அஞ்சவத்தை

அஞ்சவத்தை – ஒரு அறிமுகம்

குருவடி பணிந்து
மருத்துவ கலாநிதி இ. லம்போதரன் MD
கனடா சைவசித்தாந்த பீடம்
www.knowingourroots.com

அந்தக் கரணம் அவற்றின் ஒன்று அன்று, அவை
சந்த்தித்தது ஆன்மா சகசமலத்து உணராது
அமைச்சு அரசு ஏய்ப்ப நின்று அஞ்சவத்தைத்தே.
 
உயிர் என்பது மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனும் அந்தக்கரணங்களில் ஒன்றோ அல்லது அவற்றின் கூட்டோ அல்ல. அனாதி காலமாகப் பீடித்திருக்கும் ஆணவ மலத்தின் காரணமாக உயிர் ஒன்றையும் தானாக அறியாது. அரசன் ஒருவன் எவ்வாறு அமைச்சர்களினூடாக அறிந்து அவர்களைச் செலுத்திச் செயற்படுகின்றானோ அதுபோல ஆன்மாவும் கருவி கரணங்களுடன் விழிப்பு, கனவு, உறக்கம், துரியம், துரியாதீதம் எனும் ஐந்து அறிநிலை அவத்தைகளினூடாகச் செல்கின்றது.

Personality or components of personality is not the soul. Soul in conjunction with ĀNava – the eternally entangling primal spiritual fetter – cannot realize (the Truth as it is). As a king knows and acts through his ministers, so does the soul cognizes in conjunction with its faculties in going through the five states (of wake, dream, sound sleep, 4th state or turiya and beyond that – turiya-atita).

  • சிவஞானபோதம், 4ம் சூத்திரம்

அநாதியாகவே ஆணவ மலத்துடன் கூடியிருத்தலால் தானே சுயமாக அறிய முடியாத ஆன்மா எமது உடலில் மற்றைய கருவிகளுடன் கூடி ஐந்து நிலைகளில் நின்று அறிகின்றது; செயலாற்றுகின்றது. அவை பற்றி இங்கு விளக்கமாகப் பார்ப்போம்.

  1. நனவு அல்லது விழிப்பு நிலை: ஆன்மா அன்னமயகோசம் என்னும் எமது தூல உடலில் இருந்துகொண்டு, முப்பத்தைந்து தத்துவங்களுடன் கூடிப் புருவ மத்தியில் நின்று தொழிற்படுகின்ற நிலை விழிப்பு நிலை ஆகும். இந்த முப்பத்தைந்து கருவிகளாவன:

ஞானேந்திரியங்கள் ஐந்தும் ஆன்மா என்னும் அரசனின் ஏவலர்கள் :

செவி – மிலேச்சர்
கண் – தூதுவர்
தோல் – ஒற்றர்/ சாரணர்
வாய் – ஏவலர்
மூக்கு – புரோகிதர்

கர்மேந்திரியங்கள் ஐந்தும் ஆன்மா என்னும் அரசனின் படைகள்:

வாக்கு – குதிரைப்படை
கால்கள் – ஆனைப்படை
கை – தேர்ப்படை
கழிவங்கம் – காலாட் படை
சனன அங்கம் – படைத்தளபதி

தன்மாத்திரைகள் ஐந்தும், கர்மேந்திரியங்களின் தொழில்கள் ஐந்தும் ஆன்மா என்னும் அரசனின் பரிவாரங்கள்:

சப்தம் (ஒலியுணர்வு), இரசம் (சுவையுணர்வு), ஸ்பரிசம் ( தொட்டுணர்வு), ரூபம் ( பார்வையுணர்வு), கந்தம் ( மணவுணர்வு).
வசனம் (தொடர்பாடல்), கமனம் ( இடம் பெயர்தல்), தானம் (பரிமாறல்), விசர்க்கம் ( கழித்தல்), ஆனந்தம் ( புணர்தல்).

தசவாயுக்களும் ஆன்மா என்னும் அரசனுடன் இறுதி வரை நிற்கும் அவனின் உறுதிச் சுற்றம்:

 பிராணன் ( மூச்சு), அபானன் ( மல சலம் ஆகியவற்றைக் மேலிருந்து கீழ் நோக்கிச் செலுத்தி வெளியேற்றும் உந்தல்), உதானன் ( பேச்சு போன்றவற்றைக் கீழிருந்து மேல் நோக்கிச் செலுத்திப் பிறப்பிக்கும்ம் உந்தல்), வியானன் ( உடலில் எங்கும் பரவச் செலுத்தும் உந்தல்),சமானன் ( சமநிலை பேணும் உந்தல்), நாகன் ( கொட்டாவி, விக்கல் ஆகியவற்றைத் தோற்றுவிக்கும் உந்தல்), கூர்மன் ( கண் இமைக்கும் உந்தல்), கிருபரன் ( மூட்டுகளை நீட்டி விரித்து மடக்கும் உந்தல்), தேவதத்தன் ( தொடர்பாடல் உந்தல்), தனஞ்சயன் ( சிதைத்து அழுகச் செய்யும் உந்தல்).

அந்தக்கரணங்கள் நான்கும் ஆன்மா என்னும் அரசனின் அமைச்சர்கள்:

 மனம், புத்தி, சித்தம், அகங்காரம்

  1. கனவு நிலை: ஆன்மாவானது பிராண மயகோசம் என்னும் நுண்ணுடலில் இருந்துகொண்டு, இருபத்தைந்து தத்துவங்களுடன் கூடி கண்டத்தில் நின்று தொழிற்படுகின்ற நிலை கனவு நிலை ஆகும். இங்கு ஞானேந்திரியங்கள் ஐந்தும், கர்மேந்திரியங்கள் ஐந்தும் செயற்படாது புருவ மத்தியிலேயே ஒடுங்க ஏனைய இருபத்து ஐந்து தத்துவங்களும் கண்டத்தில் தொழிற்பட்டு, நனவென்று மயங்கும் கனவு என்ற அவத்தை நிகழும். இந்த இருபத்தைந்து கருவிகளாவன:

தன்மாத்திரைகள் ஐந்தும், கர்மேந்திரியங்களின் தொழில்கள் ஐந்தும் ஆன்மா என்னும் அரசனின் பரிவாரங்கள்:

 சப்தம் (ஒலியுணர்வு), இரசம் (சுவையுணர்வு), ஸ்பரிசம் ( தொட்டுணர்வு), ரூபம் ( பார்வையுணர்வு), கந்தம் ( மணவுணர்வு).

வசனம் (தொடர்பாடல்), கமனம் ( இடம் பெயர்தல்), தானம் (பரிமாறல்), விசர்க்கம் ( கழித்தல்), ஆனந்தம் ( புணர்தல்).

தசவாயுக்களும் ஆன்மா என்னும் அரசனுடன் இறுதி வரை நிற்கும் அவனின் உறுதிச் சுற்றம்:

 பிராணன் ( மூச்சு), அபானன் ( மல சலம் ஆகியவற்றைக் மேலிருந்து கீழ் நோக்கிச் செலுத்தி வெளியேற்றும் உந்தல்), உதானன் ( பேச்சு போன்றவற்றைக் கீழிருந்து மேல் நோக்கிச் செலுத்திப் பிறப்பிக்கும்ம் உந்தல்), வியானன் ( உடலில் எங்கும் பரவச் செலுத்தும் உந்தல்),சமானன் ( சமநிலை பேணும் உந்தல்), நாகன் ( கொட்டாவி, விக்கல் ஆகியவற்றைத் தோற்றுவிக்கும் உந்தல்), கூர்மன் ( கண் இமைக்கும் உந்தல்), கிருபரன் ( மூட்டுகளை நீட்டி விரித்து மடக்கும் உந்தல்), தேவதத்தன் ( தொடர்பாடல் உந்தல்), தனஞ்சயன் ( சிதைத்து அழுகச் செய்யும் உந்தல்).

அந்தக்கரணங்கள் நான்கும் ஆன்மா என்னும் அரசனின் அமைச்சர்கள்:

 மனம், புத்தி, சித்தம், அகங்காரம்

  1. ஆழ்ந்த உறக்க நிலை. ஆன்மாவானது மனோ மயகோசம் எனும் நுண்ணுடலில் இருந்துகொண்டு, சித்தம், புருடன் எனும் தொழிற்படு ஆன்மா, பிராணன் எனும் மூன்று தத்துவங்களுடன் கூடி இருதயத் தானத்தில் நின்று செயற்படும் நிலை உறக்க நிலையாகும்.

இங்கு முன் செயற்பட்ட தத்துவங்கள் எல்லாம் ஒடுங்கிச் செயற்படாது கண்டத்தில் நிற்க,
சித்தம் – என்னும் தலைமை மந்திரியும்
பிராணன் – என்னும் உறுதிச் சுற்றமும்
புருடன் – என்னும் ஆன்மாவுடன் சேர்ந்து இருதயத்தானத்தில் நின்று இயங்கும்.

4. துரியம்: ஆன்மாவானது விஞ்ஞானமயகோசம் என்னும் நான்காவது நுண்ணுடலில் இருந்துகொண்டு புருடன் எனும் தொழிற்படு ஆன்மா, பிராணன் ஆகிய இரண்டு தத்துவங்களுடன் உந்தித்தானத்தில் நின்று தொழிற்படும் நிலை துரியம் ஆகும்.

உந்தித் தானம் என்பது நாபிக்கு மேல் நாலு அங்குலத்துக்கும், நாபிக்கு கீழ் நாலு அங்குலத்துக்கும் இடைப்பட்ட  எட்டு அங்குலப் பகுதியாகும். இங்கு சித்தம் செயற்படாது இருதயத்தானத்திலேயே நிற்க, பிராணன் என்கிற உறுதிச்சுற்றம் மட்டும் புருடனுடன் சேர்ந்து உந்தித்தானத்தில் இயங்கும். இது அரசன் துயில் கொள்ளும் வேளையிலும் அவனது  அரசாணை தொடர்ந்து செயற்படுவது போலவாகும். இந்நிலையில் உயர்ச்சி, இழிவு, சீற்றம், பொறுமை, வைதல், வாழ்த்தல், இன்பம், துன்பம் ஆகிய தொழில்களும் அனுபவங்களும் இல்லை.

  1. துரியாதீதம்: ஆன்மாவானது ஆனந்தமய கோசம் ஐந்தாவது நுண்ணுடலில் இருந்துகொண்டு பிராணனையும் விட்டு மூலாதாரத்தில் ஆணவ மறைப்புடன் புருடன் என்ற தத்துவத்துடன் மட்டும் தொழிற்படுகின்ற நிலை. இந்நிலையில் ஆன்மா எங்கும் வியாபியாய் நிற்கும். இங்கு பிராணனும் உந்தித்தானத்தோடு அடங்கிவிட நிற்க புருடன் எனும் தொழிற்படு ஆன்மா மட்டும் மூலாதாரத்தில் நின்று செயற்படும்.

சாதாரண மானுடர்களாகிய நாம் மேற்கூறிய ஐந்து அவத்தைகளில் விழிப்பு, உறக்கம், கனவு என்ற மூன்று நிலைகளிலேயே எமது வாழ்க்கையைக் கழிக்கின்றோம். மற்றைய இருநிலைகளும் நாமறியாமலே கணப்பொழுதுக்கு வந்து வந்து மறைகின்றன.

உயிரானது  துரிய நிலையில் இருந்து விழிப்பு நிலைக்கு திரும்பும்போது விடுபட்ட இதே ஒழுங்கில் அத்தத்துவங்களைக் கூட்டி செயற்பட்டுக்கொண்டு செல்லும். இது அரசன் ஒருவன் அந்தப்புரத்தில் இருந்து உலாவுக்குப் புறப்படும்போது அரண்மனையின் ஒவ்வொரு நிலையில் அவனின் காவலர்களும், அமைச்சர்களும், சேவகர்களும், படை பரிவாரங்களும் சேர்ந்து கொண்டு செல்வதையும், மீளும்போது ஒவ்வொருவராக விடுபட்டு, இறுதியில் அவன் அந்தப்புரம் நுழையும்போது அவன் மட்டுமே தனியாக உட்செல்வதையும் ஒத்தது.

இந்நிலைகளில் செயற்படும் உயிருக்கு தன்னையும் தெரியாது, தன்னை இயக்கும் சித்சத்தியையும் தெரியாது. படமெடுக்கும் கமராவுக்கு காட்சி மட்டுமே தெரியும்; ஆனால் தன்னைத் தெரியாது; தன்னை இயக்குவோனையும் தெரியாது. அதுபோலவே இதுவும். உயிரானது இந்த உடல் அல்ல; மனம் அல்ல; புத்தி அல்ல; சித்தம் அல்ல; அகங்காரம் அல்ல.

உயிரானது தன்னுடன் அனாதியாகவே இருக்கும் ஆணவ மலத்தின் மறைப்பினால், தான் செய்யும் செயல்களை அறியுமே தவிர, தன்னை அறியாது; தன்னை இயக்கும் சிற்சத்தியையும் அறியாது.

இவை பற்றிய மேலதிக விளக்கங்களையும் மத்தியாலவத்தை, மேலால் அவத்தை ஆகிய நிலைகளில் நிகழுகின்ற பஞ்சாவத்தை நிலைகளையும் குரு முகமாக உணர்க.

ஆன்மீக சாதனைகளில் புரியும்போது துரியம் என்னும் தூங்காமல் தூங்கும் தியான நிலை கை கூடும். இது ஞானத்தில் யோகம்..

தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவ(து) எக்காலம்?

-பத்திரகிரியார் பாடல்

கை கூடிய இத்துரிய நிலைக்கும் அப்பாற்பட்டு, மீளாது எந்நேரமும் அதில் நிலைத்திருத்தல் துரியாதீதம். இதனை சாக்கிரத்தில் துரியாதீதம் என்பார்கள். இதுவே ஞானத்தில் ஞானம் எனும் நிட்டை நிலை. யோகர் சுவாமிகள், இரமண மகரிஷி போன்றவர்கள் இந் நிலையில் இருந்தவர்கள். இதுவே திருமூலர் சொல்லும் இராப்பகல் அற்ற,  காலத்தைக் கடந்த நிலை.

மிக்கது ஒரு பக்குவத்தில் மிகு சத்தி நிபாதம்
மேவுதலும், ஞானம் விளைந்து, ஓர் குருவின் அருளால்
புக்கு அனுட்டித்தே, நிட்டை புரிந்து ளோர்கள்
பூதலத்தில் புகழ் சீவன் முத்தர் ஆகித்,
தக்க பிரிய-அப்பிரியம் இன்றி, ஓட்டில்
தபனியத்தில் சமபுத்தி பண்ணி, சங்கரனோடு
ஒக்க உறைந்து, இவர் அவனை அவன் இவரை விடாதே,
உடந்தையாய்ச் சிவன் தோற்றம் ஒன்றுமே காண்பர்.
                                                                        -சிவஞானசித்தியார் 281

அறியாமை அறிவு அகற்றி, அறிவி னுள்ளே
அறிவுதனை அருளினால் அறியாதே அறிந்து,
குறியாதே குறித்து அந்தக் கரணங்களோடும்
கூடாதே வாடாதே குழைந்து இருப்பை யாயில்,
பிறியாத சிவன் தானே பிரிந்து தோன்றிப்
பிரபஞ்ச பேத ம் எல்லாம் தானாய்த் தோன்றி,
நெறியாலே இவை எல்லாம் அல்லவாகி
நின்று என்றும் தோன்றிடுவன் நிராதாரன் ஆயே.
                                                    – சிவஞானசித்தியார் 282

சாக்கிரத்தே அதீதத்தைப் புரிந்தவர்கள், உலகிற்
சருவ சங்க நிவிர்த்தி வந்த தபோதனர்கள்; இவர்கள்
பாக்கியத்தைப் பகர்வது என்?  இம்மையிலே உயிரின்
பற்று அறுத்துப் பரத்தை அடை பராவுசிவர் அன்றோ?
ஆக்குமுடி கவித்து, அரசாண்டு, அவர்கள் அரிவையரோடு
அனுபவித்து அங்கு இருந்திடினும், அகப்பற்று அற்று இருப்பர்;
நோக்கி இது புரியாதோர் புறப்பற்று அற்றாலும்
நுழைவர் பிறப்பினில், வினைகள் நுங்கி டாவே.
                                                     – சிவஞானசித்தியார் 287

ஞாலமதின் ஞான நிட்டை உடையோருக்கு
நன்மையொடு தீமையிலை, நாடுவது ஒன்றில்லை,
சீலமிலை, தவமில்லை, விரதமொடு ஆச்சிரமச்
செயலில்லை, தியானமிலை, சித்த மலம் இல்லை,
கோலமிலை, புலன் இல்லை, கரணம் இல்லை,
குணம் இல்லை, குறி இல்லை, குலமும் இல்லை,
பாலருடன் உன்மத்தர் பிசாசர் குண மருவிப்
பாடலினொடு ஆடல் இவை பயின்றிடினும் பயில்வர்.
                                                   -சிவஞானசித்தியார் 284

குறிப்பு1.
கால் கொடுத்து இருகைமூட்டி வாழிய
வெந்நில் தண்டுஎன இடங்கத்து இன்னியல்
பழுக்கழி நிரைத்துச் சிரைக்கயிறு அசைத்து
மயிர்த்தோல் வேய்ந்து சுவர்த்தசை நிறீஇ
ஐம்புலச்சாளரத்து அரும்பெறல் மாடத்து
உம்பரீ மணிக்குடச் சென்னிப் பொங்கிய
கூந்தல் பதாகை நான்குநிலை தழீஇய
ஆங்கினிது அமர்திறன் அறையின் ஆன்ற
சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம்
பிருகுடி நாப்பண் ஒருபெருங் கந்தரம்
மருமத்து ஆதி வலஞ்சுழி உந்தி
ஒருநான் கங்குலி உம்பர் வரன்முறை
செவி மெய்கண் வாய்மூக்கு எனப்பெயரிய
வாயின் மிலேச்சர் சாரணர் தூதர்
சூதமாகதர் புரோகிதர் என்ற
மேதகு புத்தீந் தியமும் தீதுஅறு
வாக்கொடு பதம்கை பாயுரு உபத்தம்என்
இவுளி மறவரும் யானை வீரரும்
திகிரி தூண்டிய தறுகணா ளரும்
வன்கண் மள்ளரும் தந்திரத் தலைவரும்
என் கருமேந்தியத் திறளும் எஞ்சிய
ஓசை பரிசம் உருவம் இரதம்
கந்தம் உரைநடை கொடைபோக்கு இன்பம்என்
விடயப் பல்பரிசனமும் இடையாப்
பிராண வபான உதான வியான
சமான நாக கூர்ம கிருகர
தேவதத்த தனஞ்சயன் என்ற
ஈரைந்து உறுதிச் சுற்றமும் நியதி
சிந்தித்து ஆய்ந்து துணிந்து செயற்படும்
அந்தக் கரண அமைச்சரும் தந்தம்
முறையுளி வழாஅது துறைதோறு ஈண்டிய

சதுரங்கத்து நீதி யாகிப்
பேர் அத்தாணிச் சீர்பெறத் துன்னி
வீசுவ வீசி விரும்புவ விரும்பி
மாசில் காட்சி மன்னன் நீங்கிப்
பல் பரிவாரமும் விள்ளாச் சுற்றமும்
தந்திரம் புணர்ந்த மந்திர மாக்களும்
பலர்புகழ் அறியா அவைபுகும் அரங்கின்
நனைந்து ஆய்ந்து துணிந்து செயல்மணந்து இனிது உணர்ந்து
நனவெனக் கனவின் நன்னடை வழாஅது
உரைத்தனன் சொப்பனத் தகத்து இனிது இறந்து
மந்திரத் தலைவனும் வன்கடும் பதிபனும்
மந்திர பூமி மருங்கு போகிச்
சிந்தை மாத்திரம் கனவலின் நனவின்
தந்துரை சுழுத்தியின்றே மந்திரத்
தலைவற் தணந்து விலைவரம் பில்லாச்
சிங்கம் சுமந்த ஐம்பேர் அமளிப்
பள்ளி மண்டபத் தானும் தனாது
திகிரி யுருண்ட பெருவனப்பு ஏய்ப்ப
உறுதிச் சுற்றத்து உறுவளி எடுப்ப
ஏற்றம் அழிவு சீற்றம் ஆற்றல்
இழிச்சல் பழிச்சல் இன்ப துன்பம்
ஒழித்தனன் துரியத்து அழித்து இனிதுஅதீதத்து
ஒருவகை எங்கணுமாகி இருள் இரி
சுடர்த் தொழில் சாக்கிரம் தாங்க நான்கின்
இடத்தகை தெரிதனில் தெரியு மாறே
                                  பஞ்ச அவத்தை இயல், ஞானாமிர்தம் பாடல் 16

குறிப்பு 2.
சாக்கிர முப்பத்தைந்து நுதலினிற் கனவு தன்னில்
ஆக்கிய இருபத்தைந்து களத்தனிற் சுழுமுனை மூன்று
நீக்கிய இதயம் தன்னில் துரியத்தில் இரண்டு நாபி
நோக்கிய துரியா தீத நுவலின் மூலத்தில் ஒன்றே
                                             -சிவஞான சித்தியார் பாடல் 223

குறிப்பு 3.
அண்ணல்தன் வீதி அரசிருப்பாகும்; அணி படையோர்
நண்ணொரு நாலொன்பதாம் அவர் ஏவலும்; நண்ணும் இவ்வூர்
துண்ணென் பசிக்கு மடைப்பள்ளியான் சுகமும் எல்லாம்
எண்ணிலி காலம் அவமே விடுத்தனன் எண்ணரிதே
                                                      -பட்டினத்தார் பாடல்-

குறிப்பு 4. ……………….இங்ஙனம் ஆராய்ந்து அன்னம் பிரம்மம் என்று அறிந்தார்………பின் அன்னம் உற்பத்தியும் நாசமும் உடையதாகையால் பிரம்மமாக மாட்டாது என்று தெளிந்து…….மீண்டும் தவம் செய்து…………..
மனம் பிரம்மம் என்று ஆராய்ந்து அறிந்தார்………. பின் மனம் பிரம்மமாக மாட்டாது என்று தெளிந்து……மீண்டும் தவம் செய்து ……….விஜ்ஞானம் பிரம்மம் என்று ஆராய்ந்து அறிந்தார்……….பின் விஜ்ஞானம் பிரம்மமாக மாட்டாது என்று தெளிந்து…………மீண்டும் தவம் செய்து……….ஆனந்தம் பிரம்மம் என்று ஆராய்ந்து அறிந்தார்.
                                        – தைத்திரீய உபநிடதம் பிருகு வல்லீ- 1-6-

குறிப்பு 5. …………உடலில் பல நாடிகளுள் ஹிதா என்னும் ஒரு நாடி உள்ளது. அது இருதயத்தாமரையுடன் தொடர்புடையது. இருதயத்தில் இருந்து அது உடல் முழுவதும் வியாபிக்கின்றது. மயிரிழையை ஆயிரம் கூறாக்கினால் எவ்வளவு நுண்ணியதாகுமோ அதைவிட இந்த நாடி சூட்சுமமானது. உறங்கும்போது மனிதன் இந்த நாடியில் ஒடுங்குகிறான். கனவுகூட இல்லாமல் தூங்கும்போது இந்தப் பிராண சக்தியுடன் அவன் ஐக்கியமாகிவிடுகிறான். கண் காது முதலியவற்றிலுள்ள சக்திகளெல்லாம் இதில் லயிக்கின்றன. அவன் விழித்துக்கொள்ளும்போது அச்சக்திகள் போன வழியே திரும்பி வருகின்றன.
                                                   – கௌஷீதகீ உபநிடதம் 4.19

குறிப்பு 6.
இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப் பகல் அற்ற இடத்தே
                                              -திருமந்திரம் பாடல் 80

குறிப்பு 7.
அங்கு (சூரியன்) அஸ்தமிக்கிறதுமில்லை, உதிக்கிறதுமில்லை
                                              -சாந்தோக்கிய உபநிடதம் 11.2

குறிப்பு 8.
இந்தப் பிரமஞானத்தை அறிந்தவன் எவனோ அவனுக்கு சூரியன் உதிப்பதுமில்லை, அஸ்தமிப்பது மில்லை. அவனுக்கு எப்போதும் ஒரே பகலாகவே இருக்கும்.
                                             -சாந்தோக்கிய உபநிடதம் 11.3

குறிப்பு 9.
அங்கே சூரியன் பிரகாசிப்பதில்லை; சந்திரனும், நட்சத்திரங்களும் பிரகாசிப்பதில்லை; மின்னல் கொடிகளும் பிரகாசிப்பதில்லை; ஸ்வயம்பிரகாசமுள்ள அதைப் பின்பற்றியே அனைத்தும் பிரகாசிக்கின்றது. அவனொளியாலேயே இவையனைத்தும் விளங்குகின்றது.
                                         -கட உபநிடதம், ஷஷ்டீ வல்லீ 5.15

குறிப்பு 10.
உண்மையாம் சிவப்ரகாச ஒளியது வாழிவாழி
                                       – தாயுமானவர் பாடல்

குறிப்பு 11.
சிந்தையில்லை நானென்னும் பான்மையில்லை
தேசமில்லை காலமில்லை திக்குமில்லை
தொந்தமில்லை நீக்கமில்லை பிறிவுமில்லை
சொல்லுமில்லை இராப் பகலாந் தோற்றமில்லை
அந்தமில்லை ஆதியில்லை நடுவுமில்லை
அகமுமில்லை புறமுமில்லை அனைத்துமில்லை
                                   -தாயுமானவர் பாடல்

குறிப்பு 12.
பட்டப்பகல் போலொளிரும் நாடெங்கள் நாடே
பகலிரவு தோன்றாத நாடெங்கள் நாடே
                            – சிவ யோகர் சுவாமிகளின் நற்சிந்தனை

குறிப்பு 13.
பகல் இரா முதல் ஈறு இடை இன்றாம் இடத்து உறங்குவது இவர்

வாழ்க்கை
                        – திருவிளையாடற் புராணம், பாடல் 2751-

குறிப்பு 14.
பிலத்து நிற்கும் பிராணனோடு அபானன்எனும்
பிரியாவியானன் சமானனொடு கூர்மன்
நலத்து நின்ற நாகன்எழிற் கிருகரன்றானாகும்
நற்தேவதத்தன் ஒடுதனஞ்செயன் பத்தாகும்
இலக்கமுடன் பிரண நிலைமூலமதிற் தோன்றிஎழுந்து
சிரசளவு முட்டியிரு விழியின் கீழாய்
கலக்கமற நாசிவழியோடும் நிராறில் கடுகியெட்டு
வுட்புகுந்து கழியும் ஓர்நான்கே
உந்தியெனுந் தலத்தின்கீழ் அபானன்நின்று
உறுமி மலங்களையும் கழலச்செய்யும்
விந்தையெழில் வியானன் தோள்தனில் நின்று
மிகக் களையுந் தவனமும் உண்டாகச் செய்யும்
பிந்த உதானன் செயலுண்டசனந் தன்னைப்
பொருநாடி நரம்புவருவூட்டல் செய்யும்
இந்த வுடலதனை வளர்க்குஞ் சமானன்தானு
மியாவையு மேமிஞ்ச வொட்டா திருக்கு மன்றே
கூர்மன் இருவிழியில் நிமைத்திடுமே நாகன்
கொட்டாவி விக்கலெனுங் கொடுமை செய்யும்
தீர்மை கிருகானீட்டி முடக்கி வைக்குந்
தேவதத் தன்விழித்துமே வசனஞ் செய்யும்
பேர்மன்னுந் தனஞ்சயன்மேற் சிரசிரண்டாய்ப்
பிளந்திடும் போதது வோடிப் போவதாகும்
நேர்மை யறிந்திடுவை யினிநாடி பத்தின்
நிலை தெரிநெதிடவிபரம் உரை செய்வோமே
                        – அகத்தியர் இரத்தினகிரி கடம்- பாடல் 19-21-