ஆன்மாவின் பயணம்

பஞ்சாக்கினி வித்தை என்னும் ஆன்மாவின் பயணம்

குருவடி பணிந்து

மருத்துவ கலாநிதி இ. லம்போதரன் MD

கனடா சைவசித்தாந்த பீடம்

www.knowingourroots.com

 

ஆறாவது அறிவு பகுத்தறிவு. இது மனிதனுக்கு மட்டுமே உள்ள சிறப்பு. மற்றைய சீவராசிகளுக்குப் பகுத்தறிவு அதாவது நல்லது கெட்டது ஆய்ந்து செயற்படும் அறிவு இல்லை. இதனால் மானிடப் பிறவி ஒரு வரப்பிரசாதமாகும். இதனால் தான் ஔவையார் “அரிது அரிது மானிடராதல் அரிது” என்றார்.

இந்த ஆறாது அறிவான பகுத்தறிவை விட வேறு என்ன சிறப்புக்கள் மானிடப் பிறவிக்கு உள்ளன?

பேச்சுத்திறன்; பேச்சுத்திறன் மனிதப்பிறவிக்கு மட்டுமே உள்ள சிறப்பு. மற்ற உயிர்களுக்கு பேச்சுத்திறன் இல்லை. இதனால்தான் “தீயினால் சுட்ட புண் ஆறும் ஆறாது நாவினால் சுட்ட வடு” என்றும், “யாகாவாராயினும் நாகாக்க” என்றும் நாவடக்கம் பேணும்படி திருவள்ளுவர் திருக்குறளில் கூறியிருக்கிறார்.

வேறு என்ன சிறப்புகள் மனிதப் பிறவிக்கு உள்ளன?

நீண்ட ஆயுள்: சில அரிதான உயிரினங்களைத் தவிர ஏனைய உயிர்கள் எல்லாம் சில நாட்களில் இருந்து சில வருடங்கள் வரை வாழ்ந்து மாய்கின்றன. ஆனால் மனிதனுக்கு ஆயுள் நூறு வயது. “வேதநூல் பிராயம் நூறு மனிதர்தாம் புகுவரேலும்” என்று ஆழ்வார் பாடுகின்றார். நூறு வயது என்றால் கிரிகோரியன் ஆங்கில நாட்காட்டிக் கலண்டரின் படி அல்ல. இது இப்போது வந்தது. பண்டைக் காலத்தின் மனிதன் எப்படிக் காலத்தைக் கணித்தான்? வானத்திலுள்ள சந்திரனைப் பார்த்து அது வளர்வதையும் தேய்வதையும் கொண்டு கணித்தார்கள். இதன்படி ஆயிரம் பிறை கண்டதும் சந்திர மாதக்கணக்கில் தொண்ணூற்றொன்பது வருடங்களாகின்றது.

ஆன்மாவானது துறக்கத்தில் இருந்து, மேக மண்டலத்தின் மழைத்துளியில் வந்து, நிலத்தில் தங்கி, உணவினூடாகத் தந்தையை அடைந்து, உதிரத்தில் கலந்து பின்னர் தந்தையின் சுக்கிலத்தில் கழித்த காலம் இரண்டு சந்திர மாதங்கள். “விண்ணின் றிழந்து வினைக்கீடாய் மெய் கொண்டு” என்கின்றது திருமந்திரம். நமது சந்ததி நாம் உண்ணும் உணவினூடாகத்தான் வருகின்றது. இதனால் தான் எமது சமயத்தில் உண்ணும் உணவுக்கும் கட்டுப்பாடுகள் பல வைத்தார்கள். உணவுக்கும் ராஜச உணவு, தாமச உணவு, சாத்வீக உணவு என்று குணங்கள் வைத்தார்கள். உணவுப் பதார்த்தம் மட்டுமல்ல உணவு தயாரிப்பவரும், பரிமாறுபவரும் கூட இதய சுத்தியுடனும் தெய்வ சிந்தனையுடனும் இருக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். உணவினூடாகத்தான் உன் சந்ததி வருகின்றது. அசுரத்தன்மையான இடத்தில் உணவு ஏற்றால் அல்லது அசுரத்தன்மை நிறைந்த உணவு உண்டால் அவ்வாறே சந்ததி உருவாகும்.

தாயின் கர்ப்பத்தில் கழித்தது பத்து சந்திர மாதங்கள் ‘தக்க தசமதி தாயொடு தான்படும் துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்’ என்பது திருவாசகம். தசம் என்றால் பத்து. ஆகவே பிறக்கும் போதே நமக்கு பன்னிரண்டு மாதங்கள். அதாவது ஒரு வயது ஆகின்றது. இதன்படி ஆங்கில வருடக்கணக்கில் எண்பது வருடங்கள் ஆகும் போது வேதநூல் கணக்கின்படி நமக்கு நூறு வயதாகின்றது. அப்போதுதான் சதாபிஷேகம் செய்கிறார்கள். சதம் என்றால் நூறு; ஆங்கிலத்தில்   century – செஞ்சரி.

இது பிரம்ம சூத்திரமும், திருமந்திரமும் விளக்கும் உயிர்ப்பிறப்பின் பெரும் இரகசியம். மேலுலகம் சென்ற உயிர் மீண்டும் மனிதனாகப் பிறப்பெடுப்பதற்குத் திரும்பும்போது முறையே

  1. துறக்கம்,
  2. மேக மண்டலம்,
  3. நிலம்,
  4. தந்தை,
  5. தாய்

என்று ஐந்து இடங்களில் புகுந்து தங்கி வருவதைத் தியானிப்பது பஞ்சாக்கினி வித்தை என்பர்.

இவ்வாறு தான் சூல் கொண்டு இரண்டு மாதம் கருவைச் சுமப்பதை அறிந்திராதவர்கள் ஆண்கள். இதனால் கொண்ட சூலை அறியாத ஆண்கள்  கருவுற்றதும் அதை அறிந்து கொள்ளும் பெண்களைவிட அறிவில் குறைந்தவர்களே என்று தக்கையிசை இராமாயணம் பாடிய கொங்கு நாட்டுப் புலவர் எம்பெருமான் என்பவரின் மனைவி பூங்கோதையார் பாடிய பின்வரும் வெண்பாப் பாடல் கூறுகின்றது.

அறிவில் இளைஞரே ஆண் மக்கள், மாதர்

அறிவின் முதிஞரே ஆவர் – அறிகாயோ

தான் கொண்ட சூலறிவர் தத்தையர், ஆண் மக்கள்

தான் கொண்ட சூலறியார் தான்.

 

இதைக் கொங்கு மண்டல சதகத்தில் உள்ள 65ம் பாடலும் உறுதி செய்கின்றது.

குறுமுனி நேர் தமிழ் ஆழியுண் வாணர் குழாம் வியப்ப

அறிவில் இளைஞரே ஆண் மக்கள் என்று அறுதியிட்டுச்

சிறிய விடைச்சி எம்பெருமான் மனைவி சிறந்து வளர்

மறுவறு சங்கதி சேர்வது கொங்கு மண்டலமே,

 

இதிலிருந்து பஞ்சாக்கினி வித்தை என்பது ரிஷிகளின் பிரம்ம சூத்திரத்திலும், உபநிடதங்களிலும் மட்டுமல்லாது, எமது பண்டைய தமிழ்க்குடியின் பாமர மக்களும் அறிந்து உணர்ந்திருந்த ஆத்ம இரகசியங்களில் ஒன்று என்பது தெளிவாகின்றது. ஆணில் கரு சுமக்கும் காலம் இரண்டு மாதங்கள். அதேபோல நமது மருத்துவ விஞ்ஞானத்திலும் ஆணில் ஒரு விந்துக்கலம் உருவாக எடுக்கும் காலம் (spermatogenesis) இரண்டு மாதங்கள்.

இவை ஒருபுறம் இருக்க இப்படி பகுத்தறிவு, பேச்சுத்திறன், நீண்ட ஆயுள் என்று இவ்வளவு சிறப்புகளும் மானிடப் பிறவிக்கு உள்ளனவே, அது ஏன் என்று சிந்தித்தோமா?

பிறவிச் சுழலில் இருந்து விடுபட வாய்ப்பளிக்கும் பிறவி இது. இதனால்தான் தேவர்கள் கூட இந்த மனிதப் பிறவி எடுக்க வேண்டித் தவம் இருக்கிறார்கள். இதுதான் மனிதப்பிறவி எடுத்ததன் நோக்கம்.

புவனியிற் போய்ப் பிறவாமையினால் நாம்

போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி

சிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கி..

 

  • திருவாசகம்

இதற்கு இந்த உடலை நாம் நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். இதற்கு நமது முன்னோர் காட்டிய வழிகளே ஆசனம், பிராணயாமம், தியானம் என்பனவாகும். தினமும் இம்மூன்றும் செய்து வந்தால் நோய் அணுகாது. வந்தாலும் அதன் பாதிப்பும், தாக்கமும், வேதனையும் குறைவாக இருக்கும். உடல் நம் சொல் கேட்டு இசைந்து நடக்கும்.  Ease the body; otherwise disease.

கடவுள் நமக்கு தனு, கரண, புவன போகங்கள் என்னும் என்னும் இந்த உடல், கருவி கரணங்கள், இந்த உலகங்கள், இதிலுள்ள அனுபவப் பொருள்கள் ஆகியவற்றை அனுபவிக்கக் கொடுத்து, நல்லது கெட்டது ஆராய்ந்து அறிந்து நடக்க ஆறாவது அறிவாகிய பகுத்தறிவும் கொடுத்து, அனுபவிக்கும் சுதந்திரமும் கொடுத்திருப்பது இந்த பிறவி தோறும் வருகின்ற இந்த அனுபவ முதிர்ச்சியினால் பக்குவமடைந்த ஆன்மா ஈற்றில் இறையருளால் தனது அனாதியான மாசுக்களான மலங்களைக் களைந்து பிறவித்தளையில் இருந்து விடுபடுவதற்கேயாம்.

‘நாம் மானுடப்பிறவி எடுத்ததன் நோக்கம் மனமொழி மெய்களால் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை வழிபட்டு முத்தினியின்பம் பெறுதற் பொருட்டேயாம்’

  • யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
  •  

மானுடப் பிறவி தானும் வகுத்தது மனவாக் காயம்

ஆனிடத்து ஐந்தும் ஆடும் அரன்பணிக் காக வன்றோ

வானிடத் தவரும் மண்மேல் வந்து அரன் தனை அர்ச்சிப்பர்

ஊன்எடுத்து உழலும் ஊமர் ஒன்றையும் உணரார் அந்தோ!

– சிவஞான சித்தியார் சுபக்கம் பாடல் 182