கர்ம பாவங்களுக்கு பரிகாரம் செய்து கழிக்கலாமா?

கர்ம பாவங்களுக்கு பரிகாரம் செய்து கழிக்கலாமா?

சைவ சித்தாந்த பீடம், கனடா

ஆம்; கழிக்கலாம். ஆனால் சில விதிமுறைகளின் படி செய்ய வேண்டும்.

1. முதலாவது நான் பாவம் செய்துவிட்டேன் என்று தெரியவேண்டும், வருந்த வேண்டும். இதற்குற என்ன செய்யலாம் என்று தேடவேண்டும்.

2. சோதிடர்கள் எழுந்தமானமாகக் கூறுகின்ற கடலை மாலை, தேசிக்காய் விளக்குப் பிராயச்சித்தங்களை அல்ல, வேத ஆகமங்களில் சொல்லப்பட்ட பிராயச்சித்தங்களை அறிந்தவர்களிடம் கேட்டறிந்து செய்யவேண்டும்.

3. தாங்கள் நேரடியாகச் செய்யமுடியாத ஹோமம், அபிஷேகம் முதலானவற்றை அவற்றுக்குரியவர்களிடம் பேசி அதற்குரிய தட்சணை கொடுத்தும் செய்விக்கலாம்.

4. இவ்வாறு பிராயச்சித்தங்களை வேத ஆகமங்களில் உள்ளவாறு அறிந்தௌ சொல்லக்கூடியவர்கள் இன்று அரிது. அவ்வாறு கேட்டு அறிந்தாலும் அதைச் செய்யக்கூடிய தினசரி சந்தியாவந்தனம், அனுட்டானம், ஆத்மார்த்த சிவபூசைக்ளை விதிப்படி செய்கின்ற புரோகிதர்களைக் காண்பதும் அரிது.


5. இச் சந்தர்ப்பங்களில் ஈழத்தில் எழுந்த சோதிட நூலான சரசோதிமாலையில் தீய கனவுகளுக்கு பரிகாரமாக குறிப்பிடப்பட்டுள்ள யாவும் தீய பாவங்களுக்கும் பொதுவான பரிகாரங்களாகக் கொள்ளலாம்.

அரசுறு பூசை செய்ய, அந்தணர்க்கு அமுது நல்க,
கருதிய தானம் பண்ணக், கங்கை நீராதி ஆட,
வரமுறு சுரபி தொட்டு வணங்கிடப், புராணம் கேட்கப்
புரையுறு கனாவிற் குற்றம் போமென மொழிவாரன்றே.

6. ஆனாலும் வேதாகமங்களில் சொல்லப்பட்ட சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நாற்பாதங்களைத் தவறாது கடைப்பிடித்து வாழ முயல்பவர்களுக்கும், வாழ்ந்து வருபவர்களுக்கும் அவர்கள் உலக வாழ்க்கையில் தர்மத்தில் இருந்தும் தவறிய பாவங்கள் பிராயச்சித்தம் செய்யாவிட்டாலும் தாமாகவே விலகும்.

7. அறிந்தும் தெரிந்தும் செய்த கொடிய பாவங்களுக்கு பிராயச்சித்தமே இல்லை.


ஆன்முலை அறுத்த அறனிலோர்க்கும்,
மாணிழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்
குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும்
வழுவாய் மருங்கில் கழுவாயும் உளவாம்
என்று பசு முலையை அறுத்தல், பெண்களின் கருச் சிதைத்தல், குருத்துரோகம் போன்றவற்றை இவ்வாறு கொடிய பாவங்கள் என்று புறநானூறு கூறுகின்றது.

பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தம் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே

என்று பிராயச்சித்தமே இல்லாத கொடிய பாவங்களைத் திருமூலர் திருமந்திரத்தில் கூறுகின்றார்.

8. ஆயினும் மனம் வருந்தி அழுந்தி வேண்டினால் இவற்றுக்குக்கூட அரிதாகச் சிலவேளைகளில் பாவ நீக்கம் கைகூடும் என்பதை திருவிளையாடற் புராணத்தில் உள்ள மாபாதகம் தீர்த்த படலத்தில் உள்ளற தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பிராமணனுக்கு அந்த மாபாதகத்தை இறைவன் மன்னித்தருளிய வரலாற்றால் அறிகின்றோம்.

9. ஆனாலும் செயத நன்றியை மறந்த செய்நன்றி கொன்றவர்களுக்கு எந்த பிராயச்சித்தமும் இல்லை. அவர்களுக்கு எவ்வழியாலும் பாவமன்னிப்பே இல்லை என்பதை,

செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என அறம் பாடிற்றே
என்னும் புறநானூற்று வரிகளாலும்,

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு
என்னும் திருக்குறளாலும் அறியலாம்.

10. இவ்வாறு பிராயச்சித்தமே செய்யமுடியாத பாவங்களும், பிராயச்சித்தம் செய்தாலும் முழுமையாகப் போக்கமுடியாத பாவங்களின் எஞ்சிய கூறுகளும் எம்மைத் தொடர்ந்து வரும். இதனை

உற்ற தொழில், நினைவு, உரையில் இருவினையும் உளவாம்
ஒன்று ஒறன்றால் அழியாது; ஊதண் ஒழியாது; உன்னில்
மற்று அவற்றின் ஒருவினைக்கு ஓர் வினையால் வீடு
வைதிக சைவம் பகரும் மரபில் ஆற்றப்
பற்றியது கழியும்; இது விலையால் ஏற்கும்
பான்மையுமாம்; பண்ணாது பலிக்கும் முன்னம்
சொற்றரு நூல் வழியில் வரின்; மிகுதி சோரும்;
சோராதது அங்கு அது மேலைத் தொடர்ச்சி யாமே.
என்னும் மெய்கண்ட சாத்திரத்தின் சிவப்பிரகாசச் செய்யுளால் அறியலாம்.


11. திருமுறைப் பாடல்களை அன்புடன் மனமுருகிப் பாடி வரப் பாவங்கள் கழியும் என்று நாயன்மார்கள் அப்பாடல்களிலேயே பல இடங்களிலும் அருளிச் செய்துள்ளார்கள். இது நம் எல்லாருக்கும் பொருத்தமான சுலபமான வழி. ஆயினும் பாவங்களை நினைந்து மனம் வருந்தி, இறைவனை நினைந்து காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓத வேண்டும்.

சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்

பற்றா நின்றாரைப் பற்றா பாவமே