சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுதல்

-சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுதல் –
இ. லம்போதரன்
கனடா சைவ சித்தாந்த பீடம்

சமய நூல்களைத் தாமாகவே வாசித்து தமது மனம் போனபடி பொருள் கொண்டு விபரீதமாக விளக்கம் சொல்பவர்கள் பற்றி அவதானமாக இருக்கவேண்டும். நூல்களில் இருப்பன எல்லாவற்றையும் அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது. நாம் கொள்ளும் பொருள் ஆறுமுகநாவலர் கூறியபடியபடி “சுருதி (நூல்), யுக்தி (பகுத்தறிவு), அனுபவம் (நடைமுறை) மூன்றுக்கும் முரணுறா வகையில் இருக்க வேண்டும்.

“தொன்மையவாம் எனும் எவையும் நன்றாகா,
இன்று தோன்றிய நூல் எனும் எவையும் தீதாகா,
துணிந்த நன்மையினார் நலம்கொள் மணி பொதியும் அதன் களங்கம்
நவையாகாது என உண்மை நயந்திடுவர்; நடுவாம் தன்மையினார் பழமை அழகு ஆராய்ந்து தரிப்பர்”

என்கிறது சிவப்பிரகாசம்.

சமய நூல்களை ஏழு விதமான அணுகுமுறைகளினூடாக அணுகிப் பொருள் காண முயலவேண்டும். எந்தச் சமய நூலாயிருந்தாலும் அதன் ஒரு பாடல் அல்லது பகுதிக்கு இதை ஒருமுறை பிரயோகித்துப் பாருங்கள். ஆயிரம் பாடல்களை மனனம் பண்ணி ஒப்புவிப்பதைவிட ஒரு பாடலை அல்லது பந்தியை இம்முறையில் அணுகுதல் அதி உயர்ந்த பலனைத் தரும்.

இந்த அணுகுமுறை எந்தச் சமயத்தின் சமய நூலுக்கும் பொருந்தும். சமயங்கள் கூறும் கருத்துகளை எழுந்தமான விதமாகப் புரிந்து பொருள் கொள்ளும் விபரீத விளைவுகளில் இருந்து எம்மைக் காக்கும். அதே சமயம் எமது ஆன்ம அறிவுப் பக்குவ நிலைக்கேற்ப படிப்படியான புரிதல்களைத் தந்து இறையருள் எம்மை வழி நடத்தவும் உதவும்.

முழுமையான புரிதல் என்பது இறை அனுபவம் ஆகும்; இதுவே பொருள் தேடலின் இறுதியும் அறுதியும் ஆகும். இவ்வாறு பொருளை அனுபூதி மூலம் அனுபவமாக உணர்ந்தோரே குரு. இவ்வாறான குருவின் அனுபூதியும் அதன் மூலமான இறையின் அருளும் இல்லாமல் சமய நூல்களைப் புரிதல் இயலாது.

இந்த ஏழு அணுகுமுறைகளாவன:

  1. இந்தப் பாடல் அல்லது பகுதி என்ன சொல்கின்றது?

ஓதும் அல்லது வாசிக்கும் பாடல் அல்லது பகுதியை வெறுமனே பொருள் தெரியாமல் வாயினால் மட்டும் படியாமல், வெறுமனே பாடமாக்கி மனனம் செய்து ஒப்புவிக்காமல் அதன் உள் பொதிந்துள்ள கருத்தை உள் வாங்கி எமது சொந்த வார்த்தைகளில் புரிந்து கொள்ளுதலும், மீட்டுச் சொல்லுதலும் பொருள் உணர்ந்து சொல்லுவதன் முதல் படியாகும். இதற்குப் பாடல்களைப் பிரித்துச் சொற்பதங்களின் பொருள்களை விளக்கும் நூல்களும், அறிஞர்களும் துணை செய்யலாம். ஆயினும் அவை சொல்லுவதே அறுதிப்பொருள் என்று வலிந்து கொள்ளாமல் திறந்த மனதுடன் இந்த உதவிகளைப் பயன்படுத்த வேண்டும். புனித நூல்களின் ஒரே வரிக்கு இறையருள் வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு அர்த்தத்தை வெளிப்படுத்தலாம்; ஒரே நபருக்கே வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு அர்த்தங்களையும் வெளிப்படுத்தலாம். இது அவரவர் ஆன்ம ஈடேற்றப் படிநிலைக்கு ஏற்ப இறையருளின் வழி நடத்தலாகும். இதை உணர்ந்து அணுகுவோரே பொருள் உணர்ந்து ஓத வல்லார்.

“எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான்
தீர மொழித்திறத்தின் முட்டறுப்பானாரும் – மொழித்திறத்தின்
முட்டறுத்த நல்லோன் முதனூல் பொருள் உணர்ந்து
கட்டறுத்து வீடு பெறும்.”
                                                                                                                                      – காக்கைபாடினியம்

“உண்மையை ஒரு புத்தகத்துள் அடக்கிவிட முடியாது
Truth cannot be contained within a book”
                                                                                                                                          – கொழும்புத்துறை யோகர் சுவாமிகள்

  1. இந்தப் பாடல் அல்லது பகுதி சொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் அது உணர்த்தியது என்ன?

இதற்கு நூலின் வரலாறு, காலம், யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் எந்த நோக்கத்துக்காகச் சொல்லப்பட்டது அல்லது வெளிப்படுத்தப்பட்டது போன்ற தகவல்கள் உதவி செய்யும். சொல்லப்பட்ட காலத்தில் நிலவிய அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுச் சூழலின் புரிதல் இதற்கு உதவி செய்யும். இவற்றில் மரபு ரீதியான தகவல்களையும், வரலாற்று ரீதியான தகவல்களையும் அந்தந்த நிலையில் நின்று முரணின்றிப் பார்க்கும் மனப்பக்குவம் வேண்டும். வரலாற்று ரீதியான தகவல்கள் வருகின்ற ஆதாரங்களுடன் காலத்துக்கு காலம் மாறும் இயல்பு உடையன; ஆனால் மரபுவழித் தகவல்கள் என்றும் மாறாதன. மேலும் நூல்களில் ஒரு காலத்தில் சொல்லப்பட்ட சொற்களும், பதங்களும், வசனங்களும் இன்னொரு காலத்தில் வேறொரு பொருளைத் தரலாம். அல்லது அன்று அந்தச் சூழலில் சொல்லப்பட்ட அந்த விடயம் இன்றைய சூழலில் பொருத்தமில்லாததாக, தேவையற்றதாக சில வேளைகளில் தற்கால நடைமுறைகளுக்கு முரணானதாகக்கூட இருக்கலாம். எந்த நோக்கத்துக்காக அன்று இது சொல்லப்பட்டது என்கின்ற புரிதல் சமய நூல்களைத் தற்காலத்தில் புரிந்துகொள்வதற்கும், ஏற்றுக்கொள்வதற்கும், அதில் சொல்லப்பட்டவைகளை தற்காலத்துக்கு ஏற்ப நடைமுறைப்படுத்துவதற்கும், நடைமுறைகளை விவாதித்து வேண்டிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் உதவும்.

  1. இந்தப் பாடல் அல்லது பகுதி கடவுள் அல்லது மெய்யைப் பற்றி எமக்குக் கூறுவது யாது? 
  1. இந்தப் பாடல் அல்லது பகுதி எம்மைப் பற்றியும், மற்ற உயிர்களைப் பற்றியும், இந்த உலகத்தைப் பற்றியும் எமக்கு கூறுவது யாது? 
  1. இந்தப் பாடல் அல்லது பகுதி என்னிடம் எதை எதிர்பார்க்கின்றது? 
  1. இந்தப் பாடல் அல்லது பகுதி எவ்வாறு நான் மற்றவர்களுடன், மற்ற உயிர்களுடன், உலகத்துடன் கொண்டுள்ள உறவை மாற்றுகின்றது? 
  1. இந்தப் பாடல் அல்லது பகுதி எவ்வாறு கடவுளுடன்/ மெய்யுடன் என்னை இணைத்துக்கொள்ளத் தூண்டுகின்றது? 

இந்த அணுகுமுறை இல்லாவிட்டால் நாமும்

சமய வாதிகள் தத்தம் மதங்களே

அமைவதாக அரற்றி மலைந்தனர்”

என்றும்,

விரதமே பரமாக வேதியரும்

சரதமாகவே சாத்திரம் காட்டினர்”

என்றும் மாணிக்க வாசகர் சொல்லும் சமயவாதிகளும், வேதியரும் போன்றதோர் பனுவல் சமுதாயமாகவே வாழ்க்கையைப் போக்கடித்துவிடுவோம்.