுள்ள கருத்துக்களையோ, போதனைகளையோ அப்படியே நாம் பிரமாணமாக எடுக்க இயலாது. கொள்ள வேண்டியதைக்கொண்டு தள்ள வேண்டியதைத் தள்ள வேண்டியது நமது கடன். இதற்கு இவ்வகையான வகைப்படுத்தும் அணுகுமுறை பயனுள்ள்தாக அமையும் . இதற்கு மேலாக மனிதர்களாகிய நமக்குள்ள ஆறாவது அறிவாகிய பகுத்தறிவும், நமது இட்டப்படி தேர்ந்து நடக்கும் சுதந்திரமும் எம்மை வழி நடத்த நாம் வழிவிடவேண்டும்.     

           

.