உள்ளம் கவர் கள்வன்

 

கோ.ந. முத்துக்குமாரசாமி

கோவைப்புதூர் சிவக்குடில் ஆச்சிரமம்

 

தஸ்கரானாம் பதயே நம:

கள்வர்களின் தலைவனுக்கு என் நமஸ்காரம்

  • யசுர் வேதத்து ஸ்ரீருத்திரம்

சிவபெருமான் பெரிய திருடன். கள்வர்களின் தலைவனாகிய அவனுக்கு என் வணக்கம். அன்பினாலும் அழகினாலும் இனிய பேச்சினாலும் காதலியின் ‘உள்ளங்கவர் கள்வன்’ என்ற அளவில் மட்டுமல்ல; அவன் உண்மையிலேயே கள்ளர்களின் ஆற்றல் எல்லாம் கொண்ட பெரிய கள்ளன்; யாருக்கும் அகப்படாத வலிய கள்ளன். அவன் வலிய வந்து தானாக வெளிப்பட்டால்தானுண்டு.

கள்ளர்களின் செயல் திறனைச் சிலப்பதிகாரம் கொலைக்களக் காதை நன்கு எடுத்தியம்புகின்றது. கள்ளத்தொழிலில் வல்லவர்கள் “மந்திரம், தெய்வம், மருந்து, நிமித்தம், தந்திரம், இடன், காலம், கருவி எனும் எட்டும் முற்ற அறிந்து தொழில் செய்பவர்கள். அவர்கள் கள்ளத் தொழிலினைத் திறமையாகச் செய்வதற்குக் கற்பிக்கும் கள்ள சாத்திரமும் உண்டு (‘களவுநூல்’ ஸ்தேய சாஸ்திரமென்று வழங்கப்படுகின்றதென்றும் , அந்நூலைச் செய்தவர் கசரென்பவரின் ஆசிரியராகிய கர்ணீ ஸுதர் என்பவரென்றும் வடமொழியாளர் கூறுவர். உ.வே.சா குறிப்பு)

அத்திறமை மிக்க கள்வர்கள் கன்னக்கோலும் கவைக்கோலுமின்றியும் தாங்கள் கற்றறிந்த ‘துயில்’ மந்திரம் ஒன்றே துணையாக, மானசீகமாக அம்மந்த்ரத்தைச் செபிப்பர். அம்மந்திரம் எச்செல்வரை நோக்கிச் செபிக்கப்பட்டதோ அவர் ஆழ்ந்த துயிலில் அகப்படுவர். கள்ளன் எளிதாக அவரிடமிருந்த பொருள்களை எடுத்துக் கொள்ளுவான்.அவன் எடுத்துக் கொண்ட பொருள்களை உரிமையாளனின் கண்ணுக்குக் காட்டியே சென்றாலும் அவன் தன் பொருள் திருடு போவதை அறியான்.தன்னை யாருமறியாதபடி மந்திரத்தால் தன் உருவை மறைத்துக் கொள்வான். கள்ளர்கள் களவுசெய்யத் தக்க காலம் இடம் கருதிப் பொருளைக் கைப் பற்றுவராயின், வலிய தேவர்களேயாயினும் அவர்களை விலக்க இயலாது. களவு நூல் கற்று வல்ல கள்வனை யாரும் அகபபடுத்தல் இயலாது.

சாதாரண மானுடக் கள்வனின் திறமே இத்தகையதெனின் தேவதேவன், மகாதேவனாகிய பரமேசுவரக் கள்ளன், கள்ளர்களின் தலைவனின் ஆற்றல் எத்துணை வலியதாக இருக்கும்? நினைத்தே பார்க்கவியலாது

காண்டற்கு அரியனாய பரமேசுவரனாகிய அக்கள்வனை அவனுடைய அறிவு கொண்டே அறிதல் வேண்டும். சிவனைச் சிவனுடைய ஞானத்தாலன்றி பசுஞானத்தாலும் பாசஞானத்தாலும் அறிய வியலாது. என்பதுகருத்து காண்டற்கு அரியனாய்த் தன்னாலே தன்னைக் காண வேண்டுகையினல் சிவனைக் கள்வன் என்பர்.

அந்தப் பரமசிவக் கள்ளன், கள்ளர் கூட்டத் தலைவன், ‘தஸ்கரணாம் பதி’ என்னிடத்தில் நிகழ்த்திய களவாணித்தனத்தை என்னென்று சொல்லுவேன். நான் என் உடலையும் உள்ளத்தையும் பெறுதற்கரிய செல்வமாகக் காப்பாற்றி வந்தேன். அதிலும் என் உள்ளத்தைப் பிறர் அறியாமல் போற்றி வந்தேன். ஆனால் அப்பரமசிவக் கள்ளன் எப்படியோ யானேதும் அறியாமல் என்னுள் வந்தான்”; தன்னை இன்னார் என்று காட்டிக் கொள்ளாமல் எனக்கு “நல்லனவும் தீயனவும் காட்டா” நின்றான். “யான் செய்யும் துரிசுகளுக்கு உடனாகி நின்றான்” இப்படி அவன் செய்ய என் மனம் என்னை அறியாமலேயே அவனைச் சார்ந்தது. சார்ந்து பக்குவப்பட்ட காலத்தில் இதுவரைக்கும் என்னுள்ளே நின்ற கள்வன் புறத்தே வந்தான். தன் தோற்றத்தினால் என்னைக் கவர்ந்தான். தன்னைக் குருநாதன் என்றான். தன்னுடைய பேச்சிலே என்னை மயக்கினான். நான் அவன் வழிப்பட்டேன்; அவனுள் சிக்கினேன். அவனிடத்தில் மயங்கிய என்னிடமிருந்த, இது நாள் வரை நான் தேடித் திரட்டி வைத்திருந்த அனைத்தையும் கொள்ளை கொண்டு போனான். எல்லாவற்றயும் அக்கள்ளனிடத்தில் இழந்துபோன நான் வறுமையுற்று துன்புறவல்லவா வேண்டும். மாறாகப் பெறுதற்கரிய செல்வம் பெற்றாற் போன்ற இன்பம் அனுபவிக்கத் தொடங்கினேன்.

“களவு காண்பான் ஒருவன் {தன்னுடைய சொரூபத்தையும் பேதித்துத் தன்னுடைய சாத்திரத்தின் வழியே மிகுந்த பதார்த்தங்கள் உடையான் ஒருவனைப்பார்த்து, அவனை (அ) மந்திரத்தாலும் (ஆ) ஔடதத்தாலும் (இ) தியானத்தாலும் பேதித்துத் தன்னுடைய வசத்திலே ஆக்கி, அவனகத்திலே உள்ள பதார்த்தங்களை அவன் பொருந்தி நின்று எடுப்பித்தாற் போலத், தம்பிரானாரும் இவனுடைய அநாதிமல சம்பந்தத்தினாலே இவனுக்குத் தெரியாதபடி கள்ளரைப் போல மறைந்து நின்று உபகரித்து உபகரித்துக் கன்மவொப்பும் மலபரிபகமும் உண்டான அவசரத்திலே அவனுக்குப் பொருந்தினதொரு திருமேனியில் பிரகாசித்து 1. (ஸ்ரீ பஞ்சாக்கரம் என்னும் மந்திரத்தாலும் 2. திருநீறு எனும் ஔடதத்தாலும் 3.  சொரூபம் எனும் தியானத்தாலும் இவனைப் பேதித்துத் தன் வசமாக்கி இவன் சஞ்சிதமாக நெடுங்காலங்களிலே தேடிய அத்துவாக்களாகிய அறைகளில் சோதித்து எடுப்பிக்கிற அளவிலே தேகமாகிய} இல்லத்தை உடைய ஆன்மா (இதற்கு)ப்) பொருந்தி ஒருவழிப்பட்டால், (இவனுக்கு ஒரு முதலும் இல்லையாய் இவனுடைய இருதயமும் வெளிக்கு வெளியாய்ப் பரமாகாசமாய்விடும். வீடும் எளிதாம். இப்படியான காலத்து (ஐம்புல வேடராகிய கள்வர்க்கு ஈடுபடாத) வீடும் இவனுக்கு வருத்த மறக் கிடைக்கும்” (திருவுந்தியார் பழையவுரை)

பல பிறவிகள் தோறும் தேடி “அத்துவாக்கள்” எனும் ‘லாக்கரில்” சேமித்து வைத்திருந்த வினைகளாகிய என் பொருள்களைக் கொள்ளை கொண்டு போன “தஸ்கராணம் பதி”யை ‘நம’ எனப் போற்றாமல் என்ன செய்ய இயலும்?

கள்ளரோ டில்லம் உடையார் கலந்திடில்

வெள்ள வெளியாமென் றுந்திபற

வீடும் எளிதாமென் றுந்திபற.

  • திருவுந்தியார் – 23

 காட்டிய கண்ணே தனைக்காணா கண்ணுக்குக்

காட்டிய வுள்ளத்தைக் காணா – காட்டிய

உள்ளந் தனைக்காணா வுள்ளத்தின் கண்ணாய

கள்வன்றான் உள்ளத்திற் காண்

  • சிவஞானபோதம் 1.2

காண்டற்கு அரியனாய்த் தன்னாலே தன்னைக் காண வேண்டுகையின்சிவனைக் கள்வன் என்றார். சிவனைச் சிவனுடைய ஞானத்தாலன்றி பசுஞானத்தாலும் பாசஞானத்தாலும் அறிய வியலாது. என்பதுகருத்து

உள்குவார் உள்ளத்தானை உணர்வெனும் பெருமையானை,

உள்கினேன் நானுங் காண்பான் உருகினேன் ஊறியூறி

எள்கினேன் எந்தை பெம்மான் இருதலை மின்னுகின்ற

கொள்ளிமேல் எறும்பென் உள்ளம் எங்ஙனம் கூடுமாறே”

“கள்ளனேன்” –யானும் கள்ளனேன்; எனது தொண்டும் கள்ளத் தொண்டு.காலம் வீணே கழிகின்றது. ஞானத் தெளிவு சிறிதும் இல்லேனாகிய யான் சிறிது உள்ளவனாகி நின்று நின்னைத் தேடினேன். நினைப்பவர் நினைந்தவெல்லாம் நினைப்பவர் நினைப்புடன் இருந்து உணர்த்துகின்றாய் என்னும் உண்மையை நாடிக்கண்டேன்.