பித்ரு கடன்

 

பித்ரு கடன்

வைத்திய கலாநிதி இ. லம்போதரன் MD

சைவ சித்தாந்த பீடம், கனடா

www.knowingourroots.com

 

ஜீவதோர்  வாக்ய கரணாத்

ப்ராத்யாப்தம் பூரி போஜணாத் 

கயாயாம் பிண்ட தாணாத்

த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய

 

பித்ரு கடனும் புத்திரர்களும்:

அம்மா, அப்பா உயிரோடு இருக்கும்போதே அவர்கள் மனம் மகிழும்படி அவர்களைப் பார்க்கவேண்டும்; அவர்களுக்குச் சேவை செய்யவேண்டும். அவர்களை சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் இறந்த பின்னரும் அவர்களுக்கான பித்ரு கடன்களையும் தொடர்ந்து செய்யவேண்டும். தனக்குப் பின்னர் தனது பிள்ளைகள் இதைத் தொடர்ந்து செய்ய அவர்களைத் தயார்ப்படுத்தவேண்டும். இவ்வாறு பிள்ளைகள் பித்ரு கடன்கள் செய்யாவிட்டால் அவர்களின் பெற்றோர் புத் என்னும் நரகில் அழுந்துவார்கள் என்று நூல்கள் கூறுகின்றன. இந்த ‘புத் என்ற நரகத்தில் புகுவதிலிருந்து பெற்றோரைக் காப்பவர்களே புத்திரர் என்றும் இந் நூல்கள் கூறுகின்றன.

 

அடிப்படையில் நமது சமய பண்பாட்டு ஆசாரங்களை அனுசரித்து கடைப்பிடிக்கும் வகையில் நாம் நமது பிள்ளைகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே அறிவுறுத்தல். வெறுமனே அவர்களை வளர்த்து ஆளாக்கிவிடுவதால் பயனில்லை.

அந்தியேட்டி வரை:

தகனக் கிரியைகளின் பின்னர் அந்தியேட்டி வரை தினமும் இரவில் இறந்தவர்களுக்காக விளக்கு ஏற்றி உணவும், நீரும் படைத்து சிவபுராணமோ தோத்திரங்களோ பாடி வருதல் வேண்டும். முற்காலத்தில் இறந்தவர் பாவித்து துவைக்காமல் இருக்கும் அவரது வேட்டி அல்லது புடவை போன்ற ஆடை ஒன்றை ஒரு ஓலைப்பெட்டியிலோ, மரப்பெட்டியிலோ மடித்து வைத்து அதை ஓர் பலகை மணையில் அல்லது கதிரையில் திறந்துவைத்துஅதற்கு முன்னால் விளக்கு ஏற்றி இவ்வாறு வழிபாடு செய்து வருவார்கள். இந்த ஆடையை பின்னர் பாதுகாப்பாக அப்படியே சுவாமி அறையில் வைத்து இருப்பார்கள். அவர்களின் சிராத்த தினங்கள் வரும்போது மீண்டும் எடுத்து வைத்து விளக்கு ஏற்றி, படைத்து தோத்திரம் பாடி வழிபடுவார்கள். வருடங்கள் பல சென்றாலும் மடித்து வைத்துள்ள இந்த ஆடையில் இறந்தவரின் உடல் வாசனை தொடர்ந்தும் இருப்பதை ஒவ்வொரு முறை வெளியில் எடுக்கும்போதும் நாம் அவதானிக்கலாம். இது அவரே மீண்டும் எம்மிடையே வந்து நிற்பதுபோன்றதோர் உணர்வை ஏற்படுத்தும். ஆனால் இப்போது பெரும்பாலும் புகைப்படம் வைத்து வழிபடும் முறையே நடைமுறையில் உள்ளது.

 

அந்தியேட்டியின் பின் ஆண்டுத் திவசம் வரை:

துடக்குக் கழிவு என்னும் ஏகோதிட்ட தானம், அந்தியேட்டி முதலானவை முடிந்த பின்னர் முதலாவது ஆண்டுத் திவசம் வரை மாதம் தோறும் அவர்கள் காலமான திதியில் இவ்வாறு தொடர்ந்து மாசிக வழிபாடு செய்து வரல் வேண்டும்.

 

இறந்த இரண்டாம் மாசத்தில் இருந்து பன்னிரண்டாம் மாசம் வரை இறந்த திதியில் செய்யப்படும் பதினொரு மாசிகங்களுடன் மேலதிகமாக நான்கு மாசிகங்கள் உள்ளன. இவையாவன

  • முப்பதாம் நாளுக்கு முதல் மூன்று தினங்களுக்குள் ஒன்று,
  • நாற்பதாம் நாளில் இருந்து நாற்பத்தைந்தாம் நாளுக்குள் ஒன்று,
  • ஏழாம் மாசிகத்துக்கு முன் 170 இல் இருஃது 180 நாட்களுக்குள் ஒன்று,
  • ஆண்டுத்துவசத்துக்கு முன் இரு வாரங்களுக்குள் ஒன்று

என நான்காம். இயலுமாயின் இவற்றையும் சேர்த்துச் செய்தல் சிறப்பு.

ஆக மாசிகங்கள் மொத்தம் பதினைந்து.

 

மாசம் தோறும் அமாவாசை, பௌர்ணமியில்:

ஆண்டுத் திவசம் முடிந்தபின்னர் ஒவ்வொரு மாச அமாவாசையில் தகப்பனுக்கும் அவர் வழி பித்ருக்களுக்கும், ஒவ்வொரு பௌர்ணமியிலும் தாய்க்கும் அவர் வழி பித்ருக்களுக்கும் விரதம் இருந்து தர்ப்பணம், செய்து உணவு படைத்தல் முறை. இவ்வாறு ஒவ்வொரு மாதமும் செய்ய இயலாதவர்கள் தாய்க்கு சித்திரை மாசத்துப் பௌர்ணமியிலும், தந்தைக்கு ஆடி மாசத்து அமாவாசையிலும் இவ்வாறு தவறாது செய்து வருதல் வேண்டும்.

 

இலங்கையில் இன்று கிடைக்கின்ற மிகப்பழமையான தமிழ் நூல் சரசோதிமாலை ஆகும். இற்றைக்கு 700 ஆண்டுகளுக்கும் முன்னர் உமாபதிசிவாச்சாரியாரின் சமகாலத்தில் எழுதப்பட்ட இந்நூலிலே உள்ள தேவவிரதப் படலத்தின் இறுதிச் செய்யுள் மாதம் தோறும் வருகின்ற அமாவாசை பௌர்ணமி ஆகிய இரு தினங்களிலும் புனித நீர்நிலைகளில் நீராடித் தர்ப்பணம் செய்து தானங்கள் நல்கி பித்ருவழிபாடு செய்யவேண்டும் என்று தெளிவாகக் கூறுகின்றது.

 

திங்கள் தோறு இரண்டு உவாவும் சேர்ந்திடின் உதயகாலம்

கங்கையேயாதி நீரில் கலந்து சங்கற்பின் மூழ்கி

அங்குள பிதிரர் யார்க்கும் ஆரண நெறி வழாமற்

தங்கிய கடன்கள் செய்து தானங்கள் நல்குவாயே.

சரசோதிமாலை, 343ம் பாடல்

 

மஹாளயபட்சம்:

வருடந்தோறும் புரட்டாசி மாசத்து அமாவாசை வரையுள்ள மஹாளய பட்சம் எனும் இரு வாரங்கள் இறந்துபோன எமது முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்தல் வேண்டும்.. இயலாதவர்கள் இறுதி நாளாகிய மஹாளய பட்ச அமாவசையிலாகிலும் தர்ப்பணம், படையல் செய்து தோத்திரம் சொல்லி வழிபட்டுவரவேண்டும். இக்காலத்தில் யமலோகம், நரகலோகம் முதலான உலகங்களில் உள்ள எமது முன்னொர்கள் பூமிக்கு ஒரு இடைக்கால விடுமுறையில் வருகின்றார்கள்.

 

சிரார்த்த திதி தவறினால்:

ஒவ்வொரு வருடமும் பெற்றோரின் ஆண்டு சிரார்த்தத்தை அவர்கள் காலமான மாசத்து திதியில் தவறாது செய்துவரல் வேண்டும். சிரார்த்த திதி தெரியாவிட்டால் அவர்கள் இறந்த மாசத்து அமாவாசையில் சிராத்தம் செய்யலாம். உரிய நாளில் வேறு காரணங்களினால் சிரார்த்தம் செய்ய முடியாதுபோனால் அடுத்துவரும் அமாவாசையில்,  செய்யலாம். அல்லது அடுத்த மாசத்தில் வரும் அதே திதியில் செய்யலாம்.

 

மோட்சார்ச்சனை:
சிரார்த்தம் செய்யாமல் கோயிலில் மோட்ச அர்ச்சனை செய்யும் வழமை எங்கும் பரிந்துரைக்கப்படவில்லை. ஆனால் வீட்டில் சிராத்தம் செய்வதுடன் அன்று ஆலயத்திலும் தீபம் ஏற்ற ஒழுங்கு செய்யலாம். விசேட வழிபாடுகள் செய்யலாம். வீட்டில் சிவபுராணம் போன்ற தோத்திரங்கள் பாடி அவர்களுக்காக வழிபடலாம்.

 

சிரார்த்தம் செய்வதற்கு இட வசதி, பொருள் வசதி, ஆள் வசதி இல்லாதவர்கள் சற்பிராமணருக்கு அரிசி, காய்கறி முதலான பண்டங்லளைத் தானமாக கொடுத்து தான் போசனம் செய்க. அதுவும் இயலாதவர் பசுவுக்கு புல் இடுக. அதுவும் இயலாதவர் காக்கை எறும்பு போன்றவற்றுக்கு சிறிது உணவாயினும் இடுக.

 

இன்னொரு இறப்பு நிகழ்ந்தால்:

வீட்டில் தமது பெற்றோர், சகோதரர், பிள்ளைகள் போன்ற நெருங்கிய உறவில் வேறு ஒரு இறப்பு நிகழ்ந்தால் அவர்களின் ஆண்டுத்திவசம் வரை இதற்கு விதிவிலக்கு உண்டு. இக்காலத்தில் இறுதியாக இறந்தவரின் மாசிக வழிபாடு செய்து வரல் வேண்டும்.

 

நாந்திசிரார்த்தம்:

இல்லத்தில் திருமணம் முதலான நற்கருமங்கள் நடைபெறும் காலங்களில் அதற்கு முதல் நாள் எமது இறந்த முன்னோர்களை நினைத்து அவர்களுக்குப் படைத்து வழிபாடு செய்யும் முறைமை உள்ளது. பிராமணர்கள் இதை நாந்தி சிரார்த்தம் என்று அழைப்பர். தீபாவளி, பொங்கல் முதலான பண்டிகைகளுக்கு முதல் நாளும் இவ்வாறு படைத்து வழிபடும் மரபும் உள்ளது.

 

தான பலன்:

இக் காலங்களில் நாம் செய்யும் பிரார்த்தனைகள், தானங்களின் புண்ணியபலன் யார் குறித்துச் செய்யப்படுகின்றதோ அவருக்கு அவர் எவ்வுலகில் எந்நிலையில் இருந்தாலும் சென்றடையும்; அத்தோடு இவ்வாறு செய்பவருக்கும் அப்புண்ணியபலன் கிடைக்கும். இவ்வாறு இறந்தவர்களுக்கு அவர்கள் எப்பிறப்பில் பிறந்திருந்தாலும், சுவர்க்க நரகங்களில் இருந்தாலும் அவர்களுக்காக நாம் செய்யும் பிதிர்க்கடனை அவர்களிடம் கொண்டு சேர்ப்பவர்களே பிதிர்தேவர்கள்.

 

இதனால் மகிழ்வுறும் பித்ருக்களின் ஆசி எமது சந்ததியை வாழவைக்கும். இவற்றில் தவறுவதனால் வரும் பித்ருக்களின் ஏமாற்றம் அல்லது அதிருப்தி எமது சந்ததியினரைப் பாதிக்கும். சற்பாத்திரர் என்னும் தகுதியானவருக்குக் கொடுக்கும் தானங்களே பயனளிக்கும். தகுதி இல்லாதவருக்குக் கொடுக்கும் தானங்களும், அதிகாரம், ஆடம்பரம், விளம்பரம், பகட்டு, அசிரத்தை, உலோபித்தனம் ஆகியவற்றுடன் செய்யும் தானங்களும் பயனிளிக்கா; இவை தானம் செய்பவருக்குப் பாவத்தையும் சேர்க்கும். இத் தினங்களில் தமது உறவினர்களுக்கு கொடுக்கும் உணவு விருந்தோம்பல் எனும் இல்லறத்தார் கடமைக்குள் வருமே அன்றி தென்புலத்தாருக்குரிய தானத்துக்குள் அடங்காது. ஏழைகளுக்கு உணவு இடும் அன்னதானம், நித்திய சந்தியாவந்தனம் உள்ள பிராமணர்களுக்கு வழங்கும் பிராமண போசனம் எனும் அரிசி, மரக்கறி, தட்சணை, அடியவர்களுக்கு அன்னம் இடும் மாகேசுர பூசை, படிக்கின்ற மாணவர்களுக்கு வழங்கும் உணவு என்பனவே சிறந்த தானங்களாகும்.

 

ஆறுமுக நாவலரின் சைவவினாவிடையில் உள்ள குறிப்பு இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

 

வினா:மாகேசுர பூசையால் விளையும் பலம் ஏற்பவருடைய உயர்வு தாழ்வுகளினால் வேறுபடுமா?


விடை: ஆம். வைதிகப்பிராமணர் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலமும், சமய தீட்சிதர் ஒருவருக்கு அன்னதானம் செய்த பலமும் ஒக்கும். வைதிகப் பிராமணர் பதினாயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலமும், விசேஷ தீட்சிதர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும். வைதிகப் பிராமணர் லட்சம் பேருக்கு அன்னதானம் செய்த பலமும், நிருவாண தீட்சிதர் ஒருவருக்கு அன்னதானம் செய்த பலமும் ஒக்கும். வைதிகப் பிராமணர் கோடிபேருக்கு அன்னதானம் செய்த பலமும், சைவாசாரியர் ஒருவருக்கு அன்னதானம் செய்த பலமும் ஒக்கும்.

இரண்டாம் சைவவினாவிடை –367

பூதானம், பசுதானம், சுவர்ண தானம்:

தேவை உள்ள ஒருவரின் வாழ்வாதாரத்துக்காக வழங்கும் பசுதானம், பூ தானம் எனும் நிலம் கொடுத்தல், கிணறு குளம் வெட்டுதல், மரம் நாட்டுதல், கல்விக்கு உதவும் கல்விதானம் போன்றவை மிகச்சிறந்த பித்ருவழிபாட்டுத் தானங்கள் ஆகும். இவை அவை பயன் தரும் காலம் வரை புண்ணியப்பலனை இறந்தவருக்கும், அதனை வழங்கியவருக்கும் சேர்த்துக்கொண்டே இருக்கும்.

 

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,

ஆலயம் பதினாயிரம் நாட்டல்,

பின்னருள்ள தருமங்கள் யாவும்,

பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,

அன்னயாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

 

என்னும் பாரதியார் பாடல் இங்கு நோக்கத்தக்கது.

 

பிள்ளைகளுக்கு பலகாரம், பட்சணம், பால்:

சிறு பிள்ளைகள் இறந்தால் அவர்களுக்காக முதலாவது ஆண்டுத் திவசம் வரை முன் சொன்னபடி வழிபாடு செய்து வருவதோடு சிறு பிள்ளைகளுக்கு உணவு, பால், பட்சணம், பலகாரம், தின்பண்டம் கொடுத்து வருதல் வேண்டும். ஒரு வருடத்தின் பின்னர் ஆண்டு சிரார்த்தம் செய்யத் தேவை இல்லை. விரும்பினால் அத்தினங்களில் இவ்வாறு சிறுவர்களுக்கு உணவு, தின்பண்டம், பலகாரம், பட்சணம், பால் வழங்கி வரலாம்.

 

காசி, கயை, இராமேஸ்வரத்தில் பித்ருகடன்:

வசதி உள்ளவர்கள் தமது வாழ்க்கையில் ஒரு தடவையாவது இராமேஸ்வரம், காசி, கயா போன்ற புண்ணியதலங்களுச் சென்று வழிபட்டு அங்கு தமது பித்ருக்களுக்கு கடமை செய்யவேண்டும். இத் தலஙகளுக்குச் செல்லும்போது முதலில் பித்ருகடன் முடித்துவிட்டுத்தான் பின்னர் ஆலய வழிபாடு செய்தல் வேண்டும். இங்கெல்லாம் கேரள மரபுப் பெண்களும் பித்ருகடன் செய்யும் வழமையும் உள்ளது.

 

இலங்கையின் புண்ணிய தீர்த்தங்கள்:

இயலாதவர்கள் புண்ணிய தினங்களில் தமக்கருகில் உள்ள கீரிமலை, வில்லூன்றி தீர்த்தம், முகத்துவாரம், மாமாங்கம் முதலான புண்ணிய தீர்த்தங்களில் பித்ருகடன் ஆற்றலாம்.

 

கங்கையில் கடமை செய்தபின் சிரார்த்தம் செய்வதைக் கைவிடலாமா?

சிலர் காசியில் பிண்டம் இட்டால் அதன் பிறகு பித்ருகடன் செய்யத் தேவை இல்லை எனத் தவறாக வழி நடத்தப்படுகின்றார்கள். நமது இறுதி மூச்சு உள்ளவரை நாம் தவறாது செய்யவேண்டிய கடமை இந்த பித்ரு கடமை. பித்ருக்களுக்கு நாம் பட்ட கடன் நாம் உயிருள்ளவரைக்கும் கொடுத்துத் தீர்க்கமுடியாத கடன். நமது இறப்பின் பின்னர் நமது பிள்ளைகள் இத் தீராக்கடனைச் செலுத்தத் தொடங்குகின்றார்கள்.

 

யார் சிரார்த்தம் செய்யத் தேவை இல்லை?

ஒருவர் சன்னியாசம் எடுக்கும்போது அவர்களின் முழு நேர இறை வாழ்வின் சிவபுண்ணியபலன் அவரிலிருந்து தாய் வழியில் ஏழு தலைமுறைக்கும், தந்தை வழியில் ஏழு தலைமுறைக்கும், பிள்ளைகள், பெறாமக்கள் வழியில் ஏழு தலைமுறைக்குமாக மொத்தம் இருபத்தொரு தலைமுறைக்குப் போய்ச்சேர்கின்றது. இதனால் சன்னியாசிக்கு மட்டுமே பித்ருகடன் செய்வதில் இருந்து விதிவிலக்கு உண்டு. ஆனாலும் பட்டினத்தார், ஆதி சங்கரர் போன்றோர் துறவிகளாகவிருந்தாலும் விதிவிலக்காகத் தமது தாய்மாரின் இறுதிகிரியைகளைச் செய்திருக்கின்றார்கள்; தமது தாய்மாருக்கு அஞ்சலிப்பாடல்களும் பாடியிருக்கின்றார்கள்.

 

மற்றவர்களில் தங்கி வாழும் மாணவப்பருவத்தில் உள்ள பிரமச்சாரிகளுக்கும் பித்ருகடனில் இருந்து விதிவிலக்கு உண்டு. ஆனாலும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் வாழ்நாள் முழுதும் பிரமச்சாரியம் காத்த நைட்டிகப்,பிரமச்சாரியாகவிருந்தும் தமது தாயாரின் சிரார்தத்தை ஆண்டுதோறும் தவறாது செய்து வந்தார் என்று அறிகின்றோம்.

 

பெண்களும் சிரார்த்தம் செய்யலாமா?

பெண்கள் சிரார்த்தம் செய்ய வேண்டின் இன்னொரு ஆணுக்கு தர்ப்பை மூலம் அதிகாரம் கொடுத்து சிராத்தம் செய்விப்பதே இன்று வழமையாக உள்ளது. பலர் அறிந்திராவிட்டாலும் ஆகமங்களில் பெண்கள் சிரார்த்தம் செய்வதற்கான விதிகள் மிகத்தெளிவாக உள்ளன. ஸ்மிருதிகளின் சாரமான வைத்தியநாத தீட்சிதம் நூலிலும் இவ்விதிகள் கூறப்பட்டுள்ளன.

 

சிரார்த்தம் செய்யும் உரித்துடையவர்களுக்கு அந்த உரித்து ஒழுங்கில் இறந்தவருடைய கடன் மற்றும் முடிவுறாத கடமைகளிலும் சொத்துகளிலும் உரிமைப் பங்கு உண்டு. இதன் காரணமாக இடைக்காலத்தில் பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்படுவதற்காக சிரார்த்த உரிமையும் மறுக்கப்பட்டதெனலாம். இதனால் இடைக்காலத்தில் அவர்கள் சமத்துவத்தை இழந்தார்கள்.

 

ஆயினும் ஆணும் பெண்ணும் கல்வி, தொழில், சம்பாத்தியம் முதலானவைகளில் சமத்துவமாக வாழும் இன்றைய சமுதாயத்தில் கேரளத்தில் உள்ளது போன்று பெண்களும் இவ்வாறு பித்ருகடமைகளைச் செய்யலாம். அதுவும் பெண்வழிச் சொத்துரிமை மரபுள்ள யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பிரதேசத்துச் சைவத்தமிழ் மக்களுக்கு இது மிகவும் பொருத்தமானதாகும்.

 

                       ………………….நவின்ற தகனாதி

அவை தனக்கு இங்கு அதிகாரி அவர் இருபதின்மர்

ஆன இவர்தம் பெயரும் முறையும் அறைந்திடுவாம்;

குவை தரும் சீர்ப் புத்திரன், நன் மனைவி, மகள், அன்பு

கூர உடன் பிறந்தான், இங்கு உரைத்த இவர் மைந்தர்.

 

கூறுமவன் தாய், அரிய மருமகள், ஓங்கு அன்பு

குலவு சகோதரி, அவள் தன் புதல்வன், அருட் சபிண்டர்,

வீறி சமானோதகர், தாய்(ச்) சபிண்டர், சோதகர், தம்

மெய்ப்புதல்வர், சீடன் எனச் சன்வியன், குரவன், கொண்ட

பேறுபெறு மருகன், அன்பார் தோழன், அடல் அரசன்

பேசும் இவர் என்றறிக; பிறங்கி வரில் உண்மை

தேறு, பிரதானன் புத்திரன், ஒழிந்தோர் எல்லாம்

சேர் இரண்டாம் பிரதானர் என அறிக தெளிந்தே.  

 

 

குறித்த தகனம் முதலான அபர காரியங்களுக்கு வரிசையாய் அதிகாரிகள் இருபதின்மர் ஆவர். அவை வரிசைப்படி வருமாறு:

  1. புத்திரன் 2. மனைவி 3. மகள் 4. மகளின் புதல்வன் 5. சகோதரன் 6. சகோதரனின் புதல்வன் 7. பிதா 8. மாதா 9. மருமகள் 10. சகோதரி, 11. சகோதரி புதல்வன் 12. பிதிர்வழிச் சபிண்டன் 13. பிதிர்வழிச் சமானோதகன் 14. தாய் வழிச் சபிண்டன் 15. தாய் வழிச் சமானோதகன் 16. சீடன் 17. குரு 18. பெண் கொண்ட மருமகன் 19. தோழன் 20. அரசன். இவர்களுள் புத்திரனே பிரதான கருத்தா, ஏனையோர் இரண்டாம் பிரதானர் ஆவர்.
  • ஆசௌச தீபிகை, பாடல் 144, 145

சபிண்டர் என்றால் யாவர் என்று இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது. அதேபோல் தான் சமானோதகர் என்பதும்.

இங்கு சபிண்டர் என்பது தன்னில் இருந்து தொடங்கி ஏழு தலைமுறை வரை வருகின்ற உறவுகளாகும். ச- என்பது உடனான, சமனான என்று பொருள் தரும். பிண்டம் என்பது உடம்பு. ஒரே விதமான உடலை உடையவர் என்று பொருள். அதாவது பெரும்பாலும் ஒத்த பரம்பரை அலகுகளை தம்முடலில் கொண்டவர் என இக்கால அறிவியல் முறையில் கூறலாம்.

சமானோதகர் என்பது தன்னில் இருந்து எண்ண 8இல் இருந்து 12ம் தலைமுறை வரையுள்ள உறவுகளாகும். இங்கும் சமனான அல்லது ஒரேவிதமான உடல் கொண்டவர் ஆயினும் அவை சற்று தூரத்தில் உள்ளன. உதகம் என்பது குளிர் அல்லது உறை நிலை. ஒரே விதமான பரம்பரை அலகுகள் இருந்தாலும் அவை வெளிப்படையாக அன்றி உறங்குநிலையில் (unexpressed or dormant genes) உள்ளதாக இக்கால அறிவியலின் படி விளக்கலாம். 

இவர்களுள்ளும் முதல் மூன்று தலைமுறைக்குள் உள்ளவர்களை மிக்க உரிமையாக ஞாதியர் என்று கூறுவர். ஈழத்தமிழ் மரபில் இவர்களை துடக்குக்காரர் எனும் சொல்லால் அழைப்பர்.