சிலந்தி அரசனான வரலாறு

சிலந்தி அரசனான வரலாறு
குருவடி பணிந்து
இ. லம்போதரன்
www.knowingourroots.com

 மனிதப்பிறவியின் நோக்கம் இறைவனை அடைதலே. ஆனால் ஏனைய பிறவிகள் அவற்றுக்கு கொடுக்கப்பட்ட உடல், கருவிகள், உலகம், அனுபவங்கள் வாயிலாகப் பக்குவ முதிர்ச்சி பெற்று பின்னர் மேலான மனிதப்பிறவியில் பிறந்தே இறையை அடைதல் வேண்டும். ஆனாலும் இதற்கு விதி விலக்குகளும் உள்ளன. ஈ இறைவனை வழிபட்டு நற்கதி அடைந்த தலம் ஈங்கோய் மலை. யானையும் சிலந்தியும் வழிபட்டு நற்கதி அடைந்த தலம் திருவானைக்கா. திருவிளையாடற் புராணத்தின் நாரைக்கு உபதேசித்த படலமும், கரிக்குருவிக்கு முத்தி கொடுத்த படலமும் பன்றிக்குட்டிகளுக்கு பால் கொடுத்த படலமும் விலங்குகள் பறவைகள்கூட இறையை அடைவதற்கும் புண்ணிய பாவ காரியங்களுக்கும் விதி விலக்கல்ல என்று நமக்கு கூறுகின்றன.

அகலியை கல்ல தானாள் அரிபல பிறவி பெற்றான்
பகலவன் குலத்தில் தோன்றிப் பார்எலாம் முழுதும் ஆண்டு
நிகரிலா அரசன் ஆகும் சிலந்தி, நீடுகலம் போற்றச்
சகமதில் எலிதான் அன்றோ? மாவலி ஆய்த்துத் தானே!
                                                      -சிவஞான சித்தியார்-சுபக்கம்-134 

இப் பாடல் “நிகரிலா அரசனாகும் சிலந்தி” என்று சிலந்தி வழிபட்டு நற்கதி அடைந்த வரலாற்றையும் “எலிதான் அன்றோ மாவலி ஆயிற்று” என்று எலி நற்கதி அடைந்த வரலாற்றையும் கூறுகின்றன. தேவாரப் பாடல்களும் இவ்வரலாறுகளை உறுதி செய்கின்றன.

சிலந்தியும் ஆனைக் காவில் திருநிழற் பந்தர் செய்து
உலந்தவன் இறந்த போதே கோச்செங்க ணானும் ஆகக்
கலந்தநீர்க் காவிரி சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனிற் பிறப்பித் திட்டார் குறுக்கைவீ ரட்டனாரே
                                                     -திருநாவுக்கரசர் தேவாரம்

நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபம் தன்னைக்
கறைநிறத்து எலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட
நிறைகடல் மண்ணும் விண்ணும் அகன்றவான் உலகும் எல்லாம்
குறைவறக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே
                                                   -திருநாவுக்கரசர் தேவாரம்

திருச்சியில் உள்ள தலம் திருவானைக்கா. இந்த தலத்தின் தல விருட்சம் ஜம்பு நாவல் மரம். இதை தமிழில் வெண்ணாவல் என்பர். முன்னொரு காலத்தில் ஜம்பு முனிவர் இங்கிருந்து தவம் செய்தார். அவரை மூடி புற்று எழுந்து மரஞ் செடிகளும் வளர்ந்தன. அங்கு எழுந்த மரம்தான் தல விருட்சமான ஜம்பு நாவல் மரம். இது இற்றைக்கு நூறாண்டுகளுக்கு முன்னர் பட்டுப்போய் வெறும் பட்டையே எஞ்சியிருந்த காலத்தில் கோவிலுக்கு திருப்பணி செய்த கானாடுகாத்தான் செட்டியார் ஏகாதசருத்ர ஜபம் செய்வித்து இம்மரத்துக்கு அபிஷேகம் செய்வித்தனர். அன்றிலிருந்து தளைத்து வளர்ந்துள்ள மரம்தான் நாம் இன்று காணும் தலவிருட்சம்.

இங்கு முன்னர் ஜம்பு முனிவர் பூசை செய்த லிங்கத்துக்கு மேலே அங்கிருந்த சிலந்தி தினமும் விதானம் போல வலை பின்னி அதையே தன் வழிபாடாகச் செய்து வந்தது. அங்கு ஓர் யானையும் தினமும் நீரினால் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது. யானையின் நித்திய வழிபாடு சிலந்தி பின்னிய வலையைத் தினமும் சிதைத்தது. இதானல் ஆற்றாது கோபம் கொண்ட சிலந்தி ஒரு நாள் யானையில் துதிக்கையினுள் புகுந்து கடிந்துவிட்டது. வலி தாங்காத யானையும் துதிக்கையை அடித்து மோதி இறந்தது. அதனுள் இருந்த சிலந்தியும் மாண்டது. இச் சிலந்தியே அடுத்த பிறப்பில் சோழ இராஜ குடும்பத்தில் பிறந்தது.

இவன் தாய் இவனைப் பிரசவிக்கும்போது சோதிடர்கள் காலம் கணித்து இன்னும் சில நாழிகை காலம் தாழ்த்திப் பிறந்தால் இவன் சக்கரவர்த்தியாக உலகாள்வான் என்று கூறினர். இதனால் பிரசவத்தை இயற்கைக்கு மாறாக தள்ளிப்போடுவதற்கு தாய் சம்மதித்தாள். அவளை தலைகீழாகக் கட்டித் தூக்குமாறு பணித்தாள். இதனால் பிரசவமும் தாமதமாகி ஆண் குழந்தை பிறந்தது. காலந் தாழ்த்திப் பிறந்ததனால் அவன் கண்கள் இரத்தச் சிவப்பாக இருந்தன. இன்றைய மருத்துவத்தில் காலந்தாழ்த்திப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் இச் செங்கண்ணை subconjunctival haemorrhage என்று இன்றைய மருத்துவ விஞ்ஞானம் கூறுகின்றது. இவ்வாறு சிவந்த கண்ணுடன் பிறந்த காரணத்தால் இக் குழந்தைக்கு கோச் செங்கணான் என்று பெயரிட்டனர். சமஸ்கிருதத்தில் இவனை ‘ரெக்தாக்ஷ சோல’ என்று அழைப்பர். தாயும் பிறந்த குழந்தையைப் பார்த்துவிட்டு இறந்துவிட்டாள். இவனே பின்னால் கோச்செங்கட் சோழன் என்ற பெயருடன் அரசாட்சியேறி சோழ நாட்டை ஆண்ட மன்னன். இவன் எழுபது கோவில்களைக் கட்டியதாகச் சரித்திரம் கூறுகின்றது. அத்தனை கோவில்களும் யானைகளால் அடைய முடியாத கட்டட அமைப்புடன் கட்டப்பட்டவை. இந்த கட்டட அமைப்புக் கோவில்களை மாடக்கோவில்கள் என்று அழைப்பர். இவன் விஷ்ணு ஆலயங்களும் கூட அமைத்துள்ளான். வைணவ ஆழ்வார்களினால் பாடப்பட்ட ஒரேயொரு சைவ நாயன்மார் இந்த கோச்செங்கட் சோழனே.

முருங்கிலங்கு கனித்துவர் வாய்ப் பின்னைக்கேள்வன்
மன்னெல்லாம் முன்னவியச் சென்று வென்றிச்
செருக்களத்துத் திறலழியச் சென்ற வேந்தன்
சிரந்துணித்தான் திருவடிநும் சென்னி வைப்பீர்
இருக்கிலங்கு திருமொழிவாய் எண்டோள் ஈசற்கு
எழில்மாடம் எழுபதுசெய்து உலகம் ஆண்ட
திருக்குளத்து வளச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
                                                           – பெரியாழ்வார் திருமொழி

இவ்வாறு பெரியாழ்வார் நாச்சியார் கோயில் (திரு நறையூர்) பெருமாளைப் பாடும்போது எழுபது சிவாலயங்கள் எழுப்பிய சோழனால் கட்டப்பட்ட ஆலயம் என்று சிறப்பித்துப் பாடுகின்றார். இவ்வாறு பல வேறு வகையான கோவில் கட்டட அமைப்புகளைப பற்றி பின்வரும் அப்பர் சுவாமிகளின் தேவாரப் பாடலும் கூறுகின்றது.

பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங் கோயில் எழுபதினோ(டு) எட்டும் மற்றும்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
கருப்பறியற் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட்(டு) ஏத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே
                                                          – திருநாவுக்கரசர் தேவாரம்