சைவம் போற்றும் காதல்

சைவம் போற்றும் காதல்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கத்தமிழர் வாழ்வியலுடன் இணைந்த காதல் சார்ந்த அகத்துறை சைவத்தில் நன்கு உள்வாங்கப்பட்டுள்ளது. எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்று பதினெட்டுத் தொகுதிகளாகவுள்ளன சங்க இலக்கியங்கள். இவற்றில் எட்டுத்தொகை நூல்களில்

  1. 175 புலவர்களால் பாடப்பட்ட, 400 பாடல்கள் கொண்ட நற்றிணை;
  2. 205 புலவர்களால் பாடப்பட்ட, 400 பாடல்கள் கொண்ட குறுந்தொகை;
  3. 5 புலவர்களால் பாடப்பட்ட, 500 பாடல்கள் கொண்ட ஐங்குறுநூறு;
  4. 5 புலவர்களால் பாடப்பட்ட, 150 பாடல்கள் கொண்ட கலித்தொகை;
  5. 142 புலவர்களால் பாடப்பட்ட, 400 பாடல்கள் கொண்ட அகநானூறு;
  6. 13 புலவர்களால் பாடப்பட்ட, 22 பாடல்கள் கொண்ட பரிபாடல் (இவற்றில் 11 பாடல்கள் அகத்துறைக் காதற் பாடல்கள்) ஆகியவை

காதலுக்கென்றே உள்ள சங்க இலக்கியப் பாடல்களாகும். 

பத்துப்பாட்டு நூல்களில்

  1. 103 வரிகள் கொண்ட முல்லைப்பாட்டு,
  2. 583 வரிகள் கொண்ட மதுரைக்காஞ்சி,
  3. 188 வரிகள் கொண்ட நெடுநல்வாடை,
  4. 261 வரிகள் கொண்ட குறிஞ்சிப்பாட்டு,
  5. 153 வரிகள் கொண்ட பட்டினப்பாலை,

ஆகிய ஐந்து பாட்டுகளும் காதலைப் போற்றும் சங்க இலக்கியப் பாட்டுகளாகும். இப்படியாக எட்டுத்தொகை நூல்களிலே ஆறு நூல்களும், பத்துப்பாட்டு நூல்களிலே ஐந்து நூல்களுமாக சங்க இலக்கியப் பாடல்களில் பாதிக்கு மேல் காதலுக்கென்றே பாடப்பட்ட , காதலைப் போற்றும் பழந்தமிழரின் மரபுப் பாடல்கள். இப்பாடல்கள் அகத்துறைப் பாடல்கள் என்று அழைக்கப்படுகின்றன. அகத்துறைப் பாடல்களிலே உள்ளப்புணர்ச்சியைக் காதல் என்னும் சொல்லாலும், மெய்யுறு புணர்ச்சி என்னும் உடற்புணர்ச்சியைக் காமம் எனும் சொல்லாலும் குறிப்பிடுகின்றனர்.   

இது மட்டுமல்லாது ”நிலைத்தமிழின், தெய்வப் புலமைத் திருவள்ளுவர் உரைத்த மெய்வைத்த சொல்” என்று உமாபதி சிவாச்சாரியார் அவர்களால், மெய்கண்ட சாத்திர நூல்களில் ஒன்றான அவர் அருளிய நெஞ்சுவிடு தூது நூலிலே மெய் நூலாகப் போற்றப்பெறும் திருக்குறள் நூலில், 25 தலைப்புகளில் 250 குறள்கள் காமத்துப் பால் என்று காதலுக்கு என்றே தனிப்பட எழுதி வைத்திருக்கின்றார்.

 

இவ்வாறு சங்கத்தமிழர் வாழ்வியலோடு இரண்டறப் பிணைந்திருந்த காதல் என்னும் அகத்துறையை தன்னுள் உள்வாங்கி இறையுணர்வுடனும், இறையுடன் கொண்டாடும் உறவுடனும் பிணைத்து உள்ளுறை உவம வகையில் மெய்யியல் ஆக்கியது சைவமும் அதன் பன்னிரு திருமுறைப் பாடல்களும்.

8ம் திருமுறையில் உள்ள மாணிக்கவாசகரின் திருக்கோவையார், 11ம் திருமுறையில் உள்ள சேரமான் பெருமாள் நாயனார் பாடிய திருக்கைலாய உலா ஆகியவை சைவத்திருமுறைகளில் காதல் என்னும்  அகத்துறைக்கே உரிய தனித்துவமான பாடல்களாகும்.

வைணவத்தில் ஆண்டாள் பாடல்களிலும் அகத்துறை சிறப்பாகப் பாடப்பட்டுள்ளது. வட இந்தியாவில் ஹிந்தி மொழியில் மீரா இவ்வாறு கண்ணன் மேல் காதல் கொண்டு பாடல்கள் பாடியுள்ளார்.

முருகன் ஏன் தமிழ்க்கடவுள் என்று போற்றப்படுகின்றான்?

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே
.

மாயோன் என்னும் திருமாலும், சேயோன் என்னும் முருகனும், வேந்தன் என்னும் இந்திரனும், வருணனும் பண்டைத் தமிழர்களின் கடவுளராகத் தொல்காப்பியத்தில் கூறப்படுகின்றனர். ஆயினும் முருகன் மட்டுமே தம்ழிக்கடவுள் சிறப்புக்கு உரியவன ஆகின்றான்.

உலகிலேயே காதலுக்கு இலக்கணத்தை நூலாகத் தந்த கடவுள் சிவபெருமானை முழுமுதற் கடவுளாக் கொண்ட சமயம் சைவ சமயம். சிவபெருமான தமிழில் அருளிச்செய்த  இறையனார் அகப்பொருள் எனும் நூல்  காதல் இலக்கணங்களைக் கூறுகின்றது. திருமணத்துக்கு முன்னர் நிகழும் களவியல் காதல், திருமணத்தின் பின்னர் இல்லறத்தில் நிகழும் காதலாகிய கற்பியல் காதல் ஆகியவற்றை விளக்கும் இந் நூல் 60 சூத்திரங்களைக் கொண்டது.

திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும் ( சிவபெருமான்), குன்றெறிந்த முருகவேளும் (கிரௌஞ்ச மலையை வேல் கொண்டு தொளைத்த முருகன்)  முதலாம் தமிழ் சங்கத்தில் புலவர்களாக இருந்து தமிழ் வளர்த்ததாக இறையனார் அகப்பொருள் எனும் காதல் இலக்கண நூலுக்கு நக்கீரர் செய்த உரை கூறுகின்றது.

சிவபெருமான் தன்னை நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்றேஉ நேராக நின்று சொன்ன நக்கீரனுக்கு பின்னர் தமிழின் நுணுக்கங்களைக் கற்பித்தழ் கற்பித்ததாகத் திருவிளையாடற்புராணம் கூறுகின்றது.

சிவபெருமான் தன்னுடைய திருமணத்துக்கு எல்லொரும் கைலையில் கூட அதனால் உலகின் வடபாதி தாழ்ந்து தென் பாதி உயர்ந்ததைச் சமப்படுத்த அகத்தியரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு தமிழ் அறிவித்து அவரை தென்னாட்டுக்கு அனுப்பியதாக கந்த புராணம் கூறுகின்றது.

இதே அகத்தியருக்கு முருகன் பின்னாளில் தமிழின் நுணுக்கங்களைக் கற்பித்ததாக கந்த புராணம் கூறுகின்றது.

இப்படி எமது சமயத்தின் பல கடவுளர்கள் தமிழோடு பின்னிப் பிணைந்து இருந்தாலும் முருகன் மட்டுமே தமிழ்க் கடவுள் என்ற சிறப்பைப் பெறுகின்றான்.

இது ஏனெனில் முருகன் ஒருவனே தமிழர் மரபின் வழி வள்ளியிடம் களவுக் காதல் கொண்டு களவு மணம் புரிந்த ஒரே கடவுள் என்பதாலேயே. இதனையே

பணியா என வள்ளி பதம் பணியும்

தணியா அதிமோக தயா பரனே

 

என முருகன் மோகத்தினால் வள்ளியின் பாதங்களில் வீழ்ந்து கிடப்பதாக கந்தர் அனுபூதியில் அருணகிரிநாதர் பாடுகின்றார்.

 

இதைவிட தேவாரம், பெரியபுராணம் போன்ற ஏனைய பாடல்களிலும் காதல் சுவை உள்ள பாடல்கள் ஆங்காங்கே உள்ளன.

சிறையாரு மடக்கிளியே இங்கேவா தேனொடுபால்

முறையாலே யுணத்தருவன் மொய்பவளத் தொடுதரளந்

துறையாருங் கடற்றோணி புரத்தீசன் றுளங்குமிளம்

பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே

 

அழகிய சிறகுகளை உடைய இளங்கிளியே! என்னிடம் வருவாயாக. நான் உனக்குத் தேனையும் பாலையும் மாறி மாறி உண்ணத்தருவேன். நீ செறிந்த பவளங்களையும் முத்துக்களையும் கரைகளில் சேர்ப்பிக்கும் கடல் அருகில் உள்ள திருத்தோணிபுரத்தில் உறையும் இளம்பிறை சூடிய என் பெருமானின் திருநாமத்தை `ஒரு முறை` என் செவி குளிரப் பேசுவாயாக.

  • சம்பந்தர் தேவாரம், திருமுறை 01:60:10

 

 

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்

    மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்

பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்

    பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

    அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்

தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்

    தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.

 

பெருமானின் பெயரை முதன் முதலாகக் கேட்ட பெண், பின்னர் அவனது தன்மைகளை பலர் மூலம் கேட்டறிந்தாள்; அவனது கொண்டு இருப்பிடத்தையும் அறிந்தாள். அவனது தன்மை பற்றிக் கேட்டுக் கேட்டு அறிகின்றாள். தன்னிலை மறந்து அவன் மேல் பித்துப்பிடித்தவள் ஆகின்றாள். தனது தாய், தந்தையை  விட்டாள்; உற்றாரை விட்டாள், தனது சமூகத்தையும் மறந்தாள்; தன்னை மற்றவர் எவ்வாறு எண்ணுவார்களோ என்ற வெட்கத்தையும் விட்டாள்.   அவனைப் பற்றியே சிந்தித்து, சிந்தித்து, தன்னையே மறந்து, அவனுக்கு ஆளானாள்.

அப்பர் தேவாரம், திருமுறை 6.25.07

 

 

வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்;

எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலள்;

கண் உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம்

அண்ணலே அறிவான், இவள் தன்மையே!

 

பெருமானை நேரில் பார்க்காது இருந்த போதிலும், அவன் மீது காதல் கொண்டுள்ள இவள், அவனது திருநாமத்தை எத்தனை முறை உச்சரித்தாலும் நிறைவு அடையாதவளாக, அவனது பெயரினை பிதற்றியவாறு இருக்கின்றாள். இவ்வாறு இருக்கும் இவளது தன்மையைக் காணும் எனக்கு, இவளின் காதலின் ஆழம் என்னவென்று புரியவில்லை. எங்கும் பொழில்கள் காணப்படும் கழிப்பாலைத் தலத்தில் உறையும் சிவபெருமான் ஒருவனே இவளது காதலின் உண்மையான நிலையை அறிவான்.

அப்பர் தேவாரம், திருமுறை 5.40.01

 

முற்றொருவர் போல முழுநீ றாடி

    முளைத்திங்கள் சூடிமுந் நூலும் பூண்டு

ஒற்றொருவர் போல உறங்கு வேன்கை

    ஒளிவளையை ஒன்றொன்றா எண்ணு கின்றார்

மற்றொருவ ரில்லைத் துணையெ னக்கு

    மால்கொண்டாற் போல மயங்கு வேற்குப்

புற்றரவக் கச்சார்த்துப் பூதஞ் சூழப்

    புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

 

தவம் முற்றிய ஒருவரைப்போல உடல் முழுதும் திருநீறு பூசி, பிறைசூடி, முந்நூல் அணிந்து ஒற்றுவதற்கு வந்த ஒருவர், பொய் உறக்கம் கொண்ட எனது கையிலிருக்கும் ஒளி பொருந்திய வளையல்களை ஒன்றொன்றாக எண்ணுகின்றார். எனக்கு இவரன்றித் துணைவர் வேறு யாரும் இல்லை. இவருடைய செயலைக் கண்டு பித்துப்பிடித்தவரைப் போல மயங்குகின்ற என்னிடத்தில் ”எங்களுடைய ஊர் திருப்புறம்பயம்”  என்று கூறிப் பாம்பினைக் கச்சாக அணிந்த எம்பெருமான் பூதங்கள் தம்மைச்சூழ என்னைவிடுத்துப் போய் விட்டார்.

அப்பர் தேவாரம், திருமுறை 6.13.02

 

ஆகாத நஞ்சுண்ட அந்தி வண்ணர்

    ஐந்தலைய மாசுணங்கொண் டம்பொற் றோள்மேல்

ஏகாச மாவிட்டோ டொன் றேந்திவந்

    திடுதிருவே பலியென்றார்க் கில்லே புக்கேன்

பாகேதுங் கொள்ளார் பலியுங் கொள்ளார்

    பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கிப்

போகாத வேடத்தர் பூதஞ் சூழப்

    புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

 

தீங்கு தருகின்ற விடத்தை நுகர்ந்த, மாலையின் செந்நிறத்தை உடைய பெருமான், ஐந்தலைப் பாம்பு ஒன்றனை அழகிய தோளின் மீது மேலாடையாக அணிந்து, ஓடு ஒன்றனைக் கையில் ஏந்தி, எம் இல்லத்து வந்து ` திருவே! உணவு இடு ` என்று கூற, உணவு கொண்டுவர உள்ளே சென்றேன். உணவுகளோடு யான் மீண்டு வரக் குழம்போ சோறோ ஏதும் என்னிடத்துப் பிச்சையாகப் பெறாமல் என்னைக் கூர்ந்து நோக்கி என் கண்ணுள்ளே அவர் உருவம் நீங்காது இருக்குமாறு செய்து, பூதங்கள் சூழப் “புறம்பயம் நம் ஊர்” என்று போயினார்.

அப்பர் தேவாரம், திருமுறை 6.13.03

 

நஞ்சடைந்த கண்டத்தர் வெண்ணீ றாடி

    நல்லபுலி யதள்மேல் நாகங் கட்டிப்

பஞ்சடைந்த மெல்விரலாள் பாக மாகப்

    பராய்த்துறையே னென்றோர் பவள வண்ணர்

துஞ்சிடையே வந்து துடியுங் கொட்டத்

    துண்ணென் றெழுந்திருந்தேன் சொல்ல மாட்டேன்

புன்சடையின் மேலோர் புனலுஞ் சூடிப்

    புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

 

விடம் அடைந்த கழுத்தினராய், நீறு பூசி, பெரிய புலித்தோல் மேல் பாம்பினை இறுகத் கட்டிக் கொண்டு, செம்பஞ்சு போன்ற மெல்லிய விரல்களை உடைய பார்வதி பாகராய்ப் பவளம் போன்ற சிவந்த மேனியை உடைய எம்பெருமான் யான் உறங்கும் இடத்து வந்து துடியை ஒலித்து என்னை விழிக்கச் செய்து ”யான் பராய்த் துறை ஊரினேன்” என்றார் `. யான் திடுக்கிட்டு எழுந்திருந்தேன். பின் அவர் என் குறிப்பறிந்து மெய் தீண்டிச் செய்தனவற்றைச் சொற்களால் எடுத்துக்கூறும் ஆற்றல் இல்லேன். தம் சிவந்த சடையில் கங்கையைச் சூடி அப்பெருமான் பின்னர் ”புறம்பயம் நம் ஊர்” என்று முன்னுக்குப் பின் முரணாகச் சொல்லிப் போயினார்.

அப்பர் தேவாரம், திருமுறை 6.13.06

 

மறியிலங்கு கையர் மழுவொன் றேந்தி

    மறைக்காட்டே னென்றோர் மழலை பேசிச்

செறியிலங்கு திண்தோள்மேல் நீறு கொண்டு

    திருமுண்ட மாஇட்ட திலக நெற்றி

நெறியிலங்கு கூந்தலார் பின்பின் சென்று

    நெடுங்கண் பனிசோர நின்று நோக்கிப்

பொறியிலங்கு பாம்பார்த்துப் பூதஞ் சூழப்

    புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

 

ஒருகையில் மான் குட்டியை ஏந்தி, மற்றொரு கையில் மழுப்படையை ஏந்தி, ` யான் மறைக்காட்டில் உள்ளேன் ` என்று இனிய சொற்களைப்பேசி, விளங்கிய திண்ணிய தோள்கள் மீது திருநீற்றைப் பூசி, நெற்றியில் திரிபுண்டரமாகத் திருநீறணிந்து, சுருண்ட கூந்தலை உடைய மகளிர்பின் சென்று, தம் கண்கள் கரிந்து நீர் சொரியுமாறு அவர்களை நெடுநேரம் அசையாமல் நோக்கி, புள்ளிகள் பொருந்திய பாம்புகளை இறுகக் கட்டிக் கொண்டு பூதங்கள் சூழ எம்பெருமானார் ”புறம்பயம் நம் ஊர்” என்று போயினார்.

 

 அப்பர் தேவாரம், திருமுறை 6.13.07

 

சுந்தரர் பரவையாரைக் கண்டதும் கொண்ட காதல் உணர்வு:

 

கற்பகத்தின் பூம்கொம்போ? காமன் தன் பெருவாழ்வோ?

பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ? புயல்சுமந்து

விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ?

அற்புதமோ? சிவனருளோ? அறியேன் என்று அதிசயித்தார்.

 

இவள், நினைத்ததை வழங்கும் தேவலோகத்துக் கற்பக மரத்தின் கிளையோ? மன்மதன் தன் பெருவாழ்வாகக் கொண்ட இரதி தேவியோ?

பெரும் புண்ணியங்களின் பயனாய் விளைந்ததொரு புண்ணியமோ? மேகத்தைச் சுமந்து, வில், குவளை, பவளம், பிறபிற பூக்கள், சந்திரன் ஆகிய அனைத்தையும் தன்னிடத்தே கொண்டதொரு கொடியோ?

இவற்றுள் யாதானும் ஒன்றோ, அல்லது வேறொன்றோ? என அறிய ஒண்ணாத அற்புத வடிவோ? அல்லது சிவனருளால் வந்ததொரு திரு வடிவோ? இவற்றுள் எந்த ஒன்றாகவும் உறுதிப்படுத்த அறியேன் என்று அதிசயித்தார்.

  • பெரியபுராணம், 12ம் திருமுறை

 

பரவையார் சுந்தரரைக் கண்டதும் கொண்ட காதல் உணர்வு:

 

முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ? பெருகு ஒளியால்

தன்னேரில் மாரனோ? தார் மார்பின் விஞ்சையனோ?

மின்னேர் செஞ்சடை அண்ணல் மெய்யருள் பெற்றுடையவனோ?

என்னே! என் மனந் திரித்த இவன் யாரோ? எனநினைந்தார்.

 

இவன் எனக்கு முன்னே

வந்து நிற்கின்ற பேரழகன் முருகனோ?

பேரொளியால் தனக்கு ஒப்பில்லாத மன்மதனோ?

மாலையணிந்த மார்பினையுடைய வித்தியாதரனோ?

மின்னலையொத்த சிவந்த சடையினையுடைய சிவபெருமானின் மெய்யான திருவருளைப் பெற்றவனோ? என்ன வியப்பு?

என் மனத்தைத் தன் வயப்படுத்தி நிற்கும் இவன் யாரோ? அறியேனே! என்று நினைந்தார்.

  • பெரியபுராணம், 12ம் திருமுறை

காதலை இவ்வாறு புறத்தேயும் அகத்தையும் போற்றுதல் மட்டுமன்றி ஆன்மீகத்துக்கு உள்ளுறை உவமமாகவும் எடுத்தாளும் சிறப்பும் பெருமையும் சைவத்துக்கெயுரிய தனிச்சிறப்பு.