சக்கரவாளக் கோட்டம் எனும் பூம்புகார்ச் சுடுகாடும்

சக்கரவாளக் கோட்டம் எனும் பூம்புகார்ச் சுடுகாடும்

சிவ பரத்துவமும்

சிவதீபன்

இறுதியாம் காலந் தன்னில் ஒருவனே இருவ ருந்தம்

உறுதியின் நின்றார் என்னின் இறுதிதான் உண்டா காதாம்

அறுதியில் அரனே எல்லாம், அழித்தலால், அவனால் இன்னும்

பெறுதுநாம் ஆக்கம் நோக்கம் பேரதி கரணத் தாலே .

என்கின்றது சிவஞான சித்தியார்.

”ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை

ஏழை பங்காளனையே பாடேலோர் எம்பாவாய்”

என்கின்றது திருவாசகம்.

இதனையே தம்பி சிவதீபன் இதை மணிமேகலை என்னும் தமிழ்க் காப்பியச் செய்தி கொண்டு அழகாகத் தந்துள்ளார் இக் கட்டுரையில்.

  • இ. லம்போதரன், கனடா சைவ சித்தாந்த பீடம்

“ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்

மாண்டார் வருவரோ!? மாநிலத்தீர்!?” என்பது ஔவையார் வாக்கு. ஆனால் மானுட வர்க்கம் தனக்கு அன்பானவர்கள் இறந்து போனால், “என் உயிரை எடுத்து கொண்டு போன உயிரை கொடுத்துவிடு” என்று தெய்வங்களிடம் வேண்டுவது வழக்கம்.

இப்படி ஒரு காட்சி மணிமேகலை என்னும் தமிழ் காப்பியத்தில் அழகாக வருகின்றது!!, அதற்கு தெய்வம் ஒன்று கூறும் பதில்தான் மிக அருமையானது.

அது பூம்புகார் தொன்னகரில் உள்ள ஒரு சுடுகாடு அந்தச் சுடுகாட்டிற்கு ஒரு பெயர் உண்டு, அதனை சக்கரவாளக்கோட்டம் என்று அழைப்பர், அந்த சுடுகாட்டின் காட்சிகள் மணிமேகலையில் வர்ணிக்கப் படும் விதம் தமிழன்னையின் தகைமையை நமக்கு பலநூற்றாண்டுகள் கழித்தும் எடுத்துக் காட்டுகின்றன.

அந்தச் சுடுகாட்டில் பலவிதக் கட்டுமானங்கள் இருந்ததாம்,

“நிறை கல் தெற்றியும் இறைக் களச் சந்தியும்

தண்டும் மண்டையும் பிடித்துக் காவலர்

உண்டு கண் படுக்கும் உறையுள் குடிகையும்

தூமக் கொடியும் சுடர்த் தோரணங்களும்

ஈமப் பந்தரும் யாங்கணும் பரந்து

சுடுவோர் இடுவோர் தொடு குழிப் படுப்போர்

தாழ் வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர்

இரவும் பகலும் இளிவுடன் தரியாது

வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும்” என்பது அவ் வரிகள்,

அங்கு இறந்த வீரர்களுக்கு வைக்கப் பெற்ற நடுகல் முற்றங்களும் வழிபடு களங்களும், ஈமப்புகை வானளாவி எழுவது பேன்ற “தூமக்கொடி” தோற்றமும், ஈமத்தீ அங்கு வைக்கப் பெற்ற விளக்கு தோரணங்கள் போலவும் ஈமச்சிதை மழையில் நனையாமல் இருக்க இடப்பட்ட பந்தல் முதலியவற்றுடனும் அது காட்சி அளித்ததாம், அங்கே இறந்தவர்களை தாழியில் வைத்து புதைப்பவர்களும் நேரடியாக குழியில் அடக்கம் செய்பவர்களும் இடையறாது வந்தும் சென்றும் இருந்தார்களாம்

அங்கு எழுந்த ஓசைகள் எப்படி இருந்தன என்றால்,

“நெஞ்சு நடுக்குறூஉம் நெய்தல் ஓசையும்

துறவோர் இறந்த தொழு விளிப் பூசலும்

பிறவோர் இறந்த அழு விளிப் பூசலும்

நீள் முக நரியின் தீ விளிக்கூவும்

சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும்

புலவு ஊண் பொருந்திய குராலின் குரலும்

ஊண் தலை துற்றிய ஆண்டலைக் குரலும்

நல் நீர்ப் புணரி நளி கடல் ஓதையின்

இன்னா இசை ஒலி என்றும் நின்று அறாது”

 

என்கிறார் ஆசிரியர்

அஃதாவது நெய்தல் நிலத்தில் இயல்பாக எழும் நெஞ்சு நடுக்குறும் ஊதல்காற்றின் ஒலியோடு துறவிகளின் மரணத்திற்காக எழும் தொழுகை ஒலிகளும், இல்லறத்தார்க்கு எழும் அழுவொலிகளும், பிணச்சதைகளை உண்ண வந்த ஆந்தை கோட்டான் முதலிய தீய புட்களின் ஒலிகளும், நரியின் கூவலும், கடலின் அலை ஓசையும் இடையறாது கேட்டு கொண்டிருந்ததாம்.

மேலும் அந்த சுடுகாட்டில் என்ன மாதிரியானவர்கள் என்ன மாதிரியான மரத்தடியில் வாழ்ந்தனர் என்றும் காட்சிகள் வருகின்றன, இவர்களில் பெரும்பாலானோர் “சைவ சமயத்தின் அகப்புறச் சமயத்தினர்களாக இருக்கிறர்கள்”,

“சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு

மடைதீ உறுக்கும் வன்னி மன்றமும்

விரத யாக்கையர் உடை தலை தொகுத்து

ஆங்கு இருந் தொடர்ப் படுக்கும் இரத்தி மன்றமும்

பிணம் தின் மாக்கள் நிணம் படு குழிசியில்

விருந்தாட்டு அயரும் வெள்ளிடை மன்றமும்”

இங்கு மன்றம் என்பது மரத்தடியை குறிக்கிறது என்று கொள்ளலாம்

அவ்வகையில் வன்னிமரத்தடியில் சுடலையில் நோன்பிருப்போரும் (காளாமுகர்களாக இருக்கலாம்), எலும்புகளை அணியும் (விரத யாக்கையர்) மாவிரதியர் இரத்தி என்னும் மரத்தடியில் உடைந்த தலைகளை கோர்த்து அணிந்து கொண்டும் பிணந்தின்னும் ஒருவகை நோன்பிகள் வெள்ளிடை என்ற விளா மன்றத்திலும் இருக்கிறார்களாம்”,

தொடர்ந்து அந்த சுடுகாட்டில் என்ன மாதிரியான பொருட்கள் கிடந்தன என்று ஆசிரியர் கூறுகிறார்.

“அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும்

வெள்ளில் பாடையும் உள்ளீட்டு அறுவையும்

பரிந்த மாலையும் உடைந்த கும்பமும்

நெல்லும் பொரியும் சில் பலி அரிசியும்

யாங்கணும் பரந்த ஓங்கு இரும் பறந்தலை”

 

என்பது வரிகள்,

நெருப்பு எடுத்து வந்த சட்டிகளும், நீர் தெளிக்கும் பானைகளும், சிதைந்த பாடைகளும், கிழிந்த துணிகளும் (அறுவைகள்), பிணத்திற்கு அணிந்து களையப்பட்ட மாலைகளும், அதற்கு இடப்பட்டு சிதறிக்கிடக்கும் வாய்க்கரிசி முதலியவையும், உடைக்கப்பட்ட கொள்ளிக் குடங்களும், இறைக்கப் பட்ட நெல்லும் பொரியும் எங்கும் சிதறிக் கிடக்கின்றனவாம்!!

இப்படியாக இந்த சுடுகாட்டின் காட்சிகளை மணிமேகலா தெய்வம், மணிமேகலையாம் காப்பிய நாயகிக்கு கூறிக் கொண்டே மனிதர்களின் விசித்திர மனப்பான்மையை இகழ்ந்தும் உரைக்கிறது.

 

மணிமேகலா தெய்வம் கூறுகிறது: இப்படிப் பட்ட கொடிய சுடுகாட்டிற்கு தினம் தினம் தவம் முயன்ற பெரியோர்களும், தனவந்தர்களும், இளைமையான பெண்களும், சிறிய பாலகர்களும், இளைமையான ஆண்களுமாக எண்ணற்றோர் இரக்கமின்றி எமனால் கொல்லப்பட்ட பிணங்களாக வந்து சேர்கிறார்கள் இதனைக் காணும் மனிதர்கள் யாரும் ஒருநாள் கூட அறமாக வாழவேண்டும் என்ற உணர்வின்றி பணம் சேர்ப்பதிலும், களியாட்டம் போடுவதிலும் குறியாக இருக்கிறார்கள் இவர்களை விட அறிவற்ற ஜென்மங்கள் இருக்க முடியுமா!? என்கிறது.

“தவத் துறை மாக்கள்,மிகப் பெருஞ் செல்வர்,

ஈற்று இளம் பெண்டிர், ஆற்றாப் பாலகர்

முதியோர் என்னான் இளையோர், என்னான்

கொடுந் தொழிலாளன் கொன்றனன் குவிப்ப

இவ்வழல் வாய்ச் சுடலை தின்னக் கண்டும்

கழி பெருஞ் செல்வக் கள்ளாட்டு அயர்ந்து

மிக்க நல் அறம் விரும்பாது வாழும்

மக்களின் சிறந்த மடவோர் உண்டோ?”

 

 என்பது அப்பாடல் வரிகள்

இவ்வாறு கூறும் மணிமேகலா தெய்வம் முன்பு *”சார்ங்கலன், என்ற வேதியச்சிறுவனுக்கும் அவனது தாய்க்கும் அங்கு நிகழ்ந்த சம்பவம் ஒன்றை கூறுகிறது.

சிவதீபன்: சார்ங்கலன் என்னும் வேதியச் சிறுவன் அந்த சக்கரவாளக் கோட்டத்து சுடுகாட்டுக்கு அருகே ஒருநாள் தனிவழியே செல்லும் போது அங்கு இருந்த பேய்மகள் ஒருத்தி பிணம் ஒன்றின் உறுப்புகளை இது இது என்று கூட அறியாது வாரித் தின்று களியாட்டம் ஆடுவது கண்டு மிகஅஞ்சி ஓடி தன் தாயிடத்து வந்து “பேய் ஒன்றை கண்டு அஞ்சி விட்டேன்” என்று கூறி விழுந்து இறந்து விட்டான்”,

சார்ங்கலன் என்போன் தனி வழிச் சென்றோன்,

இரும் பேர் உவகையின் எழுந்து ஓர் பேய் மகள்

புயலோ குழலோ கயலோ கண்ணோ

குமிழோ மூக்கோ இதழோ கவிரோ

பல்லோ முத்தோ என்னாது இரங்காது

கண் தொட்டு உண்டு கவை அடி பெயர்த்து

தண்டாக் களிப்பின் ஆடும் கூத்துக்

கண்டனன் வெரீஇ கடுநவை எய்தி

விண்டு ஓர் திசையின் விளித்தனன் பெயர்ந்து ஈங்கு

எம் அனை  காணாய் ஈமச்சுடலையின்

வெம்முது பேய்க்கு என் உயிர் கொடுத்தேன் என

தம் அனை தன் முன் வீழ்ந்து மெய் வைத்தலும்”

 

என்பது வரிகள்.

மகன் மாண்டது கண்ட அந்த கௌதமை என்ற பார்ப்பனப் பெண், அறியாத பாலகனை பயமுறுத்தி கொன்றது நியாயமா? என்று வினவும் பொருட்டு தன் மகனின் பிணத்தை எடுத்து கொண்டு சக்கரவாளக் கோட்டத்தின் வாசலுக்கு வந்து மிகத் துயரத்துடன் சக்கரவாளக் கோட்டத்து உறையும் சம்பாபதி தெய்வத்திடம் முறையிட்டாள். அது கண்டு மனம் இரங்கிய சம்பாபதி தெய்வம் அவள் முன் தோன்றி அவளது துயரம் பற்றி வினவியது.

“கடி வழங்கு வாயிலில் கடுந்துயர் எய்தி

இடை இருள் யாமத்து என்னை ஈங்கு அழைத்தனை

என் உற்றனையோ? எனக்கு உரை” என்றே

பொன்னின் பொலிந்த நிறத்தாள் தோன்ற,”

 

 என்பவை வரிகள்

அதற்கு அந்த பார்ப்பனப் பெண், என்மகன் அறியாச் சிறுவன்; அவனை பயமுறுத்தி பேய் ஒன்று கொன்று விட்டது. கருணையே வடிவமான நீ இருக்கும் இடத்தில் இது நடக்கலாமா? என்று கேட்க அதற்கு சம்பாபதி தெய்வம்,

“அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா(து)

பிணங்கு நூல் மார்பன் பேதுகந்தாக

“ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது”

மா பெருந் துன்பம் நீ ஒழிவாய்”

 

என்று உன் மகன் வினைக்கணக்கின் படியே இறந்தான் என்று கூறியது.

அதனை ஏற்காத அந்த தாயானவள்,தன் உயிரை எடுத்து கொண்டு மகன் உயிரை தரவேண்டும், ”இவன் பிழைத்தால் கண் தெரியாத என் கணவனை காப்பான்” என்று வேண்டினாள்,

“என் உயிர் கொண்டு இவன் உயிர் தந்தருளில்

என் கண்ணில் கணவனை இவன் காத்து ஓம்பிடும்,

இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு என்றலும்”

 

என்பது வரிகள்

அது கேட்டு இரங்கிய தெய்வம் கூறியது: “இந்த உலகத்தில் ஒரு உயிர்க்கு ஒரு உயிர் மாற்றாக எடுக்கப் படும் என்றால் அரசர்கள் சாவார்களா? நாட்டை ஆளும் அரசர்களுக்காக உயிர்விட துணியாதவர் யாராவது உண்டா? ஆனால் அப்படி யாரும் உயிர் தர முடியாததால்தான் இந்த சுடுகாட்டிலேயே ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசர்களின் பிணங்களே புதைக்கப் பட்டுள்ளது காண்பாயாக” என்று தேற்றுகிறது.

“உலக மன்னவர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர்

இலரோ!? இந்த ஈமப் புறங்காட்டு

அரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம்

நிரயக் கொடு மொழி நீ ஒழிக என்றலும்”

 

என்பவை வரிகள்

ஆயினும் ”ஆயிரம் வரங்களை தரும் தெய்வம் நீயே இப்படிச் சொல்லாமா? என் மகனை உன்னால் உயிர்த்து எழச் செய்யமுடியும் இல்லை என்றால் நானும் இறப்பேன்” என்று அந்த தாயானவள் மன்றாடுகிறாள்

“தேவர் தருவர் வரம் என்று ஒரு முறை

நான்மறை அந்தணர் நல் நூல் உரைக்கும்

மாபெருந் தெய்வம் நீ!!அருளாவிடின்

யானோ காவேன்!? என் உயிர் ஈங்கு”

 

என்பது வரிகள்

அதற்கு அந்த தெய்வம் கூறும் பதில்தான் மிக அற்புதம்.

“ஊழி முதல்வனால் அன்றி வேறு யாராலும் இறந்த உயிரை திருப்பி தர இயலாது” என்று கூறுகிறது. மற்றைய தேவர்களாலும் இறந்த உயிரை திருப்பி தரவியலாது!! என்றும் கூறுகிறது. ”அதனால் நீ இது ஊழ்வினை என்று கருதி மகனை அடக்கம் செய்துவிட்டு போ” என்று சமாதானம் செய்து அனுப்புகின்றது.

“ஊழி முதல்வன் உயிர் தரின் அல்லது

ஆழித்தாழி அகவரைத் திரிவோர்

தாம் தரின் யானும் தருகுவன் மடவாய்

ஈங்கு என் ஆற்றலும் காண்பாய்”

 

என்பது வரிகள்

அதாவது ”ஊழிமுதல்வனால் மட்டுமே இறந்த உயிரை மீட்டு தர முடியும்!! அவரல்லாது வேறு யாராவது மீட்டு தரமுடியும் என்றால், நானும் உன் மகனை மீட்டுத் தருகிறேன்” என்று கூறி தனது விஸ்வரூபத்தை காட்டுகின்றது

அதில் எண்ணிறந்த கோடி அண்டங்களும் அநேக தேவர்களும் நட்சத்திர மண்டலங்களும் தெரிகின்றன. அப்படிப்பட்ட சம்பாபதி தெய்வமே தன்னால் இறந்த உயிரை மீட்கமுடியாது என்று கூறிமறைகிறது.

 

அந்தச் சம்பாபதி தெய்வம் கூறும் ஊழிமுதல்வன் சாக்ஷாத் சிவபரம்பொருளே அன்றி வேறில்லை என்று கொள்ளவே இடம் இருக்கிறது;ஆயினும்

இது பௌத்த இலக்கியம் ஆதலால் ஊழிமுதல்வன் சிவன்தான் என்று பலர் உரை கொள்ளவில்லை. ஆயினும் ஊழிமுதல்வன் புத்தர்தான் என்றும் மணிமேகலை கூறவும் இல்லை என்பது குறிக்கத் தக்கது.

ஊழிக்குப் பிறகும் ஒரு தெய்வம் இருந்தால் அவரே ஊழிமுதல்வன் ஆவார், அனைத்தையும் அழித்து தன்னுள் ஒடுக்கும் ஒடுக்குதல் கர்த்தவான, நொடித்தான் என்னும் ஸ்ரீகண்ட பரமேஸ்வரனே ஊழியை நடத்தித் தன்னுள் பிரபஞ்சத்தை ஒடுக்குபவர். திரும்பவும் படைப்பு அவரிடத்து இருந்தே தொடங்க வேண்டும் என்பதும் இதில் பெறப்படும் உண்மை. ஆதலால் சிவபரம்பொருள் ஒருவரே ஊழிமுதல்வன் என்று ஞானசாத்திரங்கள் விளக்குவதும் இங்கு எண்ணத்தக்கதாம்.

 

புத்தரைப் பலவிதமாக மணிமேகலை போற்றினாலும் ஓரிடத்திலுங்கூட அவர்தான் ஊழிமுதல்வன் என்று கூறவில்லை ஆனால் வழிபடப் படும் கடவுளர்களில் முதன்மையானவர் சிவபெருமான் மட்டும்தான் என்று முதலிலேயே “விழாவறை காதையில்” மணிமேகலையில் வந்து விடுகிறது.

“நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலா

பதி வாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறு ஆக”

 

என்று சிவபெருமானே முதன்மை தெய்வம் என்று மணிமேகலையே குறிக்கின்றது..

மலர்வனம்புக்க காதையிலும், உதயனனுடைய அழகினைக் கூறுகையில் முருகப் பெருமானது அழகு பேசப்படும் இடத்தில் சிவபரத்துவம் காட்டப் படுகிறது. ஆகையால் சம்பாபதி தெய்வம் கூறிய ஊழிமுதல்வன் சிவபரம்பொருளே என்று கொள்ளவே மணிமேகலையில் பல இடங்களில் இடம் உள்ளது. மணிமேகலை ஒரு பௌத்த நூல் அதில் பௌத்த அறச்செய்திகள் பல விதந்து ஓதப்படுகின்றன என்றாலும் கூட அதிலும் சிவபரத்துவம் மலிந்து கிடப்பது நடுநிலை அறிவுடன் ஆய்ந்தறிந்து எண்ணுவோருக்கு ஏற்றம் தரும் இன்பச் செய்தியாகும்.

திருச்சிற்றம்பலம்🙏🏻🙂

*சிவதீபன்*
📱9585756797